2019 ரமளான் 8 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் 8: முபாஹலா என்ற ஹராம்

ஆசீர்வாதம் மற்றும் சாபம் இவ்விரண்டும் எதிர் துருவங்கள்.

“ஒருவர் நன்றாக இருக்கவேண்டும்” என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வதும், அல்லது நேரடியாக ஒரு நபரிடம் “நீங்கள் நன்றாக இருக்கவேண்டும்” என்று சொல்வதும் ஒரு நல்ல செயல் ஆகும். “ஒருவர் அழிந்துவிடவேண்டும்” என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வதும், அல்லது ஒருவரைப் பார்த்து 'நீ நல்லா இருக்கமாட்டாய்' என்றுச் சொல்வதும்  ஒரு  தீயச்செயல் ஆகும்.    இதனை நாம் அனைவரும் அறிவோம் (மற்றவர்களை ஆசீர்வதிக்க நினைத்து, செய்ய முயன்று சிலவேளைகளில் தோற்றுவிட்டாலும், ஆசீர்வதிப்பது நல்ல செயல் என்பதை நாம் அறிவோம்.)

இயேசுவின் படி சபிப்பது ஒரு ஹராமான செயல்:

இயேசு போதனை செய்யும் போது, கீழ்கண்டவிதமாக போதித்தார்.

உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள் (லூக்கா 6:28 )

நமக்கு நன்மை செய்பவர்களை மட்டும் ஆசீர்வதிப்பதல்ல, நம்மை சபிப்பவர்களையும் ஆசீர்வதிக்கவேண்டும் என்று இயேசு  கட்டளையிடுகிறார்.

இயேசு சொன்னதையே புதிய ஏற்பாட்டின் இதர புத்தகங்களிலும் காணமுடியும்.

உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள், ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள். (ரோமர் 12:14 )

நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரேவாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது. (யாக்கோபு 3:8-10)

மேற்கண்ட யாக்கோபு புத்தகத்தில், ஏன் நாம் மற்றவர்களை சபிக்கக்கூடாது என்ற காரணத்தை சரியாக புரிந்துக்கொள்ள ஒரு லாஜிக் சொல்லப்பட்டுள்ளது. அதாவது ஒரு பக்தியுள்ள மனிதன் தான் வாயால் பல முறை தன் இறைவனின் துதியைச் சொல்லிவருவான். அதாவது, உலகையும், மனிதர்களையும் படைத்த இறைவனை தன் வாயினால் துதிப்பான். அதே வாயினால், அதே இறைவன் படைத்த மனிதனை சபிப்பது சரியான செயலாக இருக்குமா? என்ற கேள்வியை மேற்கண்ட வசனம் முன்வைக்கிறது. இதில் சிந்திக்கவேண்டிய இன்னொரு விஷயம் எதுவென்றால், நாம் சபிக்கும் மனிதன் தன்னை படைத்த இறைவனின் சாயலில் இருப்பது தான்.

எனவே, இயேசுவின் படியும் அவருடைய சீடர்களின் படியும்  சபிப்பது ஒரு தீய செயலாகும் அது கிறிஸ்தவத்தில் அனுமதிக்கப்படாத (ஹராம்) செயலாகும்.

['மற்றவர்களை சபித்துக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவர்களை' நம்மில் யாராவது பார்த்தால், இதனை நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள், அதாவது 'சபிக்கின்ற அந்த கிறிஸ்தவர்கள் இயேசுவை அறியவில்லை' என்று அர்த்தம்.  அவர்களுக்கு இயேசுவும் தெரியாது, இயேசுவிற்கு அவர்களையும் தெரியாது. 'இவர்களை நான் அறியேன்' என்று இயேசு சொல்லிவிடுவார்.]

முஹம்மதுவின் படி சபித்தல் ஹலால் செயலாகும்:

இஸ்லாமிய நபியாகிய முஹம்மதுவின் படியும், குர்‍ஆனின் படியும், மற்றவர்கள் மீது சாபம் கூறுவது, அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பிரார்த்தனை செய்வது என்பது ஒரு ஹலால் செயலாகும். அதாவது இஸ்லாமில் அனுமதிக்கப்பட்ட செயலாக “மற்றவர்களை சபித்தல்“ உள்ளது.

முபாஹலா என்ற சாப பிரார்த்தனை:

அல்லாஹ் முஹம்மதுவிற்கு முபாஹலா செய்ய கட்டளையிடுகின்றான். பார்க்க குர்‍ஆன் 3:61

3:61. (நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்: “வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) ”பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நாம் பிரார்த்திப்போம்!” என நீர் கூறும். (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

3:61. (நபியே!) இதைப்பற்றி உங்களுக்கு உண்மையான விவரம் கிடைத்த பின்னரும், உங்களிடம் எவரும் தர்க்கித்தால் (அவர்களுக்கு) நீங்கள் கூறுங்கள்: "வாருங்கள் எங்களுடைய பிள்ளைகளையும், உங்களுடைய பிள்ளைகளையும், எங்களுடைய பெண்களையும், உங்களுடைய பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று சேர்த்து) வைத்துக்கொண்டு (ஒவ்வொருவரும் நாம் கூறுவதுதான் உண்மையென) சத்தியம் செய்து (இதற்கு மாறாகக் கூறும்) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என பிரார்த்திப்போம்" (என்று கூறும்படி கட்டளையிட்டான். இவ்வாறு நபியவர்கள் அழைத்த சமயத்தில் ஒருவருமே இவ்வாறு சத்தியம் செய்ய முன்வரவில்லை.) (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

முபாஹலாவிற்கு கிறிஸ்தவர்களை அழைத்த முஹம்மது:

முஹம்மது தம்முடைய  வாழ்நாளின் கடைசி மூன்று ஆண்டுகளில், மக்கா மதினாவைச் சுற்றியுள்ள  இதர நாடுகளின் அரசர்களுக்கு "இஸ்லாமை ஏற்கும் படி" மிரட்டல் கடிதம் எழுதியுள்ளார். இவரது இராணுவ பலத்தைக் கண்டு சிலர் இஸ்லாமை ஏற்றனர், ஏற்காதவர்களோடு இவர் சண்டையிட்டுள்ளார். ஒரு முறை நஜ்ரான் பகுதியிலுள்ள (இன்றைய யெமன் நாடு) கிறிஸ்தவர்களை இஸ்லாமை ஏற்கிறீர்களா? அல்லது இஸ்லாமுக்கு அடிபணிந்து ஜிஸ்யா வரி கட்டுகிறீர்களா? என்று முஹம்மது கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த நாட்டிலிருந்து சில பிரதிநிதிக‌ள் வந்து முஹம்மதுவிடம் பேசினார்கள். தன்னை தீர்க்கதரிசி என்றுச் சொல்கின்ற இவர் யார் என்று அறிந்துச் செல்ல வந்தார்கள். வந்தவர்களும் முஹம்மது தங்கள் நிலைப்பாடு பற்றி பேசியுள்ளார்கள். முஹம்மதுவை ஒரு நபியாக ஏற்க அவர்கள் தயாராக இல்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் "இயேசு வெறும் நபி" என்று முஹம்மது கூறியுள்ளார், வந்த கிறிஸ்தவ பிரதிநிதிகள் அதனை அங்கீகரிக்க வில்லை, பெட்ரோல் ஊற்றாமலேயே விவாதம் சூடு பிடித்துள்ளது.  இந்த நேரத்தில் தான் முஹம்மது அவர்களை 'முபாஹலா' என்ற சாப பிரார்த்தனைக்கு அழைத்துள்ளார். மேற்கண்ட குர்‍ஆன் வசனம் இந்த நேரத்தில் தான் இறங்கியது என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.

நான் என் மனைவி, பிள்ளைகளோடு வருகிறேன், நீங்கள் உங்கள் மனைவி பிள்ளைகளோடு வாருங்கள், நாம் பொய் சொல்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை கூறுவோம் என்று முஹம்மது கூறியுள்ளார்.

இப்படி சபிப்பது  எங்கள் மார்க்கத்தில் (கிறிஸ்தவத்தில்) இல்லை என்றுச் சொல்லி, அவர்கள் மறுத்துள்ளனர்.  அதனால், இஸ்லாமின் ஆட்சியின் கீழ் நஜ்ரான் முஹம்மதுவிற்கு வரிகட்டுகின்றவர்களாக மாறினார்கள். சபிப்பதைக் காட்டிலும், வரிகட்டுவதே மேன்மை என்று அவர்கள் எண்ணினார்கள்.

[முஹம்மதுவின் இராணுபலம் அதிகமாக இருந்ததால், அன்று அநேக அரசுகள் இஸ்லாமுக்கு அடிபணிந்தது. முஹம்மது மரித்த பிறகு அனேக நாடுகள், இஸ்லாமை விட்டு வெளியேறின. முதல் கலிஃபாவாக இருந்த அபூ பக்கர் அவர்கள், தங்களுக்கு வரிகட்டாதவர்கள் மீது போர் தொடுத்தார் என்று இஸ்லாமிய சரித்திரம் இரத்தசாட்சி பகருகிறது.]

முடிவுரை:

முஹம்மதுவின் இந்த வழிகாட்டுதலின் படி தான் இன்று முஸ்லிம் குழுக்களிடையே முபாஹலா செய்யும் பழக்கம் வந்துள்ளது. முஸ்லிம்கள் முஹம்மது காட்டிய வழியில் நடந்து, தங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக்கொள்ள, அல்லாஹ்வின் பெயரில் இன்னொரு முஸ்லிமின் மனைவி, பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளை சபிப்பிகிறார்கள்.

இயேசுவின் கட்டளையிட்டதின் பேரில், கிறிஸ்தவர்கள் மற்றவர்களை சபிக்க இடம் தருவதில்லை. சபிப்பது இயேசுவால் அனுமதிக்கப்படாதது, இன்னும் ஒரு படிமேலே சென்று, "தீமை செய்பவர்களையும் ஆசீர்வதிப்பதே, கிறிஸ்தவர்களின் அடையாளமாக உள்ளது".

அல்லாஹ்வும்  முஹம்மதும் கற்றுக்கொடுத்த முபாஹலா என்ற சாபம் இடும் நிகழ்ச்சிக்கு முஸ்லீம்கள் அனேக சப்பைக் காட்டு காரணங்களைச் சொல்லக்கூடும். ஆனால், இயேசு கற்றுக்கொடுத்த 'ஆசீர்வதியுங்கள், சபிக்காதிருங்கள்' என்ற பொன் மொழிகளுக்கு எதிராக யார் என்ன காரணங்களைக் கொண்டுவரமுடியும்?

எது எப்படியோ, முஹம்மதுவிற்கு எது ஹலாலாக இருந்ததோ, அது இயேசுவின் படி ஹராம் ஆகும். முஹம்மதுவிற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இயேசு கொண்டு வந்த ஆசீர்வாதம் கொடுக்கும் சட்டத்தை, முஹம்மது தகர்த்துவிட்டார்.

என் கருத்தை நீ எதிர்க்கிறாய்! நான் சொல்வது தான் உண்மை! நீ சொல்வது பொய்! இதனை நீ மறுத்தால், உன் குடும்ப நபர்களை ஒரு அவையில் கொண்டு வா! நானும் என் குடும்பத்தை அழைத்துவருகிறேன், ஒருவர் மீது ஒருவர் சாபம் இட்டுக்கொள்வோம்! என்ற கலாச்சாரம் இஸ்லாமில் உள்ளது.

ஒருவரை சபிக்கும் இந்த செயல் சரியானது தான் என்றுச் சொல்லி, அனேக காரணங்களை நீ முன்வைக்கமுடியும், ஆனால், இறைவன் படைத்த மனிதனை அதே இறைவன் பெயரில் சபிக்க முற்படுகின்றாயே! இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

கிறிஸ்தவத்தில் இப்படிப்பட்ட கலாச்சார சீர்கேட்டு பழக்கங்கள் இல்லை என்பதற்காக, இயேசுவை துதிக்கிறேன்.

அடிக்குறிப்புக்கள்:

1) https://en.wikipedia.org/wiki/Event_of_Mubahala

தேதி: 31st May 2019


2019 ரமளான் கட்டுரைகள்
அனைத்து ரமளான் தொடர் கட்டுரைகளை படிக்க‌
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்