புதிய சிருஷ்டிகள் கேட்கும் கேள்விகளும் பதில்களும் - அறிமுகம்

(இந்த தொடர் கட்டுரைகளின் நோக்கமென்ன?)

டிஜிட்டல் காலமும் அறிவு பெருக்கமும்:

இது டிஜிட்டல் காலம். எப்படி சமையல் செய்வது? என்ற கேள்வி தொடங்கி, சங்கீதம் கற்பது வரை, எந்த கேள்வியைக் கேட்டாலும் சரி, இணையத்தில் ஏதோ ஒரு பதில் கிடைக்கும். முக்கியமாக, மதம் சம்மந்தப்பட்ட கேள்வி பதில்களுக்கு பஞ்சமே இல்லை. ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவு தாங்கள் பின்பற்றும் மார்க்கத்தை இணையத்தில் படுவேகமாக பரப்பிக்கொண்டு வருகிறார்கள்.

ஸ்மார்ட் மொபைள் போன்கள் வந்ததிலிருந்து, உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தை கைக்குள் கொண்டுவரமுடிகிறது. இக்காலக்கட்டத்தில் ஒரு மார்க்கத்திலிருந்து இன்னொரு மார்க்கத்தை தழுவ விரும்பும் நபர்களும் அதிகரித்துள்ளார்கள். முக்கியமாக, இஸ்லாமிய கோட்பாடுகளை மூடி மறைத்து வைத்திருந்த காலம் போய், இன்று எல்லா இரகசியங்களும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. குர்ஆனை முஸ்லிமல்லாதவர்கள் தொடுவது தீட்டு என்றும், பாவம் என்றும் சொல்லிகொண்டு இருந்த காலம் போய், ஒவ்வொரு இந்துவிற்கும், கிறிஸ்தவனுக்கும் குர்ஆனை அவர்கள் வீட்டிற்கே சென்று  இலவசமாக டோர் டெலிவரி கொடுக்கும் காலம் வந்துவிட்டது. அதே போல, இஸ்லாமை விமர்சிக்க பயப்படும் காலம் போய், வாய்ப்பு கிடைத்தால் புகுந்து விளையாடிவிட, மக்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கிறார்கள். அறிவு பெருகிவிட்டபடியினால் அக்கரையிலிருந்து இக்கரைக்கு சிலர் செல்கிறார்கள். அதாவது அனேக முஸ்லிம்கள் இஸ்லாமை விட்டு வெளியே வருகின்றனர். சிலர், நாத்தீகத்தையும், சிலர் கிறிஸ்தவத்தையும் தழுவுகிறார்கள். அதே போல, இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள், ’அக்கரை’ என்றால் இஸ்லாம் என்று புரிந்திருக்கும் உங்களுக்கு.

சில ஆலோசனைகள்:

இக்கட்டுரையின் முக்கிய நோக்கம், இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்தை தழுவ விரும்புகிறவர்களுக்கு தேவையான ஆலோசனைகளைத் தருவதாகும். 

இஸ்லாமை விட்டு வெளியே வர விரும்புகிறவர்கள், தாங்களாகவே வெளியே வருவார்கள் அல்லவா? ஏன் அவர்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படுகிறது?

ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு வெளியே சென்று நாத்தீகனாகவோ அல்லது முஸ்லிமாகவோ மாறுவது என்பது சுலபம். ஆனால், ஒரு முஸ்லிம் தன் மதத்தை விட்டு, வெளியே செல்வது ஆபத்தானது, சில நேரங்களில் அவன் உயிர் கூட பறிக்கப்படும் அபாயம் உள்ளது. முஸ்லிம்களில் சிலர், ஏதோ ஒரு காரணத்திற்காக தாடியை ஷேவ் செய்துவிட்டு, அதன் பிறகு, தங்கள் தாடி வளரும் வரை சில நாட்கள், தங்கள் பகுதியில் வாழும் "பக்தியுள்ள முஸ்லிம்களின்" கண்களில் படாமல் ஒளிந்து வாழும் சிலரை நான் பார்த்திருக்கிறேன். அற்பமான தாடியை ஷேவ் செய்தாலே, பயப்படும் முஸ்லிம்கள், தங்கள் அல்லாஹ்வையே  மாற்றினால் பயப்படாமல் இருக்கமுடியுமா?

இதுமட்டுமல்ல, 25 வயது நிரம்பிய ஒரு முஸ்லிம் ஆண் தான் கிறிஸ்தவனாக மாறுவது என்பது வேறு, 18 வயது நிரம்பிய மாணவன், இஸ்லாமை விட்டு வெளியே செல்வது என்பது வேறு. மேலும், ஒரு முஸ்லிம் பெண், இஸ்லாமைவிட்டு வெளியே செல்ல முடிவு செய்தால், அதன் விளைவு வேறு வகையாக இருக்கும். எனவே, ஒரு முஸ்லிம் ஆண் அல்லது பெண், இயேசுவை பின் பற்ற விரும்பினால், எப்படிப்பட்ட சிக்கல்களை எதிர்க்கொள்ள வேண்டிவரும் என்பதையும் மேலும் அவைகளிலிருந்து வெளிப்படும் விதம் என்னவென்பதையும்  விளக்கவேண்டியுள்ளது.

இந்த ஆலோசனை கொடுக்க யாருக்கு தகுதியுள்ளது?

இந்த ஆலோசனையைக் கொடுக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம். இது நியாயமான கேள்வி தான். ஆனால், இப்படிப்பட்ட ஆலோசனைகளைக் கொடுக்க என்னை விட யாருக்கு அதிகமான தகுதிகள் இருக்க முடியும் என்பது தான் நான் கேட்கும் எதிர்க்கேள்வி? ஆம், 25 ஆண்டுகளுக்கு முன்பாக, இஸ்லாமை விட்டு வெளியே வந்தவன் நான். என் வாலிப வயதில், ஒரு கிறிஸ்தவ கைப்பிரதியைப் படித்து, இயேசுவை பின்பற்ற முடிவு எடுத்தேன். ஆறுமாதங்கள் யாருக்கும் தெரியாமல், புதிய ஏற்பாட்டை மட்டுமே படித்தேன். எந்த ஒரு கிறிஸ்தவ சபைக்கும் போகவில்லை, எந்த ஒரு போதகரையும் சந்திக்கவில்லை.

அதன் பிறகு, ஒரு சிறிய சர்ச்சுக்கு செல்ல ஆரம்பித்தேன். அப்போது தான் பிரச்சனை தொடங்கியது. பெற்றோர்கள் எதிர்த்தார்கள், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நான் ஒரு ஆண் பிள்ளை என்பதால், கொஞ்சம் தப்பித்தேன் என்றுச் சொல்லலாம். படிப்புக்காக வெளியூருக்குச் சென்றபடியினால்,  கடைசியாக கரை சேர்ந்தேன். அந்த காலத்தில் நான் கேட்ட கேள்விகளை, இந்த தொடர் கட்டுரைகளில் முன்வைத்து, எனக்கு எப்படி பதில் கிடைத்தது என்பதை விளக்கவுள்ளேன். மேலும், எனக்கு பிற்பாடு (என்னால் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு) இஸ்லாமை விட்டு வெளியே வந்துக்கொண்டு இருக்கும் என் உறவினர்கள் கேட்ட கேள்விகளும் இதில் அடக்கம்.

எனவே, இப்படிப்பட்ட ஆலோசனை சொல்வதற்கு எனக்கு தகுதி உண்டு என்பது என் கருத்து (அல்லது  நினைப்பு!).

இணையத்தில் நடக்கும் கிறிஸ்தவ ஊழியம்:

நம் தமிழ் கிறிஸ்தவர்கள் இணையத்தில் சிறப்பாக ஊழியம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு காலத்தில் விவாதம் புரிய வாருங்கள் என்று பாஸ்டர்களுக்கு சவால் விட்டுக்கொண்டு இருந்த தமிழ் முஸ்லிம் அறிஞர்கள், இன்று பாஸ்டர்களைக் கண்டால், பயந்து ஓடுகிறார்கள்.  ஒரு கிறிஸ்தவரிடம் முஸ்லிம்கள் ஒரு கேள்வியை கேட்டால், அதற்கு பதில் சொல்லிவிட்டு, திருப்பி பத்து கேள்விகளை இஸ்லாமிலிருந்து கேட்கிறார். ”சாது மிரண்டால் காது கொள்ளாது” என்று கேள்விபட்டு இருப்போம், இதன் அர்தத்தை தமிழ் முஸ்லிம் இன்று நன்கு புரிந்துக் கொண்டுள்ளார்கள். சிங்கத்தின் வாயில் மாட்டிக்கொண்ட ஆடுகளை எப்படி விடுதலை செய்வது என்பதை நன்கு அறிந்துக்கொண்டான் கிறிஸ்தவன்.

தமிழ் கிறிஸ்தவர்கள் பல இஸ்லாமிய அறிஞர்களோடு விவாதம் புரிந்து, அவ்வீடியோக்களை இணையத்தில் பதித்துள்ளார்கள். மேலும், கிறிஸ்தவம் குறித்து கேள்வி கேட்கும் முஸ்லிம்களுக்கு,  சுயமாக வீடியோக்கள் மூலமாக பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எழுத்துக்கள் மூலமாகவும் பதில்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இணையத்தில் ஒரு ”கருத்து பனிப்போர்” நடந்துக்கொண்டு இருக்கிறது என்றுச் சொல்லலாம். கிறிஸ்தவர்கள் இஸ்லாமை கற்றுக்கொண்டு கேள்வி கேட்பதினால், முஸ்லிம்களுக்கு இப்போது தான் இஸ்லாம் சரியாக புரிய ஆரம்பித்துள்ளது. குர்ஆன் தமிழாக்கங்களில் பல தகவல்கள் புதிதாக சேர்க்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அதாவது கிறிஸ்தவர்கள் இஸ்லாமைக் குறித்து கேட்கும் கேள்விகள், “குர்ஆன் விளக்கவுரை” என்ற பெயரில் முஸ்லிம்கள் குர்ஆன் தமிழாக்கங்களில் விளக்கமளித்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ் முஸ்லிம்களுக்கு இது ஒரு சவால் நிறைந்த காலமாக உள்ளது. இதுவரை சந்திக்காத ஒரு கருத்துப் போரை முஸ்லிம்கள் சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள். 

கர்த்தர் தமிழ்நாட்டில் ஒரு பெரிய அறுவடையை முஸ்லிம் சமுதாயத்திலிருந்தே கொடுப்பார் என்பது நிச்சயம். ஒரு முஸ்லிம் குடும்பம் கூட இல்லாத சபை தமிழ்நாட்டில் வருங்காலங்களில்  இருக்காது. தமிழ்நாட்டில், ஒரு கிறிஸ்தவ ஊழியரின் வெற்றி, ’அவர் சபையில் எத்தனை முஸ்லிம்கள் இரட்சிக்கப்பட்டு தேவனை சுதந்திரமாக ஆராதிக்கிறார்கள் என்ற எண்ணிக்கையின் மீது சார்ந்திருக்கும்’ என்ற நிலை உண்டானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எனவே, இஸ்லாமைவிட்டு வெளியே வந்து கிறிஸ்துவை பின்பற்ற விரும்பும் அன்பர்களுக்கு அக்காலத்தில் உதவும் வகையில் சில ஆலோசனைகளை இன்று கொடுப்பது நல்லது என்று கண்டேன். 

உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய் (பிரசங்கி 11:1).

இக்கேள்வி பதில்களை படியுங்கள், மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். புதிய சிருஷ்டிகளுக்கு இவைகளை படிக்கக் கொடுங்கள், அவர்களின் சந்தேகம் தீர்த்துவிடுங்கள்.

பொருளடக்கம்

கேள்வி 1: நான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன், அடுத்தது என்ன?