சவக்கடல் சுருள்கள் – கிறிஸ்தவத்திற்கு அமிர்தமா அல்லது நஞ்சா?

முந்தைய கட்டுரைகள்: 

 1. சவக்கடல் சுருள்கள் அறிமுகம்
 2. சவக்கடல் சுருள்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
 3. சவக்கடல் சுருள்களின் காலவரிசை 1947 லிருந்து 1967 வரை
 4. சவக்கடல் குகைகள் 1-3ல் கிடைத்த சுருள்கள்
 5. சவக்கடல் குகைகள் 4-5ல் கிடைத்த சுருள்கள்
 6. சவக்கடல் குகைகள் 6-11ல் கிடைத்த சுருள்கள்

உலகில்  எவைகளுக்கு பஞ்சமிருக்கிறதோ இல்லையோ கிறிஸ்தவத்தை எதிர்ப்பவர்களுக்கு மட்டும் பஞ்சமில்லை. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஏதோ ஒரு புதிய கொள்கையைச் சொல்லி, கிறிஸ்தவத்தை எதிர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த பட்டியலில் இப்போது சவக்கடல் சுருள்களை காரணம் காட்டி சிலர் புதிதாக சேர்ந்துள்ளார்கள். ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் சுருள்கள் கிடைத்திருப்பது, இந்த சவக்கடல் பகுதியில் தான். 1947ம் ஆண்டு முதல் 1956ம் ஆண்டு வரை கண்டெடுக்கப்பட்ட சுருள்களில் சில சுருள்கள் 1992ம் ஆண்டுவரை மக்கள் பார்வைக்காக பொதுவில் கொண்டு வரப்படவில்லை. இந்த காலக்கட்டத்தில் பலவகையான புதிய கொள்கைகளை, கிறிஸ்தவத்திற்கு எதிரான கருத்துக்களை சில அறிஞர்கள் முன் வைக்க ஆரம்பித்தனர், இதனால் புகழின் உச்சத்தை அடைந்தவர்களும் உண்டு, தங்கள் பெயரை கெடுத்துக்கொண்டவர்களும் உண்டு. 

1992ம் ஆண்டுக்கு பிறகு, அனைத்து சுருள்களும் மொழியாக்கம் செய்யப்பட்டு மக்களின் முன் கொண்டு வரப்பட்டது. அவைகளை ஆய்வு செய்தவர்கள், இனியும் கிறிஸ்தவத்தை விமர்சிக்க ஒன்றுமில்லை என அறிந்துக்கொண்டு மௌன ஒப்புதல் கொடுத்துவிட்டு அமைதியாகிவிட்டார்கள். ஆனால், சவக்கடல் சுருள்கள் பற்றிய விவரங்களை முழுவதுமாக தெரிந்துக்கொள்ளாமல் சில அறிஞர்கள் முக்கியமாக முஸ்லிம் அறிஞர்களில் சிலர் (பி ஜைனுல் ஆபிதீன் போன்றவர்கள்) இன்னும் ‘சவக்கடல் சுருள்கள் கிறிஸ்தவத்தை எதிர்க்கின்றன, இஸ்லாமை ஆதரிக்கின்றன’ என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் விமர்சனங்களுக்கு அடுத்தடுத்த அத்தியாயங்களில் நாம் பதில்களைக் காண்போம்.  

இந்த அத்தியாயத்தில், ’சவக்கடல் சுருள்கள் கிறிஸ்தவத்திற்கு கிடைத்த அமிர்தமா அல்லது நஞ்சா?’ என்பதை கேள்வி பதில் வடிவில் காண்போம். 

1) சவக்கடல் சுருள்களில் எத்தனை சுருள்கள் பைபிளுக்கு சம்மந்தப்பட்டவைகளாக இருக்கின்றன?

கும்ரான் பகுதியின் பதினோறு குகைகளிலிருந்து 941க்கும் அதிகமான சுருள்கள் கிடைத்தன. இவைகளில் 240 சுருள்கள் பைபிள் சம்மந்தப்பட்ட சுருள்கள். அதாவது பைபிளில் இருக்கும் பழைய ஏற்பாட்டில் காணப்படும் புத்தகங்களின் பிரதிகளின் எண்ணிக்கை 240க்கும் அதிகமானதாகும். கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் பயன்படுத்தும் பழைய ஏற்பாட்டில் உள்ள புத்தகங்களில் ’எஸ்தர் புத்தகம்’ தவிர மீதமுள்ள அனைத்து புத்தகங்களும் இந்த சவக்கடல் குகைகளில் பல பிரதிகள் கிடைத்தன. இவைகள் தவிர எபிரேய மற்றும் அராமிக் மொழிகளில் இப்புத்தகங்களின் விரிவுரைகள், விளக்கங்கள் அடங்கிய சுருள்களும் கிடைத்தன.

மீதமுள்ள 701 சுருள்கள், கும்ரான் பகுதியில் வாழ்ந்த எஸ்ஸீன்ஸ் என்ற யூதர்களின் தனிப்பட்ட புத்தகங்கள் மற்றும் இதர பொருட்களாகும்.

2) சவக்கடல் சுருள்களின் காலக்கட்டமென்ன?

ரேடியோ கார்பன் மற்றும் பாலியோகிராபிக் (தொல்லெழுத்தியல்) என்ற இரண்டு வகையான முறைகளில் இச்சுருள்களின் காலக்கட்டம் கி. மு. 250 லிருந்து கி.பி. 68 வரை என்று கணக்கிட்டுள்ளனர்.

இதன் படி, இச்சுருள்கள் இயேசுவிற்கு முன்பு, 200 ஆண்டுகளுக்கு மேலாக பழையது மற்றும் சில சுருள்கள் இயேசுவின் காலக்கட்டத்திற்கு சம்மந்தப்பட்டவைகளாகவும் இருக்கின்றன (கி.பி. 68ம் ஆண்டில் இந்த கும்ரான் பகுதி ரோமர்களால் அழிக்கப்பட்டது).

பாலியோகிராபிக் (paleographic)  என்பது பழங்கால எழுத்துக்களின் வடிவங்களையும் எழுதும் முறைகளையும் ஆய்வு செய்து, அதன் காலக்கட்டத்தை கணக்கிடும் முறையாகும். 

கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு அல்லது கதிரியக்கக்கார்பன் காலக்கணிப்பு (Carbon dating, Radiocarbon dating) என்பது, இயற்கையில் காணப்படும், கரிமம்-14 ஐ பயன்படுத்தி பொருட்களின் வயதைக் கண்டுபிடிப்பதற்கான கதிரியக்க அளவைமுறை ஆகும். இம் முறையைப் பயன்படுத்தி 58,000 முதல் 62,000 ஆண்டுகள் வரையான பொருட்களின் வயதை அறிந்துகொள்ள முடியும் (மூலம் விக்கிபீடியா - https://ta.wikipedia.org/s/1035)

3) சவக்கடல் சுருள்கள் ‘இரண்டாம் தேவாலய காலத்தின் சுருள்கள்’ என்றுச் சொல்வது எதனால்?

சாலொமோன் முதலாவது தேவாலயத்தை கி.மு. 10ம் நூற்றாண்டில் கட்டினார், 400 ஆண்டுகளுக்கு பிறகு கி.மு. 6ம் நூற்றாண்டில் அந்த தேவாலயம் நேபுகாத்நேச்சார் அரசனால் அழிக்கப்பட்டது. 70 ஆண்டுகள் கழித்து முதல் ஆலயம் இருந்த இடத்தில் இரண்டாவது தேவாலயம் கட்டப்பட்டது. இந்த இரண்டாம் தேவாலயமும் கி.பி. 68-70 களில் ரோமர்களால் அழிக்கப்பட்டது.  ஆக, இரண்டாம் ஆலய காலக்கட்டம் என்பது கி.மு. 516 லிருந்து கி.பி. 70 வரையாகும் (இரண்டாம் கோவில் - https://ta.wikipedia.org/s/5gum).

சவக்கடல் சுருள்கள் இந்த இரண்டாம் தேவாலய காலக்கட்டத்தில் எழுதப்பட்ட சுருள்கள் என்பதால் இப்படி அழைக்கப்படுகின்றது. 

4) எத்தனை மொழிகளில் இச்சுருள்கள் எழுதப்பட்டு இருந்தது?

பைபிள் சம்மந்தப்பட்ட சுருள்கள் 240 ஆகும்.

இவைகளில் 235 சுருள்கள் எபிரேய மொழியிலும், 5 கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டுள்ளது.

பைபிளுக்கு சம்மந்தமில்லாத இதர சுருள்கள் 701 ஆகும். இவைகளில் 548 சுருள்கள் எபிரேய மொழியிலும், 137 அராமிக் மொழியிலும், 5 கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டுள்ளது. 

5) நம்மிடமிருந்த புராதன ‘பழைய ஏற்பாடு’ எது?

சவக்கடல் சுருள்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு, நம்மிடம்  இருந்த பைபிளின் பழைய ஏற்பாடு, கி.பி. 9 மற்றும் 10ம் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்ட பிரதியாகும்.

 • லெனின்கிரெட் கோடெக்ஸ் (Leningrad Codex)  என்பது தான் நம்மிடம் இருந்த மிகவும் பழமை வாய்ந்த ’முழு’ பழைய ஏற்பாடு. இதன் காலக்கட்டம் கி.பி. 1008 ஆகும் (https://en.wikipedia.org/wiki/Leningrad_Codex
 • அலெப்போ கோடெக்ஸ் (Aleppo Codex) என்பது கி.பி. 10ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் எழுதப்பட்டது. இது லெனின்கிரேட் கோடெக்ஸை விட பல ஆண்டுகள்  முந்தையது ஆனால், தற்போது நம்மிடமுள்ள அலெப்போ கோடெக்ஸில் சில பகுதிகள் அழிந்துவிட்டது. (https://en.wikipedia.org/wiki/Aleppo_Codex)
 • கெய்ரோ ஜெனிஜெ – (Cairo Genizeh) என்பது கி.பி. 9ம் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்ட பழைய ஏற்பாட்டு பிரதியாகும், இதிலும் சில பகுதிகள் நம்மிடம் இல்லை. (https://en.wikipedia.org/wiki/Cairo_Geniza)

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், 1947க்கு முன்பு வரை உலகில் பயன்படுத்திய பழைய  ஏற்பாடு, கி.பி. 9 லிருந்து 10 ம் நூற்றாண்டுவரையுள்ள மூல கையெழுத்துப் பிரதிகளிலிருந்து மொழிப்பெயர்க்கப்பட்டதாகும். இதனால் ஒரு விமர்சனமும் முன்வைக்கப்பட்டது, அதாவது, ‘கி.பி. 9-10ம் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்ட பழைய ஏற்பாட்டு மூலப்பிரதி தான் கிறிஸ்தவர்களிடம் உள்ளது, இயேசு வாழ்ந்த காலத்து ’பழைய ஏற்பாட்டு மூலம்’ கிறிஸ்தவர்களிடமோ, யூதர்களிடமோ இல்லை என்பதாகும்.  இந்த விமர்சனத்துக்கு பதில் அளிக்கும் வகையில், சவக்கடல் சுருள்கள் உதவி செய்துள்ளன. அதாவது, நம்மிடம் இருந்த மூலப்பிரதிகளுக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் (கி.மு. 250) சென்றுவிட்டோம். இது சவக்கடல் சுருள்களினால் உண்டான மிகப்பெரிய நன்மையாகும். இயேசுவின் காலத்து மற்றும் அவருக்கு 250 ஆண்டுகளுக்கு  முன்பாக வாசித்த பழைய ஏற்பாடு நம்மிடம் இப்போது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சுருக்கமாக சொல்வதென்றால், நாம் ’லெனின்கிரேட், அலெப்போ, மற்றும் கெய்ரோ ஜெனிஜெ’ போன்ற பழைய ஏற்பாட்டு பிரதிகளுக்கு முன்பு 1000 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டோம். சவக்கடல் சுருள்கள் கிறிஸ்தவ உலகத்துக்கு கிடைத்த அமிர்தம் என்றுச் சொல்லலாம். 

6) தானியேல், ஏசாயா புத்தகங்களின் விமர்சனமும், சவக்கடல் சுருள்களின் பதில்களும்

சில அறிஞர்களிடையே  தானியேல் புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனம் 1947க்கு முன்பு வரை இருந்தது. சவக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, சில அறிஞர்கள், தானியேல் புத்தகத்தில் வரும் அராமிக் மொழியானது, கி.மு. 167ம் ஆண்டுக்கு முன்பானது அல்ல, அது மெக்காபீன்கள் (மக்கபேயர்) காலத்துக்கு (கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு) சம்மந்தப்பட்டது என்று விமர்சித்தனர். ஆனால், கென்னெத் கிட்சன் என்ற புகழ்பெற்ற அறிஞர், தானியேலில் வரும் அராமிக் மொழியானது கி.மு. 5 அல்லது அதற்கு முன்பான அராமிக் மொழியாகும் என்று கூறினார். சவக்கடல் சுருள்களில் கிடைத்த இதர சுருள்களில் வரும் அராமிக் மொழியானது, தானியேல் புத்தகத்தில் வரும அராமிக்கை விட வித்தியாசமானதாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பழைய ஏற்பாட்டு அறிஞர்கள் சவக்கடல் சுருள்களை ஆய்வு செய்து, தானியேல் புத்தகத்தில் வரும் அராமிக் மொழி கி.பி. 4/5 நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டதாகும், அது கி.பி. 2ம் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டது அல்ல என்று உறுதிசெய்தார்கள். அதாவது கென்னத் கிட்சன் அறிஞர் சொன்னது தான் சவக்கடல் சுருள்களின் மூலம் உறுதி செய்யப்பட்டது.  தானியேல் மெக்காபீன்கள் காலத்தில் எழுதப்பட்டது என்ற பொய்யான விமர்சனம் சவக்கடல் சுருள்களினால் தகர்க்கப்பட்டுவிட்டது. 

இரண்டாவதாக, ஏசாயா புத்தகத்தின் விமர்சனத்துக்கு வருவோம். சில அறிஞர்கள் ஏசாயா புத்தகம் ஒரே எழுதாளரால் எழுதப்படவில்லை என்ற விமர்சனத்தை முன்வைத்திருந்தார்கள். 

ஏசாயாவின் முதல் 39 அத்தியாயங்கள், கி.மு. 8ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்றும், அடுத்த 27 அத்தியாயங்கள், இஸ்ரேலர்கள் பாபிலோனுக்கு அடிமைகளாக கொண்டு போகப்பட்டு, அதன் பின்பு திரும்பி வந்த பிறகு இன்னொரு எழுத்தாளரால் எழுதப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்று விமர்சித்தனர்.

சவக்கடல் சுருள்கள் கிடைத்தவுடன், அனைத்து தரப்பு அறிஞர்கள், ஏசாயா புத்தகத்தை ஆய்வு செய்ய அதிக ஆர்வம் காட்டினர். மேற்கண்ட விமர்சனத்தின் படி, இரண்டு பகுதிகளாக ஏசாயா புத்தகம் காணப்பட்டதா என்று பார்க்க ஆர்வம் கொண்டனர். ஆனால், சவக்கடல் சுருள்களில் கிடைத்த ஏசாயாவில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், அந்த இரண்டு பகுதிகள் (39,27 அத்தியாயங்கள்) ஒரே தொடர்ச்சியாக வந்திருப்பதைக் கண்டார்கள். ஏசாயாவை இரண்டு எழுத்தாளர்கள், பல நூற்றாண்டு இடைவெளியில் எழுதியிருக்கலாம் என்ற விமர்சனமும் தகர்ந்துவிட்டது. சவக்கடல் சுருள் ஏசாயாவை பிரதி எடுத்த யூதர்கள் இந்த இரண்டு பிரிவு பற்றி எதையும் கூறவில்லை, மேலும், அவர்கள் அதைப் பற்றி விளக்கவுரையிலும் எதையும் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரித்திர ஆசிரியர்கள் பென் சிரா (Ben Sira – கி.மு. 2ம் நூற்றாண்டு), ஜோசபஸ் மற்றும் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களின்படி, ’ஏசாயா’ புத்தகம் ஒரே ஆசிரியரால் ஒரே காலத்தில் எழுதப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இப்போது சவக்கடல் சுருள்கள் அதனை உறுதி செய்துவிட்டது.

7) சவக்கடல் சுருள்கள் கிறிஸ்தவர்களுக்கு எவைகளைத் தருகிறது?

இயேசு அற்புதங்கள் செய்கின்றார் என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் அவரைச் சுற்றி எப்போதும் இருக்கவில்லை, தேவைப்படும் இடத்தில் அவர் பழைய ஏற்பாட்டை சரியாக பயன்படுத்தியபடியினால் அவரை எதிரிகளாக கருதிய யூத மத தலைவர்கள் கூட அவரைச் சுற்றி எப்போதும் பழைய ஏற்பாட்டு கேள்விகளோடு திரிந்துக்கொண்டு இருந்தனர்.  

இயேசுவும் பழைய ஏற்பாடும்:

பன்னிரண்டு வயதில் தேவாலய மத தலைவர்களிடம் இயேசு ஞானமாக ஆன்மீக விஷயங்களை பேசிக்கொண்டு இருந்தார் (லூக்கா 2:42, 46-47). சாத்தானின் சோதனையின் போது, பழைய ஏற்பாட்டு உபாகமத்திலிருந்து வசனங்களை மேற்கோள்களாக காட்டி இயேசு ஜெயித்தார் (மத்தேயு 4:1-11). தாவீதின் குமாரனாகிய மேசிய பற்றிய விவரத்தில், பழைய ஏற்பாட்டை மேற்கோள் காட்டி பரிசேயர்களின் வாயை மூடினார்.

இயேசு அதிகமாக மேற்கோள் காட்டிய பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் நான்கை இங்கு பார்ப்போம்.

புத்தகம் & மேற்கோள்கள்
சங்கீதம் – 11 முறை
 • சங்கீதம் 8:2, 110:1; மத்தேயு 21:16, 22:44; மாற்கு 12:36, 14:62; லூக்கா 20:42–43
 • சங்கீதம் 22:1; மத்தேயு 27:46; மாற்கு 15:34
 • சங்கீதம் 35:19, 69:4; யோவான் 15:25
 • சங்கீதம் 41:9; யோவான் 13:18
 • சங்கீதம் 78:24; யோவான் 6:31
 • சங்கீதம் 82:6; யோவான் 10:34
 • சங்கீதம் 110:1; மத்தேயு 26:64
 • சங்கீதம் 118:22–23;  மத்தேயு 21:42;  மாற்கு 12:10;  லூக்கா 20:17
 • சங்கீதம் 118:26; மத்தேயு 23:39; லூக்கா 13:35
உபாகமம் – 10 முறை
 • உபாகமம் 6:5; மத்தேயு 22:37; மத்தேயு 12:29–33; லூக்கா 10:27
 • உபாகமம் 24:1–3; மத்தேயு 5:31, 19:7; மாற்கு 10:4
 • உபாகமம் 19:15; மத்தேயு 18:16
 • உபாகமம் 6:13, 16, 8:3; மத்தேயு 4:4, 7, 10; லூக்கா 4:4, 8, 12
 • பத்து கட்டளைகள் இரு புத்தகங்களில் வருகிறது: யாத்திராகமம் மற்றும் உபாகமம். இயேசு அவைகளை மேற்கோள் காட்டும் போது இவ்விரு புத்தகங்களையும் அவர் குறிப்பிடுகிறார் என்று பொருள்.
ஏசாயா- 8 முறை
 • ஏசாயா 6:9–10; மத்தேயு 13:14–15; மாற்கு 4:12; லூக்கா 8:10 
 • ஏசாயா 56:7; மத்தேயு 21:13; மாற்கு 11:17; லூக்கா 19:46 
 • ஏசாயா 29:13; மத்தேயு 15:8–9; மாற்கு 7:6–7 
 • ஏசாயா 5:1; மத்தேயு 21:33; மாற்கு 12:1; லூக்கா 20:9 
 • ஏசாயா 61:1-3
யாத்திராகமம் - 7 முறை
 • யாத் 3:6; மத்தேயு 22:32; மாற்கு 12:26; லூக்கா 20:37 
 • யாத் 20:12–16; மத்தேயு 19:18–19; மாற்கு 10:19; லூக்கா 18:20 
 • யாத் 20:12, 21:17; மத்தேயு 15:4; மாற்கு 7:10 
 • யாத் 20:12–13; மத்தேயு 5:21, 27 
 • யாத் 21:24; மத்தேயு 5:38

இயேசு பழைய ஏற்பாட்டிலுள்ள 39 புத்தகங்களிலிருந்து மொத்தம் 24 புத்தகங்களை மேற்கோள் காட்டியுள்ளார், மேலும் புதிய ஏற்பாட்டில் 34 பழைய ஏற்பாட்டு புத்தகங்களிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது (http://www.bible.ca/b-canon-jesus-favored-old-testament-textual-manuscript.htm).

இவைகள் மட்டுமல்லாமல், கிறிஸ்து பற்றிய தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றது. ஒருமுறை எருசலேம் தேவாலயத்தில் அவர் பிரசங்க மேடையில் நின்று, ஏசாயா புத்தகத்தை திறந்து அதிலிருந்து தம்மைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசனத்தைச் சுட்டிக்காட்டி, அந்த வசனம் இன்று நிறைவேறியது என்று இயேசு கூறினார். 

இயேசுவைப் போலவே, இயேசுவின் சீடர்களும், அப்போஸ்தலர்களும் பழைய ஏற்பாட்டை அதிகமாக மேற்கோள் காட்டியுள்ளார்கள். எபிரேயர் என்ற ஒரு புதிய ஏற்பாட்டு புத்தகம், பழைய ஏற்பாட்டின் அடிப்படை கோட்பாடுகளின் விளக்கவுரையாக திகழுகின்றது. 

புதிய ஏற்பாட்டில் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட புத்தகம் ஏசாயா ஆகும், இது 411 முறை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இந்த ஏசாயா புத்தகம் முழுவதுமாக சவக்கடல் குகைகளில் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (http://www.israel-a-history-of.com/book-of-isaiah.html)

ஆக, பழைய ஏற்பாடு கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கியமான வேதமாகும். கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை உறுதிபடுத்தும் விதமாக சவக்கடல் சுருள்கள் அமைந்துள்ளது. இந்த தொகுப்பு கும்ரான் குகையில் கிடைத்திருப்பது, கிறிஸ்தவ உலகிற்கு ஒரு விலை உயர்ந்த பொக்கிஷம் என்றுச் சொன்னால், அது மிகையில்லை. 

இதுவரை கண்ட விவரங்களின்படி, சவக்கடல் சுருள்கள் கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த அமிர்தம் என்பதை அறியலாம். இன்னும் பல விதங்களில் சவக்கடல் சுருள்கள் கிறிஸ்தவத்திற்கு பயன்பட்டுள்ளது, அவைகளைப் பற்றி தேவைப்படும் பொழுது விவரமாக காண்போம். 

தேதி: 2nd Nov 2016


’சவக்கடல் சுருள்கள்’ பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்