2020 ரமலான் சிந்தனைகள் - 4

மறுமை நாளில் ஒருவர் செய்த நல்ல செயல்கள். . .

ரமலான் மாதத்தில் முஸ்லீம்கள் வழக்கத்தை விடவும் சற்று அதிகமாக ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுவதையும், அவற்றைப் பற்றிப் பேசுவதையும் கவனித்திருப்பீர்கள். உண்மையில், நல்லொழுக்கம் சார்ந்தும், ஆன்மீகம் சார்ந்தும் அவர்கள் நற்செயல்களை அதிகம் செய்ய உற்சாகப்படுத்தப்படுகின்றனர். மற்ற நாட்களை விட, ரமலான் மாதத்தில் செய்யப்படும் நற்செயல்கள் பல மடங்கு ஆன்மீக பலன்களை அடையலாம் என்று இஸ்லாமிய அறிஞர்கள் பேசி உற்சாகப்படுத்துகின்றனர். ஏனெனில், மறுமை நாளில் ஒருவர் செய்த நல்ல செயல்கள் அவர் செய்த தீய செயல்களை விட அதிகமாக இருந்தால்தான் சுவனம் (அ) சொர்க்கம் செல்ல முடியும் என்பது இஸ்லாம் கூறும் போதனை. ஒருவர் எவ்வளவு நற்காரியங்களைச் செய்திருக்கிறார், எவ்வளவு தீமைகளைச் செய்திருக்கிறார் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது, ஏன் முஹம்மதுவுக்கே தெரியாது என்பதும் இஸ்லாம் கூறும் செய்தி. ஆகவே, நல்ல செயல்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் மற்றும் பயம் இருப்பதால், முஸ்லீம்கள் விடவேண்டியவற்றை விலக்கி, செய்ய முடிந்தவைகளைச் செய்கிறார்கள்.

கிறிஸ்தவர்களாகிய நாம் வருடத்தில் எல்லா நாட்களிலும் நற்காரியங்களைச் செய்யும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த நாளில், அல்லது இந்த மாதத்தில் செய்யும் நற்காரியங்களுக்கு அதிக மடங்கு பலன் என்ற நம்பிக்கை கிறிஸ்தவர்களிடம் கிடையாது. பரிசுத்த வேதாகமம் சொல்கிறபடி, “ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்” (எபேசியர் 2:10). நாம் நற்கிரியைகளைச் செய்யும்படி தேவன் நமக்கு ஆயத்தம் பண்ணியிருக்கிறார், அதற்காகவே நம்மை உண்டாக்கி இருக்கிறார் என்பது எவ்வளவு ஆச்சரியம்!

முஸ்லீம்களாக இருந்து பின்னர் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களிடைய நடத்தபட்ட ஒரு ஆய்வில், அவர்களில் 80% க்கும் அதிகமானவர்கள் தங்கள் கிறிஸ்தவ நண்பர்கள் மூலமாக இயேசுவைக் கண்டு கொண்டதாக சொல்லி இருக்கிறார்கள். கிறிஸ்தவ அன்புடன் நீங்கள் செய்யும் ஒரு சிறு நற்காரியமும் பெரிய விளைவுகளை உண்டாக்க முடியும். பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாக தேவன் உங்களையும் பயன்படுத்த முடியும். 

-அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 27th April 2020

Source: http://arputhaa.blogspot.com/2020/04/4.html