நான் எறும்பு-மனிதன். . .(அல்லாஹ்விற்கு அனைத்தும் சாத்தியமா?)

(I AM ANT-MAN)

இறைவன் ஆவியாக இருக்கிறார், அதாவது நாம் அவரை பார்க்கமுடியாது. அவர் நித்தியமானவராகவும், எல்லையில்லாதவராகவும்  இருக்கிறார். நம்மைப்போல அவர் நேரம், மற்றும் இடத்திற்கு (time and space) உட்பட்டவராகமாட்டார்.

இவ்வுலகையும், அதற்குள் செயலாற்றும் நேரத்தையும் அவரே படைத்தார். அவர் படைத்த அனைத்து படைப்புக்களுக்கு மேலே மற்றும் அவைகளுக்கு வெளியே இருக்கிறார். மனிதனின் கற்பனைக்கும் அப்பாற்பட்டவராக அவர் இருக்கிறார். அவருக்கு கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அனைத்தும் ஒன்று போலவே தெரியும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள், காலத்திற்குள் அவரை அடக்கமுடியாது, ஏனென்றால், அவர் சர்வ வியாபியாக இருக்கிறார்.

இப்போது கேள்வி என்னவென்றால்:

சர்வ வல்லவரும், சர்வ வியாபியுமாகிய இறைவன், பூமியில் ஒரு மனிதனாக மாறி, நம்மைப் போல நடக்கவும், பேசவும் முடியுமா? அதாவது இறைவன் மனிதனாக வரமுடியுமா? அதே நேரத்தில் இறைவனாகவும் இருந்து, உலகை ஆளமுடியுமா?

இறைவனால் முடியாதது இவ்வுலகில் ஒன்றுமில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். உங்களிடம் யாராவது வந்து, ‘இறைவனால் இப்படி மனிதனாக வரமுடியாது’ என்றுச் சொல்வார்களானால், அவர்கள் ‘இறைவனின்  வல்லமையை குறைத்து மதிப்பிடுகிறார்கள்’ என்று அர்த்தம்.

தேவனால் இப்படி செய்யமுடியும் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அதாவது, இயேசுக் கிறிஸ்து மூலமாக இறைவன் மனிதனாக இறங்கி வந்தார் என்று நம்புகிறார்கள்.

ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கவும். நித்திய தேவன், பூமியில் மனிதனின் உருவெடுத்து வரும் போது கூட, அவர் எல்லையில்லாதவராக, நித்தியமானவராகவே அண்டத்தில் (பூமிக்கு வெளியே - outside of time and space) இருந்தார். பிதாவாகிய இறைவன், தம்முடைய தெய்வீக சாரத்தை ஒரு வரையறைக்கு உட்பட்ட மனிதனின் வடிவில் பூமியில் இறக்கினார். கவனிக்கவும், தேவன் அப்படியே மனிதனாக மாறி பூமிக்கு வரவில்லை (அப்படி வந்திருந்தால், அவர் பூமிக்கு வந்துவிட்ட பிறகு, உலகை ஆள இறைவன் என்ற ஒருவர் அண்டத்தில்/வானத்தில் இல்லாமல் இருந்திருப்பார்). 

இது எப்படி சாத்தியம்? இறைவன் மனிதனாக வந்தால், பூமியிலும் அவர் மனிதனாக இருக்கமுடியும், அதே நேரத்தில் வானத்திலும் இறைவனாக இருந்து உலகை ஆளமுடியும்? இது இறைவனுக்கு சாத்தியமே! இறைவன் தன்னுடைய தெய்வீகத்தில் மனுசீகத்தையும் சேர்த்துக்கொண்டு வந்தார். தன்னுடைய வல்லமையை குறைத்துக்கொண்டு, மனித சரீரத்தோடு உலகில் வாழ்ந்தார். பாவத்தைத் தவிர, மனிதன் செய்யக்கூடிய அனைத்தையும் செய்தார். அவர் பாவம் செய்யவில்லை, ஏனென்றால், அவர் பரிசுத்தராக இருக்கிறார்.

இந்த வகையில் இறைவன் தான் படைத்த தன் ‘பூமிக்குள்  வந்தார்’. தான் உருவாக்கிய படைப்பிற்குள் வரமுடியாத, வரவிரும்பாத தெய்வங்களுக்கு முன்பாக, கிறிஸ்தவர்கள் நம்பும் இறைவன், தான் உண்டாக்கிய படைப்பிற்குள் இறங்கிவந்தது, ஆச்சரியமான மற்றும் சந்தோஷமான விஷயமாகும். அவர் செய்த இந்தச் செயல், மற்றவர்களைக் காட்டிலும் இவர் விசேஷித்தவர் என்பதைக் காட்டுகிறது, இவர் சர்வ வல்லவர் என்பதைக் காட்டுகிறது, இவரால் எல்லாம் முடியும் என்பதை நிரூபிக்கிறது.

நிபந்தனையற்ற அன்பை பொழியும் தெய்வத்தால் மட்டுமே இப்படி செய்யமுடியும்.  தன்னுடைய பிரமாண்டமான அடையாளத்தை கட்டுப்படுத்தி,  தான் உண்டாக்கிய படைப்பிற்குள் இறங்கி வந்தார். மனிதன் ’தன்னை தனிப்பட்ட முறையில் அறிந்துக் கொள்ளவேண்டும்’ என்ற நோக்கத்தோடு இறங்கிவந்தது, மகா ஆச்சரியமாகும். மனிதனால் சுயமாக பரலோகம் சென்று தேவனை அறிந்துக்கொண்டு திரும்பி பூமிக்கு வரமுடியாது, ஆனால், அவர் பூமிக்கு இறங்கி வந்து தம்மை வெளிப்படுத்தி, மறுபடியும் வானத்துக்கு ஏறிச்செல்லமுடியும்.

தெய்வங்கள் என்றுச் சொல்லக்கூடியவர்கள், தங்கள் நபிகளை, நல்லவர்களை மக்களுக்கு போதனை செய்வதற்கு அனுப்புவார்கள், இது சாதாரணமே. ஆனால், உலகில் எந்த தெய்வம் இப்படி இருக்கிறது? அதாவது தம்மை மனிதன் அறிவதற்கு தானே சுயமாக மனிதனிடம் இறங்கி வருவது! ’மனிதனுக்கு தூரமாக வானத்தில் எங்கேயோ இருப்பதை’ ஒரு பெருமையாக,  கர்வமாக  நினைக்கும் தெய்வங்கள் இப்படி செய்யாது, எந்த தெய்வம் நிபந்தனையற்ற அன்பு செலுத்துகின்றதோ, அந்த தெய்வம் தான் இப்படி செய்யமுடியும்!

இதுவரை சொன்ன விவரங்களின் பொருள் இன்னும் நன்றாக விளங்கவேண்டுமென்பதற்காக, நான் ஒரு எடுத்துக்காட்டைச் சொல்லட்டும்.  உங்களில் யாராவது ‘ஆண்ட் மேன் - Ant-Man’ என்ற படத்தை பார்த்து இருக்கிறீர்களா? இந்த படத்தில், ஒரு மனிதன் திடீரென்று ஒரு எறும்பைப்போல மாறிவிடுகின்றான். அதன் பிறகு, அவனால், இதர எறும்புகளோடு உரையாடவும், நடக்கவும் பேசவும் முடிகின்றது.

இது ஒரு சுவாரசியமான கதை தான், ஆனால் இது ஒரு கற்பனைக் கதையாகும். மனிதன் சுயமாக எறும்பாக மாறும் திறமை படைத்தவன் அல்ல என்பதால், இது ஒரு கற்பனைக் கதையாகும்.

ஆனால், என்னோடு கூட ஒரு நிமிடம் ஒரு கற்பனை கதைக்கு தயாராகிவிடுங்கள். ஒரு எறும்பாக மாறும் சக்தி எனக்கு உள்ளது என்று நினைத்துக் கொள்ளுங்கள். நான் என்னுடைய சாரத்தை (essence of my being) எடுத்து, ஒரு எறும்பிற்குள் ’டிஎன்எ (DNA)’வாக  வைத்துவிடுகிறேன் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள். அதாவது நான் ஒரு எறும்பாக அவதாரம் எடுத்து, எறும்புகள் வாழும் ஒரு புற்றில் (காலனியில்), மற்ற எறும்புகளோடு ஒரு எறும்பாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன்.

கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள், நான் ’மனிதன்’ என்ற நிலையிலிருந்து இல்லாமல் போகவில்லை. நான் மனிதனாகவும் இருக்கிறேன், அந்த எறும்பு புற்றில் என்ன நடக்கிறது என்பதையும் மனிதனாக இருந்துக்கொண்டு பார்க்கிறேன். அதே நேரத்தில் என்னில் ஒரு பாகமாக இருக்கும், அந்த எறும்பு, புற்றில் என்னவெல்லாம் செய்கிறது என்பதையும் காண்கிறேன். அந்த எறும்பு (நான்), மற்ற எறும்புகளோடு உரையாடுவதையும், இதர காரியங்கள் செய்வதையும், மனிதனாக இருந்துக்கொண்டே பார்க்கிறேன், அறிகிறேன், ஏனென்றால், இப்படியெல்லாம் செய்யக்கூடிய சக்தி எனக்கு  உண்டு.

இப்போது, “நான் இரண்டு நபர்களாக”  இருக்கிறேனா? என்ற கேள்வி எழுகின்றது. ’இல்லை, நான் இரண்டுபேராக இல்லை’, நான் நானாகவே (மனிதனாகவே) இருக்கிறேன், ஒருவனாகவே இருக்கின்றேன். அதே நேரத்தில் என் சக்தியை பயன்படுத்தி, ஒரு எறும்பாக, புற்றுக்குள்ளும் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறேன். அதாவது, அந்த எறும்பு புற்றுக்குள் செய்வதெல்லாவற்றையும் என் சக்தியினால் மனிதனாக இருப்பதினால் அறிகிறேன்.

எனக்கு எறும்பு உடலும் உண்டு, அதன் மூலமாக, அந்த எறும்பு புற்றில் நான் சுற்றுகிறேன், மற்ற எறும்புகளோடு ஒரு சக எறும்பாக அவர்களோடு வாழ்கிறேன். அந்த எறும்பு (நான்) மற்ற எறும்புகளைப்போல சாப்பிடுகிறேன், அவர்களோடு நடக்கிறேன், அவர்களைப்போலவே நானும் உருவத்தில் காணப்படுகிறேன். ஒரு எறும்பு எப்படி நடந்துக்கொள்ளுமோ அதே போல நானும் நடந்துக்கொள்கிறேன். ஆனால், தான் யார் என்றும், எங்கேயிருந்து வந்தது என்றும், எனக்கு (அந்த எறும்புக்கு) நன்றாகத்தெரியும். மற்ற எறும்புகளிடம் நான் சென்று, ‘ஹலோ எறும்புகளே, நான் ஒரு மனிதன், எறும்பாக வந்திருக்கிறேன், என்னை வணங்குங்கள்’ என்றுச் சொல்கிறேன்.

நான் ஒரு மனிதனாகவும் இருக்கிறேன், அதே நேரத்தில் எறும்பாகவும் புற்றில் வாழ்கிறேன். நான் எறும்பாக மாறியதால் மனிதனாக இல்லாமல் போய்விடவில்லை, அதற்கு பதிலாக, என்னில் ஒரு பாகத்தை (அல்லது) சாரத்தை, எறும்பாக மாற்றியிருக்கிறேன். மனிதனாக இருந்து, அந்த எறும்பு புற்றையும் பார்க்கிறேன், புற்றுக்குள்ளே எறும்பாக இருந்துக்கொண்டு, புற்றுக்கு மேலே நடக்கும் அனைத்தையும் அறிகிறேன்.

ஒரு முறை, மற்ற எறும்புகளிடம், ‘அதோ, அந்த மனிதரைப் பாருங்கள். அவரும் நானும் ஒன்று தான்’ என்றுச் சொல்கிறேன். மேலும், ’எறும்பு நிலையில் இருக்கும் என்னைவிட, அந்த மனிதன் பெரியவன்’ என்றும் மற்றவர்களிடம் சொல்கிறேன்.

இதனை சில எறும்புகள் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை. ஒரு மனிதனாக இருந்த நான், என் சக்தியை பயன்படுத்தி, எறும்பாக மாறிய செயலை அனேக எறும்புகள் புரிந்துக்கொள்ளவில்லை. புரிந்துக்கொள்ளாத சில எறும்புகள், நான் சொல்வதைக் கேட்டு சிரித்தார்கள், இப்படியெல்லாம் செய்ய முடியாது என்றுச் சொல்லி, கேலி செய்தார்கள்.

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. (யோவான் 1:14)

பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3:13)

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. (யோவான் 8:23)

இக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க, கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கவும். 

ஆங்கில மூலம்: I am ant-man