4000 புற இன மக்களுக்கு உணவளித்த இயேசு

நற்செய்திகளை நன்கு அறிந்த எவரும், இயேசு அற்புதமாக மக்கள் கூட்டங்களுக்கு உணவளித்ததை அறிந்திருப்பார்கள். இப்படி பெரிய கூட்ட மக்களுக்கு உணவளித்த சம்பவங்கள் இரண்டு உள்ளன‌:

  • ஒன்று 5000 மக்களுக்கு உணவளித்தது, 
  • இரண்டாவது 4000 மக்களுக்கு உணவளித்தது.

ஏன் இந்த இரண்டு அற்புதங்களும் பதிவு செய்யப்பட்டன? நிச்சயமாக, இந்த இரண்டு நிகழ்ச்சிகள் மூலமாக தேவனுடைய வல்லமை வெளிப்பட்டது. இதுதவிர இந்த இரண்டு அற்புதங்களுக்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கமுடியுமா?

இயேசு ஒரு முறை தம்முடைய சீஷர்களிடம் சவால் விடுவது போன்று கேள்விகளை கேட்டார்:

18. உங்களுக்கு கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவு கூராமலுமிருக்கிறீர்களா?

19. நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். 

பன்னிரண்டு” என்றார்கள்.

20. நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். 

ஏழு” என்றார்கள்.

21. அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.

(மாற்கு 8:18-21)

இந்த இரண்டு நிகழ்ச்சிகள் பற்றி ஏன்  இயேசு அவர்களிடம் 'வினாடிவினா' போன்று  கேள்விகளை  கேட்டார்? இவ்விரு அற்புதங்களை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ அல்லது  மறக்கவோ முடியாது.  விஷயம் இப்படி இருக்கும் போது, ஏன் இயேசு அந்த இரண்டு அற்புதங்கள் பற்றி வேறு கோணத்தில் சீடர்களிடம் கேள்விகள் கேட்டார்?

இந்த கட்டுரையில், அவ்விரு அற்புதங்களையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் நாம் ஆய்வு  செய்வோம், இதன் மூலமாக, அவைகளை இன்னும் நன்கு புரிந்துக் கொள்ளலாம்.

இவைகள் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், இயேசு இவ்விரண்டு அற்புதங்களை இரண்டு வெவ்வேறு இடங்களில், சமயங்களில் செய்தார்.

  • முதல் அற்புதம் மூலமாக 5000 மக்களுக்கு உணவளிக்கப்பட்டது மற்றும் இது யூதர்கள் வாழும் பகுதியில் நடத்தப்பட்டது. 
  • இரண்டாவது அற்புதம் மூலமாக 4000 மக்களுக்கு உணவளிக்கப்பட்டது இது யூதரல்லாத மக்கள் (புற இன மக்கள்) வாழும் பகுதியில் நடத்தப்பட்டது.

இந்த இரண்டு அற்புதங்களையும் சிறிது உற்று நோக்கலாம் வாருங்கள்.

5000 மக்களுக்கு  உணவளித்தல்

மாற்கு 6:30-44ல் இந்த நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. 5000 கூட்டத்திற்கு உணவளிக்க இயேசு 5 ரொட்டிகளைப் பயன்படுத்தினார்.

இந்த ஐந்து அப்பங்கள் (ரொட்டிகள்) யூதர்களுக்கு தோராவை நினைவூட்டுகின்றன. ஐந்தாகமங்களில்(தோரா) மோசேயின் 5 புத்தகங்கள் உள்ளன, அதாவது ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் மற்றும் உபாகமம் ஆகியவை யூத மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அந்த 5000 மக்கள் சாப்பிட்ட பிறகு மீதமுள்ளதை, 12 கூடைகள் நிறைய சேகரித்தார்கள். இஸ்ரவேலில் உள்ள 12 கோத்திரங்களுக்கு இணையாக, இந்த எண் (12) இருப்பதை நாம் கவனிக்கலாம்.

5000 பேருக்கு உணவளித்த அற்புதமானது, யூதர்களுக்காக செய்யப்பட்டது. எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் உண்டு. தற்செயலாக எதுவும் நடக்கவில்லை.

இந்த வசனங்களில் மாற்கு இன்னொரு சுவாரசியமான விவரத்தையும் குறிப்பிடுகிறார், பொதுவாக‌ இதனை மேலோட்டமாக படிக்கும் போது, நாம் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்.

39. அப்பொழுது, எல்லாரையும் பசும்புல்லின்மேல் பந்திபந்தியாக உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். (மாற்கு 6:39)

மக்களை பசும்புல்லின் மீது உட்காரச்சொன்னார், இது எதனை குறிக்கிறது?

சில வசனங்களுக்கு முன்பு, மாற்கு நற்செய்தி நூலில் இவ்விதமாக உள்ளது :

“இயேசு கரையில் வந்து, அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி. . .” (மாற்கு 6:34)

எனவே இங்கே மேய்ப்பனாகிய இயேசு அவர்களை பசும்புல்லின்மேல் உட்கார வைக்கிறார். 23-ஆம் சங்கீதத்தில் இஸ்ரவேலின் தெய்வீக மேய்ப்பனின் செயலை இது நினைவுபடுத்துகிறது. இயேசு இஸ்ரவேலின் மேய்ப்பர், அவருடைய மந்தைக்கு உணவளிக்கிறார்.

இப்போது இரண்டாவது அற்புதம் பற்றி சிந்திப்போம்.

4000 மக்களுக்கு  உணவளித்தல்

இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.( யோவான் 10:16)

4000 பேருக்கு உணவளிக்கும் இந்த அதிசயம் புறஜாதி பிராந்தியத்தில் நடந்தது என்று  நமக்கு எப்படித்தெரியும்? இதனை அதே மாற்கு நற்செய்தி வசனங்களே நமக்குச் சொல்கிறன, அதனை படிப்போம் வாருங்கள்.

மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார். (மாற்கு 7:31)

தெக்கப்போலி என்ற ஊர் யூதரல்லாத புறஇன மக்கள் வாழும் பிராந்தியமாகும், மேலும் தீரு என்ற ஊரும், சீதோன் என்ற ஊரும் யூதரல்லாத மக்கள் வாழும் பிராந்தியங்கேயாகும்.

மேலும் இதற்கு முன்பு தான் 'தீரு சீதோன்' பகுதியில், சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய ஒரு கிரேக்க ஸ்திரியின் மகளை இயேசு சுகப்படுத்தினார் (பார்க்க: மாற்கு 7:24 - 30). அதன் பிறகு இயேசு தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாகச் சென்றார், அங்கு ஒரு யூதரல்லாத புற இன மனிதனாகிய செவிடனை இயேசு சுகமாக்கினார் (பார்க்க மாற்கு 7:31-37).

ஒரு புறஜாதி பெண் மற்றும் ஒரு புறஜாதி ஆணை சுகமாக்கிய பிறகு, இந்த 4000 மக்களுக்கு உணவளித்த அற்புதம் நடக்கிறது. அக்காலத்திலே யூதர்கள் புறஜாதியினருடன் சேர்ந்து சாப்பிடமாட்டார்கள், எனவே,  4000 பேர் அனைவரும் புறஜாதி மக்களாக இருந்தார்கள் என்று நாம் அறிந்துக் கொள்ளலாம். மாற்கு 8:1-9 ல் இந்த நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புற இன மக்களுக்கு உணவளிக்க இயேசு 7 ரொட்டிகளைப் பயன்படுத்தினார் என்பதை அறிகிறோம். அம்மக்கள் சாப்பிட்ட பிறகு, மீதியிருந்ததை 7 கூடை நிறைய சேகரித்தார்கள் என்பதைப் பார்க்கிறோம். ஏன் 7 கூடை நிறைய எடுத்தார்கள்? இந்த ஏழு என்பது, ஏதாவது ஒரு முக்கியமான விவரத்தை காட்டுகின்றதா? அதாவது, 5 ரொட்டிகள் மூலமாக யூதர்களுக்கு உணவளித்த போது, 12 கூடை மீதமுள்ளதை எடுத்தார்கள் என்பதில், யூதர்களின் 12 கோத்திரங்கள் வருவதினால், இந்த 7 கூடைக்கும் ஏதாவது உள்ளார்ந்த அர்த்தம் உள்ளதா?

இப்போது பழைய ஏற்பாட்டின் கீழ்கண்ட‌ வசனத்தை கவனிக்கவும். இஸ்ரேல் அந்த பிராந்தியத்தை ஆக்கிரமிப்பதற்கு முன்பு, அந்த இடம் ஏழு புறஜாதி பழங்குடியினரின் வாழும்பகுதியாக  இருந்தது.

நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி, (உபாகமம் 7:1)

சுருக்கமாகச் சொல்வதென்றால்,

  • இயேசு யூதர்களுக்கு உணவளித்ததைப் போலவே புறஜாதியினருக்கும் உணவளித்தார்!
  • இயேசு யூதர்கள் பற்றி அக்கறைக் கொண்டது போன்றே புற இன மக்கள் பற்றியும்  அக்கறைக் கொண்டார்!
  • யூதர்களை குணப்படுத்தியபடியே இயேசு புறஜாதியாரைக் குணப்படுத்தினார்!
  • யூதர்களுக்காக அவர் செய்த அதே அற்புதத்தை இயேசு புறஜாதியினருக்காகவும் நிகழ்த்தினார்!

ஜீவ அப்பம் நானே:

இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். (யோவான் 6:35)

அவர்களுடைய உடல் பசிக்கு அவர் ரொட்டி வழங்கினார், அது அவர்களுக்கு உயிரைக் கொடுத்தது. இது எல்லோருக்கும் பொருந்தும்! யூதர்களுக்கும், யூதரல்லாத புற இனத்தவருக்கும் பொருந்தும்.

யூதர்கள் பசியுடன் இருந்தபோது, இயேசு அவர்களுக்கு உணவளித்தார்.
புறஜாதி மக்கள் பசியுடன் இருந்தபோது, இயேசு அவர்களுக்கு உணவளித்தார்.

வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார் (யோவான் 6:33)

"தன்னை ரொட்டியுடன் ஒப்பிடுவதன் மூலம், இயேசு வாழ்க்கைக்கு இன்றியமையாதவர் என்று கூறுகிறார். … இயேசு குறிப்பிடும் வாழ்க்கை இந்த உலக வாழ்க்கை அல்ல, அது நித்திய ஜீவ வாழ்க்கை பற்றியதாகும்.

யூதர்கள் இந்த உலக வாழ்க்கைப் பற்றி சிந்திப்பதைவிட்டு, சிறிது ஆன்மீக வாழ்க்கை பற்றி சிந்திக்க இயேசு  தூண்டுகிறார். அவர் மேசியாவாக வந்ததை,  அற்புதமாக உணவளித்த நிகழ்ச்சியோடு ஒப்பிடுகிறார். அற்புதமாக அவர் உருவாக்கியது அழிந்துபோகும் ரொட்டி,  ஆனால் தாமே அழிந்துப்போகாத நித்திய ஜீவன் தரும் ரொட்டி என்றார். (GotQuestions.org).

அவர் யூதர்களுக்கு மட்டுமல்ல, புறஜாதியினருக்கும் நித்திய வாழ்வு தரும் ரொட்டியாக இருக்கிறார்.

இயேசு கூறினார் “ . . .ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது”. . . (யோவான் 4:22)

“. . .முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது”. (ரோமர் 1:16)

மூலம்: http://www.faithbrowser.com/bread-for-4000-hungry-gentiles/


ஃபெயித் ப்ரவுசர் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்