அரபி குர்‍ஆனில் 'ஈஸா' என்ற பெயர் சரியான மொழியாக்கமா?

(எபிரேயத்தில் எழுத்து "J - ஜே" இல்லை, எனவே Jesus (ஜீசஸ்) என்ற பெயர் தவறான ஆங்கில‌ மொழியாக்கம் என்ற முஸ்லிம்களின் குற்றச்சாட்டுக்கு பதில்)

எபிரேய மொழியின் 22 எழுத்துக்களில் ஜே (J) என்ற எழுத்து இல்லை என்பது உண்மை தான். இதனால், ஆங்கிலத்தில் ஜீசஸ் என்ற மொழிப்பெயர்ப்பை பார்த்தவுடன் பல முஸ்லிம்கள் "ஜீசஸ் என்ற பெயர் ஒரு இட்டுக்கட்டப்பட்ட பெயர்' என்று குற்றம் சாட்டுகிறார்கள். எனவே, இதைப் பற்றி சிறிது ஆய்வு செய்வோம்.

ஒரு வார்த்தையை(முக்கியமாக பெயர்களை) ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு 'ஒலியாக்கம்' அல்லது 'ஒலிப்பெயர்ப்பு' (Transliteration) செய்யும் போது, அவ்விரு மொழிகளில் உள்ள 'விதிகளையும், வரம்புகளையும்' கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் ஒரு மொழியின் உச்சரிப்புக்கள் (ஒலிப்பியல் - Phonetics) நேரடியாக இரண்டாம் மொழியில் சரிவர கிடைக்காது, அது அந்த மொழியில் உள்ள வரம்பு (குறைபாடு) ஆகும். (தமிழில் உள்ள 'ழ' என்ற எழுத்தின் உச்சரிப்புக்கு சரியான எழுத்து சில மொழிகளில் கிடைப்பதில்லை, அது போல).

யெருஷலயிம்(Yerushalayim) என்ற எபிரேய வார்த்தை ஆங்கிலத்தில் "Jerusalem - ஜெருசலேம்" என்று ஒலிப்பெயர்ப்பு செய்துள்ளார்கள்.

இதனை பார்த்தவுடன் நீங்கள் "இல்லை, இது தவறு, எபிரேய மொழியில் ஜே என்ற எழுத்து இல்லை, எனவே நீங்கள் எப்படி ஆங்கிலத்தில் ஒலிப்பெயர்ப்பு செய்யும் போது ஜெருசலேம் என்று செய்யலாம்" என்று கேட்பீர்களா? 

(உண்மையில், எபிரேய மொழியின் "ய Y" வில் தொடங்கும் வார்த்தைகள், கிரேக்க மொழியாக்கம் தொடங்கி, லத்தீன் மற்றும் ஆங்கில மொழியாக்கம் வரும் போது, "ஜெ – J " என்று மாறியுள்ளது. இது ஒரு தனி ஆய்வு).

சரி, இன்னும் சில உதாரணங்களை கவனியுங்கள்:

  • எபிரேயத்தின் “எரிஹோ  (Yeriho)” வார்த்தையை, ஆங்கிலத்தில் “ஜெரிகோ(Jericho)” என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள். 
  • எபிரேயத்தின் நெஹர் ஹயர்டென் (Nehar haYarden), ஆங்கிலத்தில் ரிவர் ஜோர்டன் (River Jordan) என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

இவைகள் தவறு என்று சொல்லமுடியுமா?

எபிரேய மொழியில வரும் "ய - Y" என்ற எழுத்து, தொடர்ச்சியாக (consistently) மாற்றமில்லாமல், ஆங்கிலத்தில் "ஜே - J" என்ற எழுத்தாக மொழியாக்கம் செய்துள்ளார்கள்! குறைந்தபட்சம் ஒரு பாணியை மாற்றமில்லாமல் பின்பற்றியுள்ளார்கள்.

இன்னும் சில உதாரணங்களை தருகிறேன்:

HEBREW
எபிரேயம்
ENGLISH
ஆங்கிலம்
Yaakov -      யாக்கோவ் Jacob -      ஜாகோப்
Yosef -        யோசெஃப் Joseph -    ஜோசெஃப்
Yonah -       யோனாஹ் Jonah -     ஜோனாஹ்
Yohanan -   யோஹனன் John -       ஜான்
Yirmiyahu - யிர்மியாஹு Jeremiah - ஜெரேமியாஹ்
Yehudah -   யெஹுதாஹ் Judah -      ஜூதாஹ்
YESHUA -  யெஷுவா JESUS -     ஜீசஸ்

ஆங்கிலத்தில் ஒலிப்பெயர்ப்பு(Transliteration) செய்யும் போது, ‘ய – Y’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் அனைத்தும், ஒரே பாணியை பின்பற்றி  ‘ஜே -  J’ என்ற எழுத்தாக‌  ஒலியாக்கம் செய்துள்ளார்கள்.

யெஷுவா(Yeshua) – ஜீசஸ் (Jesus):

எபிரேயத்தில் இயேசுவின் பெயர் "யெஷுவா" என்று வருகிறது. ஆங்கிலத்தில் அதனை "ஜீசஸ்" என்று ஒலியாக்கம் செய்துள்ளார்கள். எல்லா பெயர்களை எப்படி ஒலியாக்கம் செய்தார்களோ, அதே போன்று இயேசுவின் பெயரையும் ஒலியாக்கம் செய்துள்ளார்கள்.

சரி, வாருங்கள் இப்போது சுவாரசியான ஒரு விவரத்தை அரபியில் பார்ப்போம்.

அரபி குர்‍ஆனில் கீழ்கண்ட பெயர்கள் எப்படி ஒலிப்பெயர்ப்பு செய்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்.

HEBREW
எபிரேயம்
ARABIC
அரபி
Yaakov -    யாக்கோவ்Yakob - கூப்
Yosef -      யோசெஃப்Yusuf - யூசுஃப்
Yonah -     யோனாஹ்Yunus - யூனஸ்
Yohanan - யோஹனன்Yahya - ஹ்யா
YESHUA - யெஷுவாY . ? - . ? ஸா

எபிரேய மொழியில் ‘ய – Y’ என்று தொடங்கும் பெயர்களை அழகாக குர்‍ஆனில் "ய" என்ற எழுத்தால் ஒலியாக்கம் செய்துள்ளார்கள் (அல்லாஹ் செய்துள்ளான்). ஆனால், யெஷுவா என்ற பெயர் வந்தவுடன் மட்டும், ஏன் குர்‍ஆன் தடம் மாறி சென்றுவிட்டது?  யெஷுவா என்ற எபிரேய பெயரையும், ‘ய’ என்ற எழுத்திலேயே குர்‍ஆனில் ஒலிப்பெயர்ப்பு செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

தாய்மொழியாக அரபி பேசும் கிறிஸ்தவர்கள், "யஷுவா" என்றே அரபியில் உச்சரிக்கிறார்கள். அரபி பைபிளிலும் "யஷுவா" என்றே மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

ஆனால், அரபி குர்‍ஆனில் மட்டும், "யெஷுவா" என்ற பெயருக்கு பதில் "ஈஸா" என்று வருகிறதே! இது எங்கேயிருந்து கிடைத்தது? ஏன் இந்த தவறை குர்‍ஆன் செய்துள்ளது?

அரபி மூல குர்‍ஆனில் வரும் "ஈஸா" என்ற பெயர் ஒரு இட்டுக்கட்டப்பட்ட பெயரா? இதனை செய்தது யார்?

ஆங்கிலத்தில் வரும் ஜீசஸ் என்ற பெயர் ஒரு இட்டுக்கட்டப்பட்ட தவறான ஒலிப்பெயர்ப்பு என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். ஆனால், ஆங்கிலத்தில் ஒலிப்பெயர்ப்பு செய்யும் போது, ஒரு வரிசையில் ஒரே பாணியில் தொடர்ச்சியாக (Consistently), செய்துள்ளார்கள் என்பதை மேலே விளக்கினேன்.

ஆனால், நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இப்போது பிரச்சனை அரபி குர்‍ஆனுக்கு வந்துவிட்டது. கேள்வி என்னவென்றால், அரபி வார்த்தை 'ஈஸா' என்ற பெயர் சரியான ஒலியாக்கமா?

எப்படி யெஷுவா (Yeshua) என்ற பெயர் ஈஸா(Isa) என்று மாறிவிட்டது?

எபிரேயத்தில் இருக்கும் 'ய', குர்‍ஆனில்  எல்லா வார்த்தைகளுக்கும் சரியாக பயன்படுத்தியிருக்கும்போது, ஏன்  யஷுவாவிற்கு மாறிவிட்டது? 

சில குர்‍ஆன் வசனங்கள்:

குர்‍ஆன் 3:45. மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

குர்‍ஆன் 5:46. இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.

குர்‍ஆன் 6:85. இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.

குறிப்பு: தமிழ் பைபிளில், மூல எபிரேய மொழிக்கு ஏற்றார்போல, "ய்" என்ற வார்த்தையை "ஜே" என்று ஆங்கிலத்தில் எழுதுவது போல எழுதாமல், "ய" என்றே ஒலிப்பெயர்ப்பு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் "இயேசு/ஏசு/யேசு" என்று "ய" என்ற உச்சரிப்பு வரும் வகையில் மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

தேதி: 2nd Sept 2021

ஆங்கில மூலம்: https://www.faithbrowser.com/but-theres-no-j-in-hebrew/


ஃபெயித் ப்ரவுசர் (Faith Browser) கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்