கிருஷ்ணன், அல்லாஹ் & கிறிஸ்து: த‌ம் படைப்பிற்குள் நுழைய முடியாதவரும், நுழைந்தவர்களும் - 2023 கிறிஸ்மஸ் தியான கட்டுரை

இது ஒரு சிறிய தியானக் கட்டுரை.

மேற்கணட மூன்று மத நம்பிக்கையாளர்களின் ஜனத்தொகை உலகில் மொத்தம் 65%க்கும் அதிகமாக உள்ளதாக கணக்குச் சொல்கிறது[1].

  • 15.0% இந்துக்கள்
  • 31.5% கிறிஸ்தவர்கள்
  • 23.3% இஸ்லாமியர்கள்

என்று விக்கிபிடியா தொடுப்பு கூறுகிறது.

இந்த மூன்று பிரிவினரின் கடவுள்களாகிய கிருஷ்ணன், இயேசு மற்றும் அல்லாஹ் போன்றவர்கள் பற்றிய ஒரு சிறிய விவரத்தை இங்கு பார்ப்போம்.

பகவத் கீதை, குர்‍ஆன் மற்றும் பைபிளை எடுத்துக்கொண்டால், இவைகளில் "இவ்வுலகையும், அதிலுள்ள மனிதர்களையும் தாமே படைத்தோம்" என்று இம்மூவர் கூறுகின்றனர்.  உண்மையில் பார்த்தால், இவர்களில் யாராவது ஒருவர் தான் உண்மையான இறைவனாக இருக்கமுடியும், மற்ற இருவர் பொய்யான தெய்வங்களாக இருக்கவேண்டும்.  இவ்வரிகளை நாத்தீகர்கள் படிப்பார்களானால், இன்னொரு தெரிவும் உள்ளது, அது என்னவென்றால், இம்மூவரும் பொய்யாகவும் இருக்கலாம் என்றும் கூறுவார்கள். இந்த கட்டுரையின் தலைப்பு இதுவல்ல.

இம்மூவரில் யார் உண்மை தெய்வம் என்ற விவாதத்தை விட்டுவிட்டு, இவர்களைப் பற்றிய மக்களின் நம்பிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, இவர்களின் ஒரு குறிப்பிட்ட செயலை ஆய்வு செய்யப்போகிறோம். அதுவும் மேலோட்டமாக ஆய்வு செய்யப்போகிறோம்.

1) அல்லாஹ் தான் படைத்த படைப்பிற்குள் நுழைய மாட்டான்:

இஸ்லாமின் அடிப்படை கோட்பாடு என்னவென்றால்:

  • அல்லாஹ் உலகை படைத்தான் 
  • அவன் தன் படைப்பை விட்டு மிகவும் தூரமாக இருக்கிறான் 
  • அவனை யாரும் நெருங்க முடியாது
  • அவன் தன் படைப்பிற்குள் நுழையமாட்டான் 
  • அதாவது அவன் மனித அவதாரம் எடுத்து உலகில் (தன் படைப்பிற்குள்) வரமாட்டான்.
  • அப்படி அவன் வந்தால், அது அவனுடைய 'தெய்வீகம் மற்றும் இறைவனின் இலக்கணத்திற்கு எதிரான ஒன்றாக மாறிவிடும்"
  • அல்லாஹ் மனித அவதாரம் எடுத்து வந்தால், தன் தெய்வீகத்தை இழக்க நேரிடும்

எனவே, அல்லாஹ் தம் படைப்பிற்குள் (இவ்வுலகிற்குள்) வரமாட்டான்.[2][3]. 

நீங்கள் முஸ்லிம்களிடம் இதைப் பற்றி கேட்டால், இன்னும் அதிகமான விவரங்களை கொடுப்பார்கள், ஆனால், 'சுருக்கம் இதுதான், உலகத்தை விட்டு அல்லாஹ் மிகவும் தூரமாக இருக்கிறான் என்பதாகும், ஆனால், அங்கிருந்து எல்லாவற்றையும் அறிந்துக்கொள்வான், ஆனால், உலகில் வரமாட்டான். இதற்கு பதிலாக, அவன் தன் தூதர்களை(மலக்குகளை - Angels) அனுப்புவான், அவன் இந்த பூமியில் கால் வைத்ததில்லை.

நீங்கள் இன்னும் துருவி துருவி "அப்படி அவன் வந்தால் என்ன நடக்கும்"? என்று கேட்டால், "அப்படி அவன் வந்தால், அவனது தெய்வீகத்தன்மை/தெய்வ இலக்கணம் இழந்துவிடுவான்" என்று முஸ்லிம்கள் பதில் அளிப்பார்கள்.

அல்லாஹ் ஒரே நேரத்தில் "இறைவனாகவும், மனிதனாகவும்" இருக்கமுடியாது என்பது இதன் சுருக்கம் ஆகும்.  

இதைப் பற்றிய இஸ்லாமிய இரண்டு தொடுப்புக்களை அடிக்குறிப்பில் கொடுத்துள்ளேன், அவைகளை படிக்கவும், மேலும் இணையத்திலும், இதர இஸ்லாமிய தளங்களிலும் சென்று நீங்கள் உங்கள் ஆய்வை தொடரலாம்.

2) கிருஷ்ணன் தன் படைப்பிற்குள் நுழைந்தார், ஆனால் தன் தெய்வீகத்தை இழந்தார்

இரண்டாவதாக, இந்துக்களின் செல்லப்பிள்ளை, கிருஷ்ணன் பற்றி பார்ப்போம்.

இந்துக்களின் "விஷ்ணு" என்ற தெய்வம் 10 (தச‌) அவதாரங்களை எடுத்ததாக இதிகாசங்கள், புராணங்கள் கூறுகின்றன.  இவைகளில் ஒன்று 'கிருஷ்ணனின் அவதாரம்' ஆகும்.

அல்லாஹ்வைப் போல அல்லாமல், 'கிருஷணன்' தன் படைப்பிற்குள் நுழைந்தார், இதற்கு அவருக்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை.  ஆனால், இதனால் தன் தெய்வீகத்தன்மையை இழந்து ஒரு உலக மனிதனைப் போல பாவங்களிலும், பெருமையிலும் விழுந்து தன் தெய்வீகத்தன்மையை இழந்துவிட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் தான் என்னவோ, அல்லாஹ் 'நமக்கு ஏன் இந்த அக்னிப் பரிட்சை, என்று தன் படைப்பிற்குள், அதாவது மனித அவதாரம் எடுக்காமல் இருந்துவிட்டார்' என்று எண்ணத்தோன்றுகிறது.

இந்த இடத்தில், கிருஷ்ணர் மஹாபாரதத்தில் செய்த செயல்கள் பற்றிச் சொல்லவில்லை. ஆனால், அவர் மனிதனாக இருந்ததால், அவர் செய்த சேட்டைகள் மற்றும் பெண்களிடம் புரிந்த லீலைகள் பற்றிச் சொல்கிறேன். இது மட்டுமல்ல, கிருஷ்ணர் எப்படி மரித்தார், அவருக்கு என்ன நடந்தது? என்பதை புராணங்கள் சொல்வதை அறிந்துக்கொள்ளுங்கள்.

கிருஷணன் பெருமைக்கொண்டு தன் நாட்டை ஆளும் போது நடந்த நிகழ்ச்சி அதைத் தொடர்ந்து அவர் எப்படி மரித்தர் என்பதை இந்துக்களின் தளத்திலிருந்து படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

கிருஷ்ணனுக்கு பல மனைவிகள் இருந்ததாகவும், பெண்கள் குளிக்கும் போது அவர்களின் உடைகளை எடுத்துவைத்துக்கொண்டு, உடைகள் வேண்டுமென்றால், கைகளை உயர்த்தி கேட்டால் கொடுப்பேன் என்று சொன்ன கிருஷ்ண லீலைகள் பற்றி நமக்கு புராணக்கதைகள் சொல்லப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட செயல்களை இன்று ஒரு மனிதன் செய்தல், அவனுக்கு இந்திய சட்டத்தின் படி எப்படிப்பட்ட தண்டனை கிடைக்கும் என்பதை நாம் அறிவோம்.

ஆக, தெய்வமாக இருந்தவர் மனிதனாக வந்ததால், தன் தெய்வீகத்தை இழந்து ஒரு சாதாரண மனிதன் செய்யக்கூடிய பாவச் செயல்களைச் செய்து, பெருமைக்கொண்டு கடைசியாக, தன் முன் ஜென்ம பாவத்தினால்(இராம அவதாரம்), இந்த ஜென்மத்தில் அதன் பலனை அனுபவித்தார் கிருஷ்ணர் என்று இந்து புராணங்கள் கூறுவதை உண்மையென்று நம்பினால், அல்லாஹ்வே உண்மையாகவே ஜாக்கிரதைப் பட்டார் என்று சொல்லலாம் அல்லவா?

3) இயேசுக் கிறிஸ்து மனிதனாக வந்தும் தன் தெய்வீகத்தை காத்துக்கொண்டார்

கடைசியாக, நாம் இயேசுக் கிறிஸ்துவிற்கு வருவோம். அல்லாஹ்வைப் போல, தன் படைப்பை விட்டு தூரமாக செல்லாமல், மனிதனாக வந்தார். அதே வேளையில், கிருஷ்ணனைப் போல, மனித சுபாவத்தால் தாக்கப்பட்டு, மனிதன் செய்யக்கூடிய பாவங்களைச் செய்யாமல், பரிசுத்தமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து நமக்கு ஒரு நல்ல மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் சென்றார். 

இயேசு பாவம் செய்யவில்லை[4]. 

இயேசுவின் பாவமில்லாத வாழ்க்கைப் பற்றிய சில வசனங்களை இங்கு காண்போம்.

I பேதுரு 2:22,23

அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை; 23. அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.

எபிரெயர் 4:15

நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

II கொரிந்தியர் 5:21

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

I யோவான் 3:5

அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை.

லூக்கா 1:35

தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

யோவான் 8:46

என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? . . ..

முடிவுரை:

இதுவரை முன்று நபர்கள் பற்றி மிகவும் சுருக்கமாக பார்த்தோம்.

  • அல்லாஹ் தன் படைப்பிற்குள் வர பயந்தான்.
  • கிருஷ்ணர் தன் படைப்பிற்குள் வந்து தன் தெய்வீகத்தை இழந்தார்.
  • இயேசு தன் படைப்பிற்குள் வந்தும் தன் தெய்வீகத்தை இழக்கவில்லை.

இப்படிப்பட்ட இயேசுவின் பிறந்த நாளை உலகமனைத்திலும் டிசம்பர் 25ம் தேதி கொண்டாடுகிறார்கள். 

இயேசு பாவம் செய்யவில்லையென்று நாங்கள் எப்படி நம்புவது? என்று உங்களில் யாராவது கேட்கக்கூடும், நீங்கள் நிச்சயம் நம்பவேண்டும் என்று நான் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், ஒருமுறை இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை படித்துப் பாருங்கள், நற்செய்தி நூல்களின் தமிழ் தொடுப்புக்களை கொடுத்துள்ளேன்:

நற்செய்தி நூல்கள்:

அடிக்குறிப்புக்கள்

  1. Hinduism by country - Wikipedia
  2. Interpretation of the Statement: "Allah is Separated from His - IslamQA
  3. To Believe That Allah Dwells in Human Bodies Is Major Disbelief (islamweb.net)
  4. Jesus is sinless - What Does the Bible Say About Jesus Did Not Have A Sin Nature? (openbible.info)

தேதி: 23rd Dec 2023


உமரின் கட்டுரைகள் பக்கம்

பொதுவான கட்டுரைகள் பக்கம்

அல்லாஹ் பக்கம்

இயேசு பக்கம்