குர்‍ஆன் ஏன் மற்றும் எப்படி தரப்படுத்தப்பட்டது?

HOW AND WHY THE QUR'AN WAS STANDARDIZED

ஆசிரியர்: சாமுவேல் கிரீன்

குர்-ஆன் தன்னைப் பற்றி பொதுவாக சொல்லிக்கொள்ளும் ஒரு வாதம் ”அது முஹம்மது மூலமாக அல்லாஹ்விடமிருந்து நேரடியாக நம்மிடம் வந்துள்ளது மற்றும் இதில் எந்த ஒரு மனிதனின் தலையீடும் திருத்தமும் இல்லை” என்பதாகும். குர்‍ஆனில் இருக்கும் எல்லா வசனங்களையும் முஹம்மது தான் தரப்படுத்தினார் என்று இஸ்லாமியர்கள் வாதிக்கிறார்கள். என்னிடம் இஸ்லாமியர்கள் கொடுத்து படிக்கச்சொல்லும் துண்டு பிரசுரங்களிலும் இன்னும் அனேக புத்தகங்களிலும் மேற்கண்ட வாதத்தை நான் அனேக முறை படித்துள்ளேன். இஸ்லாமிய ஆசிரியர்க‌ள் (எழுத்தாளர்க‌ள்) சொல்லும் வாதங்களை கீழே படிக்கவும்:

"குர்‍ஆனின் எல்லா வசனங்களும் நமபகமானவைகளாகும். குர்‍ஆன் வெளிப்பட்ட அன்றிலிருந்து இன்றுவரை அப்படியே உள்ளது, அதில் எவ்வித மாற்றமும் இல்லை, திருத்தல்களும் இல்லை வேறு எந்தவகையாக மாறுதலும் இல்லாமல் அப்படியே இருக்கிறது". (M. Fethullah Gulen, Questions this Modern Age Puts to Islam. London: Truestar, 1993. p.58)

குர்‍ஆன் முஹம்மதுவினால் மனனம் செய்யப்பட்டு பிறகு தம்முடைய தோழர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது. அதை எழுதி வைத்தார்கள், அவைகளை முஹம்மது தம் வாழ்நாட்களில் சரிபார்த்தார். பல நூற்றாண்டுகளாக குர்‍ஆனில் உள்ள 114 சூராக்களில் (அதிகாரங்களில்) ஒரு வார்த்தை கூட மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. (Understanding Islam and the Muslims, The Australian Federation of Islamic Councils Inc. (pamphlet) Nov. 1991) .

நாம் மேலே படித்த இஸ்லாமியர்களின் வாதங்கள் உண்மையா? அல்லது இவைகள் குர்‍ஆன் பற்றி இஸ்லாமியர்கள் மிகைப்படுத்திச் சொல்கிறார்களா? இந்த கேள்விகள் கேட்கப்படவேண்டிய நியாயமான கேள்விகள் தான். இந்த கேள்விகளுக்கு பதிலை நாம் இஸ்லாமிய ஆதார நூல்கள் என்ன சொல்கின்றன என்று பார்த்தால் தெரிந்துக்கொள்ளலாம்.

சஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4992

உமர்பின் கத்தாப்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) 'அல்ஃபுர்கான்' எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே நான் அவரைத் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுத்துக் கொண்டேன்.

(அவர் தொழுது முடித்த) பிறகு அவரின் மேல் துண்டைக் கழுத்தில் போட்டுப் பிடித்து, 'நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காண்பித்தது யார்?' என்று கேட்டேன். அவர், 'இதை எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் ஒதிக் காண்பித்தார்கள்' என்று பதிலளித்தார். உடனே நான், 'நீர் பொய் சொல்லிவிட்டீர்! ஏனெனில், நீர் ஓதிக்கொடுத்தார்கள்' என்று கூறியபடி அவரை இழுத்துக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், '(இறைத்தூதர் அவர்களே!) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் 'அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன்' என்று சொன்னேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரை விடுங்கள்!' என்று கூறிவிட்டு (ஹிஷாம் அவர்களை நோக்கி), 'ஹிஷாமே, நீங்கள் ஓதுங்கள்!' என்றார்கள். அவர் என்னிடம் ஓதியது போன்றே நபி(ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக் காட்டினார். (இதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது' என்று கூறினார்கள் .

பிறகு (என்னைப் பார்த்து), 'உமரே, ஓதுங்கள்!' என்று கூறினார்கள். எனக்கு அவர்கள் ஓதிக்கொடுத்திருந்த ஓதல்முறைப்படி நான் ஓதினேன். (அதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது. இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள் .

சஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2410

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

"ஒருவர் (திருக்குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதைக் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி(ஸல்) அவர்கள், ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்றேன். (விபரத்தைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள் ' என்று கூறினார்கள்.

"நபி(ஸல்) அவர்கள், 'வேற்றுமை கொள்ளாதீர்கள்! ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் வேற்றுமை கொண்டு (அதனால்) அழிந்தனர்' என்று கூறினார்கள்.

குர்‍ஆன் ஓதுவதில் சில மாற்றங்கள் இருப்பதை முஹம்மது அனுமதித்து இருக்கிறார் என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக தெரிவிக்கின்றன.

சஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4986

(வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் இப்னு ஸாபித் அல் அன்சாரி(ரலி) கூறினார்

யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) கூறினார்:

உமர்(ரலி) என்னிடம் வந்து, 'இந்த யமாமா போரில் ஏராளமான குர்ஆன் அறிஞர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறை மறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனின் பெரும்பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க உத்தரவிட வேண்டுமென நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வது?' என உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் தெரிவித்தபோது உமர்(ரலி) ஏதும் பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.)

(பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) '(ஸைதே!) நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக 'வஹீ' (வேத வசனங்களை) எழுதக்கூடிய வராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள் .

அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது . நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்' என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். …….

குர்ஆனின் முடிவான ஒரு முழு தொகுப்பை முஹம்மது தம் வாழ்நாட்களில் தயாரிக்கவில்லை/தொகுக்கவில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக காட்டுகிறது. முழு குர்‍ஆனையும் ஒன்று சேர்த்து ஒரு தொகுப்பாக (புத்தகமாக) மாற்றவேண்டும் என்று அபூ பக்கர் கூறும் போது: அல்லாஹ்வின் தூதர் செய்யாத ஒரு வேலையை நீங்கள் எப்படி செய்யலாம் என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. முஹம்மது குர்‍ஆனை ஒரு தொகுப்பாக முழுவதுமாக ஒன்று சேர்த்து தொகுக்கவில்லை. ஏனென்றால், அவருக்கு நம்பகமான, குர்‍ஆனை கற்றுக்கொடுக்கும் தோழர்கள் தங்கள் சொந்த குர்‍ஆன் தொகுப்புக்களை கொண்டு இருந்தார்கள்.

சஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3758

மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), 'அவர் எத்தகைய மனிதரென்றால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்" என்று சொல்லி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன் " என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு முர்ரா(ரஹ்), 'அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), உபை இப்னு கஅப்(ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா, முஆத்(ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா (இவர்களிருவரில் யாரை முதலில் குறிப்பிட்டார்) என்று எனக்குத் தெரியாது" என்று கூறுகிறார்கள்.

(உபை மற்றும் மஸ்வூத் என்பவர்களை கவனத்தில் கொள்ளவும். குர்‍ஆன் தொகுப்பு சரித்திரத்தில் பிற்காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் இவர்களின் பங்கு முக்கியமானதாகும்.)

முஹம்மதுவின் இந்த தோழர்கள் தங்கள் சொந்த குர்‍ஆன் தொகுப்பை தொகுத்து இருந்தார்கள் மற்றும் அதிலிருந்து மற்றவர்களுக்கு குர்‍ஆனை கற்றுக்கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். இந்த குர்‍ஆன்கள் ஒரே மாதிரியாக இருக்கவில்லை, இதனால் ஆரம்ப கால இஸ்லாமியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது, குர்‍ஆனை எப்படி ஓதுவது மற்றும் எந்த குர்‍ஆனிலிருந்து ஓதுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பம் பற்றி கீழ்கண்ட இரண்டு ஹதீஸ்கள் எடுத்துக்காட்டுகிறது.

சஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4944

இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் தோழர்கள் (ஷாம் நாட்டிலிருந்து அபுத்தர்தா(ரலி) அவர்களிடம் (அவர்களைக் காண) வந்தனர். (அதற்குள் அவர்கள் வந்துள்ள செய்தியறிந்து,) அபுத்தர்தா(ரலி) தோழர்களைத் தேடிவந்து சந்தித்தார்கள்.

பிறகு, 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி உங்களில் ஓதத் தெரிந்தவர் யார்?' என்று அபுத்தர்தா(ரலி) கேட்டார்கள். அதற்கு நாங்கள், 'நாங்கள் அனைவரும் தாம்' என்று பதிலளித்தோம். அபுத்தர்தா(ரலி), '(இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல் முறையை) நன்கு மனனமிட்டிருப்பவர் உங்களில் யார்?' என்று கேட்டார்கள். தோழர்கள், அல்கமா(ரஹ்) அவர்களை நோக்கி சைகை செய்தார்கள். 'வல்லைலி இஃதா யஃக்ஷா' எனும் வசனத்தில் இப்னு மஸ்வூத்(ரலி) எவ்வாறு ஓதக் கேட்டீர்கள்? என்று கேட்டார்கள். அல்கமா(ரஹ்), 'வஃத்தகரி வல் உன்ஸா' என்றே ஓதினார்கள்' என்று பதிலளித்தார்கள். அபுத்தர்தா(ரலி), 'நான் சாட்சியம் கூறுகிறேன்: நபி(ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே கேட்டுள்ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்) 'வமா கலக்கஃத் தக்கர வல் உன்ஸா' என்றே நான் ஓதவேண்டுமென விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்களைப் பின்பற்றமாட்டேன்' என்று கூறினார்கள் .

பல பாகங்களில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஒரு குறிப்பிட்ட வசனத்தை எப்படி ஓதவேண்டும் என்ற விஷயத்தில் மாற்று கருத்து கொண்டு இருந்தார்கள் என்று மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது. அல்துல்லாஹ் பின் மஸூத் என்பவரிடம் குர்‍ஆனை கற்றவர்கள் குர்‍ஆன் சூரா 92:1-3ம் வசனங்களில் உள்ள ஒரு வாக்கியத்தை "ஆண் மற்றும் பெண் மீது ஆணையாக" என்று வாசித்தார்கள். ஆனால், மற்ற இஸ்லாமியர்களிடம் குர்‍ஆனை கற்றவர்கள் "ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது ஆணையாக" என்று வாசித்தார்கள். ஆக, ஆரம்ப கால இஸ்லாமியர்கள் எல்லாரும் குர்‍ஆனை ஒரே மாதிரியாக மனனம் செய்யவில்லை என்பது தெரியவருகிறது.

இந்த பிரச்சனை கீழ்கண்ட ஹதீஸில் இன்னொரு முறை வருவதை நாம் காணலாம்.

சஹீ புகாரி ஹதீஸ்:பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4481

உமர்(ரலி) அறிவித்தார்.

எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார் எங்களில் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞானமுடையவர் அலீ(ரலி) ஆவார். நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றைவிட்டுவிடுவோம். ஏனெனில் அவர், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன்' என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அதைப்போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம்' என்று கூறியுள்ளான்.

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

குர்‍ஆனில் உள்ள வசனங்களில் எந்தெந்த வசனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது அல்லது நீக்கப்பட்டுள்ளது என்று முஹம்மதுவின் தோழர்களின் இடையே கருத்துவேறுபாடு உண்டானது என்று இந்த ஹதீஸ் தெளிவாக கூறுகிறது. இதர முஹம்மதுவின் தோழர்கள் இரத்து செய்யப்பட்டுவிட்டது /நீக்கப்பட்டு விட்டது என்று கருதும் வசனங்களை உபை என்ற நபித்தோழர் குர்‍ஆனோடு சேர்த்து அவைகளையும் தொடர்ந்து ஓதிக்கொண்டே வந்துள்ளார். அவ்வசனங்கள் இரத்துசெய்யப்பட்டுவிட்டது என்பதை அவர் ஏற்க மறுத்தார் மற்றும் "இவ்வசனங்களை நான் அல்லாஹ்வின் தூதரின் வாயின் மூலமாக பெற்றேன், ஆகையால், வேறு எந்த காரணம் கொண்டும் இவைகளை நான் விட்டுவிட முடியாது" என்று கூறினார். அதன் பிறகு, இந்த ஹதீஸ் ஸூரா 2:106ம் வசனத்தை மேற்கோள் காட்டி, இப்படித் தான் குர்‍ஆன் வசனம் இரத்து செய்யப்படுகிறது என்று கூறுகிறது. இதன் விளைவு என்னவென்றால், முஹம்மதுவின் தோழர்கள் குர்‍ஆனை பலவகையாக வித்தியாசமாக வாசித்துக்கொண்டு இருந்தார்கள், உபை என்பவர் மட்டும் இரத்து செய்யப்பட்ட குர்‍ஆன் வசனங்களோடு குர்‍ஆனை ஓதிக்கொண்டு இருந்தார்கள்.

மஸூத் மற்றும் உபை என்பவர்கள் இதர இஸ்லாமியர்களுக்கு குர்‍ஆனை வித்தியாசமாக கற்றுக்கொடுத்தார்கள். நாம் இதற்கு முன்பே பார்த்திருக்கிறோம், அதாவது குர்‍ஆனை கற்றுக்கொடுக்க‌ தகுதியுள்ளவர்களாக இவ்விருவரை முஹம்மது இதர மக்களுக்கு பரிந்துரை செய்துள்ளார். இருந்தபோதிலும், இவ்விருவரிடம் இருந்த குர்‍ஆன் தொகுப்பு ஒரே மாதிரியாக இல்லாத காரணத்தினால், யாரிடமிருந்து குர்‍ஆனை கற்கவேண்டும் என்ற பிரச்சனை இருந்தது. இதைப் பற்றி இஸ்லாமிய அறிஞர் லபிப் அச் சையத் (Labib as-Said) கீழ்கண்டவாறு கூறுகிறார்:

"ஈராக்கிய இஸ்லாமியர்களோடு சிரியன் இஸ்லாமியர்கள் போராடி வாதாடுகிறார்கள்" என்று எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. சிரியன் இஸ்லாமியர்கள் உபை இபின் காப் என்பவரின் குர்‍ஆனை ஓதுகிறார்கள், ஈராக்கிய இஸ்லாமியர்கள் அல்துல்லா இபின் மஸூத் என்பவரின் குர்‍ஆனை ஓதுகிறார்கள். இவ்விரு பிரிவினரும் ஒருவரை இன்னொருவர், இஸ்லாமிய நம்பிக்கை இல்லாதாவர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். (Labib as-Said, The Recited Koran: A History of the First Recorded Version, tr. B. Weis, et al., Princeton, New Jersey: The Darwin Press, 1975, p. 23)

ல‌பிப் அஸ்ஸைய‌த் [1] ம‌ற்றும் அஹ‌ம‌த் வ‌ன் டென்ஃபெர் [2] போன்ற‌ சில‌ இஸ்லாமிய‌ர்க‌ள், இபின் ம‌ஸூத் ம‌ற்றும் உபை (இன்னும் நபித்தோழர்கள்) போன்ற‌வ‌ர்க‌ள் தொகுத்து வைத்திருந்த‌ ப‌ல‌ வ‌கையான‌ குர்‍ஆன்க‌ளான‌து, த‌ங்க‌ள் சொந்த‌ உப‌யோக‌த்திற்காக‌ தொகுக்க‌ப்ப‌ட்ட‌து என்று கூறுகிறார்க‌ள். ஆனால், நாம் மேலே க‌ண்ட‌ ஹ‌தீஸ்க‌ளின் ப‌டி, இபின் ம‌ஸூத் தான் தொகுத்து வைத்திருந்த‌ குர்‍ஆன் தொகுப்பை த‌ன்னுடைய‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு க‌ற்றுக்கொடுத்தார் என்றும், இதே போல‌ உபைய் என்ப‌வ‌ரும் க‌ற்றுக்கொடுத்தார் என்று கூறுகிறது, இத‌னால் இவ்விருவ‌ருடைய‌ மாண‌வ‌ர்க‌ளிடையே ப‌ல‌ வேறுபாடுக‌ள், மனவருத்த சண்டைகள் ஏற்ப‌ட்டுள்ள‌தை இந்த ஹதீஸ்கள் மூலமாக அறிய‌லாம். இஸ்ல‌மிய‌ ச‌ரித்திர‌த்தையும், த‌ற்கால‌த்தில் க‌ண்டெடுக்க‌ப்ப‌டுகிற‌ அக‌ழ்வாராய்ச்சி க‌ண்டுபிடிப்புக்க‌ளையும் நாம் க‌ண்டால், இந்த‌ குர்‍ஆன் தொகுப்புக்க‌ள் த‌னிப்ப‌ட்ட‌ உபயோக‌த்திற்கு அல்ல‌, அத‌ற்கு ப‌திலாக‌ பொதுவான‌ ம‌க்க‌ள் உப‌யோக‌த்திற்கு என்று அறிய‌லாம்.[3]

இந்த பிரச்சனை எப்படி ஒரு முடிவிற்கு வந்தது என்பதை அடுத்த ஹதீஸில் காணலாம்.

சஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4987

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். 9 ஹுதைஃபா(ரலி)அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 10 எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது சூபால் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.

எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸ¤பைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள் .

பல வகையான குர்‍ஆன்கள் கொண்டு வந்த பிரச்சனை எப்படி தீர்ந்தது என்பதை இங்கே நாம் காணலாம். இந்த பிரச்சனை உஸ்மான் மூலமாக தீர்க்கப்பட்டது, அதாவது ஒரே ஒரு குர்‍ஆன் தொகுப்பை வைத்துக்கொண்டு, இதர அனைத்து குர்‍ஆன்களையும் எரித்துவிடும் படி கட்டளையிடப்பட்டது. முஹம்மது அனுமதித்த "ஏழு வகையாக குர்‍ஆனை ஓதும்" வழிமுறைகளையும் இந்த கட்டளை நீக்கிவிட்டது, அதே போல இதர நபித்தோழர்கள் தொகுத்து வைத்திருந்த குர்‍ஆன் பிரதிகளும் அழிக்கப்பட்டது. இதன் பிறகு, எழுத்து வடிவான குர்‍ஆனாக இருந்தாலும் சரி, வாய் வழி குர்‍ஆன் ஓதும் முறையாக இருந்தாலும் சரி, உஸ்மான் தரப்படுத்திய குர்‍ஆன் தொகுப்பையே பின்பற்றப்படவேண்டும்.

குர்‍‍ஆன் முழுவதுமாக எரிக்கப்பட்ட வரலாறு போன்று எல்லா பிரதிகள் முழுவதுமாக எரிக்கப்பட்ட வரலாறு பைபிளுக்கு இல்லை என்பதை இங்கு கவனிக்கவேண்டும்.

நாம் கேட்கவேண்டிய அடுத்த‌ கேள்வி என்னவென்றால், "உஸ்மானோ மற்றும் அவரது குழுவோ, அவர்கள் தங்கள் குர்‍ஆன் தொகுப்பை தயாரிக்கும் போது, ஏதாவது மாறுதல்கள், தெரிவு செய்தல் போன்ற திருத்தல்கள் குர்‍ஆனில் செய்தார்களா? " என்பதாகும்.

நாம் பார்க்கப்போகும் அடுத்த மூன்று ஹதீஸ்கள் ஆம், குர்‍ஆனில் திருத்தல்கள் மற்றும் தெரிவு செய்து நுழைத்த வசனங்கள் குர்‍ஆனில் உண்டு என்பதை நமக்கு காட்டுகின்றன.

சஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6829

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

உமர்(ரலி) கூறினார்: காலப் போக்கில் மக்களில் சிலர் 'இறை வேதத்தில் கல்லெறி (ரஜ்கி) தண்டனை காணப்படவில்லையே? ' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழிதவறி விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். அறிந்துகொள்ளுங்கள்: திருமணமான ஒருவர் விபசாரம் புரிந்து, அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது நிச்சயமாகும்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'அறிந்து கொள்ளுங்கள்! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள். அவர்களுக்குப் பின் நாங்களும் அதனை நிறைவேற்றினோம்' (என்றும் உமர்(ரலி) கூறினார்). இவ்வாறுதான் நான் மனனமிட்டுள்ளேன்.

விபச்சாரம் செய்தவர்களை கல்லெறிந்து கொல்லவேண்டும் என்றும், இவ்வசனம் குர்‍ஆனிலிருந்து எடுக்கப்படக்கூடாது என்று உமர் நம்பினார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. தற்போது நம் கைகளில் இருக்கும் குர்‍ஆனில் இந்த குர்‍ஆன் வசனம் இல்லை. அப்படியானால், அந்த வசனங்கள் எங்கே போனது? குர்‍ஆனை தொகுத்தவர்களால் இவ்வசனம் நிச்சயமாக நீக்கப்பட்டு இருக்கும். உமர் இவ்வசனங்களை ஞாபகம் வைத்திருந்தார் மற்றும் மற்றவர்கள் திருத்தி நீக்கிவிட்டது போல இவ்வசனம் குர்‍ஆனிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று அவர் விரும்பவில்லை என்பது தெளிவு. இன்று நம்மிடம் இருக்கும் குர்‍ஆனில் இவ்வசனம் இல்லை.

உஸ்மான் எப்படி குர்‍ஆன் வசனங்களின் மீது தன் முழு அதிகாரத்தை வைத்திருந்தார் என்பதை கீழ்கண்ட ஹதீஸ்களில் மறுபடியும் காணலாம்.

சஹீ புகாரி ஹதீஸ்:பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4530

அப்துல்லாஹ் இப்னு ஸ¤பைர்(ரலி) அறிவித்தார்

நான், உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம், 'உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் தருவாயில் இரு)ப்பவர்கள், தம் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றி விடாமல் ஓராண்டுவரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்யட்டும்! ஆயினும், அவர்களாகவே வெறியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டால் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மிகைத்தோனும் விவேகமிக்கவனும் ஆவான்' எனும் (திருக்குர்ஆன் 02:240 வது வசனம் குறித்து இந்த) இறை வசனத்(தின் சட்டத்)தை (முந்தைய) மற்றோர் இறைவசனம் (திருக்குர்ஆன் 02:234) மாற்றிவிட்டதே! இதை 'ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்?' அல்லது 'இதை ஏன் (நீக்காமல் குர்ஆனில் அப்படியே)விட்டுவைக்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன்' என்று பதிலளித்தார்கள்.

குர்‍ஆனில் ஒரு குறிப்பிட்ட வசனத்தை சேர்க்கலாமா இல்லையா என்பது குறித்து இபின் அஜ் ஜுபைர் மற்றும் உஸ்மான் என்பவர்களிடம் கருத்து வேறுபாடு இருந்தது என்பதை இங்கு காணலாம். அஜ் ஜுபைரின் நம்பிக்கையின் படி, அந்த வசனம் இரத்து செய்யப்பட்டு விட்டது மற்றும் அது குர்‍ஆனிலிருந்து நீக்கப்படவேண்டும் என்பதாகும். ஆனால், இவ்வசனம் குர்‍ஆனில் இருக்கவேண்டும் என்று உஸ்மான் கட்டாயப்படுத்தினார். கடைசியாக, உஸ்மான் வெற்றிப்பெற்றார், இதனால் அந்த வசனம் இன்று நம்மிடம் இருக்கும் குர்‍ஆனில் இருக்கிறது.

குர்‍ஆனின் கடைசி வசனங்கள் மீது எப்படி உஸ்மான் ஆதிக்கம் செலுத்தினார் என்பதை கீழ்கண்ட ஹதீஸ்களில் மறுபடியும் முறை நாம் காணலாம்.

மிஷ்கத் அல் மஸபிஹ்: புத்தகம் 8, அதிகாரம் 3, கடைசி ஹதீஸ் [4])

"உஸ்மானிடம்[1] கீழ்கண்டவாறு தாம் கேட்டதாக இபின் அப்பாஸ் கூறினார்:

குர்‍ஆனின் மதனி சூராவாகிய அல் அன்ஃபல்[2] சூராவையும், நூறு வசனங்கள் அடங்கிய சூராக்களில் ஒன்றாகிய பரா[4] சூராயும் ஒன்று சேர்த்துவிட்டு, ஆனால், "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.." என்ற சொற்றொடரை சேர்க்காமல், ஏன் இதர ஏழு பெரிய சூராக்களோடு சேர்த்துவிட்டீர்கள்? இப்படி செய்ய உங்களை தூண்டியது என்ன? இதே கேள்வியை இபின் அப்பாஸ் உஸ்மானிடம் ம‌றுப‌டியும் கேட்ட‌போது, உஸ்மான் கீழ்க‌ண்ட‌வாறு ப‌தில் அளித்தார்.

"அதிக‌ வ‌ச‌ன‌ங்க‌ள் அட‌ங்கிய‌ சூராக்க‌ள் அல்லாஹ்வின் தூத‌ருக்கு வெளிப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌போது, அவ‌ர் குர்‍ஆனை எழுதும் ந‌ப‌ர்க‌ளை அழைத்து, இப்போது இற‌ங்கிய‌ இந்த‌ வ‌ச‌ன‌ங்க‌ளை, அந்த‌ குறிப்பிட்ட‌ சூராவில், அந்த‌ குறிப்பிட்ட‌ வ‌சன‌ங்க‌ளுக்கு பிற‌கு சேர்த்துவிடுங்க‌ள் என்று சொல்லுவார். இப்போது, ம‌தினாவில் இற‌ங்கிய‌ சூராக்க‌ளில் அல் அன்ஃப‌ல் என்ப‌து முத‌லாவ‌து இற‌ங்கிய‌ சூராவாகும். அதே போல‌, ப‌ரா என்ற‌ சூரா குர்‍ஆனில் இற‌ங்கிய‌ சூராக்க‌ளில் க‌டைசியாக‌ இற‌ங்கிய‌ சூராவாகும். இவ்விரு சூராக்க‌ளின் க‌ருத்து/சாராம்ச‌ம் ஒரே மாதிரியாக‌ இருக்கிற‌து, ம‌ட்டும‌ல்ல‌, இந்த‌ சூராக்களை எத‌னோடு சேர்க்க‌வேண்டும் என்று சொல்லாம‌லேயே இறைத்தூதர் ம‌ரித்துவிட்ட‌ப‌டியினால், நான் அவைக‌ளை ஒன்றாக‌ சேர்த்து "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்" என்ற‌ சொற்றொட‌ர்க‌ளை சேர்க்காம‌ல், இத‌ர‌ பெரிய‌ சூராக்க‌ளோடு சேர்த்துவிட்டேன்.

மேற்கண்ட ஹதீஸீன் பின்குறிப்பு:

1) உஸ்மான் என்பவர்,முஹம்மதுவிற்கு அடுத்ததாக வந்த மூன்றாம் காலிபா ஆவார்(இஸ்லாமிய தலைவராவார்).

2) அல் அன்ஃபல் என்பது குர்‍ஆனின் எட்டாவது சூராவாகும்.

3) மதனி: 100 வசனங்களை விட குறைவாக இருக்கும் குர்‍ஆன் சூராக்கள் (அதிகாரங்கள்) ஆகும்.

4) பரா மற்றும் தௌபா என்பது குர்‍ஆனின் ஒன்பதாவது சூரா ஆகும்.

5) ஒன்பதாவது சூராவைத் தவிர, குர்‍ஆனில் உள்ள அனைத்து சூராக்களும் "அல்லாஹ்வின் திருப்பெயரால்..." என்று தொடங்கும்.

இந்த ஹதீஸில் நாம், இதர இஸ்லாமியர்கள் உஸ்மானிடம் "ஏன் ' அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ' என்ற சொற்றொடரை ஒன்பதாவது சூராவின் (அத்தியாயத்தின்) ஆரம்பத்தில் சேர்க்கவில்லை என்று கேள்வி கேட்டதாக காண்கிறோம். இந்த கேள்விக்கு உஸ்மானின் பதில் என்னவென்றால், "இந்த ஒன்பதாவது சூராவை எந்த சூராவோடு சேர்த்து வைக்கவேண்டும் என்று சொல்லாமலேயே முஹம்மது மரித்துவிட்டதால், இதோ பொருளோடு/கருத்துக்களை கொண்ட எட்டாவது சூராவோடு தாம் சேர்த்துவிட்டதாக கூறினார்". இங்கு தெளிவாக தெரியும் ஒரு விவரம் என்னவென்றால், சில இஸ்லாமியர்கள் "அந்த ஆரம்ப" சொற்றொடர்கள் இந்த ஒன்பதாவது சூராவின் எழுதவேண்டும் என்று விரும்பினார்கள், ஆனால், உஸ்மான் அதனை செய்யவில்லை என்பதாகும். கடைசியாக உஸ்மானே வெற்றி பெற்றார், ஆகையால் இன்று நம்மிடம் இருக்கு குர்‍ஆனில் அவ்வாக்கியங்கள் ஒன்பதாவது சூராவில் சேர்க்கப்படவில்லை.

மேற்கண்ட மூன்று ஹதீஸ்கள் மூலமாக தெளிவாக்கப்பட்டுள்ளது என்னவென்றால், "குர்‍ஆனை தொகுத்த நபர்கள் மூலமாக சில மாறுதல்கள் குர்‍ஆனில் செய்யப்பட்டுள்ளது என்பதாகும். இதில் தெளிவாக்கப்பட்ட இன்னொரு விவரம் என்னவென்றால், உஸ்மான் எடுத்த அந்த முடிவு எல்லா இஸ்லாமியர்களும் ஒருமித்து எடுத்த முடிவல்ல என்பதாகும். இந்த முடிவு ஏக யோசனையாக ஒருமித்து எடுத்த முடிவு அல்ல.

உஸ்மானின் குர்‍ஆன் குறித்து ஒரு நபித்தோழர் காட்டிய எதிர் வினை என்ன என்பதை அடுத்த ஹதீஸ் தெரிவிக்கிறது.

சஹீஹ முஸ்லிம்: தொகுப்பு 4, ஹதீஸ் எண் 6022, பக்கம் 1312, புத்தகம் 29

அப்துல்லாஹ் (இப்னு மஸூத்) அறிவித்ததாவது, அவர் தன்னுடைய தோழர்களுக்கு தங்களுடைய குர்‍ஆனை மறைத்துவைக்கும் படி கூறினார். மேலும், யார் எவைகளை மறைத்து வைக்கிறாரோ அவைகளை நியாயத்தீர்ப்பு நாளில் வெளியே கொண்டு வரவேண்டும் என்றும் அப்துல்லாஹ் இப்னு மஸூத் கூறினார். மேலும் அவர் 'யாருடைய முறைப்படி நான் ஓதவேண்டும் என்ரு எனக்கு நீங்கள் சொல்லுவீர்கள்'? நான் உண்மையில் அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) முன்பாக குர்‍ஆனின் 70க்கும் அதிகமான ஸூராக்களை ஓதிக்காட்டியுள்ளேன், மற்றும் இதனை அல்லாஹ்வின் தூதருடைய (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) தோழர்களும் அறிவார்கள். எனவே அவர்களை விட எனக்கே அல்லாஹ்வின் வேதம் பற்றிய புரிதல் அதிகமாக இருக்கிறது. ஒருவேளை என்னை விட நன்றாக அல்லாஹ்வின் வேதத்தை அறிந்தவர் இருப்பாரானால், அவரிடம் நான் நிச்சயமாக செல்வேன். ஷாகிக் கூறும் போது 'இந்த சமயத்தில் நான் அல்லாஹ்வின் தூதருடைய (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) தோழர்களுடன் உட்கார்ந்து இருந்தேன், ஆனால், மஸூத் இவ்விதம் கூறும் போது, நபித்தோழர்களில் யாரும் அதனை நிராகரிக்கவோ அல்லது அவரது கூற்றில் குறைகண்டுபிடிக்கவோ இல்லை.

Muslim: vol. 4, hadith 6022, p. 1312; book 29

`Abdullah (b. Mas'ud) reported that he (said to his companions to conceal their copies of the Qur'an) and further said: He who conceals anything he shall have to bring that which he had concealed on the Day of Judgement, and then said: After whose mode of recitation do you command me to recite? I in fact recited before Allah's Messenger (may peace be upon him) more than seventy chapters of the Qur'an and the Companions of Allah's Messenger (may peace be upon him) know it that I have better understanding of the Book of Allah (than they do), and if I were to know that someone had better understanding than I, I would have gone to him. Shaqiq said: I sat in the company of the Companions on Muhammad (may peace be upon him) but I did not hear anyone having rejected that (that is, his recitation) or finding fault with it.

மேற்கண்ட ஹதீஸிலிருந்து நான்கு விவரங்களை நாம் காணலாம்.

1) சில காரணங்களுக்காக தங்கள் குர்‍ஆனை மறைத்துவைக்கும் படி இபின் மஸூத் மக்களுக்கு அறிவுரை கூறுகிறார்.

2) குர்‍ஆனை வேறுவகையாக ஓத வேண்டும் என்று இவருக்கு கட்டளையிடப்பட்டதினால் இவர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்ச்சி எப்போது நடந்தது என்றால், உஸ்லாம் குர்‍ஆனின் ஒரு தொகுப்பை தரப்படுத்தவேண்டும் என்றுச் சொல்லி, இதர குர்‍ஆன்களை எரித்துவிடும் படி கட்டளையிட்டாரே அப்போது நடந்து இருக்கவேண்டும்.

3) இபின் மஸூத் குர்‍ஆனை எப்படி ஓதினாரோ அதைவிட்டு வேறு வகையாக ஓதவேண்டும் என்ற கட்டளையை இவர் எதிர்த்ததற்கு அவர் சொன்ன காரணம்: "அவர்களை காட்டிலும் எனக்கு (இபின் மஸூத்) அல்லாஹ்வின் வேதம் பற்றிய அறிவு அதிகம்" என்பதாகும்.

4) ஷகீக் "முஹம்மதுவின் தோழர்கள் மஸூத் சொன்னதை அங்கீகரித்தார்கள்" என்று கூறுகிறார்.

உஸ்மானின் குர்‍ஆனை எல்லா இஸ்லாமியர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று இஸ்லாமிய அறிஞர் அஹமத் அலி அல் இமாம் (Ahmad `Ali al Imam) பதிவு செய்துள்ளார்.

உஸ்மான் குர்‍ஆனை தொகுத்த பிறகு, குர்‍ஆனை ஓதும் (கிரா) அனைவருக்கும் உஸ்மான் தொகுத்த மஸஹிப்பின் படி ஓதும் படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, எல்லாரிடமும் இருந்த தனிப்பட்ட குர்‍ஆன் தொகுப்புக்கள் சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. எல்லா அன்சார் நகரங்களில் உஸ்மானின் மஸஹிப்பின் கை மேலோங்கி இருந்தது, ஒரு சில எதிர்ப்புக்களை தவிர, அதாவது இபின் மஸூத் மற்றும் இபின் ஷன்புத் போன்றவர்களின் எதிர்ப்புக்களைச் சொல்லலாம். (Ahmad `Ali al Imam, Variant Readings of the Qur'an, Virginia: IIIT, 1998, p. 120)

உஸ்மான் தொகுத்த குர்‍ஆனை இபின் மஸூத் கடைசிவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது, இதனால் பொதுமக்கள் நடுவில் இபின் மஸூத்தை சாட்டையால் அடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

"இபின் மஸூத் தன் குர்‍ஆனை கைப்பிரதியை கொடுக்க மறுத்துவிட்டார். ஏனென்றால், குர்‍ஆனை தொகுக்க நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரின் நம்பகத்தன்மை தன்னை விட குறைவாக இருப்பதினால் இவர் கொடுக்க மறுத்துவிட்டார். இபின் மஸூத்தின் இந்த மறுப்பு கலிஃபாவை எப்படி கோபப்படுத்தியது என்றால், மிகவும் வயதான நபராகிய இபின் மஸூத்தை சாட்டையால் அடிக்கவைக்கும் படி கோபப்படுத்தியது. இறைத்தூதரின் மிகவும் வயது முதீர்ந்த இபின் மஸூத் என்பவருக்கு கொடுத்த சாட்டை அடியினால் அவரது இரண்டு விலா எலும்புகள் உடைக்கப்பட்டது மற்றும் இதனால் அவர் மூன்று நாட்கள் கழித்து மரித்துவிட்டார் . உஸ்மானின் இந்த கொடூரமான செயல், அவரது சமகால இஸ்லாமியர்களுக்கு அவர் மீது வெறுப்பை உண்டாக்கியது. தற்காலத்தில் உஸ்மானின் இந்த செயல் "ஒரு கொடூரமான குற்றம்" என்று "ஷியா (Schutes)" என்பவர்களால் வர்ணிக்கப்படுகிறது.

Ibn Mas'ud refused to deliver his copy to the committee whose president, although one of the readers of the word of God, had earned much less trust and authority than he. This refusal incited such a level of indignation from the Khalif that he publicly whipped the "old saint". One notes that the old companion of the prophet had two ribs broken from the violence of the strikes and that he died after three days. This cruelty, that drew upon Othman the hatred of his contemporaries, is today regarded by the "schutes" as an atrocious crime. (T. J. Newbold, Journal Asiatique, December 1843, p. 385)

சுருக்கம்:

1) குர்‍ஆனை எப்படி ஒரே வகையாக ஓதவேண்டும் என்பதை முஹம்மது நிர்ணயிக்கவில்லை, அதற்கு பதிலாக அனேக விதமான ஓதும் முறையை அனுமதித்து இருந்தார்.

2) முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு குர்‍ஆனை ஓதும் முறையிலும், மனனம் செய்வதிலும் அதிக வித்தியாசங்கள் இருந்தன, இது அனேக பிரச்சனைகளை உருவாக்கியது.

3) உஸ்மானும், அவ‌ர‌து குழுவும் சில‌ மாறுத‌ல்க‌ள் செய்து ஒரு குர்‍‍ஆனை தரப்படுத்தி தொகுத்தார்க‌ள்.

4) இத‌ர‌ குர்‍ஆனை கையெழுத்து பிர‌திக‌ளை அழித்துவிடும் ப‌டி உஸ்மான் க‌ட்ட‌ளையிட்டார். இஸ்லாமிய‌ உல‌க‌ம் அனைத்திலும் தாம் தொகுத்த‌ குர்‍ஆனை ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்த‌வேண்டும் என க‌ட்ட‌ளையிட்டார். வாய்வ‌ழியான‌ குர்‍ஆன் ஓதும் முறையானாலும் ச‌ரி, எழுத்து வ‌டிவான‌ குர்‍ஆனாலும் ச‌ரி, உஸ்மானின் தொகுப்பையே ஆதார‌மாக‌ இருக்க‌வேண்டும் என‌ க‌ட்ட‌ளையிட‌ப்ப‌ட்ட‌து.

5) சில‌ ந‌பித்தோழ‌ர்களுக்கு இப்னு மஸூத்தைப்போல, உஸ்மானின் செய‌ல்க‌ள் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை, இத‌ன் கார‌ண‌மாக‌ அவ‌ர்க‌ள் அனேக‌ பிரச்ச‌னைக‌ளை ச‌ந்தித்தார்க‌ள்.

 

முடிவுரை:

இக்க‌ட்டுரையின் ஆர‌ம்ப‌ ப‌குதியில் நாம் கீழ்க‌ண்ட‌ இஸ்லாமிய‌ வாத‌த்தை க‌வ‌னித்தோம்:

"குர்‍ஆனின் எல்லா வசனங்களும் நமபகமானவைகளாகும். குர்‍ஆன் வெளிப்பட்ட அன்றிலிருந்து இன்றுவரை அப்படியே உள்ளது, அதில் எவ்வித மாற்றமும் இல்லை, திருத்தல்களும் இல்லை வேறு எந்தவகையாக மாறுதலும் இல்லாமல் அப்படியே இருக்கிறது". (M. Fethullah Gulen, Questions this Modern Age Puts to Islam. London: Truestar, 1993. p.58)

குர்‍ஆன் முஹம்மதுவினால் மனனம் செய்யப்பட்டு பிறகு தம்முடைய தோழர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது. அதை எழுதி வைத்தார்கள், அவைகளை முஹம்மது தம் வாழ்நாட்களில் சரிபார்த்தார். பல நூற்றாண்டுகளாக குர்‍ஆனில் உள்ள 114 சூராக்களில் (அதிகாரங்களில்) ஒரு வார்த்தை கூட மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. (Understanding Islam and the Muslims, The Australian Federation of Islamic Councils Inc. (pamphlet) Nov. 1991) .

இதுவரை நாம் அனேக ஹதீஸ்களையும் மற்றும் இதர இஸ்லாமிய ஆதார நூல்களிலிருந்து அனேக ஆதாரங்களை கண்டுள்ளோம். நாம் கண்ட எல்லா நம்பகமான ஹதீஸ்களின் அடிப்படையில் பார்த்தால், இந்த இஸ்லாமியர்கள் குர்‍ஆனுக்கு சாதகமாக சொல்லும் வாதமானது, மிகைப்படுத்தி கற்பனையாக கூறியவைகள் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. இந்த ஹதீஸ்களை நாம் பார்க்கும் போது, இஸ்லாமியர்கள் கூறும் விவரங்களுக்கு எதிராகவே இந்த ஹதீஸ்கள் சாட்சி பகருகின்றன. முஹம்மது குர்‍ஆனை தரப்படுத்தவில்லை மற்றும் அனேக வழி முறைகளில் குர்‍ஆனை ஓத அவர் அனுமதித்தார் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆரம்ப கால இஸ்லாமியர்கள் குர்‍ஆனை மனனம் செய்யும் போது பல வகையாக வித்தியாசமாக மனனம் செய்தார்கள். உஸ்மானும் அவரது குழுவும் சில மாற்றங்களை செய்து ஒரே ஒரு குர்‍ஆன் தொகுப்பை உருவாக்கினார்கள், மற்றும் இதர பிரதிகளை எரித்துவிட்டார்கள். முஹம்மது ஓதிக்காட்டிய அனேக வழிமுறைகளில், சிறந்த வழிமுறையில் குர்‍ஆனை உஸ்மான் உருவாக்கினார் என்பதில் சந்தேகமில்லை, ஆனால், முஹம்மது ஓதிய அனேக குர்‍ஆன் முறைகளில், உஸ்மான் தொகுத்தது தான் சிறந்த குர்‍ஆன் என்று கருதமுடியாது, ஏனென்றால் இந்த குர்‍ஆனை முஹம்மது தொகுக்கவில்லை.

பின் குறிப்புக்கள்:

[1] Labib as-Said, The Recited Koran: A History of the First Recorded Version, tr. B. Weis, M. Rauf and M. Berger, Princeton, New Jersey: The Darwin Press, 1975, p. 22

[2] Ahmad Von Denffer, `Ulum Al-Qur'an, Leicester: The Islamic Foundation, 1994 (Revised edition), p. 52

[3] Here are just a few references that show that the collections of the Masud and Ubai were used publicly.

  1. Bukhari and Muslim record many hadiths about the arguments among early Muslims regarding the differences between Masud's recition of the Qur'an and the Uthman Qur'an. This shows that Masud's Qur'an was not for "private use" only. 
   o Bukhari: 
      1. Vol. 5, hadith 85-86, pp. 62-64, hadith 105, p. 71-72; book 57.
      2. Vol. 6, hadith 467-468, pp. 441-442; book 60. 
   o Muslim: 
      1. Vol. 2, hadith 1797-1802, pp. 393-394, book 4.

  2. Al-Nadim lists some of the differences between the collections of Masud and Ubai and the Uthman collection (pp. 53-62). In another section of his book entitled: The Books Composed about Discrepancies of the [Qur'anic] Manuscripts (p. 79), Al-Nadim lists seven early Qur'anic scholars who studied the differences between these different collections. (Bayard Dodge (tr.), The Fihrist of al-Nadim (2 vols) (New York, London: Columbia University Press, 1970. pp. 53-62)

  3. In the 1980's many ancient Qur'ans were discovered in San`a'. Some of these have the surah order that was credited to Masud and others. Thus we have actual copies of these other collection and so can be sure that they did exist and were in public use. (Gerd-R Puin, Observations on the Early Qur'an Manuscripts in San`a'. In "The Qur'an as Text" ed. Stefan Wild, Leiden: Brill, 1996. pp. 110-111)

[4] Mishkat Al-Masabih: Ahmad, Tirmidhi and Abu Dawud transmitted it. (tr. by James Robson, Sh. Muhammad Ashraf, Lahore, p. 470

ஆங்கில மூலம்: HOW AND WHY THE QUR'AN WAS STANDARDIZED

சாமுவேல் கிரீன் அவர்களின் இதர கட்டுரைகள்