சவக்கடல் சுருள்களின் காலவரிசை 1947 லிருந்து 1967 வரை

முந்தைய கட்டுரைகள்: 

1) சவக்கடல் சுருள்கள் அறிமுகம்

2) சவக்கடல் சுருள்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

சவக்கடல் சுருள்களின் கண்டுபிடிப்பு ஒரு பெரிய நீண்ட பயணம். முதல் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட சுருள்களுக்கும், பதினோறாம் குகையில் கிடைத்த சுருள்களுக்கும் இடையே 10 ஆண்டுகள் கடந்துவிட்டது. 1947ம் ஆண்டு முதல் 1967வரை நடந்த நாடகம் என்ன? இதில் பங்கு பெற்ற நடிகர்கள் யார் என்பதை சுருக்கமாகக் காண்போம். 

பிப்ரவரி 1947

முஹம்மத் இத்திப் ஹஸ்ஸன் என்பவர், மற்ற இரண்டு மேய்ப்பர்களோடுச் சேர்ந்து, சவக்கடல் பகுதியில் முதலாவது குகையிலிருந்த சுருள்களை கண்டுபிடித்தார்.

மார்ச் 1947

முதல் குகையிலிருந்து எடுத்த சுருள்களை யாருக்கு விற்கலாம் என்று அந்த மேய்ப்பர்கள் வியாபாரிகளை தேடிக்கொண்டு இருந்தார்கள்.

ஏப்ரல் 1947

கலீல் இஷ்கந்தர் என்கின்ற ”கண்டோ” என்பவர் மூன்று சுருள்களை வாங்கிக்கொண்டார். அந்த மூன்று சுருள்களின் பெயர்களாவன: 1QIsaiaha; 1QpHab; and 1QS-the Community Rule

(சுருள்களை பெயரிடும் விதம்: ‘1Qisaiaha’ என்ற சுருளின் பெயரில்  ’1Q’ என்றால் ’முதலாவது குகை’ என்று அர்த்தம். ’Q’ என்ற எழுத்துக்கு முன்பாக குகையின் எண் கொடுக்கப்படும். ’1Q’ என்றால் முதலாவது குகை, ‘2Q’ என்றால் இரண்டாவது குகை  என்று அர்த்தமாகும். இதே போல பதினோறு குகைகளுக்கும் (1Q - 11Q) பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்தபடியாக ’1Qisaiaha’ என்ற சுருளின் பெயரில், ‘isaiaha’ என்பது முதலாவது கிடைத்த ‘ஏசாயா - A’ புத்தகம் (isaiah - a) என்று அர்த்தம்.  அப்படியானால், ஏசாயாவின் புத்தகம் இன்னொரு பிரதி கிடைத்தால் அதற்கு  ‘isaiahb’  (ஏசாயா- B) என்று பெயரிடுவார்கள். இதே குகையில் இரண்டாவது பிரதியும் கிடைத்தது, அதற்கு 1Qisaiahb என்று பெயரிட்டுள்ளார்கள். இந்த ஏசாயா பிரதியையும் மேய்ப்பர்கள் விற்றுவிட்டார்கள். அடுத்த தொடரில் ஒவ்வொரு குகையில் கிடைத்த புத்தகங்கள் என்னென்ன என்பதை காண்போம்.)

மே/ஜூன் 1947

அந்த மேய்ப்பர்கள் ‘ஃபீதி ஸலாஹி’ என்பவருக்கு இதர மூன்று சுருள்களை (1QIsaiahb; 1QM-the War Scroll; and 1Q35) விற்றார்கள். கவனிக்கவும்: ஏசாயா – B (1QIsaiahb) என்ற இன்னொரு பிரதியும் முதல் குகையில் கிடைத்தது.

ஜூலை 5, 1947

கண்டோ என்பவர் தான் வாங்கியிருந்த மூன்று சுருள்களை, ’அதனாஸியஸ் யேஸு சாமுவேல் (Syrian Orthodox Metropolitan Athanasius Yeshue Samuel)’ என்பவருக்கு விற்றார். 

நவம்பர் 23, 1947

மிஸ்டர் X  என்பவர் (பெயர் தெரியவில்லை), எலியேசர் லிபா சுகெனிக் என்பவரை தொடர்பு கொண்டு, சுருள்களை முதலாவது பார்வையிட்டார். (https://en.wikipedia.org/wiki/Eleazar_Sukenik - எலியேசர் லிபா சுகெனிக்)

நவம்பர் 27, 1947

சுகெனிக் ‘Old City’ என்ற இடத்தில் உள்ள ஒரு கடையில், மிஸ்டர் எக்ஸ் என்பவரை சந்தித்தார்.

நவம்பர் 29, 1947

சுகெனிக் மற்றும் மிஸ்டர் எக்ஸ் இருவரும் சேர்ந்து ஸலாஹி என்பவரை சந்திக்க பெத்லஹேமுக்கு பேருந்து பயணம் மேற்கொண்டனர். ஸலாஹியிடமிருந்த சுருள்களை வாங்குவதற்கான அனைத்து ஆயத்தங்களை சுகெனிக் செய்தார். ஐக்கிய நாட்டு சபை, இந்த நாளில் தான் பாலஸ்தீனாவை பிரித்து, இஸ்ரேல் நாட்டை உருவாக்க தீர்மானத்தை நிறைவேற்றியது.

பிப்ரவரி 1948

மர் சாமுவேல் என்பவரின் உதவியாளர் ‘ரெவரெண்ட் பூட்ரோஸ் ஸவ்மி’ American School of Oriental Research ஸ்தாபனத்தை தொடர்பு கொண்டு சுருள்களைப் பற்றி கூறினார். அந்த ஸ்தாபனத்தின் தலைவராக இருந்த ஜான் சி டிரெவர் என்பவர், அந்த சுருள்களை அமெரிக்காவிற்கு கொண்டுவரும்படி அழைப்பு விடுத்தார்.

மார்ச் 15, 1948

டிரெவர் தன்னிடம் வந்த சுருள்களை புகைப்படம் எடுத்து, அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிஞராக  இருந்த வில்லியம் எஃப் ஆல்பிரைட் என்வருக்கு ஒரு பிரதியை அனுப்பினார். ஆல்பிரைட் ஆய்வு செய்து, அச்சுருள்களின் காலம் கி.மு. 100 என்று கண்டுபிடித்துச் சொன்னார்.

மார்ச் 25, 1948

ஸவ்மி அச்சுருள்களை லெபனானின் பீருட் நகருக்கு கொண்டுச் சென்று பாதுகாத்தார்.

ஜனவரி 29, 1949

மர் சாமுவேல் சுருள்களோடு அமெரிக்கா வந்து டிரெவரை சந்தித்தார்.

பிப்ரவரி 15 - மார்ச் 1949 

’பெரி ரோலண்ட் டி வக்ஸ்’ மற்றும் ’ஜி. லான்கெஸ்டர் ஹார்டிங்’ என்பவர்கள், முதலாம் கும்ரான் குகைக்குச் சென்று மேலும் அதிகமாக ஆய்வு செய்து, இன்னும் பல சுருள்களை கண்டுபிடித்தார்கள்.

நவம்பர் 24 – டிசம்பர் 12, 1951

’டி வக்ஸ்’ மற்றும் ’ஹார்டிங்’ முதலாம் குகைக்கு அருகில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த குடியிருப்பான கும்ரான் பகுதியை ஆய்வு செய்ய தொடங்கினார்கள்.

பிப்ரவரி 1952

கும்ரானின் இரண்டாம் குகை கண்டுபிடிக்கப்பட்டது.

மார்ச் 10-20, 1952

கும்ரானின் மூன்றாம் குகை கண்டுபிடிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 1952

அங்கிருந்த மேய்ப்பர்களால் நான்காவது குகை கண்டுபிடிக்கப்பட்டது, இந்த குகையில் இருந்த 80% சுருள்களை அவர்கள் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள். பாலஸ்தீன தொல்பொருள் அருங்காட்சியகம் (Palestine Archaeological Museum), அந்த சுருள்களை ’கண்டோ’விடமிருந்து வாங்குவதற்கு ஆரம்பித்தது.

செப்டம்பர் 22-29, 1952

’டி வக்ஸ்’ மற்றும் அவரது குழு நான்காவது குகையில் தங்கள் தேடுதல் வேட்டையை தொடங்கினார்கள்.

செப்டர்ம்பர் 1952

’ஜோசெஃப் டி’ ஐந்தாவது குகையை கண்டுபிடித்தார், அதன் பக்கத்திலேயே ஆறாவது குகையும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜூன் 1954

மர் சாமுவேல் ‘த வால் ஸ்டிரீட் ஜர்னல்’ என்ற செய்தித்தாளில், ’நான்கு சவக்கடல் சுருள்கள் விற்பனைக்கு’ என்ற விளம்பரத்தைக் கொடுத்தார்.

ஜூன் 11, 1954

சுகெனின் மகன் ‘யுகேல் யதின்’ என்பவர், அந்த நான்கு சுருள்களை இரகசியமாக வாங்க முயன்றார்.

பிப்ரவரி 13, 1955

யுகேல் யதின் ‘சுருள்கள் மறுபடியும் இஸ்ரேலுக்கு திரும்புகிறது’ என்று அறிக்கையிட்டார்.

பிப்ரவரி – ஏப்ரல் 1955

புதிய சவக்கடல் குகைகள் 7, 8, 9 மற்றும் 10 கண்டுபிடிக்கப்பட்டது.

பிப்ரவரி 1956

கும்ரான் பகுதியில் இருந்த மேய்ப்பர்கள் பதினோறாவது குகையை கண்டுபிடித்தார்கள்.

ஜூன் 1967

யுகேல் யதின் ’கண்டோ’ என்பவரிடமிருந்து ’ஆலய சுருளை – Temple Scroll’ வாங்கினார்.

இக்கட்டுரைக்கு உதவிய தொடுப்புக்கள்:

1) சுருக்கமான காலவரிசைப் பட்டியல் 

2) நீண்ட காலவரிசைப் பட்டியல் 

தேதி: 31st Oct 2016


’சவக்கடல் சுருள்கள்’ பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்