இஸ்லாம் கிறிஸ்தவம் சின்னஞ் சிறு கேள்வி பதில்கள்: 1000 - இஸ்லாம் (391 - 400) - பாகம் 14

“சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000” தொடரின் முந்தைய பதிவுகளை இங்கு சொடுக்கி படிக்கலாம்.  இந்த தற்போதைய கட்டுரையில், "இஸ்லாம்" என்ற தலைப்பில்  மேலும் 10 கேள்வி பதில்களைக் காண்போம்.


கேள்வி 391: இஸ்லாமில் கண் திருஷ்டி உண்டா?

பதில் 391: கண் திருஷ்டி உண்டு என்று இஸ்லாம் நம்பச் சொல்கிறது, முஸ்லிம்களும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். கிறிஸ்தவத்தில்  கண்திருஷ்டி என்பது இல்லை. அது ஒரு மூட பழக்க வழக்கமாகும்.

கண்திருஷ்டி உண்மையா?

ஹதீஸ் புகாரி நூல் 5738.

ஆயிஷா(ரலி) கூறினார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீயவிளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி 'கட்டளையிட்டார்கள். (மேலும் பார்க்க‌ 5740 & 5944)

முகத்தில் படர்தாமரைக்கு காரணம் கண்திருஷ்டியா?

ஹதீஸ் புகாரி நூல் 5739.

உம்மு ஸலமா(ரலி) கூறினார் : நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி(ஸல்) அவர்கள், 'இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில், இவள் மீது கண்ணேறுபட்டிருக்கிறது' என்று கூறினார்கள்.

முஹம்மதுவின் முடி தோய்க்கப்பட்ட நீரினால் கண்திருஷ்டி போகுமா?

ஹதீஸ் புகாரி நூல் 5896.

உஸ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னி மவ்ஹப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் என்னை என் குடும்பத்தார் ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்கள். (உம்மு ஸலமா ஒரு சிமிழைக் கொண்டுவந்தார்கள்.) அது வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதில் நபி(ஸல்) அவர்களின் முடிகளில் ஒரு முடி இருந்தது. (பொதுவாக யாரேனும்) ஒருவருக்கு கண்ணேறு அல்லது நோய் ஏற்பட்டால், அவர் தம் நீர் பாத்திரத்தை உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் அனுப்பி வைப்பார். (அவர்கள் தம்மிடமிருந்த நபியவர்களின் முடியைத் தண்ணீருக்குள் முக்கி அனுப்புவார்கள். அதை நோயாளி குடிப்பார்.) நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன்.

முஹம்மதுவிற்கு கண் திருஷ்டி பட்டுவிடும் என்று வேண்டுதல் செய்த ஜிப்ரீல்:

ஹதீஸ் முஸ்லிம் நூல் 4402.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள், "பிஸ்மில்லாஹி யுப்ரீக்க, வ மின் குல்லி தாயின் யஷ்ஃபீக்க, வ மின் ஷர்ரி ஹாசிதின் இதா ஹசத, வ ஷர்ரி குல்லி தீ அய்னின்" என்று ஓதிப்பார்ப்பார்கள்.  (பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (ஓதிப் பார்க்கிறேன்). அவன் உங்களுக்கு குணமளிப்பானாக! அனைத்து நோயிலிருந்தும் உங்களுக்குச் சுகமளிப்பானாக. பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது ஏற்படும் தீமையிலிருந்தும் கண்ணேறு உள்ள ஒவ்வொருவரின் தீமையிலிருந்தும் (காப்பானாக!).

விதியை கண் திருஷ்டி வெள்ளுமா?

ஹதீஸ் முஸ்லிம் நூல் 4405.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணேறு உண்மையாகும். தலைவிதியை ஏதேனும் ஒன்று வெல்ல முடியுமானால், கண்ணேறு அதை வென்றிருக்கும். (கண்ணேறுக்குக் காரணமான) உங்களிடம் குளித்துக் கொள்ளுமாறு கோரப்பட்டால் குளித்துக்கொள்ளுங்கள்.

விஷக்கடி, சின்னம்மை, கண்ணேறுக்காக‌   ஓதிப்பார்ப்பதற்கு அனுமதி:

ஹதீஸ் முஸ்லிம் நூல் : 4420.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஓதிப்பார்த்தல் குறித்துக் கூறியதாவது: விஷக்கடி, சின்னம்மை, கண்ணேறு ஆகியவற்றுக்காக (ஓதிப்பார்ப்பதற்கு) அனுமதியளிக்கப் பட்டுள்ளது.

ஹதீஸ் முஸ்லிம் நூல் : 4423.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பாம்புக்கடிக்கு ஓதிப் பார்த்துக்கொள்ள "ஹஸ்ம்" குடும்பத்தாருக்கு அனுமதியளித்தார்கள். மேலும்,அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களிடம், "என் சகோதரர் (ஜஅஃபரின்) மக்களுடைய உடல்களை நான் மெலிந்திருக்கக் காண்கிறேனே ஏன்? அவர்கள் வறுமையில் வாடுகின்றனரா?" என்று கேட்டார்கள். அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள், "இல்லை; கண்ணேறு அவர்களை வேகமாகப் பாதிக்கிறது" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர்களுக்கு ஓதிப்பார்ப்பீராக" என்று கூறினார்கள். நான் அவர்களிடம் (ஒரு துஆவை) எடுத்துரைத்தேன். நபி (ஸல்) அவர்கள் "(அதையே) அவர்களுக்கு ஓதிப்பார்ப்பீராக" என்று கூறினார்கள்.

இதை ஏன் நான் மூடப்பழக்கவழக்கம் என்று சொல்கிறேன் என்றால், ஒருவர் மற்றவர் மீது கண் திருஷ்டி வைத்தால், அந்த "மற்றவருக்கு" அதன் மூலமாக தீமை உண்டாகும் என்றால்,

 • இந்த தீமையை செய்பவன் யார்?
 • இந்த தீமை செய்யப்படும்போது, அவனைப் படைத்த இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?
 • ஒரு நேர்மையான நல்ல மனிதருக்கு எதிராக, ஒரு தீய மனிதன் கண் திருஷ்டி வைத்தால், அதனால் அவனுக்கு தீமை உண்டாகும் என்று சொன்னால், இதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா?
 • இப்படி ஒரு நீதிமானுக்கு ஒரு தீய மனிதன் தீமை செய்யும் போது, அதைப் பார்த்துக்கொண்டு இறைவன் ஏன் சும்மா இருந்தான் எந்த கேள்வி எழுகின்றது?
 • இதற்கெல்லாம் இஸ்லாத்தில் பதில் இல்லை?

இந்த கண் திருஷ்டியை கண்டு இந்து மக்கள் அதிகமாக பயப்படுகிறார்கள், முஸ்லிம்களைப் போன்று பல பரிகாரங்களை செய்கிறார்கள். இது ஒரு வீணான பயம் என்பதை இவர்கள் அறியமாட்டார்கள்!

சினிமா நடிகர்கள் கண்திருஷ்டியினால் எப்போதே இல்லாமல் போயிருக்கவேண்டும்!

ஒருவரைப் பார்த்து இன்னொருவர் நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்வதும், அவர்கள் மீது கண் திருஷ்டி வைப்பதோ உண்மையாக இருந்தால், சினிமாவில் கதாநாயகனாக கதாநாயகியாக இருக்கும் ஒவ்வொருவரும் எப்போதும் பல தீமைகளுக்கு ஆளாகியிருப்பார்கள்? இவர்களின் அழகையும் நடிப்பையும் பார்த்து கண் வைக்காதவர்கள் சினிமா பார்ப்பவர்களில் யார் இருக்கிறார்கள்? கோடிக்கணக்கான மக்கள் இவர்களின் மீது கண் திருஷ்டி வைக்கிறார்கள், இருந்தபோதிலும் மிக நீண்ட ஆயுளோடு சினிமா நடிகர்கள் நடிகைகள் வாழுகிறார்கள். இவர்கள் மீது கண் திருஷ்டி இல்லையா? 

கேள்வி 392: இஸ்லாமில் மூடப்பழக்கங்கள்/ மூடநம்பிக்கைகள் உண்டா? 

பதில் 392: மூடநம்பிக்கை என்பது ஒரு விவரம் பொய்யாக இருந்தாலும், நடைமுறைக்கு ஏதிராக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும், எதையும் ஆராயாமல் 'கண்மூடித்தனமாக' நம்புவதாகும். சில மூடநம்பிக்கைகள் தீங்கு ஒன்றும் செய்யாது, ஆனால் சில  மூடநம்பிக்கைகளினால் அனேக தீமைகள் விளையும். படிப்பறிவு குறைவாக உள்ள சமுதாயத்தில் மூடநம்பிக்கைகள் அதிகமாக காணப்படும்.

முஹம்மது பல மூடப் பழக்கவழக்கங்களை நம்பினார், அவைகளை பின்பற்றினார், மேலும் முஸ்லிம்களுக்கும் கற்றுக் கொடுத்துச் சென்றுள்ளார். மேலே நாம் கண்ட கண்திருஷ்டி கூட ஒரு மூடப்பழக்கம் தான். 

1) கட்டுக்கதைகளை நம்புவதும் மூடநம்பிக்கையே!

குர்‍ஆன் பல கட்டுக்கதைகளை முன்மொழிகிறது, அவைகளில் மூன்றை இங்கு தருகிறோம். இப்படிப்பட்ட கதைகளை நம்புவது கடைசியாக மூடநம்பிக்கைகளுக்கு நேராக கொண்டுச் செல்லும்.

குர்‍ஆன் 2:65. உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப் பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம்.

குர்‍ஆன் 5:60. “அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

குர்‍ஆன் 7:166. தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, “நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.

சட்டங்களை மீறியவர்களை குரங்குகளாகவும், பன்றிகளாகவும் அல்லாஹ் மாற்றியதாக வரும் வசனங்கள் பொய்யானவையாகும். இவைகளை நம்புவதும் மூடநம்பிக்கையே!

தீய முஸ்லிம்களையும் குரங்கு பன்றிகளாக அல்லாஹ் ஆக்குவான்:

புகாரி நூல்:  5590. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார். . . . நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.

பல்லியைக் கொள்ளுதல் ஒரு மூடநம்பிக்கை, ஒரே அடியில் கொன்றவருக்கு அதிக பலன்கள் உண்டு:

புகாரி நூல்  3359. உம்மு ஷுரைக்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும், அவர்கள், 'அது இப்ராஹீம்(அலை) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது' என்றும் கூறினார்கள்.

முஸ்லிம் நூல் 4509. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பல்லியை முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு முதலாவது அடியில் கொன்ற வரைவிடக் குறைவாக இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு; மூன்றாவது அடியில் கொன்றவருக்கு இரண்டாவது அடியில் கொன்றவரைவிடக் குறைவாக நன்மை உண்டு. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஹம்மது இன்னும் அனேக மூடநம்பிக்கைகளை போதித்தார், அதாவது நாய்களையும், பாம்புகளையும் கொல்லச்சொன்னார். ஒருவருடைய கல்லறையில் பச்சை கிளைகளை வைக்கும் போது, செத்தவருக்கு அது காயும்வரை நிம்மதியாக இருக்குமென்று முஹம்மது நம்பினார், இதுவும் ஒரு மூடநம்பிக்கையே! 

இன்னும் பல மூடநம்பிக்கைகளை முஹம்மது கற்றுக்கொடுத்தார். முஹம்மதுவின் இப்படிப்பட்ட போதனைகள் உண்மை என்று முஸ்லிம்கள் நம்புவதினால், இஸ்லாமில் மூடநம்பிக்கைகள் உள்ளது என்று அர்த்தம் தானே!

கேள்வி 393: முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களை வெறுக்க முக்கியமான காரணமென்ன?

பதில் 393: முஸ்லிம்கள் அனைவரும் இப்படி வெறுக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. யார் யாரெல்லாம் இஸ்லாமை நன்கு கற்று இருக்கிறார்களோ, அவர்கள் அதிகமாக கிறிஸ்தவர்களை வெறுக்க வாய்ப்பு இருக்கிறது.

இன்றைய முஸ்லிம்கள் சிலர் ஏன் கிறிஸ்தவர்களை வெறுக்கிறார்கள் என்பதற்கு கீழ்கண்ட சில காரணங்களைச் சொல்லமுடியும்.  இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில், சிறும்பான்மை முஸ்லிம்கள் இருக்கும் நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் இதனை வெளியே காட்டுவதில்லை. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் சிறும்பான்மை கிறிஸ்தவர்களும் மற்ற சிறும்பான்மையினரும் முஸ்லிம்களின் கைகளில் அதிக துன்பத்துக்கு உள்ளாகிறார்கள்.

1) குர்‍ஆனும், ஹதிஸ்களும் காஃபிர்களை வெறுக்கச் சொல்கிறது, இதனை முஸ்லிம்கள் அறிவார்கள், அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கீழ்படிகிறார்கள்.

2) இஸ்லாமின் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை நபியாக ஏற்கவில்லை என்பது இன்னொரு காரணம்.

3) கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடுகளை குர்‍ஆன் எதிர்த்து பேசுகின்றது, இதனை முஸ்லிம் அறிஞர்கள் மசூதிகளிலும், தங்கள் பேச்சுக்களிலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்  முஸ்லிம்களுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

4)  ஆனால், கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாம் ஆரம்பத்திலிருந்து என்ன செய்தது என்ற சரித்திரத்தை முஸ்லிம்கள் படிப்பதில்லை. கிறிஸ்தவர்களின் நாடுகளை முஸ்லிம்கள் யுத்தம் செய்து ஆக்கிரமித்தது போன்ற சரித்திர‌த்தை முஸ்லிம்கள் அறியமாட்டார்கள்.  ஆனால், தாங்கள் முஸ்லிம்களிடம் இழந்த நாடுகளை கைப்பற்ற கிறிஸ்தவர்களின் ஒரு பிரிவினர் செய்த சண்டைகள் (சிலுவைப்போர்கள்) பற்றி முஸ்லிம்கள் நன்கு அறிவார்கள்.

5) சிலுவைப்போர்கள் பற்றிய தவறான கருத்துக்களை, ஜாகிர் நாயக், பீஜே போன்ற அறிஞர்கள் பரப்ப அதனை உண்மையென்று நம்புகிறார்கள் இன்றைய முஸ்லிம்கள்.

6) இது போதாது என்றுச் சொல்லி, எரிகிற புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று, இஸ்ரேல் என்ற நாடு 1900 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென்று 1945ம் ஆண்டுகளில் முளைத்தெழும்பியது.

7) அதுவும் பல இஸ்லாமிய நாடுகளுக்கு  மத்தியில் முளைத்தெழும்பி  இஸ்ரேல் அசைக்கமுடியாத ராஜ்ஜியமாக முஸ்லிம் நாடுகளுக்கு சவால் விட்டுக்கொண்டு இருக்கிறது.

8) முஸ்லிம்களின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தும்விதமாக மேற்கத்திய நாடுகள் முக்கியமாக அமெரிக்கா போன்ற நாடுகள் இஸ்ரேல் நாட்டை ஆதரிக்கிறது. மேற்கத்திய நாடுகள் கிறிஸ்தவ நாடுகள் என்று முஸ்லிம்கள் கருதுகிறார்கள் (இதில் பாதி உண்மை, பாதி பொய் உள்ளது). இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்றிருக்கிறார்கள் முஸ்லிம்கள்.

9) சும்ம கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் என்று சொல்வதுபோன்று ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் மீது அமெரிக்க போர் தொடுத்து, இன்னும் முஸ்லிம்களின் கோப அக்கினியை ஊதிவிட்டது. அமெரிக்கா ஒரு கிறிஸ்தவ நாடு என்று முஸ்லிம்கள் தவறாக நினைக்கிறார்கள்.

10) முஸ்லிம்களால் ஹீரோக்கள் என்று கருத்தப்பட்ட மற்றும் உலகத்தினால் பயங்கரவாதிகள் என்று கருத்தப்பட்ட சத்தாம் உசேன், பின்லாடன், ஐஎஸ் ஐஎஸ் தலைவர் பக்தாதி மற்றும் ஈரானின் சுலைமானி போன்றவர்களை பொறுக்கி பொறுக்கி அழித்துக்கொண்டு வருகிறது அமெரிக்கா. 

11) மேற்கத்திய கலாச்சாரம் என்பது கிறிஸ்தவர்களின் கலாச்சாரம் என்று முஸ்லிம்கள் நம்பிவிடுகிறர்கள். எனவே கிறிஸ்தவர்களை முஸ்லிம்கள் வெறுக்கிறார்கள்.

12) கிறிஸ்தவ சமுதாயத்தில் சுதந்திரம் அதிகமாக இருக்கிறது, ஆனால் இஸ்லாமிய சமுதாயத்தில் அதிக கட்டுப்பாடு உள்ளது, இதனை முஸ்லிம்கள் ஜீரணித்துக்கொல்வதில்லை. இவர்களைக் கண்டு தங்கள் பிள்ளைகளும் அதிக சுதந்திரத்தை கேட்பார்கள் என்ற ஒரு வேதனை, பயம் அவர்களுக்கு உண்டு.  இதுவும் ஒரு மறைமுக காரணமாகும்.

13) முஸ்லிம்களுக்கு இஸ்லாமை கேள்வி கேட்கும் கிறிஸ்தவர்களைக் கண்டால் பிடிக்காது. குர்‍ஆனை கேள்வி கேட்பவர்களைக் கண்டால் பிடிக்காது. முஸ்லிம்கள் சொல்வதை அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளாதவர்களைக் கண்டால் பிடிக்காது. கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களையும், குர்‍ஆனையும் முஹம்மதுவையும் கேள்வி கேட்க தொடங்கியுள்ளார்கள். முக்கியமாக இணையம் வந்த பிறகு முஸ்லிம் அறிஞர்கள் சொல்லும் பொய்களை நம்ப கிறிஸ்தவர்கள் தயாராக இல்லை. எனவே தற்காலத்தில் கிறிஸ்தவர்களை முஸ்லிம்கள் வெறுக்க இதுவும் ஒரு காரணமாகும்.

இப்படி பல வடிவங்களில் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரிகளாக காணப்படுகிறார்கள். எனவே முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களையும், "கிறிஸ்தவ நாடுகள் என்றுச் சொல்லப்படுகின்ற நாடுகளைகளையும்" வெறுக்கிறார்கள். பெரும்பான்மையாக‌ முஸ்லிம்கள் வாழும் இஸ்லாமிய நாடுகளில் இதனை வெளிப்படையாக காணமுடியும். 

கேள்வி 394: பலதார திருமணத்தால் நன்மை அதிகமா? தீமை அதிகமா?

பதில் 394: குர்‍ஆனின் பலதாரமணம், அல்லாஹ் அங்கீகரித்த ஒன்றாக உள்ளது. முஸ்லிம்கள் பல திருமணங்களை செய்துக்கொள்ளலாம் என்று கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது.   முஹம்மதுவும் 11 திருமணங்களை புரிந்துள்ளார்.  இதனை முஹம்மதுவின் காலத்திற்கு மட்டும் என்று சொல்லியிருந்தால், பிரச்சனையில்லை, ஆனால் உலகம் இருக்கும் வரையிலும் இந்த குர்‍ஆனின் கட்டளை அமுலில் இருக்குமே. பல திருமணங்களை புரியும் சமுதாயத்தில் அனேக பிரச்சனைகள், தீமைகள் நடக்கிறதாக ஒரு ஆய்வு(Science Daily) சொல்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற அமைப்பே சிறந்தது, என்று இந்த ஆய்வு கூறுகிறது.

Monogamy Reduces Major Social Problems of Polygamist Cultures

ScienceDaily (Jan. 23, 2012) — In cultures that permit men to take multiple wives, the intra-sexual competition that occurs causes greater levels of crime, violence, poverty and gender inequality than in societies that institutionalize and practice monogamous marriage.

[. . .]

"Our findings suggest that that institutionalized monogamous marriage provides greater net benefits for society at large by reducing social problems that are inherent in polygynous societies."

Considered the most comprehensive study of polygamy and the institution of marriage, the study finds significantly higher levels rape, kidnapping, murder, assault, robbery and fraud in polygynous cultures.

 [. . .]

பல திருமணங்கள் புரியும் சமுதாயங்களில் அனேக குற்றங்கள், கற்பழிப்புக்கள், ஏழ்மை, ஆண் பெண் உயர்வு தாழ்வு பிரச்சனைகள், ஆள் கடத்தல், கொலை, நேர்மையற்ற செயல்கள் என்று சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் அனேக குற்றங்கள் அதிகமாக நடப்பதாக ஆய்வு கூறுகிறது.

இந்த விஷயம் ஏன் அல்லாஹ்விற்கு தெரியாமல் போனது? பலதார திருமணங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய நாடுகளில் ஆய்வு செய்துப்பாருங்கள், உதாரணத்திற்கு சௌதியில் அல்லது பாகிஸ்தானில் இந்த குற்றங்கள் நடைப்பெறுகிறதா இல்லையா? என்பதை ஆய்வு செய்துப்பாருங்கள்.  விவாகரத்துக்களும் அதிகமாக நடந்து, பெண்கள் அனாதைகளாக மாறுவது சௌதியில் அதிகம், மேலும் மக்காவிலும் இது அதிகமாக உள்ளது.   

குர்‍ஆனில் நவீன விஞ்ஞானம் உண்டு என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள், ஆனால், பல தார திருமணங்கள் புரியும் சமுதாயத்தில் இப்படிப்பட்ட பிரச்சனைகள், இதர சமுதாயத்தை விட அதிகமாக நடக்கிறது என்ற உண்மையை, விஞ்ஞானத்தை அல்லாஹ் ஏன் அறியவில்லை?

ஒரு குடும்பத்தில் ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்துக்கொண்டால், அந்த குடும்பத்தில் அமைதி நிலவுமா? ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தைகள் பிறந்த பிறகு, அங்கு பிரச்சனைகள் வராமல் இருக்குமா? அவ்வளவு ஏன் முஹம்மது குடும்பத்திலும் பல தாரமணத்தால் அனேக பிரச்சனைகள் மனைவிகளின் மத்தியிலே இருந்தது. இதில் முஹம்மது தம்முடைய சிறுமி மனைவி ஆயிஷாவை  அதிகமாக நேசித்தார், எனவே மற்ற மனைவிகள் பொறாமை கொண்டார்கள். அவ்வளவு ஏன், பழைய ஏற்பாட்டின் ஆபிரகாமின் குடும்பத்திலும் இரண்டு பெண்களுக்கு இடையிலே ஒரு நல்ல ஒற்றுமை இருந்ததில்லை.

நான் மேலே கொடுத்த தொடுப்பை சொடுக்கி படித்துப் பாருங்கள், அதாவது ஒரு மனைவியை மட்டும் திருமணம் புரியும்  சமுதாயத்தில் அனேக நன்மைகள் கிடைக்கிறது என்பதை ஆய்வு செய்து சொல்லியுள்ளார்கள்.

உண்மையான இறைவன் பலதார திருமணத்தை ஒரு நித்திய சட்டமாக கொடுக்கமாட்டார். ஆனால், அல்லாஹ் இதனை அனுமதித்து இருக்கிறார் என்பதிலிருந்து அல்லாஹ்வின் நம்பகத்தன்மை எத்தகையது என்பதை அறிந்துக் கொள்ளமுடியும்! இஸ்லாமுக்கு இருக்கும் பிரச்சனை வெறும் பலதாரமணம் மட்டுமல்ல, அடிமைப்பெண்களோடு இஸ்லாமிய ஆண்கள் உடலுறவு கொள்ளலாம் என்ற கட்டளை இன்னும் மோசமானது. இதனாலும் குடும்ப அமைதி  கெடும்.

கேள்வி 395: மற்ற உலக மதங்களைப் போன்று இஸ்லாமும் ஒரு மதமா? அல்லது இஸ்லாம் வித்தியாசமானதா?

பதில் 395: பொதுவாக 'மதம்' என்று சொன்னவுடனே எல்லோருடைய மனங்களில் மின்னலைப்போன்று வந்து போகும் எண்ணங்கள் இவைகளாகும்:

1) மதம் என்றாலே நிச்சயம் ஒரு இறைவன்/கடவுள் இருக்கவேண்டும்.

2) முடிந்தால் ஒரு வேதம் இருக்கவேண்டும், அதாவது ஒரு புத்தகம் இருக்கவேண்டும்.

3) அந்த மதத்தை தோற்றுவித்தவரோ, அல்லது உலகத்துக்கு அறிமுகம் செய்தவரோ ஒருவர் இருக்கவேண்டும்.

மேலோட்டமான விவரங்களை மட்டுமே நான் சொல்லியுள்ளேன், ஆழமாகச் செல்லவில்லை. மேலும், உலகில் உள்ள அனைத்து மதங்கள் பற்றியும் சொல்லாமல், நமக்குத் தெரிந்த பொதுவான மதங்கள் பற்றியே பேசுகிறேன்.

இறைவன் இல்லையென்று புத்தர்  சொன்னார், ஆனால் மனிதர்கள் அவரையே இறைவனாக்கி வணங்கிக்கொண்டு இருக்கிறார்கள் (சாமி இல்லாமல் மதமா? நோ சான்ஸ்? ஒருவேளை சாமி இல்லாத மதத்தை ஒருவர் உருவாக்கினாலும், அவரையே சாமியாக்கிவிடுவோமில்லே!).

சரி விஷயத்துக்கு வருவோம். இஸ்லாம் ஒரு மதமா?

மேற்கண்ட மூன்று அடிப்படையான கூறுகள் இஸ்லாமில் உண்டா? என்று கேட்டால், ஆம் உண்டு என்பது பதில், அதோடு கூட இன்னும் ஒரு விஷயம் அதிகமாக உள்ளது இஸ்லாமில். இங்கு தான் இஸ்லாம் பொதுவான மதங்களைவிட வித்தியாசமாக உள்ளது. இஸ்லாமில் இறைவன் உண்டு, வேதம் உண்டு, தோற்றுவித்தவர் உண்டு மற்றும் ஆன்மீகம் உண்டு.

உலகை ஆளவேண்டும் என்ற கோட்பாடு:

இஸ்லாமின் அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரமும் ஒரு அடிப்படை அங்கமாக இருக்கின்றது. இஸ்லாமின் இந்த ஒரு குணம், அதன் ஆன்மீகத்தை விழுங்கிவிடுகிறது, இஸ்லாமுக்கு கெட்டப்பெயரைக் கொண்டுவருகிறது. இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயகத்துக்கு எதிரான சட்டங்கள், கொடுமைகள், மனித உரிமை மீறல்கள், கொடுமையான தண்டனைகள் என்று நாம் செய்திகளில் வாசிக்கும் திடுக்கிடும் பயங்கரமான செயல்களுக்குக் காரணம், இஸ்லாமின் அங்கமாக இருக்கும் "உலகை ஆளவேண்டும்" என்ற கட்டளைத் தான்.

எனக்கு தெரிந்தவரை, பெரும்பான்மையான மதங்களில் நல்ல மனிதர்களை உருவாக்குவதே அதன் "தலையாய கட்டளையாக இருக்கும்" என்று பொதுவாக நம்பப்படுகிறது, போதிக்கப்படுகின்றது, ஆனால் இஸ்லாமில் மட்டுமே உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் ஒரே தலைமையின் கீழ் கொண்டு வரவேண்டும் , ஆளவேண்டும், அதுவும் இஸ்லாம் ஆளவேண்டும் என்ற கட்டளையும் உள்ளது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், உலக மதங்களில் இறைவன், வேதம், தோற்றுவித்தவர், மற்றும் ஆன்மீகம் இருக்கும். ஆனால் இஸ்லாமில்  இவைகளோடு கூட 'ஆட்சி அதிகாரத்தை பிடித்து, நாடுகளை ஆளுவதும்' ஒரு அடிப்படை கோட்பாடாக உள்ளது.

இந்த வகையில் பார்த்தால், இந்து மதம், கிறிஸ்தவம், பௌத்தம், இன்னுமுள்ள மதங்கள் ஒரு பக்கம் நின்றால், இஸ்லாம் மட்டும் இவைகளுக்கு எதிரான பகுதியில் நின்றுக்கொண்டு இருக்கிறது.

குறிப்பு: அனைத்து மதங்களில் உள்ள ஆன்மீக மற்றும் போதனைகளில் உள்ள வித்தியாசங்களை நான் இங்கு கருத்தில் கொள்ளவில்லை, அதாவது சிலைகளை வணங்குவதும், உருவமில்லாத வணங்கள் பற்றியும் மற்றும் இதர வித்தியாசகங்களை கருத்தில் கொள்ளவில்லை.

கேள்வி 396: உலக நாடுகள் அனைத்தையும் ஒரே ஆளுகையின் கீழ்கொண்டுவரவேண்டும் என்ற இஸ்லாமிய கோட்பாடு நல்லது தானே! இதில் என்ன தீமை இருக்கிறது?

பதில் 396: யாருக்கு நன்மை? முஸ்லிம்களுக்கா அல்லது  மற்றவர்களுக்கா? 

இஸ்லாமில் ஆன்மீக கோட்பாடும் உண்டு, "உலக நாடுகளை இஸ்லாம் ஆளவேண்டும்" என்ற கோட்பாடும் உண்டு என்பதைப் பார்த்தோம்.  உலக நாடுகளை இஸ்லாம் ஆளவேண்டும் என்றால் என்ன? இதனை எப்படி நிறைவேற்றுவது?

முஹம்மது உயிரோடு இருக்கும் போது அவர் என்ன செய்தார் என்பதையும் மற்றும் அவருக்குப் பிறகு வந்த கலீஃபாக்கள் என்ன செய்தார்கள்? என்பதையும் கவனித்தால் இதற்கான பதில் கிடைக்கும். இந்த இரண்டையும் செய்ய விருப்பமில்லாதவர்கள், உலக நாடுகளில் இன்று முஸ்லிம் தீவிரவாதிகள் சொல்வதை கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள், முக்கியமாக  ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாதிகள் சொல்வதை கவனித்தாலே போதும், பதில் கிடைக்கும்.

முஹம்மது என்ன செய்தார்?

முஹம்மது மதினாவில் ஆள்பலத்தை கூட்டிக்கொண்ட பிறகு, அரேபியாவை சுற்றியுள்ள அரசர்களுக்கு, நாடுகளுக்கு 'இஸ்லாமை ஏற்கிறீர்களா? அல்லது இஸ்லாமின் கையில் சாகிறீர்களா?' என்று கேள்வி கேட்டு கடிதங்கள் எழுதினார். இராணுவ பலம் குறைவாக உள்ள நாடுகள், நாங்கள் இஸ்லாமை ஏற்று இஸ்லாமிய நாடுகளாக மாறுகிறோம் என்றுச்  சொல்லி முஸ்லிம்களாக மாறினார்கள். கொஞ்சம் எடக்கு மடக்கு செய்த நாடுகளோடு வலியச் சென்று முஹம்மது போர் புரிந்து அவைகளை வென்றார்.

முஹம்மது என்னென்ன கடிதங்கள், எந்தெந்த நாட்டு அரசர்களுக்கு எழுதினார் போன்றவைகளை கீழ்கண்ட கட்டுரைகளில் படிக்கலாம்:

 1. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி 
 2. அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم) : அபூமுஹையும் மறைத்த விவரங்களும் 
 3. ஓமன் நாட்டு மக்களுக்கு நபி அனுப்பிய செய்தி 

முதல் நான்கு கலிஃபாக்கள் என்ன செய்தார்கள்?

முஹம்மது தமது 10 ஆண்டுகளில் பல போர்களைச் செய்து, அரேபிய தீபகர்ப்பத்தை தன் வாயில் போட்டுக்கொண்டார், அதாவது ஆக்கிரமித்துக்கொண்டார். கி.பி. 632ல் முஹம்மது மரித்த பிறகு, அடுத்த 30 ஆண்டுகளில் நான்கு  கலிஃபாக்கள் (அபூ பக்கர், உமர், உஸ்மான் & அலி) மேலும் பல போர்களைச் செய்து பெரும்பான்மையான மத்திய கிழக்கு நாடுகளை பிடித்துக்கொண்டார்கள்.

கலிஃபாக்கள் செய்த அனைத்து போர்கள்  பற்றியும், பிடித்த நாடுகள் பற்றியும் அட்டவணைகள் மற்றும் படங்கள் மூலமாக கீழ்கண்ட கட்டுரைகளில் விளக்கப்பட்டுள்ளது.

 1. முஹம்மது முதல் சிலுவைப்போர் வரை - வரைபடங்கள் மற்றும் விளக்கங்கள்: பாகம் 3 
 2. சிலுவைப்போர் என்றால் என்ன? அவைகள் தொடங்கப்பட காரணங்கள் யாவை? பாகம் 2 

இஸ்லாமில் உள்ள 'நாடுகளை பிடிக்கவேண்டும்' என்ற கோட்பாட்டினால் யாருக்கு லாபம்? இஸ்லாமுக்குத் தான் இலாபம், மற்றவர்களுக்கு அல்ல. இஸ்லாம் பிடித்த அனைத்து நாடுகளில் உள்ள மக்களுக்கு நஷ்டம் தான். முக்கியமாக, முஹம்மது பக்கத்து குறுநில மன்னர்கள் மீது தாக்குதல் செய்த போது, ஆண்களைக் கொன்று பெண்களையும், பிள்ளைகளையும் அடிமைகளாக மாற்றி, அவர்களை கற்பழித்து மேலும்  அடிமையாக விற்று லாபம் சம்பாதித்தார். 

முஹம்மது ஆண் பெண் அடிமைகளை விற்று லாபம் சம்பாதித்தார், தன் இராஜ்ஜியத்தை அந்த கீழ்தரமான பணத்தினால் ஸ்தாபித்தார். முஹம்மது அடிமைகளை வைத்திருந்ததில்லை, அவர்களை விற்கவில்லை என்று உலகில் உள்ள ஒரு முஸ்லிமாவது சொல்லச்சொல்லுங்கள் பார்க்கலாம்?

அன்று முஹம்மதுவும் கலிஃபாக்களும் செய்தவைகளையே, இன்று ஐஎஸ்ஐஎஸ் செய்துக்கொண்டு இருக்கிறது. 

 1. 'Virgin. Beautiful. 12 Years Old': ISIS' Chilling Ads To Sell Sex Slaves - கன்னி, அழகானவள் 12வயது, சிறுமி விற்பனை விளம்பரம்
 2. ISIS Burns Alive 19 Yazidi Girls For Refusing To Be Sex Slaves: Report -  செக்ஸ் அடிமையாக மாறாதபடியினால் உயிருடன் எரிப்பு
 3. ISIS Executes 250 Women For Refusing To Become Sex Slaves: Report -  செக்ஸ் அடிமையாக மறுத்தபடியினால் 250 பெண்கள் கொல்லப்பட்டனர் 
 4. 'Somebody Had To Tell These Stories': An Iraqi Woman's Ordeal As An ISIS Sex Slave 
 5. Cash-Strapped ISIS Offers $50 A Month To Fighters - But More If They Own Sex Slaves

குர்‍ஆனில் வலக்கரம் சொந்தமானவர்கள் என்றுச் சொல்லும் போது, அது செக்ஸ் அடிமைகளாவார்கள்.

23:6. ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

4:3. . . . அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; . . .

முடிவாக, இஸ்லாமில் இருக்கும் "நாடுகளை பிடிக்கும்" கோட்பாட்டனால், உலக மக்களுக்கு தீமை உண்டாகிறது, சில நாடுகளில் முஸ்லிம்களுக்கும் தீமையே!

குர்‍ஆன் சொன்னதையே ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் செய்கிறார்கள்,முஹம்மதுவும் செய்துக்காட்டியுள்ளார்.

கேள்வி 397: இஸ்லாமில் நல்ல கட்டளைகள் இல்லையா? இஸ்லாமில் ஆன்மீகம் இல்லையா? ஏன் தீயவைகளை மட்டுமே பார்க்கிறீர்கள்?

பதில் 397: இஸ்லாமில் ஆன்மீகம் இருக்கிறது, நல்ல கட்டளைகளும் இருக்கிறது, இல்லை என்றுச் சொல்லவில்லை. ஆனால் இஸ்லாமில் உள்ள பல கட்டளைகள் சமுதாயத்திற்கு கேடுவிளைக்கும் என்பது தான் நம் வாதம்.

இஸ்லாமிலும் சரி, முஹம்மதுவின் போதனைகளிலும் சரி, பெற்றோர்களை கவுரப்படுத்துங்கள், அவர்களுக்கு கீழ்படியுங்கள், தர்மம் செய்யும், பசியுள்ளவனுக்கு உணவு கொடுங்கள் போன்ற நல்ல கட்டளைகளை காணமுடியும்.  இஸ்லாமில் உள்ள தொழுகை சம்மந்தப்பட்ட கட்டளைகள், ஹஜ் செய்வது, இன்னும் இருக்கின்ற பல ஆன்மீக கட்டளைகள் முஸ்லிம்களின் சொந்த நடத்தைகள் சம்மந்தப்பட்டது, அவைகளினால் எந்த பிரச்சனையும் சமுதாயத்திற்கு இல்லை.

இதே குர்‍ஆனில், வலியச் சென்று போர் புரிந்து, பெண்களை செக்ஸ் அடிமைகளாக விற்றுவிடுங்கள், திருமணம் செய்துக்கொள்ளாமலேயே அந்த பெண்களோடு உடலுறவு கொள்ளுங்கள் (இதை நாம் விபச்சாரம் என்றும் கற்பழிப்பும் கூறுகிறோம்) என்றும் சொல்லப்பட்டுள்ளது.

குர்‍ஆனிலிருந்தும், இஸ்லாமிலிருந்தும் இப்படிப்பட்ட சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் கட்டளைகளை நீக்கிவிட்டால், இஸ்லாம் ஒரு நல்ல மார்க்கமாக மாறும். அப்போது இஸ்லாமை பின்பற்றினால் சொர்க்கம் போகமுடியுமா? என்று கேட்டால், அதற்கான பதில் வேறு கேள்வியில் பார்ப்போம்.

கேள்வி 398: முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒரே இலக்கை நோக்கிச் செல்பவர்கள் அல்லவா? செல்லும் வழி தான் வித்தியாசமானது என்று நான் சொல்கிறேன், உங்கள் கருத்து என்ன??

பதில் 398: மேலோட்டமாக பார்த்தால், இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஒரே இலக்கை நோக்கிச் செல்கின்ற இரண்டு வழிகள் போன்று தெரியும், ஆனால் உண்மையில் பைபிள் காட்டும் வழி வேறு, அதற்கு நேர் எதிரான வழியை குர்‍ஆன் காட்டுகின்றது என்பதுதான் உண்மை.

இஸ்லாமின் இலக்கு வேறு, கிறிஸ்தவத்தின் இலக்கு வேறு.

பைபிளின் நிகழ்ச்சிகளை குர்‍ஆன் மறுபதிவு செய்ததினால், பைபிளின் அடிப்படை கோட்பாடுகளைத் தான் குர்‍ஆனும் முன்மொழிகிறது என்று நினைப்பது அறியாமையாகும். 

 1. குர்‍ஆனை கொடுத்தவன் வேறு, பைபிளை கொடுத்தவர் வேறு.
 2. இயேசுவின் போதனை வேறு, முஹம்மதுவின் போதனை வேறு.
 3. பைபிளின் ஆன்மீகம் வேறு, குர்‍ஆனின் ஆன்மீகம் வேறு.
 4. இயேசு சொன்ன பரலோகம் வேறு, முஹம்மது காட்டிய சொர்க்கம் வேறு.
 5. இயேசு சொன்ன போராட்டம் வேறு, முஹம்மது கற்றுக்கொடுத்த  ஜிஹாத் வேறு.
 6. இயேசுவின் படி "சமாதானம்" என்பது வேறு, முஹம்மதுவின் படி "சமாதானம்" என்பது வேறு.
 7. இயேசுவின் அரசு வேறு, முஹம்மதுவின் அரசு வேறு.

இரண்டு புத்தகங்களையும் முழுவதுமாக படிக்காமல், அரைகுறையாக கற்றுக்கொண்டு அவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டும் ஒன்று போல தெரியும். அனைத்து ஆறுகளும் கடலில் சேர்வது போல, அனைத்து மதங்களும் அந்த ஒரே இறைவனை அடையும் வழியல்லவா? என்று சில ஆன்மீக வியாபாரிகள் சொல்வதைக் கேட்டு ஏமாறவேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.

குர்‍ஆனின் முதல் 10 அத்தியாயங்களையும், புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமாகிய மத்தேயு நற்செய்தி நூலின் முதல் 10 அத்தியாயங்களையும் படித்துப் பார்த்தால், இவ்விரண்டு மார்க்கங்களுக்கு இடையே இருக்கும் வித்தியாசத்தை சுயமாக நீங்களே கண்டுக்கொள்வீர்கள், மற்றவர்களிடம் கேட்க வேண்டிய அவசியமிருக்காது.

முக்கியமாக, மத்தேயு நற்செய்தி நூலின் அத்தியாயங்கள் 5,6 & 7 ஐ படித்துப் பாருங்கள் மேலும் குர்‍ஆனின் இரண்டாம் அத்தியாயத்தை படித்து ஒப்பிட்டுப் பாருங்கள்.

கேள்வி 399: உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே சஹாபாக்கள் கொலை செய்தார்களா? இது நம்பும்படி இல்லையே!

பதில் 399: குரு எப்படியோ அப்படியே சீடர்களும் இருப்பார்கள். ஒரு மனிதன் எவைகளை அதிகமாக கேட்கிறானோ, சிந்திக்கிறானோ  அவைகளைப்போலவே அவன் மாறிவிடுகின்றான்.  அன்பு பற்றியும், மற்றவர்களை நேசிப்பது பற்றியும் ஒரு மனிதன் பல ஆண்டுகள் போதிக்கப்பட்டால், அதன் பாதிப்பு நிச்சயமாக அவனது வாழ்வில் காணப்படும். அதே போல, போர்கள், சண்டைகள், வழிப்பறி கொள்ளைகள், கொலைகள் என்று இவ்விதமான விவரங்களையே ஒரு மனிதன் அதிகமாக கேட்டு, அவைகளில் அதிகமாக போதிக்கப்பட்டால், 'வாய்ப்பு' கிடைக்கும் போது, அவனுக்குள் வாழும் மிருக‌  குணங்கள் அப்படியே வெளிப்பட்டுவிடும்.

இதைத் தான் இந்த நிகழ்ச்சியில் நாம் காணப்போகிறோம். 

முஹம்மது மக்காவை தாக்க முடிவு செய்தார். ஆனால் இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, தன் சகாக்களில் 8 நபர்களை தெரிவு செய்து, "இழம்" என்ற இடத்திற்கு அனுப்பினார். இதன் மூலமாக, முஹம்மது மக்காவை தாக்காமல், தன் கவனத்தை வேறு இடத்தை நோக்கி வைத்திருக்கிறார் என்று எல்லாரும் எண்ணவேண்டும் என்று நினைத்தார். 

முஹம்மதுவின் கட்டளையினால் இவர்களும் சென்றார்கள். சென்ற இடத்தில் ஒரு மேய்ப்பன் இவர்களை கடந்துச் சென்றான், அப்படி செல்லும் போது அவன் "இவர்களுக்கு சலாம் கூறினான்".  இருந்தபோதிலும், இவனைக் கொன்று இவனது ஆடுகளை எடுத்துக்கொண்டார்கள். இதனை மதினாவிற்கு வந்து முஹம்மதுவிடம் சொன்ன போது, அல்லாஹ் ஒரு வசனத்தை (குர்-ஆன் 4:94) இறக்கினான்.

பீஜே தமிழாக்கம் குர்-ஆன் 4:94

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) சென்றால் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! உங்களுக்கு ஸலாம் கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக ''நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை'' என்று கூறி விடாதீர்கள்! அல்லாஹ் விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான். எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். 

முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம் - 4:94

முஃமின்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால், (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர் முஃமின்களா அல்லது மற்றவர்களா என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில்) எவரேனும் (தாம் முஃமின் என்பதை அறிவிக்கும் பொருட்டு) உங்களுக்கு "ஸலாம்" சொன்னால், இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான அழியக் கூடிய பொருட்களை அடையும் பொருட்டு "நீ முஃமினல்ல" என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்; அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன; இதற்கு முன்னர் நீங்களும் (பயந்து பயந்து) இவ்வாறே இருந்தீர்கள் - அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிந்தான்; எனவே (மேலே கூறியாவாறு போர் முனையில்) நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீஙகள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். 

இந்த வசனத்தின் மூலமாக, ஒரு முஸ்லிம் இன்னொருவருக்கு சலாம் சொன்னபோதும், உலக பொருட்களுக்காக, அவனை கொன்றது தவறு என்று அல்லாஹ் கூறுகின்றான்.  இப்னு கதீர் போன்ற குர்-ஆன் விரிவுரையாளர்களின் படி, "முஸ்லிம்கள் தவறுதலாகக் கூட இன்னொரு முஸ்லிமை கொல்லக்கூடாது" என்று கூறுகிறார்கள்.

மேற்கண்ட நிகழ்ச்சி, அந்த காலத்தில் முஹம்மதுவின் சஹாபாக்கள் எப்படி நடந்துக்கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது. முஹம்மது எப்படியோ அப்படியே சஹாபாக்கள் நடந்துக்கொண்டார்கள் அல்லது அவர்களை உருவாக்கிய இஸ்லாமிய போதனை அவர்களை இப்படி பணத்திற்காக கொலை செய்ய தூண்டியுள்ளது. 

பொறுமையோடு கீழ்கண்ட கேள்விகளை படியுங்கள்? அவைகள் பற்றி சிந்தியுங்கள்!

1) முஹம்மதுவின் தோழர்கள் வளர்க்கப்பட்ட விதத்தைப் பார்த்தீர்களா?  செல்வத்திற்கு ஆசைப்பட்டு, "நான் ஒரு முஸ்லிம்" என்றுச் சொன்னாலும், அதை நம்பாமல் அவனை கொன்று, அவனது ஆடுகளை/ஒட்டகங்களை கொள்ளையடித்து மதினா வந்துள்ளார்கள்.

2) முஸ்லிம்களாக பல ஆண்டுகள் முஹம்மதுவோடு வாழ்ந்தாலும், இப்படி கொல்வது தவறு என்று அவர்களின் மனசாட்சி அவர்களை எச்சரிக்கவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.

3) ஒரு காட்டுமிராண்டி நடந்துக்கொள்வது போலவே இவர்கள் நடந்துக்கொண்டார்கள்.  பணம் கிடைத்தால் எதையும் செய்வார்களா இவர்கள்?

4) இதனை அறிந்த பிறகு, அல்லாஹ் வசனத்தை இறக்குகிறார் – முஸ்லிம்களா இல்லையா என்பதைப் பார்த்து கொலை செய்யுங்கள் என்று அறிவுரைக் கூறுகிறார். புனிதப்போர் என்ற வேஷம் போட்டு செல்லும் போது, , முஸ்லிம்கள் அல்லாதவர்களை எந்த காரணமும் இல்லாமல் கொலை செய்யலாம் என்பது தானே, இதன் கருத்து.

5) இந்த கொலையை செய்தவர்களுக்கு அல்லாஹ் என்ன தண்டனை கொடுத்தான் என்று உங்களால் கண்டுபிடிக்கமுடியுமா?  

6) இந்த சஹாபாக்கள் அழிந்துப்போகும் செல்வத்தின் மீது ஆசை வைத்து இப்படி கொலை செய்துள்ளார்கள் என்று அல்லாஹ் வெளிப்படையாக இவர்களை குற்றப்படுத்துகிறான். இவர்களுக்கு என்ன தண்டனை உங்கள் இறைத்தூதர் கொடுத்தார்? 

7) தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை என்றுச் சொல்வார்கள், அதுபோல முஹம்மதுவின் சீடர்கள் அவரைப் போலவே  வாழ்ந்து இருக்கிறார்கள்.

8) ஒருவேளை அந்த நபர் சஹாபாக்களுக்கு சலாம் சொல்லாமல் சென்று இருந்தால், அப்போது அவனை கொன்று அவனது ஆடுகளை சஹாபாக்கள் திருடியிருந்தால், இந்த வசனம் இறங்கியிருக்குமா? இறங்கியிருக்காது. முஸ்லிம்களை கொன்றால் தான் அல்லாஹ் துக்கப்படுவான், முஸ்லிமல்லாதவர்களை கொன்றால், அவன் இப்படி துக்கமடையமாட்டான். 

மேற்கண்ட குர்‍ஆன் வசனத்திலிருந்தும், முஸ்லிம் அறிஞர்களின் விரிவுரைகளிலிருந்தும் அறிவது என்னவென்றால், ஆதிகால முஸ்லிம்கள் உலக செல்வத்துக்காக முஸ்லிம்களையும் மற்றவர்களையும் கொலை செய்வது ஒரு சாதாரணம் காரியமாக அவர்களுக்கு இருந்துள்ளது. என்ன தான் அல்லாஹ் அவர்களை கடிந்துக்கொண்டாலும், அது முஸ்லிம்களை கொன்றதால் தான் என்பது இதன் மூலம் அறியமுடிகின்றது.

கேள்வி 400: முஸ்லிம்கள் இந்த கேள்விகளை தங்களுக்கு தாங்களே கேட்டுப்பார்த்து பதில்களை கண்டுபிடிப்பார்களா?

பதில் 400: ஒவ்வொரு பக்தியுள்ள முஸ்லிமும், காலை எழுந்திருக்கும் நேரம் முதல் இரவு படுக்கப்போகும் வரை பல காரியங்களை அல்லாஹ்வை திருப்திபடுத்துவதற்காக‌ செய்கின்றான், இப்படி செய்வதில் தவறேதுமில்லை. ஆனால், தான் ஏன் இப்படி செய்கின்றான், இதற்கான காரணம் என்னவென்று தெரிந்துக்கொண்டு செய்தால், ஆன்மீகத்தில் முன்னேறலாம் என்பது என் கருத்து.  

உதாரணத்திற்கு கீழ்கண்ட கேள்விகளை கேட்டுப்பார்க்கலாம்:

1) தொழும் போது ஒரே ஒரு நிலையில் உட்கார்ந்து/நின்றுக்கொண்டு தொழாமல், ஏன் பல நிலைகளில் தொழவேண்டும்? ஒரே இடத்தில் உட்கார்ந்து/நின்று தொழுதால், ஏன் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான்?

2) கழிவறையில் ஒரு முஸ்லிம் நுழையும் போது எந்த காலை முதலாவது வைக்கவேண்டும், செருப்பு போடும் போது முதலாவது  எந்த காலில் போடவேண்டும் என்று சொல்லும் அளவிற்கு ஏன் அல்லாஹ் இறங்கிவந்து கட்டளைகளைத் தருகின்றான்? உலகை படைத்த சர்வ வல்லவரான சர்வ வியாபியான அல்லாஹ் இந்த சின்ன விஷயத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்?

3) அற்பமான செயலாகிய "ஒரு முஸ்லிம் சிறுநீர் கழித்துவிட்டு, கற்களால் துடைக்கும்போது", ஒற்றைப்படை கற்களால் செய்யட்டும் என்று சொல்லும் அளவிற்கு ஏன் இவ்வளவு கீழே இறங்கிச் சொல்லவேண்டும்? ஒருவேளை இரட்டைப்படை கற்களால் செய்தால் கோபம் கொள்வானா அல்லாஹ்?

4) சாப்பிடும் போது எந்த கையால் சாப்பிடவேண்டும் என்று சொல்லும் அளவிற்கு சர்வ ஞானியான அல்லாஹ்விற்கு என்ன வந்தது? வலது கையால் சாப்பிடவேண்டும் குடிக்கவேண்டும் என்று அல்லாஹ் சொல்வதிலிருந்து இது ஒருவேளை முஹம்மதுவின் சொந்த கற்பனையாக இருக்கும் என்று சந்தேகம் வருகின்றதல்லவா?

5) மீசையை ஒட்ட கத்தரியுங்கள், தாடியை வளர்த்துவிடுங்கள் இஸ்லாமியரல்லாத மக்கள் செய்வதற்கு எதிராக நீங்கள் செய்யுங்கள் என்று சொல்லும் அளவிற்கு அப்படி என்ன அவசியம் அல்லாஹ்விற்கு? கேவலமான சின்ன காரியங்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவத்தை அல்லாஹ் கொடுத்திருக்கின்றான்?

6) தலை முடிக்கும் தாடிக்கும் சாயம் போடுங்கள் என்ற கட்டளை கொடுத்தான் அல்லாஹ் என்பதிலிருந்து, இந்த உலகத்தில் மனிதனுக்கு கொடுப்பதற்கு இதைவிட பெரிய அறிவுரை இல்லை என்று சர்வவல்லவன் நினைத்துவிட்டானா? நம்முடைய தலைமுடி மற்றும் தாடி என்ன கலர் இருக்கிறது என்பதைப் பற்றி அக்கரை கொள்ளும் அளவுக்கு தலைமுடி தாடியின் கலர் அவ்வளவு முக்கியமானதா அல்லாஹ்விற்கு?

7) ஏன் ஆண்கள் பட்டுத்துணி அணியக்கூடாது என்று அல்லாஹ் சொல்கிறான்? நாம் நாகரீக உடை அணிந்தால் போதாதா?  "அது எந்த வகை துணியாக இருக்கக்கூடாது" என்று ஏன் அல்லாஹ் சொல்கிறான், அறிவுடமையோடு சிந்தித்துப் பார்த்தால் ஏதாவது பதில் கிடைக்குமா?

8) தொழும் போது யாராவது காற்றுவிட்டால், அவரது தொழுகையை ஏன் அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை? இது வேடிக்கையாக உள்ளதல்லவா? நடந்தது நடந்துவிட்டது, பிரச்சனை வந்தால், அது காற்றுவிட்டவருக்கு பக்கத்தில் நின்று தொழுபவருக்கு வருமே தவிர, சர்வ வல்லவனுக்கு எப்படி வரும்?

9) தொழும் போது வானத்தைப் பார்த்தால், கண்களை பிடுங்கும் அளவிற்கு கீழ்தரமான கட்டளை கொடுக்கவேண்டிய அவசியமென்ன அல்லாஹ்விற்கு?

மேற்கண்ட விவரங்கள் புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ்களில் முஹம்மது கூறியுள்ளார். இவைகளும் அல்லாஹ் தான் முஹம்மதுவிற்கு சொல்லியுள்ளார், முஹம்மது சுயமாக இவைகளைச் சொல்லவில்லை.

இதைவிட, அல்லாஹ் கீழ்கண்ட விவரங்களை குர்‍ஆனில் கொடுத்திருந்தால், முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்ந்திருப்பார்கள்.

1) மேற்கண்ட அற்பமான செயல்களுக்கு அறிவுரை சொன்னதைவிட, முஸ்லிம்களுக்கு ஐந்து கடமைகள் உள்ளன, அவைகள் இவைகள் தான் என்று குர்‍ஆனில் சொல்லியிருக்கலாமே! ஒரு மனிதன் காற்றுவிடுவது பற்றி அக்கரைக் கொண்ட அல்லாஹ், இதற்கு அக்கரைக் கொள்ளவில்லை ஏன்?

2) ஒரு முஸ்லிம் எப்படி தொழவேண்டும் என்ற அறிவுரையை, செய்யும் முறையை அல்லாஹ் குர்‍ஆனில் விளக்கியிருந்திருக்கலாம். இதனை அல்லாஹ் அற்பம் என்று நினைத்துவிட்டானா? அல்லது கழிவறையில் எந்த காலை முதலாவது வைக்க்வேண்டும் என்று முஸ்லிம்களுக்குச் சொல்வது மிகவும் முக்கியமான அறிவுரையாக நினைத்துள்ளானா?

3) முஹம்மதுவிற்கு பிறகு அடுத்த கலிஃபாக்களை எப்படி நியமிக்க வேண்டும் என்று குர்‍ஆனில் தெளிவாகச் சொல்லியிருந்தால், சன்னி, ஷியா பிரிவுகள் உண்டாகியிருக்காது. ஆனால், எந்த கையால் சாப்பிடவேண்டும் என்பது மட்டும் அல்லாஹ்விற்கு பெரிய விசயமாக மாறிவிட்டது.

இப்படி, பல கேள்விகளை முஸ்லிம்கள் கேட்டு, அவர்களின் அறிஞர்களிடம் பதில்களைப் பெறவேண்டும், சிந்திக்கவேண்டும்.

தேதி: 7th Jul 2020


சின்னஞ்சிறு 1000 கேள்வி பதில்கள் பொருளடக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்