இஸ்லாமுக்காக மரித்தால் (ஷஹித்), உடனே பரலோகம் போகமுடியும் என்று சொல்வதற்கு குர்‍ஆனில் ஹதீஸ்களில் சான்றுகள் உண்டா?

ஒரு நண்பர் என்னிடம் இந்த கேள்வியை கேட்டார்: “இஸ்லாமிய தீவிரவாதிகள் பேட்டி கொடுக்கும் போது, நாங்கள் இஸ்லாமுக்காக மரித்தால், உடனே எங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்றுச் சொல்கிறார்களே! இதற்கு குர்‍ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ ஏதாவது சான்றுகள் உண்டா?”.

அவருக்கு கொடுத்த பதிலை இங்கு பதிக்கிறேன். 

ஆம், அரபியில் இதற்கு ஷஹித் (Shahid) என்றுச் சொல்வார்கள், இதன் பொருள் 'சாட்சி' என்பதாகும்.  ஒருவர் இஸ்லாமுக்காக மரிக்கும் போது, அவர் சாட்சியாக மரித்தார் என்றுச் சொல்வதைத் தான் 'அவர் ஷஹிதானார்' என்றுச் சொல்கிறார்கள்.

அல்லாஹ்விற்காக மரிப்பவர்கள் ஷஹித் ஆவார்கள் என்று குர்‍ஆனும், ஹதீஸ்களும் சொல்கின்றன.

குர்‍ஆனின் படி ஷஹித்

1) அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்கள்:

3:169. அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். 

3:170. தன் அருள் கொடையிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு அளித்ததைக் கொண்டு அவர்கள் ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்; மேலும் (போரில் ஈடுபட்டிருந்த தன் முஃமினான சகோதரர்களில் மரணத்தில்) தம்முடன் சேராமல் (இவ்வுலகில் உயிருடன்) இருப்போரைப் பற்றி “அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” என்று கூறி மகிழ்வடைகிறார்கள். 

2) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் வெட்டுகிறார்கள்;  வெட்டவும் படுகிறார்கள்:

9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.

3) அவன் அவர்கள் விரும்பும் இடத்தில் அவர்களை பிரவேசிக்கச் செய்வான்

22:58. இன்னும், எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு) ஹிஜ்ரத் செய்து பின்னர் கொல்லப்பட்டோ அல்லது இறந்தோ விடுகிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் அழகிய உணவை நிச்சயமாக அளிக்கின்றான்; (ஏனெனில்) உணவளிப்பவர்களிலெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மேலானவன்.

22:59. நிச்சயமாக அவன் அவர்கள் விரும்பும் இடத்தில் அவர்களை பிரவேசிக்கச் செய்வான்; மேலும்: நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவன், மிக்க பொறுமையுடையவன்.

4) இது ஒரு வியாபாரம்: உயிரைக் கொடு, சொர்க்கம் பெற்றுக்கொள்

61:10. ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

61:11. (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

61:12. அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.

61:13. அன்றியும் நீங்கள் நேசிக்கும் வேறொன்றும் உண்டு; (அதுதான்) அல்லாஹ்விடமிருந்து உதவியும், நெருங்கி வரும் வெற்றியுமாகும்; எனவே ஈமான் கொண்டவர்களுக்கு (இதைக் கொண்டு) நன்மாராயம் கூறுவீராக!

5) யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி

4:74. எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக; யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி, அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

ஹதீஸ்களில் ஷஹித்

முஹம்மதுவும் ஷஹித் பற்றி அனேக விவரங்களைக் கூறியுள்ளார், ஸஹீஹ் புகாரி ஹதீஸ் தொகுப்பிலிருந்து சில விவரங்களை இங்கு காண்போம்:

1) ஷஹீதுகள் ஆகும அந்த ஐந்து நபர்கள் யார்? 

புகாரி எண்: 653. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'இறைவழியில் குத்திக் கொல்லப்படுபவன், வயிற்றுப் போக்கில் இறப்பவன், தண்ணீரில் மூழ்கி மரிப்பவன், இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இறப்பவன், போரில் கொல்லப்படுபவன் ஆகிய ஐந்து பேர்களும் ஷஹீதுகள் ஆவார்கள். பாங்கு சொல்வதிலும் தொழுகையின் முதல்வரிசையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்காகப் போட்டி போட்டு முந்தி வந்து, அதன் விளைவாக அவர்களிடையில் சீட்டுக் குலுக்கி எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் அதற்கும் அவர்கள் தயாராகி விடுவார்கள்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

புகாரி எண்: 1345. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் உஹதுப் போரில் (ஷஹீதானவர்களில்) இரண்டிரண்டு நபர்களை சேர்த்து (ஒரே கப்ரில்) அடக்கம் செய்தார்கள். 

போரில் கொல்லப்படுபவரும் ஷஹீது ஆவார்.

2) தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும்போது கொல்லப்பட்டவர்

புகாரி எண்: 2480. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும்போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

முஸ்லிம் ஹதீஸ்களிலிருந்து சில எடுத்துக்காட்டுக்கள்

1) போரில் செத்தாலும், திருடினால் சொர்க்கம் கிடையாது:

முஸ்லிம் எண்: 182. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போர் தினத்தன்று நபித்தோழர்களில் சிலர் "இன்னார் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆகி விட்டார், இன்னார் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்" என்று கூறிக்கொண்டேவந்து இறுதியாக ஒரு மனிதரைப் பற்றி "இன்னாரும் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இல்லை! (போர்ச்செல்வங்கள் பங்கிடப்படும் முன் அவற்றிலிருந்து) கோடுபோட்ட வண்ணப் போர்வை ஒன்றை அவர் எடுத்துக்கொண்ட காரணத்தால் அவரை நான் நரகத்தில் கண்டேன் (எனவே அவரை உயிர்த்தியாகி என்று கூறாதீர்கள்)" என்றார்கள்.

பிறகு (என்னிடம்) "கத்தாபின் புதல்வரே! நீங்கள் சென்று, "இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்று மக்களுக்கு அறிவித்துவிடுங்கள்!" என்றார்கள். அவ்வாறே நானும் சென்று, "அறிந்துகொள்ளுங்கள்! இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்று (மக்களிடையே) அறிவித்தேன். இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2) தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும்போது கொல்லப்பட்டவர்

முஸ்லிம் எண்: 225. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கத்தில் வந்தால் (நான் என்ன செய்ய வேண்டும்) கூறுங்கள்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனுக்கு உமது செல்வத்தை (விட்டு)க் கொடுக்க வேண்டியதில்லை" என்று கூறினார்கள். அந்த மனிதர், "அவன் என்னுடன் சண்டையிட்டால்...?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீரும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்!" என்று கூறினார்கள். "(அந்தச் சண்டையில்) அவன் என்னைக் கொன்றுவிட்டால்...?" என்று அந்த மனிதர் கேட்டார். அவர்கள், "அப்போது நீர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவீர்" என்றார்கள். "நான் அவனைக் கொன்றுவிட்டால்...?" என்று அவர் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் நரகத்திற்குச் செல்வான்" என்று பதிலளித்தார்கள்.

ஷஹீதானவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் ஆறு நன்மைகள் என்ன?

திர்மிதியில் ஒரு ஹதீஸ் வருகிறது, இதன்படி ஷஹீதானவர்களுக்கு ஆறு நன்மைகளை அல்லாஹ் கொடுப்பான், அதில் ஒன்று 72 ஹூரிகளை திருமணம் செய்து வைப்பதாகும்.

(25) Chapter: Regarding The Rewards For The Martyr:

Narrated Al-Miqdam bin Ma'diykarib:

That the Messenger of Allah (ﷺ) said: "There are six things with Allah for the martyr. He is forgiven with the first flow of blood (he suffers), he is shown his place in Paradise, he is protected from punishment in the grave, secured from the greatest terror, the crown of dignity is placed upon his head - and its gems are better than the world and what is in it - he is married to seventy two wives along Al-Huril-'Ayn of Paradise, and he may intercede for seventy of his close relatives."

[Abu 'Eisa said:] This Hadith is Hasan Sahih.

ஷஹீத் பற்றிய மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால், அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

தேதி: 14th July 2020


இதர தலைப்புக்கள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்