கேள்வி 3: நான் ஒரு முஸ்லிம் பெண், படித்துகொண்டு இருக்கிறேன். இயேசுவை விசுவாசிக்கிறேன். என் முடிவை வீட்டில் உள்ளவர்களுக்குச் சொன்னால், என் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டில் உட்காரவைத்து விடுவார்கள், அல்லது திருமணம் செய்துவிடுவார்கள். நான் என்ன செய்வது?

பதில்:

உங்களுடைய நிலையை என்னால் சரியாக புரிந்துக் கொள்ளமுடிகிறது. நீங்கள் எத்தனை மாதங்களாக/ஆண்டுகளாக இயேசுவை பின்பற்றிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பெண்ணாக பிறந்தும், நீங்கள் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.  இங்கு சில ஆலோசனைகளை தருகிறேன், இவைகள் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பொருந்தும்.

1) திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்:

முதலாவதாக, நீங்கள் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள முயலுங்கள். உங்கள் முடிவை உடனே பெற்றோர்களுக்குச் சொல்லத் தேவையில்லை. உங்கள் படிப்பு முடியும் வரை, இந்த முடிவு பற்றி பெற்றோர்களுக்குச் சொல்லாதீர்கள். உங்கள் படிப்பை நன்றாக படித்து, நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சிப்பெற முயற்சி செய்யுங்கள். சமுதாயத்தில் சிறப்பாக வாழவேண்டுமென்றால், உங்களுக்கு படிப்பு வேண்டும், அதன் மூலமாக நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் யார் மீதும் சார்ந்து வாழாமல் இருக்க, படிப்பு முக்கியம். மேலும், சுயமாக சம்பாதிக்கும் திறமையை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால், மேற்படிப்பு படித்து, நல்ல ஒரு பட்டதாரியாக மாறுங்கள். 

உங்களுக்கு ஆர்வம் இருந்து, நேரமிருந்தால், இன்னும் சில கைத்தொழில்களை கற்றுக்கொள்ளலாம். அதாவது, படிக்கமுடியாத நிலையில் இருக்கும் பெண்கள், டெய்லரிங் போன்ற பல கைத்தொழில்களைக் கற்றுக்கொள்ளலாம். இதே போல, ஆண்களும் சம்பாதிக்க உதவும் கைத்தொழில்களை கற்றுக்கொள்ளுங்கள். 

தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான். (நீதிமொழிகள் 22:9)

சோம்பேரிகளுக்கு தேவன் உதவி செய்வதில்லை. நாம் திறமைகளை வளர்த்துக்கொண்டால், நமக்கு ஏற்ற வேலைகளை அவர் கொடுத்து நம்மை உயர்த்துவார் (மத்தேயு 25:14-30).

திறமை மற்றும் வேலை போன்றவைகளின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்வதென்றால், ஒரு பெண் எப்படி இருக்கவேண்டும் என்று வேதம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. உதாரணத்திற்கு, நீதிமொழிகள் 31வது அத்தியாயத்தை படித்துப்பாருங்கள்.  அவைகளிலிருந்து சில வசனங்களை இங்கு தருகிறேன்.

24. மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள். 25. அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள். 26. தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது. 27. அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள். 28. அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து: 29. அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான். 30. சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். 31. அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது. (நீதிமொழிகள் 31:24-31)

2) வேத வசனத்தை கற்று, தேர்ச்சி பெறுங்கள்:

இரண்டாவதாக, வேத வசனத்தை படித்து, அதை தியானித்து விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களின் கடினமான நேரங்களில் வேத வசனம் உதவும். முக்கியமாக, புதிய ஏற்பாட்டை அடிக்கடி படியுங்கள். பழைய ஏற்பாட்டில் சங்கீதம், மற்றும் நீதிமொழிகள் புத்தகங்களையும் அடிக்கடி படியுங்கள். சமுதாயத்தில் எப்படி ஞானமாக நடந்துக்கொள்ளவேண்டும், எப்படி பேசவேண்டும் போன்றவைகளை நீதிமொழிகள் புத்தகம் கற்றுத்தரும்.

சங்கீதம் 23ம் அத்தியாயத்தை நன்றாக கற்றுக்கொண்டு, உங்கள் ஜெபங்களில் அவைகளைச் சொல்லி ஜெபிக்கலாம். சங்கீதம் 91ம் அத்தியாயத்தை மனப்பாடம் செய்து, அவைகளை அடிக்கடி அறிக்கையிட்டு, விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். இயேசுவின் மலைப்பிரசங்கத்தை ஒருபோதும் மறக்கவேண்டாம்.

வேதவசனம் உங்கள் கால்களுக்கு வழிகாட்டும் தீபமாக இருக்கும். மேலும், உங்கள் வாலிப வயதின் ஆசைகளிலிருந்து தப்பித்து, உங்களை பரிசுத்தமானவர்களாக காத்துக்கொள்ள, வேத வசனத்தை அதிகமாக படித்து தியானம் செய்யுங்கள்.

3) குடும்பத்தில் நல்ல சாட்சியான வாழ்க்கை வாழ்ந்துக் காட்டுங்கள்:

ஒரு பக்கம், உங்கள் திறமையை வளர்த்துக்கொண்டு, இன்னொரு பக்கம் வேதவசனத்தை படித்து, அதன் படி நீங்கள் நடக்கும் போது, உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தைக் காண்பீர்கள். வேதம் சொல்வது போல, ஆவியின் கனிகள் கொண்டு வாழவேண்டும்.

22. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், 23. சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. (கலாத்தியர் 5:22-23)

உங்கள் குடும்பத்தில், ஒரு நல்ல சாட்சியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டவேண்டும். உங்களின் வயதுள்ள இதர அங்கத்தினர்கள், உறவினர்களை விட, உங்கள் நடத்தை, பேச்சு மற்றும் வாழ்க்கை முறை ஒரு சிறப்பான வாழ்க்கையாக இருக்கவேண்டும். இதைத் தான் கிறிஸ்தவத்தில் சாட்சியான வாழ்க்கை என்றுச் சொல்வார்கள். நீங்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, உங்கள் குடும்பத்தில் நற்செயல்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக நீங்கள் விளங்கவேண்டும்.

உங்கள் இஸ்லாமிய குடும்ப நபர்களுக்கு நீங்கள் வெளிச்சம் கொடுக்கின்ற விளக்காக திகழவேண்டும்.

14. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.

15. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.

16. இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. (மத்தேயு 5:14-16)

நற்செயல்களின் விஷயத்தில் உங்கள் குடும்பத்தினர், ஒரு வித்தியாசமானவர்களாக உங்களை காணவேண்டும். இருளுக்கும் வெளிச்சத்துக்கும் இருக்கும் வித்தியாசம் அவர்களுக்கு நன்றாக தெரியவேண்டும். இது ஒரே நாளில் நடக்கும் காரியமல்ல, இதற்கு பல மாதங்கள் ஆகலாம். புதிய சிருஷ்டியாக நீங்கள் இருப்பதினால், பழையவைகளை ஒழித்துவிடவேண்டும். 

நீங்கள் ஒரு வித்தியாசமானவர் என்பதை அவர்களுக்கு தெரிவிக்காமல், உங்கள் முடிவு பற்றி சொல்லி என்ன பயன்? அவர்களாகவே, உங்களிடம் வந்து, உன்னை ஒரு சிறந்த மகளாக/மகனாக நான் காண்கிறேன் என்று சாட்சி சொல்லும் படி நீங்கள் வாழவேண்டும். இங்கு நான் குறிப்பிடும் வாழ்க்கை போலியான நடிப்பு வாழ்க்கையல்ல, அது  உண்மையான வாழ்க்கையாகும். இயேசு சொல்வது போல, ஜீவத்தண்ணீர் உள்ள ஊற்று (நற்கனிகள்) போன்று அது உங்கள் உள்ளத்திலிருந்து வெளிப்படவேண்டும். 

4) தேவ வழி நடத்துதலை, தேவ சத்தத்தை கேட்க தயாராக வேண்டும்

ஒரு முஸ்லிம் குடும்பத்தில் தனி ஒரு பெண்ணாக இருக்கும் உங்களுக்கு உங்கள் வீட்டுக்குள் யார் உதவி செய்வார்? வெளியிலிருந்து வந்து யாரும் உதவி செய்யமுடியாது, ஆனால், இயேசுக் கிறிஸ்துவால் உங்களுக்கு உதவி செய்யமுடியும், இதனை யாருமே தடை செய்யமுடியாது. பிரச்சனை வரும் போது என்ன பேசவேண்டும்? எப்படி பதில் சொல்லவேண்டும்? போன்றவைகளை ஆவியானவர் சொல்லித்தருவார்.

இயேசுவின் சத்தத்தை நாம் கேட்கமுடியுமா?  நிச்சயம் கேட்கமுடியும். நாம் வேதம் வாசிக்கும் போதும், ஜெபிக்கும் போதும் நம் உள்ளத்தில் தேவன் பேசுவார், சில நேரங்களில் நம் சரீர பிரகாரமான செவிகளிலேயே தேவன் பேசுவதை நாம் கேட்கமுடியும். இன்னும் சில வேளைகளில் தரிசனங்கள் மூலமாகவும், கனவுகள் மூலமாகவும் வழி காட்டுவார். எனவே, அவருடைய சத்தத்தைக் கேட்க நீங்கள் தயாராக இருந்து, அவருக்கு கீழ்படியவேண்டும். 

கவனிக்கவும், கனவுகள் மூலமாக உங்களுக்கு வழிகாட்டுவார் என்றுச் சொல்லி, ஒவ்வொரு நாளும் காணும் கனவுகளை ஆய்வு செய்துக்கொண்டு இருக்கக்கூடாது. பெரும்பான்மையான கனவுகளுக்கு பொருள் இருக்காது, நாம் அன்றாடம் செய்யும் செயல்களின் பிரதிபலிப்பாகவோ, அல்லது உடல் சோர்வின் காரணமாகவோ கனவுகள் தினமும் வரலாம், இவைகளை கணக்கில் கொள்ளக்கூடாது. ஒரு சிக்கலான பிரச்சனையில் சிக்கியிருக்கும் போது, நமக்கு கனவுகள் தரிசனங்கள் கொடுத்து அவர் உதவி செய்வார், வழிகாட்டுவார். சரியான நேரத்தில் அவர் உதவி செய்வார் என்பதை உணர்ந்து, விசுவாசித்து, நிதானமாக நடந்துக்கொள்ளுங்கள்.

5) முடிவை தேவனிடம் ஒப்புக்கொடுங்கள்:

கடைசியாக, இயேசுவை பின்பற்றும் உங்களின் முடிவைப் பற்றி உங்கள் குடும்பத்துக்குச் சொல்லும் பொறுப்பை அவரே ஏற்றுக்கொள்வார். அதற்கென்று ஒரு காலத்தை அவர் நியமித்து இருப்பார், அந்த நாள், நாழிகை வரும் போது, தானாகவே, அவ்விஷயம் உங்கள் வீட்டாருக்கு தெரிவிக்கப்படும். அந்த நாளை நீங்கள் விரும்பினாலும் சரி, விருமபாவிட்டாலும் சரி, உங்கள் பெற்றோருக்கு அது தெரியவரும். அப்போது நீங்கள் இயேசுவை மறுதலிக்காமல், உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டும். அப்போது நடக்கும் காரியங்கள் அனைத்தையும் இயேசு தம் கரத்தில் எடுத்துக்கொண்டு, ஒரு ஆசீர்வாதமான முடிவை உங்களுக்குத் தருவார். அனேக முஸ்லிம்களின் சாட்சிகளை நான் கேட்டுள்ளேன், முக்கியமாக என் வாழ்க்கையிலும் நடந்த நிகழ்ச்சிகளும் இப்படித் தான் முடிவுக்கு வந்தது.

சிலர் ஆர்வ கோளாரினால், அறியாமையினால் தங்கள் முடிவை வீட்டிலுள்ளவர்களுக்கு சீக்கிரத்தில் சொல்லிவிட்டு, தங்கள் படிப்பையும், இதர ஆசீர்வாதங்களையும் இழந்துவிடுகிறார்கள். ”உன் முடிவு பற்றி குடும்பத்துக்குச் சொல்” என்று அவர் சொல்லும் வரை நீங்கள், அமைதியாக இருந்து மேலே சொல்லப்பட்ட ஆலோசனைகளின் படி வாழ்ந்துக்கொண்டு இருங்கள். இவைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தும்.  

6) திருச்சபையின், இதர கிறிஸ்தவர்களின் உதவியை பெறுங்கள்

இதுவரை சொன்ன விவரங்கள் அனைத்தையும் கவனித்தால், ‘உங்கள் யுத்தத்தை நீங்கள் மட்டுமே தனியாக செய்யவேண்டும்’ என்பது போல தெரிகிறதல்லவா? மேலோட்டமாக பார்த்தால், அப்படித் தான் தெரியும், ஆனால், ஆழமாக உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அல்லது நடக்கப்போகும் செயல்பாடுகளை கவனித்தால், ஆங்காங்கே தேவன் உங்களுக்கு உதவி செய்ய ‘சில கிறிஸ்தவ நண்பர்களை, தோழிகளை, ஊழியர்களை’ அனுப்புவார். இதனை இப்போது உங்களால் புரிந்துக் கொள்ளமுடியாது.  மேலே கூறப்பட்ட ஆலோசனைகளின் படி நீங்கள் வாழும் போது, உங்களை உயர்த்த, சரியான நேரத்தில் உதவி செய்ய, அவ்வப்போது தேவன் ’உதவும் கரங்களை’ அனுப்புவார், இவைகள் அற்புதமாக நடக்கும், இதில் சந்தேகமில்லை.

எதிர்பாராத இடங்களிலிருந்து உங்களுக்கு உதவி வரும்.

எதிர்பாராத நபர்கள் (உங்கள் உறவினர்களாக கூட இருக்கலாம்) மூலமாக உதவி வரும்.

படிக்கும் அல்லது வேலை பார்க்கும் இடங்களில், உங்களுக்கு மறைமுகமாக உதவி செய்யவே அனேக தேவதூதர்கள் போன்ற கிறிஸ்தவர்களை தேவன் அனுப்புவார்.

எனவே, எல்லோரையும் சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், கர்த்தர் கொடுத்திருக்கும் ஞானத்தை பயன்படுத்தி, உதவிகளை பெற்றுக்கொண்டு முன்னேரிச் செல்லவேண்டும்.

எப்போது பார்த்தாலும் நீங்கள் தனியாக போராட இயேசு இடம் கொடுக்கமாட்டார். வானத்தையும் பூமியையும் படைத்த ஆண்டவரிடமிருந்து உங்களுக்கு ஒத்தாசை வரும். அது எந்த வடிவில் வரும் என்பதை, அவர் உங்களுக்கு வரும் நெருக்கடியைப் பொருத்து முடிவு செய்வார், ஆனால், உதவி நிச்சயம் வரும், கலங்கவேண்டாம்.

முடிவுரை:

இதுவரை பார்த்த விவரங்கள் அனைத்தும் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் பொருந்தும். ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஒரு ஆணுக்கு இருக்கும் உரிமைகள் பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பதால், ஆண்களை விட, பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒரு சிறிய பிழை கூட, பெரிய காரியத்தை, ஆசீர்வாதத்தைக் கெடுத்துவிடும். அவசரப்பட்டு, எல்லோருக்கும் உங்கள் முடிவைச் சொல்லாமல், கர்த்தர் வழிகாட்டும்வரை காத்திருக்கவேண்டும். ’ஸபர் கா ஃபல் மீடா ஹோதா ஹை  - காத்திருந்து உண்ணும் கனி சுவையாக இருக்கும்’ என்று ஹிந்தியில் சொல்வார்கள், அதாவது ‘காத்திருந்து பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதம், நிரந்தரமானதாக இருக்கும்’ என்றுச் சொல்லலாம். ஆகவே, காத்திருந்து, ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள், அவசரப்படவேண்டாம்.

சுருக்கம்: நீங்கள் செய்யவேண்டியவை:

1) திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள், படிப்பை பூர்த்திச் செய்யுங்கள்.

2) வேத வசனத்தை கற்று, தேர்ச்சி பெறுங்கள்:

3) குடும்பத்தில் நல்ல சாட்சியான வாழ்க்கை வாழ்ந்துக் காட்டுங்கள்

4) தேவ வழி நடத்துதலை, தேவ சத்தத்தை கேட்க தயாராக இருங்கள்

5) முடிவை தேவனிடம் ஒப்புக்கொடுங்கள்:

6) திருச்சபையின், இதர கிறிஸ்தவர்களின் உதவியை பெறுங்கள்

இவைகள் பொதுவான ஆலோசனைகள். ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு தேவையான ஆலோசனைகளைப் பெற, இதர கேள்வி பதில்களைப் படிக்கவும்.

கேள்வி 2:

நான் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, குர்ஆனை படித்துக் கொண்டு இருந்தேன். இப்போது நான் பைபிளை படிப்பதினால், குர்ஆனை படிக்கக்கூடாதா? படித்தால் குற்றமாகுமா?

பொருளடக்கம்

கேள்வி 4:

நான் புதிதாக கிறிஸ்தவத்தை தழுவியுள்ளேன். கிறிஸ்தவத்தில் ஹலால், ஹராம் என்பவைகள் உண்டா?