ரமலான் சிந்தனைகள் 20

அல்லாஹ் யார்?

அல்லாஹ் (Allah) என்ற அரபிச் சொல் al என்ற  சுட்டுச் சொல்லுடன்  ilah என்ற பெயர்ச்சொல் சேர்ந்து வருவதாகும். அல்லாஹ் என்பது, கடவுளைக் குறிக்கும் ஒரு பொதுவான வார்த்தை, 2500க்கும் அதிகமான முறை குர்-ஆனில் வருகிறது. இஸ்லாம் வருவதற்கு முன்பு, முஹம்மதுவின் காலத்திற்கு முன்பே அல்லாஹ் ஒரு முக்கியமான கடவுளர்களில் ஒருவராக அரேபியர்களுக்கு இருந்திருக்கிறார். அல்லாஹ் என்பது பொதுவான ஒரு பெயராக இருந்தாலும்,  அல்லாஹ்வுக்கு இருப்பதிலேயே சிறந்த “அழகிய திருநாமங்கள்” (பெயர்கள்) இருப்பதாக குர்-ஆன் 7:180; 17:110; 20:8; 59:24 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். குர்- ஆன் மற்றும் இஸ்லாமிய பாரம்பரியங்களின் அடிப்படையில் முஸ்லீம்கள் அல்லாஹ்வின்  99 பெயர்கள் அல்லது நாமங்கள் என வரிசைப்படுத்தி, அவைகளை மனப்பாடம் செய்து, அவைகளைப் பற்றி சிந்திக்கின்றனர். அல்லாஹ்வுக்கு 99 பெயர்களை வைத்து, முஸ்லீம்கள்  தொழுகை செய்தாலும், இஸ்லாமிய நம்பிக்கையின் படி, அல்லாஹ்வுடன் எவரும் நேரடியாக  உறவோ அல்லது தொடர்போ வைத்துக் கொள்ள முடியாது. இஸ்லாமில் அது தடைசெய்யப்பட்டிருக்கிறது. முஹம்மது அவர்கள் அல்லாஹ்விடம் இருந்து இறைவேதம் பெற்றதாகவும், அவர் இறுதி இறைத் தூதர் ஆதலால் அவருக்குப் பின் அல்லாஹ்வுடன் எவரும் தொடர்பு கொள்ள முடியாது என்று முஸ்லீம்கள் நம்புகின்றனர். உண்மையைச் சொல்வதானால், குர்-ஆனின் படி,  மூஸாவைத் தவிர வேறு யாரும் ( முஹம்மது கூட) அல்லாஹ்வுடன் நேரடி தொடர்பில் இருக்க வில்லை. ஜிப்ராயில் என்ற இறைத்தூதர்தான் முஹம்மதுவை சந்தித்து, குர்-ஆன் வசனங்களை ஓதக் கற்றுக் கொடுத்ததாக இஸ்லாமிய பாரம்பரிய நூல்கள் சொல்கின்றன. சில நாட்களுக்கு முன்பு, முஸ்லீம்களின் எதிர்மறை இறையியல் பற்றி சொன்னது நினைவுக்கு வருகிறதா? இஸ்லாம் கூறும் அல்லாஹ் மனித அறிவுக்கு அப்பாற்ப்பட்டவர், மனிதர்களால் அறிய முடியாதவர் (Transcendence God).

பரிசுத்த வேதம் கூறும் தேவனோ, தன்னைப் பலவிதங்களில் வெளிப்படுத்துகிறார். கடைசியாக,  ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மூலமாக தம்மை வெளிப்படுத்தினார் என்றும், காணமுடியாத இறைவனை, இயேசுகிறிஸ்து வெளிப்படுத்தினார் என்றும் வேதத்தில் நாம் வாசிக்கிறோம் (எபிரேயர் 1:1,2’ யோவான் 1:18’ யோவான் 14:9). குர்-ஆனில் அல்லாஹ்வைப் பற்றி சொல்லி இருக்கும் பல காரியங்களில் சில வேதாகமத்தின் தேவனைப் பற்றி நாம் வாசிக்கிறவைகளுக்கு ஒத்தது போலத் தோன்றினாலும், அடிப்படைக் குணாதிசயங்களில் முற்றிலும் வேறுபட்ட ஒருவரை குர்-ஆனில் (அல்லாஹ்வில்) காண்கிறோம். “நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்” என்று இஸ்ரவேலர்களிடம் வாக்குப்பண்ணின தேவன் (லேவியராகமம் 26:12), இன்றும் பாவ-சுபாவ வாழ்க்கையை மாற்றும் ஒரு தெய்வீக அன்பின் உறவுக்கு மனிதனை அழைக்கிறார்.

முஸ்லீம்கள் ஜெபிப்பதைக் கேட்டிருக்கிறீர்களா? தங்கள் கஷ்ட காலங்களில், ஓ அல்லாஹ், என்று அவர்கள் மார்பில் அடித்து, அந்தந்த வேளைகளில் செய்ய வேண்டிய துஆக்களை (ஜெபங்களை) உடனடியாக ஓதுவார்கள். அவர்கள்  எவ்வளவுதான் ஊக்கமாக ஜெபித்தாலும், பதில் கிடைக்குமா என்பதை அறியார்கள். அவர்களுக்கு தேவனைப் பற்றி அறிவிப்பதற்காக தேவன் நம்மைத் தெரிந்தெடுத்திருக்கிறார் (1 பேதுரு 2:9). தேவனைப் பற்றிய அறியாமை இருள் முஸ்லீம்களிடையே இருந்து விலக ஜெபிப்போம். அவர்களுடன் தனிப்பட்ட உறவை வைத்துக்கொள்ள விரும்புகிற இயேசு கிறிஸ்து மூலமாக தன்னை வெளிப்படுத்தின தேவனை அவர்களும் அறிந்து கொள்ளச் செய்வோம்.

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 13th May 2020

Source: http://arputhaa.blogspot.com/2020/05/20.html


2020 ரமலான் சிந்தனைகள் பக்கம்

சகோ. அற்புதராஜ் சாமுவேல் பக்கம்