குர்‍ஆனைப் போன்று ஏன் அல்லாஹ் முந்தைய வேதங்களை ஏழு வட்டாரமொழிகளில் (கிராத்துக்களில்) இறக்கவில்லை?

குர்‍ஆன் ஏழு வட்டார மொழிகளில் முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டதென்று இஸ்லாம் சொல்கிறது.

இதைப் பற்றி சன்னி முஸ்லிம் ஹதீஸ் தொகுப்புக்களில் அதிகார பூர்வமானதாக இருக்கும், புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்களிலிருந்து இரண்டு சான்றுகளைக் காண்போம்.

புகாரி எண் 3129:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரேயொரு (வட்டார) மொழி வழக்குப்படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழி வழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது. என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

முஸ்லிம் எண்: 1491

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மனிதர் (பள்ளிவாசலுக்குள்) வந்து தொழலானார்; (தொழுகையில் குர்ஆன் வசனங்களை) ஒரு விதமாக ஓதினார். அதை நான் அறிந்திருக்கவில்லை. பிறகு மற்றொருவர் வந்து (அதே வசனங்களை) முதலாமவர் ஓதியதற்கு மாற்றமாக ஓதித் தொழலானார். தொழுகை முடிந்ததும் நாங்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான் "இவர் குர்ஆனை நான் அறிந்திராத (ஓதல்) முறையில் ஓதினார். பின்னர் மற்றவர் வந்து முதலாமவர் ஓதியதற்கு மாறாக (அதையே) வேறு முறையில் ஓதினார்" என்றேன். 

நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் ஓதிக் காட்டும்படி பணித்தார்கள். அவ்விருவரும் ஓதினர். நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரும் சரியாகவே ஓதினர் எனக் கூறினார்கள். (இதைக் கேட்டவுடன்) என் உள்ளத்தில் நபியவர்கள் பொய்யுரைக்கிறார்கள் என்ற எண்ணம் விழுந்தது. அறியாமைக் காலத்தில்கூட இத்தகைய எண்ணம் எனக்கு ஏற்பட்டதில்லை. என்னை ஆட்கொண்டிருந்த (அந்த எண்ணத்)தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டபோது என் நெஞ்சில் ஓர் அடி அடித்தார்கள். (அடி விழுந்ததும்) எனக்கு வியர்த்துக் கொட்டியது. அச்சத்தால் எனக்கு அல்லாஹ்வே காட்சியளிப்பதைப் போன்றிருந்தது. 

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "உபை, "குர்ஆனை ஓர் ஓதல் முறைப்படி ஓதுவீராக" என எனக்கு (இறைவனிடமிருந்து) செய்தியறிவிக்கப்பட்டது. உடனே நான் என் சமுதாயத்தாருக்கு இன்னும் சுலபமாக்கும்படி (இறைவனிடம்) கோரினேன். அப்போது "குர்ஆனை இரண்டு ஓதல் முறைப்படி ஓதுவீராக!" என எனக்கு இரண்டாவது முறையாக இறைவன் அறிவித்தான். உடனே நான் இன்னும் என் சமுதாயத்தாருக்கு சுலபமாக்கும்படி கோரினேன். மூன்றாவது முறையில் குர்ஆனை ஏழு ஓதல் முறைகளின் படி ஓதும்படி எனக்கு இறைவன் அறிவித்தான். . . .

மேலும் பார்க்க: புகாரி எண்கள்:  4991, 4992, 2419 & முஸ்லிம் எண்:1490

அரபி முஸ்லிம்களுக்காக ஏழு வட்டார மொழி வகையில் குர்‍ஆனை வருந்தி கேட்டு வாங்கிய முஹம்மது:

முஹம்மதுவிற்கு ஜிப்ரீல் தூதன் குர்‍ஆனின் வசனங்களை ஓதிக்காட்டினார்.  ஆனால், அல்லாஹ் இறக்கிய‌ வசனங்களை ஓதுவது முஸ்லிம்களுக்கு  கடினமாக இருந்துள்ளது. எனவே முஹம்மது ஜிப்ரீல் தூதனிடம் வருந்தி கேட்டுக்கொண்டு, ஏழு வகையான வட்டார மொழி வழக்கத்தின் படி குர்‍ஆனை இறக்கும்படி கேட்டுக் கொண்டாராம். இதனால், அல்லாஹ்வும் அதன்படி செய்தானாம். இதன்படி மூல அரபிக் குர்‍ஆன்கள் ஏழு வகையாக இறக்கப்பட்டுள்ளது என்று முஹம்மது ஒப்புக்கொண்டுள்ளார். நாம் எழுப்பவிரும்பும் கேள்வி இதுவல்ல.

நம்முடைய கேள்வி இது தான்:

குர்‍ஆனைப் போன்று ஏன் அல்லாஹ் முந்தைய வேதங்களை ஏழு வட்டார மொழிகளில் கிராத்துக்களில் இறக்கவில்லை?

குர்‍ஆனுக்கு முன்பு, அல்லாஹ் பல வேதங்களை இறக்கியுள்ளானாம்.  பைபிளையும் இறக்கியது அல்லாஹ் என்று இஸ்லாம் சொல்கிறது (ஆனால், பைபிள் இதனை மறுக்கிறது).  

ஒரு பேச்சுக்காக, பைபிளின் நபிகளையும் அல்லாஹ் தான் அனுப்பினான் என்று கருதிக்கொள்வோம், அடுத்து என்ன நடந்தது என்பதை கவனிப்போம். முஹம்மதுவிற்கு முன்பு பல நபிகளை அல்லாஹ் யூதர்களிடமும் இதர மக்களிடமும் அனுப்பியுள்ளான். அவர்களும் அல்லாஹ்விடமிருந்து வேதத்தைப் பெற்று மக்களுக்கு கொடுத்துள்ளார்கள். முக்கியமாக, பைபிளில் 66 புத்தகங்கள் உள்ளன, அவைகளை 40க்கும் அதிகமான நபிமார்கள், சீடர்கள், பரிசுத்தவான்கள் அல்லாஹ்விடமிருந்து பெற்று கொடுத்துள்ளார்கள்.

பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்கள் உள்ளன, புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளன. 

இப்றாஹீம், மூஸா, தாவீது, சாலொமோன், ஏசாயா, எரேமியா, போன்ற தீர்க்கதரிகள் ஒரு போதும் தங்களுக்கு இறக்கப்பட்ட வசனங்கள் மக்களால் ஓதமுடியவில்லை எனவே மாற்றிக் கொடுங்கள், அல்லது வேறு பல வட்டாரமொழி வழக்கத்தில் இறக்குங்கள் என்று ஒரு போதும் கேட்டதில்லை. 

பைபிளில் மொத்தம் 66 புத்தகங்கள், 31100க்கும் அதிகமான வசனங்கள், இப்படி இருந்தும் எந்த ஒரு தீர்க்கதரிசியும், "நீர் இறக்கிய வசனங்களை என் மக்கள் ஓதுவதற்கு கடினமாக உள்ளது, எனவே அவர்களுக்கு ஓதுவதற்கு சுலபமாக இருக்கும்வண்ணம், வேறு வகையில் இறக்குங்கள்" என்று இறைவனிடம் கேட்டதில்லை.

வசனங்களை ஓதுவது முக்கியமா? அவைகளுக்கு கீழ்படிவது முக்கியமா?

பைபிள் மிகவும் தெளிவாகச் சொல்கிறது, அதாவது வேத வசனங்களை வாசிக்கிறது  மட்டுமல்ல, கேட்பது மட்டுமல்ல, அவைகளுக்கு கீழ்படிகிறவர்களே பாக்கியவான்கள்.

வெளி 1:3. இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.

ஆனால், இஸ்லாமில் மட்டும் என்னவோ, ஓதுவதற்கு மட்டுமே அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும், அரபியில் படித்தால் தான் அதிக நன்மையை அல்லாஹ் தருவான் என்ற தவறான கோட்பாட்டை இஸ்லாம் முன்மொழிகின்றது.  எனவே தான், கீழ்படிவதற்கு பதிலாக ஓதுவதற்கு முக்கியத்தும் கொடுத்து, மக்களுக்கு சுலபமாக ஒதுவதற்கு வழி உண்டாகும் படி முஹம்மது அல்லாஹ்விடம் ஏழு வட்டாரமுறைகளில் கேட்டார். 

ஏன் முஹம்மது இப்படி நடந்துக்கொண்டார்? மற்ற முந்தைய பைபிளின் நபிமார்கள் இப்படி செய்யவில்லை ஏன்? என்று நாம் சிந்திக்கும் போது கீழ்கண்ட தெரிவுகள் மட்டும் தான் நமக்கு கிடைக்கின்றது.

1) பைபிளின் முந்தைய நபிமார்கள் தெளிவாக முதல் முறையிலேயே வசனங்களை சொன்னதாலேயா? முஹம்மதுவினால் இப்படி செய்யமுடியவில்லை என்பதாலேயா? அல்லது குர்‍ஆனின் வசன‌ அமைப்பு, அரபியை தாய்மொழியாக கொண்ட மக்களால் சுலபமாக ஓதும்படி இல்லாமல் இருந்ததாலேயா?

அல்லது

2) முந்தைய நபிமார்களின் மக்கள், முக்கியமாக யூதர்கள், முதல் முறையிலேயே வேத வசனங்களை தெளிவாக புரிந்துக்கொள்ளக்கூடிய அளவு அறிவு படைத்தவர்களாக இருந்தார்களா? அன்றைய அரபி பேசும் முஸ்லிம்க‌ள், அறிவில் குறைவுள்ளவர்களாக இருந்ததாலேயா? முஹம்மது அல்லாஹ்விடம் 7 வகையான மொழி வழக்கத்தில் கேட்டார்?

அல்லது

3) ஓதுவதைக் காட்டிலும் படித்து புரிந்துக்கொண்டு கீழ்படிவது தான் முக்கியம் என்று முந்தைய நபிமார்களின் இறைவன் (யெகோவா தேவன்) சொன்னதால், ஏழு வட்டார மொழிகளில் தங்களுக்கு வேத வசனங்கள் தேவையில்லை என்று பைபிளின் நபிமார்கள் கருதியதால் தானா?

அல்லது

4) குர்‍ஆனின் மூலமொழியாகிய‌ அரபியைப்போன்று அல்லாமல், பைபிளின் மூல மொழிகளாகிய எபிரேயம் கிரேக்க மொழிகளில் வேத வசனங்கள் ஒரே முறையில் தெளிவாக கருத்துக்களை சொன்னதால், ஏழுமுறை வேத வசனங்களை இறக்கவேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டதா?

அல்லது 

5) ஒலியின் வடிவில் தன் வேதத்தை மக்களின் மனதில் பாதுகாக்கவேண்டும் என்ற அல்லாஹ்வின் தவறான முடிவினால் உண்டான விளைவினால் தான், முஹம்மது ஏழு முறை கேட்டாரா?

அல்லது 

6) பைபிளின் தேவன் தன் வேதத்தை எழுத்துவடிவில் பாதுகாக்கவேண்டும் என்று எடுத்த ஞானமான முடிவினால், முந்தைய நபிமார்களுக்கு, மறுபடியும் இறைவனிடம் சென்று "ஒன்ஸ் மோர்(Once More)" என்று கேட்கவேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டதா?

அல்லது

7) மேற்கண்ட ஹதீஸின் படி முஹம்மதுவோடு இருந்த சஹாபா கருதியது போன்று முஹம்மது பொய் சொன்னாரா?

மக்கா மற்றும் மதினா என்ற இரண்டு ஊர்களில் இருந்த மக்கள் சுலபமாக குர்‍ஆன் ஓதவேண்டும் என்று விரும்பிய முஹம்மதுவிற்கு, அவருக்கு பிறகு அரபி தெரியாத கோடிக்கணக்கான மக்கள் புரியாமலேயே குர்‍ஆனை அரபியில் படிக்கவேண்டுமே, அவர்கள் புரியாமல் எப்படி கீழ்படிவார்கள் என்று சிந்திக்க தெரியாமல் போனதென்ன? முஹம்மதுவை விட்டு விடுங்கள் அவர் ஒரு மனிதர், ஆனால் அல்லாஹ்விற்கு எங்கே போனது ஞானம்? 

அரபி பேசும் முஸ்லிம்களுக்காக ஏழு வகையான வட்டார மொழியில் வசனங்களை இறக்கிய அல்லாஹ், அன்றிலிருந்து இன்றுவரை இதர மொழிகளை பேசும் கோடிக்கணக்கான உலக மக்களின் 'அரபியை புரிந்துக்கொள்ளக்கூடாத த‌ன்மையை' ஏன் புரிந்துக்கொள்ள முடியவில்லை? சிறிது சிந்திப்போமா?

முடிவுரை:

இதுவரை பார்த்த விவரங்களின் படி நமக்கு புரிவது என்னவென்றால், எழுத்துவடிவில் அல்லாமல், வெறும் ஓசை வடிவில் மனப்பாடம் செய்யும் போது, உண்டாகும் பிரச்சனையை சமாளிக்க 'முஹம்மது ஆடிய நாடகம் தான், ஏழு வகையான குர்‍ஆனை அல்லாஹ் இறக்கிய நிகழ்ச்சி'.

ஒரு சாதாரண மனிதராக இருந்த முஹம்மது, எத்தனை வசனங்களைத் தான் மனப்பாடம் செய்யமுடியும்? அது மட்டுமல்லாமல், சில மாதங்களுக்கு முன்பு அல்லாஹ் இறக்கியதாக தாம் சொன்ன வசனங்களை, மறுபடியும் சிலர் வெவ்வேறு வகையாக ஓதிக்காட்டும் போது, அதனை சரி பார்க்க முடியாமல் தவித்தபோது அவர் சொன்ன பொய் தான் 'ஏழு வகையான குர்‍ஆன் ஓதுதல் முறை', காது உள்ளவன் கேட்கக்கடவன், அறிவு உள்ளவன் சிந்திக்கக்கடவன்.

இஸ்லாமையும் கிறிஸ்தவைத்தையும் ஆய்வு செய்யும் போது, அல்லாஹ்வும் யெகோவா தேவனும் வெவ்வேறானவர்கள் என்பதற்கு 'இவ்விருவர்கள் தங்கள் வார்த்தைகளை எப்படி பாதுகாக்கவேண்டும்' என்று அவர்கள் கருதிய விதம் கூட வித்தியாசமானதே என்பதை அறியமுடியும்.

பைபிளின் தேவன் தன் வேதத்தை எப்படி பாதுகாத்தார்?

பைபிளின் தேவன் எத்தனை முறை தம் வசனங்களை எழுதும்படி (மனப்பாடம் செய்யும்படி அல்ல) கட்டளையிட்டுள்ளார் என்பதை கவனிக்கவும். மனப்பாடம் செய்வதற்கு பைபிள் எதிரியல்ல, ஆனால் வேதம் பாதுகாக்கப்படுவதற்கு மனப்பாடம் சிறந்த வழியல்ல‌ என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

உபாகமம் 31:19

19. இப்பொழுது நீங்கள் இந்தப் பாட்டை எழுதிக்கொண்டு, இதை இஸ்ரவேல் புத்திரருக்குப் படிப்பித்து, இந்தப் பாட்டு எனக்குச் சாட்சியாக இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே இருக்கும்படி இதை அவர்கள் வாயில் வழங்கப்பண்ணுங்கள்.

யாத்திராகமம் 34: 27

27. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார்.

யாத்திராகமம் 17: 14

14. பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி

யாத்திராகமம் 24:4

4. மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான். 7. உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காதுகேட்க வாசித்தான்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்.

யோசுவா 24:26

26. இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி, . .

எரேமியா 26:2

2. நீ ஒரு புஸ்தகச்சுருளை எடுத்து, யோசியாவின் நாட்களிலே நான் உன்னுடனே பேசின நாள் முதற்கொண்டு இந்நாள்மட்டும் இஸ்ரவேலைக்குறித்தும், யூதாவைக்குறித்தும், சகல ஜாதிகளைக்குறித்தும் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் அதிலே எழுது.

எபிரேய மொழியில் "கதப்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, இதன் பொருள் "எழுதுதல், உளியால் கற்களில் எழுதுதல்" என்பதாகும்.  இது 227 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

https://biblehub.com/hebrew/strongs_3789.htm

Strong's Hebrew: 3789. כָּתַב (kathab) — 227 Occurrences

முஹம்மதுவிற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே யெகொவா தேவன் எழுதுவதற்கு கொடுத்திருக்கின்ற முக்கியத்துவதைப்  பார்த்தால், இவரும் அல்லாஹ்வும் வெவ்வேறானவர்கள் என்பதைத் தான் புரிந்துக் கொள்ள முடிகின்றது.

குர்‍ஆனின் ஏழு வட்டார மொழி வகைகள் பற்றி மேலும் அறிய படிக்கவும்:

7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? இருக்கின்றது, இருக்கிறது, இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு & கீது

தேதி: 18 Oct 2020


இதர குர்-ஆன் ஆய்வுக்கட்டுரைகள்

குர்-ஆன் பக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்