இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தில் 'ஜிஹாதும் போர்களும்'

இஸ்லாமின் நீண்ட ஜிஹாத் சரித்திரத்தை விளக்கி, இஸ்லாமிய போர்களினால் உண்டான உயிர் நஷ்டங்கள் பற்றி நான் பேசி முடித்ததும், பொதுவாக மக்கள்  என்னிடம் கேட்கும் முதலாவது கேள்வி என்ன தெரியுமா? 

‘கிறிஸ்தவத்திலும் ஒரு காலக்கட்டத்தில் போர்களும், உயிர் நஷ்டங்களும் நடந்தது அல்லவா? கிறிஸ்தவமும் இஸ்லாம் போல நடந்துக்கொண்டதல்லவா?’ 

இந்த கேள்விக்கு இரண்டு பதில்கள் உள்ளன, முதலாவது பதில் ’ஆம்’, இரண்டாவது பதில் ’இல்லை’ என்பதாகும்.

"ஆம்", கடந்த காலத்தை திரும்பி பார்க்கும் போது, கிறிஸ்தவத்தின் பெயரில் கிறிஸ்தவர்கள் கொன்று இருக்கிறார்கள். ஆம், கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு எதிராக போரிட்டுள்ளார்கள். ஆம், சரித்திரத்தின் சில ஏடுகள் இரத்தக் கரைகளால் மாசுபடுத்தப்பட்டுள்ளது, சிலுவைப்போர், மற்றும் ஸ்பானிஷ் இன்கியூஸிஸன் என்ற பெயரில் வன்முறைகள் நடந்துள்ளன என்பது மறைக்கமுடியாத உண்மையே! ஆனால், ஒன்றை இங்கு கவனிக்கவேண்டும், அதாவது மேற்கண்ட கிறிஸ்தவர்கள் புரிந்த போர்களும், இஸ்லாமில் காணப்படும் ஜிஹாத் / போர்கள் பற்றிய கோட்பாடும் வெவ்வேறானவைகளாகும். கிறிஸ்தவத்தின் பெயரில் நடத்தப்பட்ட போர்களும், இஸ்லாமின் பெயரில் நடத்தப்பட்ட மற்றும் நடந்துக்கொண்டுக் கொண்டு இருக்கும் போர்களும் ஒன்றல்ல. இவ்விரண்டுக்கும் இடையே மிகபெரிய இடைவெளி உண்டு. அதனை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும்.

கிறிஸ்தவத்தை விமர்சிக்கும் முஸ்லிமாக இருக்கட்டும், அல்லது விருப்புவெறுப்பு இன்றி பதில் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தோடு கேள்வி கேட்கும் கிறிஸ்தவராக இருக்கட்டும், பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு போர்கள் பற்றி கேள்விகள் கேட்பார்கள். முதலாவதாக, பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர்கள் தங்கள் எதிரிகளோடு (கானானியர்களோடு) புரிந்த போர்களை மேற்கோள்கள் காட்டி கேள்விகளை எழுப்புவார்கள். இரண்டாவதாக, சிலுவைப்போர் மற்றும் ஸ்பானிஸ் இன்கியூஸிஸன் போன்ற நிகழ்ச்சிகளை உதாரணங்களைக் காட்டுவார்கள். மேற்கண்ட இரண்டு உதாரணங்களும், இஸ்லாமின் போர்கள்/ஜிஹாத் பற்றிய கோட்பாடுகளுக்கு சமமானவைகள் அல்ல என்பதை மனதில் வைக்கவேண்டும் (*).

இவைகளை புரிந்துக்கொள்ள பழைய ஏற்பாட்டு யுத்தம் பற்றிய ஒரு உதாரணத்தை இங்கு நான் சொல்லட்டும், கூர்ந்து கவனியுங்கள். பழைய ஏற்பாட்டில் தீமை அதிகமாக செய்யும் நாடுகளுக்கு கொடுக்கும் தண்டனையாக, தேவன் போரை ஒரு ஆயுதமாக பயன்படுத்தினாரே தவிர ‘யூத ஆட்சியின் நிலப்பரப்பை விஸ்தரிப்பதற்கு அல்ல’. யூதர்களின் ஆட்சியை விஸ்தரிக்க, அக்கம் பக்கத்து நாடுகள் மீது போர் தொடுத்து, அந்நாடுகளை யூத இராஜ்ஜியத்தோடு சேர்த்துக்கொள்ள தேவன் அனுமதிக்கவில்லை. குற்றம் யார் செய்திருந்தாலும், அவர்களை தேவன் தண்டித்தார். கானானியர்கள் குற்றம் செய்த போது, அவர்களை யூதர்களைக் கொண்டு தண்டித்த அதே தேவன், இஸ்ரேலர்கள் குற்றம் செய்த போது, அவர்களின் எதிரிகளைக் கொண்டு யூதர்களை தேவன் தண்டித்தார். தேவன் பட்சபாதம் காட்டுபவர் அல்ல. நேற்றும் இன்றும் என்றும் அவர் மாறாதவராக இருக்கிறார். ஆனால், இஸ்லாமை கவனித்தால், முஹம்மது தம்முடைய எதிரிகளை தோற்கடிப்பதற்கு யுத்தங்களைச் செய்தார். இஸ்லாமின் படி “முஸ்லிம்கள்” எப்போதும் நல்லவர்கள் ஆவார்கள், இவர்கள் யாரோடு சண்டை போடுகிறார்களோ அவர்கள் எப்போதும் தீயவர்கள் ஆவார்கள். முஸ்லிம்கள் யாரோடு சண்டையிட்டாலும், அவர்கள் முஸ்லிம்களின் “நல்ல செயல்களை” எதிர்க்கிறவர்கள் என்று அடையாளம் காட்டப்படுகிறார்கள். 

கிறிஸ்தவத்தை பொறுத்தமட்டில், பழைய ஏற்பாட்டில் காணப்படும் யுத்தங்களை கிறிஸ்தவர்கள் செய்யவேண்டும் என்ற கட்டளையோ கோட்பாடோ  பைபிளில் இல்லை. இன்று மட்டுமல்ல, கி.பி. முதலாம் நூற்றாண்டு முதற்கொண்டு, எந்த ஒரு கிறிஸ்தவருக்கும் போர் செய்யவேண்டும் என்ற கட்டளை பைபிளில் கொடுக்கப்படவில்லை. பழைய ஏற்பாட்டில் காணப்பட்ட போர்கள், அக்காலத்து மக்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது, அவைகளை தொடர்ந்து செய்யும் படி யூதர்களுக்கும் கட்டளையிடப்படவில்லை. தற்காலத்தில், உலகில் உள்ள எந்த ஒரு பைபிள் அறிஞரானாலும் சரி அல்லது பைபிள் கல்லூரியானாலும் சரி, இயேசுவின் நற்செய்தியை பரப்புவதற்காக போர்களைச் செய்யலாம் என்று போதிப்பதில்லை, இப்படிப்பட்ட கோட்பாடு பைபிளில் இல்லை என்பது தான் உண்மை.

ஆனால், குர்-ஆனை எடுத்துக்கொண்டால் விஷயம் வேறு மாதிரியாக இருக்கிறது. முஹம்மது பல போர்களில் ஈடுபட்டார் மேலும், இன்று முஸ்லிம்கள் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று ஒரு மாதிரியை காண்பித்துச் சென்றுள்ளார்.  அபூ அலா மௌதுதீ என்ற இஸ்லாமிய அறிஞர் தன்னுடைய “Towards Understanding Islam” என்ற புத்தகத்தில் “குர்-ஆனில் சொல்லப்பட்டுள்ள கட்டளைகள் போதனைகள் அனைத்தும், உலகின் எந்த இடத்திலும், எக்காலத்திலும் பின்பற்றப்பட வேண்டும்” என்று எழுதியுள்ளார்.

குர்-ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த முஹம்மது அஸத் என்ற இஸ்லாமிய அறிஞர், ஸூரா 2:191ஐ பற்றி விளக்கமளித்துள்ளார். இந்த வசனத்தில் முஸ்லிம்கள் ஏழாம் நூற்றாண்டில் எப்படி போரிட்டார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இவ்வசனம் பற்றி முஹம்மது அஸத் விளக்கும் போது “குர்-ஆனில் சொல்லப்பட்ட இந்த சரித்திர விவரமானது, எல்லா காலத்துக்கும், சூழ்நிலைகளுக்கும் பொருந்தும் கட்டளையாக இருக்கிறது, இது முஸ்லிம்களுக்கு பொதுவான கட்டளையாகும்” என்று விளக்கமளித்தார். குர்-ஆனில் போர்கள் பற்றிய பல கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளது, அவைகள் அனைத்தும் தற்கால முஸ்லிம்களுக்கு பொருந்தும் என்றும் இஸ்லாம் கூறுகிறது. 

சிலுவைப்போர் மற்றும் ஸ்பானிஸ் இன்கியூஸிஸன் என்று சொல்லக்கூடிய வன்முறைகள் இஸ்லாமில் காணப்படும் போர்களுக்கு சமமான  வன்முறைகள் அல்ல. சிலுவைப்போர் மற்றும் ஸ்பானிஸ் இன்கியூஸிஸன் போன்ற வன்முறைகளுக்கு பைபிளில் ஆதாரமில்லை, அதனை பைபிள் அங்கீகரிப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். சிலுவைப்போர் காலத்தில் திருச்சபைகளின் தலைவர்களில் சிலர் தங்கள் வன்முறைகளுக்கு பைபிளின் வசனங்களை தவறாக  மேற்கோள் காட்டியுள்ளார்கள், ஆனால், இவர்கள் செய்தது தவறாகும். பைபிள் அனுமதிக்காத ஒன்றை அனுமதிக்கிறது என்று பொய்யாய் காரணம் காட்டியுள்ளார்கள். ஆனால், இஸ்லாமில் காணப்படும் ஜிஹாத் போர்களுக்கு ஆதாரங்களை குர்-ஆனிலிருந்தே எடுத்து காட்டப்படுகின்றன. மேலும் முஹம்மதுவின் செயல்களும் கட்டளைகளும் ஜிஹாதை ஆதரிக்கின்றன. ஜிஹாத் என்ற இஸ்லாமிய கோட்பாட்டை எந்த ஒரு மத்திய கிழக்கு முஸ்லிம் அறிஞரும் மறுப்பதில்லை, ஏனென்றால், இஸ்லாமின் மையப்புள்ளி ஜிஹாத் ஆகும்.

சிலுவைப்போர்கள் மற்றும் ஸ்பானிஸ் இன்கியூஸிஸன் பற்றி என்னிடம் கேட்டால், ”ஆவைகள் தீயச்செயல்கள். அவைகளை கிறிஸ்தவர்கள் என்றுச் சொல்லிக்கொண்டவர்கள் செய்தார்கள், ஆனால் அவைகளுக்கு பைபிளின் அங்கீகாரம் இல்லை” என்று நான் பதில் கொடுப்பேன். ஆனால், முஸ்லிம்கள் ஜிஹாத் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டு, அப்பாவி மக்களை கொன்றால், அவர்களின் செயல்களுக்கு இஸ்லாமின் அங்கீகாரம் உள்ளது, இஸ்லாமிய இறையியலில் அனுமதியும் உள்ளது.

கடைசியாக, ’கிறிஸ்தவர்கள் எப்படி வாழவேண்டும்?’ என்பதை ஒருவர் தெரிந்துக்கொள்ள விரும்பினால், அவர் இயேசுவின் வாழ்க்கையை பார்க்கட்டும். மேலும் புதிய ஏற்பாட்டு காலத்தின் திருச்சபையைப் பார்த்து கற்றுக்கொள்ளட்டும். இயேசுவின் அமைதியான வாழ்க்கையை கண்டு அனேகர் அவர் மீது கோபம் கொண்டனர். அவரை பலமுறை கொல்லப்பார்த்தார்கள், இருந்தாலும் ஒருமுறை கூட அவர் ‘வன்முறையை’ பதிலுக்கு பதிலாக கொடுக்கவில்லை.  முஹம்மது அனேகரை கொன்றார், ஆனால், இயேசு ஒருவரையும் துன்புறுத்தவில்லை. இயேசு இவ்வுலகைவிட்டுச் செல்வதற்கு முன்பாக, தன் சீடர்களுக்கு ஒரு முக்கியமான கட்டளையை கொடுத்துவிட்டுச் சென்றார் (மத்தேயு 28:16-20). இது தான் தம்முடைய சீடர்களுக்கு அவர் கொடுத்த கடைசி கட்டளை, அதாவது இயேசுவின் சீடர்கள் உலகமெல்லாம் சென்று, மக்களுக்கு இயேசுவின் நற்செய்தியைச் சொல்லி, ஞானஸ்நானம் கொடுத்து, இயேசு கட்டளையிட்டவைகளை பின்பற்றும்படி போதிக்கவேண்டும், அவ்வளவு தான்.

உண்மையில், ஆரம்ப கால திருச்சபை எப்படி நடந்துக்கொண்டது என்பதை கவனித்தால் ஆச்சரியமாக இருக்கும். முஹம்மது மரித்த பிறகு, அடுத்த 100 ஆண்டுகளில் இஸ்லாம் எப்படி பரவியது என்பதை கவனியுங்கள், அதே போல இயேசு கடந்துச் சென்றுவிட்டபிறகு, திருச்சபையின் முதல் சில நூறு ஆண்டுகளில் கிறிஸ்தவம் எப்படி பரவியது என்பதை கவனியுங்கள். இஸ்லாம் போர்களினால் பரவியது, அதாவது ஸ்பெயின் முதல் சைனா மற்றும் இந்தியா வரை பரவியது. ஆனால், முதல் முன்னூறு ஆண்டுகள் கிறிஸ்தவம் கொடுமைகளின் மத்தியிலே ஐரோப்பா, ஆஃப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியாக பரவியது.

கிறிஸ்துவை ஒரு வழிகாட்டியாக கொண்டு வாழ்பவர்களைப் பார்த்து இவர்கள் ‘வன்முறைகளினால், போர்களினால் கிறிஸ்துவை பரப்புகிறார்கள்’ என்று யாராலும் குற்றம் சாட்டமுடியாது. இயேசுவின் வாழ்வும், புதிய ஏற்பாட்டின் வழி நடத்துதலும் தான் கிறிஸ்தவனுக்கு வழி காட்டுகின்றன. முஸ்லிம்கள் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பினால், சமாதான பிரபுவாகிய இயேசுவின் போதனைகளின் படி வாழ வேண்டும்.

அடிக்குறிப்பு:

[*] இது மிகவும் முக்கியமானது, அதாவது கிறிஸ்துவின் பெயரில் சிலர் சில நேரங்களில் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளார்கள், பழைய ஏற்பாட்டிலும் அனேகர் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை மறைக்கமுடியாது, மறைக்கக்கூடாது. ஆனால், இந்த வன்முறைகள் இஸ்லாமின் வன்முறைக்கு ஈடாகாது. இஸ்லாமின் வன்முறையானது குர்-ஆனும், முஹம்மதுவும் அனுமதித்த ஒன்று. ஆனால் கிறிஸ்தவர்கள் புரியும் வன்முறை பைபிள் அனுமதிக்காத ஒன்று.

Source: http://www.str.org/articles/jihad-and-war-in-islam-and-christianity 

Author:  Alan Shlemon - A speaker for Stand to Reason

To know about the Author, visit: www.str.org/training/speakers/alan-shlemon 

Translation: Answering Islam Tamil Team