இயேசுவை தவறவிடுவதினால் முஸ்லிம்கள் செலுத்தும் விலை?

(The Cost Muslims Pay for Missing Jesus)

ஆசிரியர்: ஆலன் ஸ்லெமன்

இயேசுவை உங்களுக்குத் தெரியுமா? “இயேசுவை” எங்களுக்கு நன்றாக தெரியும் என்று முஸ்லிம்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி, இயேசு ஒரு நபி, அவர் கன்னி மரியாளிடத்தில் பிறந்தார், அவருக்கு தெய்வீக வெளிப்பாடுகள் கிடைத்தன, மேலும் அவர் மரித்தவர்களையும் உயிரோடு எழுப்பினார் என்பவைகளாகும். இயேசுவைப் பற்றி மேற்கண்டவிதமாக அவர்கள் நம்பினாலும், அவர்களின் இந்த நம்பிக்கை முழுமையானதல்ல. ஒருவரின் உண்மையான அடையாளத்தை தவறவிட்ட கதை என்றுச் சொன்னால், அது  இது தான். இதன் விளைவு! அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய நட்டத்தை கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறது. உண்மையான இயேசுவை முஸ்லிம்கள் கீழ்கண்ட விதங்களில் தவறவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

1) இயேசுவின் உறவை முஸ்லிம்கள் தவறவிடுகிறார்கள்

அல்லாஹ் தூரத்தில் இருக்கின்ற ஒரு தெய்வம் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இதன் பொருள், அல்லாஹ், “தான் உருவாக்கிய” படைப்புகளைவிட்டு மிகவும் தூரமான இடத்தில் இருக்கின்றான் என்றும், மேலும் தன் படைப்பின் மக்களோடு தனிப்பட்ட முறையில் உறவு வைத்துக்கொள்ளாத இறைவனாக இருக்கின்றான் என்பதாகும். மனிதன் ஒரு போதும் எட்டமுடியாத இடத்தில் அல்லாஹ் இருக்கின்றான். முஸ்லிம்கள் இறைவனின் உறவுக்காக தேடுவதில்லை, அவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் போதும் என்று இருந்து விடுகின்றனர்.

கிறிஸ்தவர்கள் கூட தேவன், தனித்துவமுள்ளவராக வானத்தில் இருக்கிறார் என்று நம்புகிறார்கள். அதே நேரத்தில் அந்த தேவன், மனிதர்களோடு உள்ளார்ந்த உறவு வைக்கின்றவராக இருக்கிறார் என்று பரிசுத்த வேதாகமம் போதிக்கிறது. இதன் பொருள், தேவன் தம்முடைய படைப்பில் நுழைகிறார், அவருடைய படைப்பினருடன் தொடர்பு கொள்கிறார், அவர்களுடன் தன் உறவை வளர்த்துக்கொள்கிறார் என்பதாகும்.  தேவன் நம்மோடு உறவாடுகின்றார் என்பதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு இயேசு ஆவார். தேவன் மனிதனாக வந்ததினால், அவர் நம்மைப் போல ஆனார் என்பதை அறியலாம், நம்மோடு அவர் உறவாட விரும்புகிறார் என்பதை அறியலாம். அதோடு கூட நின்றுவிடாமல் நமக்காக அவர் மரித்தும் உயிர்த்தும் இருக்கிறார். இயேசு நமக்கு வேண்டுதல் செய்வதுப் பற்றி கற்றுக்கொடுத்த போது, தேவனோடு தனிப்பட்ட விதத்தில் நாம் உறவு வைத்துக்கொள்ள உதவும் வண்ணமாக, அவரை "அப்பா, பிதாவே" என்று அழைத்து வேண்டுதல் செய்யுங்கள் என்று போதித்தார். ஒரு குழந்தை எப்படி தன் தந்தையிடம் நெருங்குகிறதோ அது போல இப்பிரபஞ்சத்தை படைத்த இறைவனிடம், நாம் நெருங்கி  பேசலாம் மற்றும் வேண்டுதல் செய்யலாம்.

சுருக்கமாக சொல்வதென்றால், கிறிஸ்தவர்கள் தங்கள் இறைவனோடு அனுபவிக்கும் இந்த நெருக்கமான குடும்ப உறவைப் போன்ற ஒரு உன்னதமான உறவை அல்லாஹ்வை சேவிக்கின்ற முஸ்லிம்கள் இழக்கிறார்கள். இயேசுவின் மூலமாக நாம் இறைவனோடு தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு பேசமுடியும், உறவாட முடியும். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஒரு மத்தியஸ்தராக இயேசு  இருக்கிறார் என்பதை முஸ்லிம்கள் மறுப்பதினால்,  இறைவனோடு உறவாட கிடைத்துள்ள ஒரே வாய்ப்பையும் அவர்கள் இழந்துவிடுகின்றனர்.

2) இயேசு தரும் சமாதானத்தை முஸ்லிம்கள் தவறவிடுகிறார்கள்

கிறிஸ்தவ ஆரம்ப காலத்தின் முதல் மூன்று நூற்றாண்டுகளில் கிறிஸ்தவத்திற்கு  என்று ஒரு தனி இராணுவம் இருந்தது கிடையாது. பல வகைகளில் கிறிஸ்தவர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள், பலர் கொல்லப்பட்டார்கள், இருந்தபோதிலும் உலக வரைபடத்தில் கிறிஸ்தவர்கள் அதிவேகமாக பெருகிக்கொண்டே சென்றார்கள்.  கிறிஸ்தவர்கள் நாடுகளை கைப்பற்ற ஒரு போதும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை, ஏனென்றால், கிறிஸ்து இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கவில்லை, மேலும் நாடுகளை பிடிக்க சண்டையிடுபவராக தம்மை காட்டிக்கொள்ளவும் இல்லை. இயேசு ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துக்காட்டினார், இதனைக் காணும் இன்றைய மக்கள் கூட 'இயேசு ஒரு அமைதிவாதி, யுத்தங்களை விரும்பாத சமாதானப் புறா' என்பதை புரிந்துக் கொள்கிறார்கள். பல முறை இயேசுவை  காயப்படுத்தினார்கள்,  கொலை செய்யவும் அனேகர் திட்டமிட்டனர்,  இருந்தபோதிலும் அவர் பழிக்கு பழி வாங்கவில்லை. காவலாளிகள் இயேசுவை பிடிக்க வந்த போது, இயேசுவின் சீடர் பேதுரு தன்னுடைய கத்தியை எடுத்து தம்முடைய குருவை காப்பாற்ற முயன்றார். ஆனால், இயேசு தம்முடைய சீடனின் இந்த செயலை கீழ்கண்ட வார்த்தைகளால் கண்டித்தார்.

52. அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். 53. நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? (மத்தேயு 26:52-53).

அதாவது, தாம் தப்பிக்க விரும்பியிருந்தால் அதற்காக பிதாவை வேண்டிக்கொண்டால், பன்னிரண்டு இராணு குழுவிற்கும் அதிகமான தூதர்கள் என்னை காப்பாற்ற‌ வந்திருப்பார்கள் என்று இயேசு கூறினார்.

இவ்வளவு ஏன்? இயேசு தம்முடைய சீடர்களுக்கு கொடுத்த கடைசி கட்டளை: உலகமெல்லாம் சென்று உலக மக்களை தம்முடைய சீடர்களாக மாற்றுங்கள் என்பதாகும். இந்த வேலையை “தம்முடைய கட்டளைகளை பரப்பி செய்யுங்கள் என்றார், யுத்தம் செய்து தம்முடைய நற்செய்தியை பரப்புங்கள் என்று சொல்லவில்லை” என்பதை கவனிக்கவேண்டும். முஸ்லிம்கள் அமைதியான வாழ்க்கையை போதிக்கும் மார்க்கத்தை பின்பற்ற விரும்பினால், அவர்கள் தங்கள் வாழ்க்கையை இயேசுவைப் போல மாற்றிக்கொள்ளவேண்டும், இவர் தான் சமாதான பிரபு எனப்படுகிறார்.  இப்படிப்பட்ட இயேசுவை முஸ்லிம்கள் மறுதலிப்பதினால், அவர் தரும் மன நிம்மதியையும், சமாதானத்தையும் தவறவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

3) இயேசுவின் உயிர்த்தெழுதலை முஸ்லிம்கள் தவறவிடுகிறார்கள்

இஸ்லாமின் உயர்த்த அதிகாரம் படைத்த குர்ஆன் 'இயேசு கொல்லப்படவில்லை' என்றுச் சொல்கிறது (குர்ஆன் 4:157). இயேசுவின் மரணமில்லையென்றால் அவரது உயிர்த்தெழுதலும் இல்லை. மரணமும் உயிர்த்தெழுதலும் இல்லையென்றால், பாவ நிவர்த்தியும் இல்லை. பாவ நிவர்த்தி அடையவில்லையென்றால், ஒவ்வொருவரும் தம்முடைய பாவங்களை சுமந்துக்கொண்டவர்களாக இருப்பார்கள்.  இதன் அர்த்தமென்ன? அவர்கள் தேவனின் நியாயத்தீர்ப்பிற்கும், தண்டனைக்கும் ஆளாகியிருப்பார்கள் என்பதாகும்.

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை முஸ்லிம்கள் மறுதலிப்பதினால், அவர்கள் தேவனிடம் சமாதானம் பெறும் பாக்கியத்தை இழந்துவிடுகிறார்கள். தேவனிடம் சமாதானம் பெறுவதற்காக தம்மை ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற ஒரு நல்ல வாய்ப்பை இயேசு உலக மக்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கின்றார்.  நாம் தேவனின் தண்டனையை அனுபவிக்கக்கூடாது என்பதற்காக இயேசு நம் தண்டனையை ஏற்றுக்கொண்டு, நம்மை நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனையிலிருந்து காப்பாற்றியுள்ளார். இயேசு சிலுவையில் செய்த அந்த மகா காரியத்தை முஸ்லிம்கள் மறுப்பதினால், தேவனிடம் சேறுவதற்காக உண்டாக்கப்பட்ட அந்த ஒரே வழியையும் தவறவிட்டுவிடுகிறார்கள்.

உலகில் பல நேரங்களில் முஸ்லிம்கள் அமைதியை இழந்து காணப்படுகிறார்கள், இதற்கு முக்கியமான காரணம் அவர்கள் உண்மையான இயேசுவையும், அவரோடுள்ள உறவையும், அவரது சமாதானத்தையும், கடைசியாக அவரின் உயிர்த்தெழுதலையும் தவறவிட்டதினால் தான்.  இஸ்லாமினால் கொடுக்க முடியாதவைகளை இயேசுவின் நற்செய்திவினால் கொடுக்கமுடியும்: உயிர்த்தெழுந்த தெய்வத்தின் நித்தியமான உறவும், சமாதானமும் தான் அவைகள்.

முஸ்லிம்கள் மேற்கண்ட மூன்று வகைகளில் இயேசுவை தவறவிடுவது ஒரு வகையென்றால், சில நேரங்களில் கிறிஸ்தவர்களும் இயேசுவை தவறவிடுகிறார்கள். அதாவது, இயேசுக் கிறிஸ்து முஸ்லிம்களை எந்த  பார்வையில் பார்க்கிறாரோ, அதே பார்வையோடு கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை  பார்ப்பதில்லை.  பல கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை 'எதிரிகளாக' பார்க்கிறார்கள், ஆனால், உண்மையில் முஸ்லிம்கள் எதிரிகள் அல்ல, அவர்கள் எதிரியினால் அடிமைகளாக பிடிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். கிறிஸ்தவர்களின் உண்மையான எதிரி  'சாத்தான்' ஒருவன் மட்டுமே. அவன் தன்னுடைய பலமான பிடியில் அவர்களை பிடித்துள்ளான், அவைகளிலிருந்து அவர்களை நாம் விடுவிக்கவேண்டும் (2 கொரி 10:3-5). முஸ்லிம்கள் தேவனின் சாயலில் உள்ளவர்களாக இயேசு பார்க்கிறார். அவர்கள் விலையேறப் பெற்றவர்கள், கனப்படுத்தப்படவேண்டியவர்கள். அவர்கள் ஒரு நாள் நற்செய்திக்கு செவிகொடுப்பார்கள். இதே பார்வையோடு தான் நாமும் அவர்களை பார்க்கவேண்டும்.

Source: https://www.str.org/article/cost-muslims-pay-missing-jesus

Author:  Alan Shlemon - A speaker for Stand to Reason

To know about the Author, visit: www.str.org/training/speakers/alan-shlemon

Translation: Answering Islam Tamil Team


ஆலன் ஸ்லெமன் அவர்களின் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்