சின்னஞ்சிறு கேள்வி பதில்கள்: பைபிள், கேள்விகள் 481 லிருந்து 490 வரை - (பாகம் 20)

சின்னஞ்சிறு "இஸ்லாம் கிறிஸ்தவம்" தலைப்பின் முந்தைய 480 கேள்வி பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும். இந்த கட்டுரயில் "பைபிள்" பற்றி முஸ்லிம்கள் கேட்கும் மேலதிக 10 கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம்.


கேள்வி 481: இயேசு பழைய ஏற்பாட்டை அழிப்பதற்காக வரவில்லை என்று சொல்லியிருக்கும் போது (மத் 5:17), ஏன் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களைப் போன்று பழைய ஏற்பாட்டின் உணவு பற்றிய கட்டளைகளை (Old Testament dietary laws) பின்பற்றக்கூடாது?

பதில் 481: முஸ்லிம்கள் பழைய ஏற்பாட்டின் உணவு சம்மந்தப்பட்ட கட்டளைகளை பின்பற்றுகிறார்கள் என்றுச் சொல்வது சுத்தப்பொய்யாகும். பழைய ஏற்பாட்டை முழுவதுமாக பின்பற்றுகிறார்கள் என்பதை உலகிற்கு காட்ட இப்படி சொல்கிறார்கள், உண்மையில் மூஸாவின்  சட்டங்களில் ஒன்று "ஒட்டக கறியை உண்ணக்கூடாது" என்பதாகும், ஆனால் முஸ்லிம்கள் அதனை உண்கிறார்கள்.   

கீழ்கண்ட மூஸாவின் கட்டளைகளைப் பாருங்கள்

லேவியராகமம்  11:4. ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

உபாகமம் 14:7. அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

இப்படி அவர்களே, மூஸாவின் கட்டளைகளை பின்பற்றாத போது, கிறிஸ்தவர்கள் ஏன் பின்பற்றுவதில்லை என்று கேட்பது வேடிக்கையானது.

சரி, இப்பொழுது மேற்கண்ட கேள்விக்கான பதிலைக் காண்போம்.

மத்தேயு 5:17

17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

இயேசுவும் அவரது சீடர்களும் யூதர்களாக இருந்தபடியினால் அவர்கள் அனைவரும் 'பழைய ஏற்பாட்டின் உணவு கட்டுப்பாடுகள்' அனைத்தையும் பின்பற்றினார்கள்.  யூதரல்லாதவர்கள் இந்த உணவுக்கட்டுப்பாடுகளை பின்பற்றத்தேவையில்லை, இதனை மூஸா (மோசே) கட்டளையிடவும் இல்லை.

இந்த நிலை மேசியாவாகிய இயேசு சிலுவையில் மரித்து, உயிர்த்தெழுவதற்கு முன்பு வரை இருந்தது. இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, இது மாறியதை, இதனை நாம் புதிய ஏற்பாட்டில் காணலாம். மேசியாவின் தியாக பலியின் மூலமாக‌ பிதாவாகிய தேவன் 'இரண்டு வகையான மக்களையும், அதாவது யூதர்களையும் யூதரல்லாதவர்களையும் ஒரே வகையில் கொண்டுவந்தார்', இது தான் ஆதிமுதல் தேவனின் திட்டமாக இருந்தது.

கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டின் உணவு கட்டுப்பாட்டுக்குள் ஏன் வரமாட்டார்கள் என்பதற்கு கீழ்கண்ட சான்றுகளைச் சொல்லலாம்:

1) எல்லா உணவுகளையும் உண்ணலாம் என்று தேவன் கட்டளைகொடுத்தார்:

சீடர் பேதுருவிற்கு இயேசு ஒரு தரிசனம் கொடுக்கின்றார். அதில் உலகில் உள்ள எல்லா உணவுகளையும் "தேவன் சுத்தமாக்கியதாக" தரிசனத்தில் தெரிவிக்கின்றார்.

பார்க்க: அப்போஸ்தலர்: 10:9-16

இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய வசனங்கள் 14,15,16 ஆகும்:

14. அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான். 15. அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று. 16. மூன்றாந்தரமும் அப்படியே உண்டாயிற்று. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இங்கு கவனிக்கும் போது, மூன்று முறை "தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே" என்று வருகிறது.

அதன்பிறகு ஒரு யூதனல்லாத ஒருவரின் வேண்டுதலுக்கு இணங்க பேதுரு சென்று அவருக்கு நற்செய்தியை அறிவிக்கிறார். இங்கு உணவு மீதுள்ள கட்டுப்பாடும் நீக்கப்படுகின்றது, மக்கள் மீதிருந்த‌ கட்டுப்பாடும் நீக்கப்படுகின்றது.

2) வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது

கிறிஸ்தவர்கள் இயேசுவின் கட்டளைகளை பின்பற்றவேண்டும் என்பது தான் எல்லோருடைய எதிர்ப்பார்ப்பும் கூட. உணவு பற்றி ஒரு சிறப்பான உண்மையை இயேசு இங்கு குறிப்பிடுகின்றார். வாய்க்குள் போகிறது மனிதனையும் இறைவனையும் வேறுபிரிக்காது, அவன் வாயிலிருந்து அதாவது அவனது இதயத்திலிருந்து புறப்படுகின்ற தீயவைகள் தான் இறைவனிடமிருந்து மனிதனை பிரிக்கும் என்கிறார்.

மத்தேயு 15:11. வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

மத்தேயு 15:11. ஒருவன் வாய்க்குள்ளே போகிறது அவனை அசுத்தமாக்காது. மாறாக, ஒருவன் பேசும் சொற்களாலேயே அசுத்தமடைகிறான்” என்று சொன்னார். (பொது மொழியாக்கம்)

மாற்கு 7:18-23

18. அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? 19. அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும். 20. மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். 21. எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், 22. களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். 23. பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

இறைபக்தி என்று வரும் போது, 'வெளிப்படையான காரியங்கள், மற்றும் வயிற்றுக்கும் வாய்க்கும் சம்மந்தப்பட்ட உணவு காரியங்கள்' முக்கியமானவை அல்ல, உள்ளத்தின் ஆழத்திலிருந்து  அன்பு கூறி பக்தி செய்வது தான் உண்மையான 'ஆராதனை' என்பது தான் இயேசுவின் மற்றும் கிறிஸ்தவத்தின் போதனை.

புதிய ஏற்பாட்டில் கொரிந்தியர் புத்தகத்தில், ஒரு முக்கியமான விசயம் சொல்லப்பட்டுள்ளது

I கொரிந்தியர் 8:8. போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.

இதன் பொருள் என்னவென்றால், நாம் ஒரு குறிப்பிட்ட உணவை உண்பதினால், நம்மிடம் தேவன் வந்து நம்மை மெச்சிக்கொண்டு, "சூப்பர், நீ இந்த உணவை உண்டதினால், உனக்கு இந்த நன்மை செய்வேன்" என்று சொல்லப்போவதில்லை. இதே போன்று, வேறு நபரிடம் வந்து "நீ இந்த குறிப்பிட்ட உணவை உண்ணாததினால், உனக்கு இந்த தீமை நடக்கும்" என்று சொல்லப்போவதில்லை.

பாருங்கள் எவ்வளவு அருமையான போதனை! இன்றைய மதங்கள் பொய்யான போதனைகளைச் செய்து, உணவு, காலம் நேரம் பார்ப்பது என்றுச் சொல்லி தேவையில்லாத காரணங்களைக் காட்டி மக்களை பயமுறுத்துகின்றன.

ரோமர் 14:17. தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.

மனிதன் வாழுவதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும், வளருவதற்கும் உணவு வேண்டுமே ஒழிய, பக்திக்காக அல்ல.

கேள்வி 482: ஒரு விலையுயர்ந்த வாசனை தையலத்தை ஒரு பெண் இயேசுவின் பாதங்களில் ஊற்றும் போது, அந்த வீண் செலவு வேண்டாம் என்று இயேசு தடுக்கவில்லை ஏன் (பார்க்க‌ மத்தேயு 26:7-11)? (இந்த கேள்வியை அஹமத் தீதத் கேட்டார்) 

பதில் 482: இதே கேள்வியை நம் தமிழ் நாட்டின் இஸ்லாமிய அறிஞர் பி ஜைனுல் ஆபீதீன் அவர்கள் "இது  தான் பைபிள்" என்ற புத்தகத்தில் கேள்வியாக எழுப்பியிருந்தார். 2008ம் ஆண்டில் அவருக்கு கொடுத்த பதிலை இங்கு தருகிறேன்.

இயேசு கடவுள் என்றால் ஏன் அவர் நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்பட்டார் ? என்பது தான் பிஜே அவர்கள் கேட்கும் கேள்வி. பிஜே அவர்கள் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தை பைபிளின் வசனங்களை சரியாக ஆராயாமல் மேலோட்டமாக படித்து எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் அவர் முன்வைக்கின்ற கேள்விகளுக்கு தொடர் கட்டுரைகளாக நான் பதில் எழுதிக்கொண்டு வருகிறேன். 

இந்த வரிசையில் இயேசு ஏன் நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்பட்டார்? என்று பிஜே அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலை இக்கட்டுரையில் பார்க்கலாம். 

பிஜே அவர்கள் எழுதியது: 

27. கடவுள் நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரா?

ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். அவருடைய சீஷர்கள் அதைக்கண்டு விசனமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள். 

இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். (மத்தேயு 26:7-10 மூலம் : இயேசு இறைமகனா?

1. சில விவரங்களை வேண்டுமென்றே குறிப்பிடாமல் விட்டுவிடும் இஸ்லாமிய அறிஞர்கள் 

சாதாரணமாக பைபிளிலிருந்து ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடும் போது அந்த நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட எல்லா விவரங்களையும் பைபிள்  அதே இடத்தில் சொல்லிவிடும். ஆனால் குர்ஆன் அப்படி அல்ல, அல்லா சொன்ன வசனங்களை குர்ஆனில் பார்க்கவேண்டும், இவ்வசனங்கள் எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்று அறிய ஹதீஸ்களின் உதவியை நாடவேண்டும். ஹதீஸ்கள் இல்லாமல் குர்ஆனின் வசனங்களை புரிந்துக்கொள்வது மிகவும் கடினம். 

குர்ஆனை படிப்பது போல, புரிந்துக்கொள்வது போல பிஜே அவர்கள் பைபிளை புரிந்துக்கொண்டுள்ளார். அதாவது, ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடும் போது, அவருக்கு (பிஜே) தேவையான வசனங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு அந்நிகழ்ச்சியின் அடுத்தடுத்துள்ள வசனங்களை வேண்டுமென்றே, பைபிளுக்கு, இயேசுவிற்கும் விரோதமாக வித்தியாசமான பொருள் கொண்டுவரவேண்டும் என்று விட்டுவிட்டார் நம்முடைய இஸ்லாமிய அறிஞர், பல ஆண்டுகள் இஸ்லாமிய ஊழியம் செய்துகொண்டு வந்துக்கொண்டு இருக்கும் மதிப்பிற்குரிய பிஜே அவர்கள். 

பிஜே அவர்கள் எந்த வசனங்களை வேண்டுமென்றே குறிப்பிடாமல் விட்டுவிட்டார் என்பதை அறிய மேலும் படியுங்கள். 

2. பிஜே அவர்கள் சொல்வது உண்மையா?  

பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனங்களை இன்னொரு முறை படியுங்கள். அவர் குறிப்பிட்ட வசன எண்கள்: மத்தேயு 26:7-10 இவைகள் ஆகும். 

ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். அவருடைய சீஷர்கள் அதைக்கண்டு விசனமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள். 

இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். (மத்தேயு 26:7-10)

  • இயேசு சீமோன் என்பவனுடைய வீட்டில் இருந்தார்.
  • அந்த சமயத்தில் ஒரு பெண் மிகவும் விலை உயர்ந்த தைலத்தை(நறுமணத்தை)  கொண்டு வந்து இயேசுவின் தலையிலே ஊற்றுகிறாள்.
  • இதைக்கண்டு இயேசுவின் சீடர்கள் இந்த வீண் செலவு எதற்கு, அந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம் அல்லவா? என்று கேட்கிறார்கள். 
  • இயேசு அப்போது அவர்களுக்கு பதில் தருகிறார்.

3. இயேசு பேசிய வசனங்களில் பாதியை மட்டும் குறிப்பிட்ட பிஜே அவர்கள் 

பிஜே அவர்கள் உண்மையில் நேர்மையாக பைபிள் வசனங்களுக்கு பொருள் கூறுவதாக இருந்தால், இந்த நிகழ்ச்சி நடக்கும் போது தன் சீடர்களுக்கு இயேசு என்ன பதில் சொன்னாரோ அதை முழுவதுமாக குறிப்பிட்டு இருக்கவேண்டும். ஆனால், பிஜே அவர்கள் இயேசு பேசிய நான்கு வசனங்களில் ஒரு வசனத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளார். இப்படி செய்வது ஏமாற்றுவேலை ஆகுமா? அல்லது நேர்மையாக நடந்துக்கொண்டு செயல்படுவது ஆகுமா? என்பதை இக்கட்டுரையை படிக்கும் நீங்களே முடிவு செய்யுங்கள். இப்படிப்பட்ட செயல்கள் ஒரு மிகப்பெரிய புகழ்பெற்ற இஸ்லாமிய ஊழியரிடம் மக்கள் எதிர்பார்க்கமாட்டார்கள். 

சரி பிஜே அவர்கள் குறிப்பிடாமல் விட்ட அந்த வசனங்கள் என்னவென்று பாருங்கள். 

மத்தேயு 26:10 இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். 

மத்தேயு 26:11 தரித்திரர் எப்போதும் உங்களிடத்திலிருக்கிறார்கள். நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். 

மத்தேயு 26:12 இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின் மேல் ஊற்றினது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது

மத்தேயு 26:13 இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்

இயேசு பேசிய நான்கு வசனங்களில் (மத்தேயு 26:10, 11, 12,13) ஒரு வசனத்தை (மத்தேயு 26:10) மட்டும் பிஜே குறிப்பிட்டார்கள். அதாவது, இயேசு பேசிய 100% ல், 25% மட்டும் குறிப்பிட்டு, மீதி 75% வேண்டுமென்றே மறைத்துள்ளார் பிஜே அவர்கள். 

4. சரி, பிஜே அவர்கள் மறைத்த வசனங்களில் இயேசு என்ன சொல்கின்றார்? 

முதலாவது நறுமணத்தைப் பற்றிய சில விவரங்களை அறிந்துக்கொள்ளலாம். 

அ) நறுமணத்தை எப்போது பயன்படுத்துவார்கள்? 

முக்கியமாக இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் நறுமணத்தை கீழ் கண்ட காரணங்களுக்காக பயன்படுத்தினார்கள்:

1) தேவனுடைய வேலைக்காக ஒரு ஆசாரியனை அல்லது அரசனை பிரதிஷ்டை செய்ய பயன்படுத்துவார்கள் ( 1 சாமுவேல் 16:1 , 2 இராஜாக்கள் 9:6 சங்கீதம் 89:20)

2) மகிழ்ச்சியான நேரங்களில் பயன்படுத்துவார்கள் (நீதிமொழிகள் 27:9, ஏசாயா 61:3) 

3) அரசர்களை, பெரியவர்களை சந்திக்கப்போகும் பொது மரியாதைக்காக விலை உயர்ந்த தைலத்தை நறுமணங்களைக் கொண்டுச்செல்வார்கள் (ஆதியாகமம் 43:11, மத்தேயு 2:11)

4) இறைவனுடைய ஆலய வேலைகளில் நறுமணமுள்ள தைலத்தை பயன்படுத்துவார்கள் (யாத்திராகமம் 30:25-32). 

5) ஒருவர் மரித்துவிட்டால், அவரை அடக்கம் செய்யும் போது நறுமண தைலத்தை பூசி துணிகளால் சுற்றி அடக்கம் செய்வார்கள் (மத்தேயு 26:12, லூக்கா 23:55, 56, லூக்கா 24:1).

ஆ) தன் மரண அடக்க சடங்கிற்காக இயேசு இந்த நறுமணம் பூசப்பட்டது என்றார்

ஏன் பிஜே அவர்கள் இயேசு சொன்ன மற்ற வசனங்களை குறிப்பிடவில்லை? என்பது இப்போது புரிந்திருக்கும். அதாவது, அந்தப்பெண் தன் பாவங்களை இயேசு மன்னிக்கவேண்டும் என்பதற்காகவும், மதிப்பின் அடிப்படையிலும் அந்த தைலத்தை அவர் மீது ஊற்றினாலும், இயேசு அதை தன் மரணத்தின் பின்பு அடக்கத்தின் போது பயன்படுத்தும் நறுமணமாகவே எடுத்துக்கொண்டார் , அதையே அவர்கள் எல்லாருக்கும் முன்பாக அறிக்கையும் செய்தார். அதாவது இயேசு, தன் மீது ஊற்றப்பட்ட நறுமணத்தை கல்யாண வீட்டு சந்தோஷ நறுமணமாகக் கருதாமல், சாவு வீட்டில் வரும் நறுமணமாகவே அவர் கருதினார். ஆனால், பிஜே அவர்களுக்கு மட்டும், இயேசு அழகாக மேக் அப் (Make Up) செய்துக்கொண்டு, பணம் கொடுத்து நறுமணம் வாங்கி உடலெல்லாம் பூசிக்கொண்டது போல் இந்நிகழ்ச்சி தெரிந்து இருக்கிறது. எப்படி மற்றவர்களின் வேதங்களை இஸ்லாமிய அறிஞர்கள் வியாக்கீனம் செய்கிறார்கள் பார்த்தீர்களா? 

சாவு வீட்டில் கூட வாசனைக்கு சில நறுமணங்களை தெளிப்பார்கள், அது ஏன் என்று எல்லாருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அதாவது இந்தியாவில் ஒரு பிணத்தின் மீது தெளிக்கும் ரோஸ் வாடர் (Rose Water) என்று சொல்லக்கூடிய நறுமணத்திற்கு நிகராக இயேசு பேசியுள்ளார். ஆனால், அதை மறைப்பதற்காக பிஜே அவர்கள் வசனத்தை மறைத்தார்கள். 

மத்தேயு 26:11-13 வசனங்களை தன் புத்தகத்தில் குறிப்பிட்டால், தான் சொன்னவந்த செய்திக்கு அது எதிராக இருக்கும் என்பதற்க்காகவே, பிஜே அவர்கள் அதை குறிப்பிடவில்லை என்பது இப்போது புரிந்திருக்கும். இப்படித்தான் இஸ்லாமிய அறிஞர்கள் தவறான விவரங்களை சொல்லிக்கொண்டு முஸ்லீம்களையும், மற்றவர்களையும் முட்டாள்களாக்கிக் கொண்டு வருகிறார்கள் . 

தன் மரணத்தைப் பற்றித் தான் இயேசு பேசினார் என்பதற்கு பிஜே அவர்கள் குறிப்பிட்ட அதே அதிகாரத்திலிருந்து(26) இன்னும் சில விவரங்கள் :

1. மத்தேயு 26ம் அதிகாரம் 1-2ம் வசனங்களில், தன்னை சிலுவையில் யூதர்கள் அறைவார்கள் என்று இயேசு முன்னுரைக்கிறார்.

2. அப்படியே ஆசாரியர்களும் இயேசுவை பிடித்துகொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள் (மத்தேயு 26:3-5). 

3. பிறகு தான் இந்த நறுமணம் பற்றிய நிகழ்ச்சி நடக்கிறது (மத்தேயு 26:7-13) இதில் வசனங்கள் 11லிருந்து 13 வரை பிஜே அவர்கள் வேண்டுமென்றே குறிப்பிடாமல் மறைத்தார்.

4. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இயேசு மறுபடியும் தன் மரணத்தைப்பற்றி முன்னுரைக்கிறார். ஏழைகள் உங்களிடத்தில் எப்போதும் இருப்பார்கள், ஆனால், நான் இருக்கமாட்டேன் என்று இயேசு சொல்கிறார். 

5. பிற்கு யூதாஸ் காரியோத்து என்ற சீடன் இயேசுவை காட்டிக்கொடுக்க யூதர்களிடம் பேசுகிறான் (மத்தேயு 26:14-16)

இப்படி ஆதாரங்களை அடுக்கிக்கொண்டுப் போகலாம். 

பிஜே அவர்களுக்கும் மற்ற அறிஞர்களுக்கும் சிந்திக்க சில கேள்விகள்: 

1. எந்த சூழ்நிலையிலாவது இயேசு சீடர்களை அனுப்பி நறுமணங்களை கொண்டுவரும்படிச் சொல்லி, தினமும் பூசிக்கொண்டார் என்று உங்களால் ஆதாரம் காட்டமுடியுமா? 

2. இயேசுவின் சீடர்கள் இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியில் "ஏன் இந்த வீண் செலவு ?" என்று விசனப்பட காரணமென்ன? காரணத்தை நான் சொல்கிறேன், இயேசு ஒரு முறை கூட இப்படி அதிக விலை உயர்ந்த தைலத்தை பணம் செலவு செய்து வாங்கிக்கொண்டு வரும்படி தன் சீடர்களுக்கு சொல்லவில்லை என்பதும், இயேசு இப்படி வீணான செலவுகள் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் என்பதையும் சீடர்கள் அறிந்திருந்தனர். 

3. மட்டுமல்ல, இந்த சீடர்கள் அந்த பெண்ணின் மீது கோபப்பட்டார்களே தவிர இயேசுவின் மீதல்ல? காரணம் இயேசு அவராகவே ஏற்பாடு செய்துக்கொண்டு தைலத்தை தன் உடலில் பூசிக்கொள்ளவில்லை என்பதும், அந்தப்பெண் தானாகவே வந்து இப்படி செய்தாள் என்பதும் சீடர்கள் அறிந்திருந்தார்கள். எனவே தான் இயேசு அந்தப் பெண்ணின் மீது கோபப்படாதீர்கள், இது என் மரண சடலத்தின் மிது பூசப்படப்போகும் நறுமணம் என்று சீடர்களுக்குச் சொன்னார். 

4. எல்லாரும் இயேசுவோடு சாப்பிட உட்கார்ந்து இருக்கும் போது, மரணத்தைப் பற்றியும், அடக்க ஆராதனைப் பற்றியும் யாராவது பேசுவார்களா? பேசமாட்டார்கள். ஆனால், இயேசு பேசினார். காரணம் பிஜே அவர்கள் சொல்வது போல, இயேசு விரும்பி நறுமணங்களை பூசிக்கொள்ள ஆசைப்படவில்லை. எல்லா சூழ்நிலைகளையும் தன் மரணத்தைப்பற்றிப் பேச இயேசு பயன்படுத்திக்கொண்டார் என்பது தான் உணமை. 

5. அரசாங்கத்திற்கு வரி கட்ட, தூண்டில் போட்டு அதில் முதலாவது பிடிக்கும் மீனின் வயிற்றில் இருக்கும் நாணயத்தை எடுத்து கட்டும் படி இயேசு பேதுருவிடம் சொன்னார்(மத்தேயு 17:24-27). ஒருவேளை இயேசு அதிக விலையுள்ள நறுமணங்களை பூசிக்கொண்டு, பணத்தை வீண் செலவு செய்துக்கொண்டு இருந்து, ஆனால், அரசாங்கத்திற்கு வரிகட்ட மட்டும் பேதுருவிற்கு மீன்பிடித்து கட்டுங்கள் என்று சொல்லியிருந்தால், சீடர்கள் என்ன சொல்லியிருப்பார்கள் என்பதை நீங்களே சிந்தித்துக்கொள்ளுங்கள். "இவர் மட்டும் வீண்செலவு செய்துக்கொண்டு விலை உயர்ந்த நறுமணத்தை பூசிக்கொள்வார், ஆனால், வரி கட்ட மட்டும், நாங்கள் உழைத்து கட்டவேண்டுமா?" என்று கேட்டு இருப்பார்கள். அவரை யாரும் பின்பற்றி இருக்கமாட்டார்கள். 

முடிவாக பிஜே அவர்களே, முதலாவது நேர்மையான முறையில் எல்லா வசனங்களையும் படித்து கேள்வி கேளுங்கள். உண்மை பாதி பொய் பாதி என்பது உம்மைப்போன்ற மக்கள் மத்தியில் ஊழியம் செய்பவர்களுக்கு அழகல்ல என்பது என் கருத்து. 

நீங்கள் கேட்ட கேள்வி தவறானது, அதற்கு நீங்கள் காட்டிய வசனங்களும் முழுமையாக காட்டப்படவில்லை. உங்கள் அல்லா போல, பாதி விவரங்கள் குர்ஆனில் சொல்லிவிட்டு, மீதி விவரங்கள் ஹதீஸ்களில் சொல்வது போல பைபிள் இல்லை. எல்லா விவரங்களும் ஒரே இடத்தில் சொல்லப்பட்டிருக்கும், இந்த வசனத்திற்கு ஏற்ற ஹதீஸ் எது என்று மற்ற புத்தகங்களில் தேடி கண்டுபிடிக்க வேண்டிய கஷ்டம் இல்லை. எனவே, முழுவதுமாக படித்து கேள்விகள் கேளுங்கள். 

ஒரு வேளை இயேசு நறுமணம் விருப்பமாக பூசிக்கொண்டாலும் சரி, அது உங்கள் "அல்லா" உண்மையான இறைவன் என்பதையும், "குர்ஆன் " என்பது இறைவேதம் என்பதையும் நிருபிக்க உதவாது என்பதை சொல்லிக்கொள்கிறேன். 

எங்களுக்கு அல்லாவைப்பற்றியும், முகமதுவைப்பற்றியும் சொல்வதற்கு முன்பாக உங்களிடம் நாங்கள் எதிர்ப்பார்ப்பது நேர்மையும், உண்மையையும் தான் என்பதை முதலாவது புரிந்துக்கொள்ளுங்கள்.

உங்கள் மார்கத்திற்காக மற்றவர்களின் வேதங்களில் (நாங்கள் தினமும் படிக்கும், தியானிக்கும் வேதத்தில்) இல்லாததை கற்பனை செய்துக்கொண்டுச் சொல்லும் நீங்கள், உங்கள் வேதத்தைப் பற்றி(நாங்கள் தினமும் படிக்காத, தியானிக்காத குர்ஆன் பற்றி) எங்களுக்கு விவரிக்கும் போது எவ்வளவு பொய்யான தகவல்களை சொல்லுவீர்கள் என்பதை கற்பனை கூட செய்துப்பார்க்க முடியாது. 

ஈஸா குர்-ஆனில் இக்கட்டுரை வெளியிடப்பட்ட தேதி: புதன், 23 ஜனவரி, 2008

மூலம்: Answering - PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ?

கேள்வி 483: சமாதான பிரபு என்று அழைக்கப்படும் இயேசு ஏன், பூமியில் சமாதானத்தை அல்ல, பிரிவினையை உண்டாக்க வந்தேன் என்று சொல்கிறார்? (லூக்கா 12:51) இந்த கேள்வியை அஹமத் தீதத் கேட்டார்.

பதில் 483:  முதலாவது கேள்வியில் கேட்கப்பட்ட வசனத்தை கவனிப்போம்.

லூக்கா 12:51. நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இயேசு சமாதானத்தை உண்டாக்க வந்தார் என்பது உண்மையே. ஆனால் அவைகளை கீழ்கண்ட நான்கு பிரிவுகளில் நாம் பிரிக்கலாம். 

1) இயேசு நமக்கும் தேவனுக்கும் இடையே சமாதானத்தை உண்டாக்க வந்தார்.

நமக்கும் தேவனுக்கும் இடையே இருந்த மிகப்பெரிய பிளவை (பாவங்களை) நீக்கி, நம்மை தேவனோடு சமாதானம் அடைய உதவினார் இயேசு. ஆகையால் நமக்கு தேவனோடு சமாதானம் உண்டு.

இதனை தெளிவாக கீழ்கண்ட வசனங்கள் சொல்கின்றன:

எபேசியர் 2: 13-16

13. முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். 14. எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, 15. சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, 16. பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.

2) நம்முடைய மற்ற சகோதர/சகோதரிகளோடு நமக்கு சமாதானம் உண்டாக்கினார்

இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு முன்பு, யூதர்கள் என்றும் யூதரல்லாதவர்கள் என்று ஒரு வித்தியாசம் இருந்தது, ஆனால், இயேசுவின் உயிர்தெழுதலுக்கு பிறகு, அதாவது மேசியா வந்து தம்முடைய திட்டமிட்ட செயல்களைச் செய்துவிட்ட பிறகு, இரு மக்களுக்கும் இடையே சமாதானம் உண்டாக்கப்பட்டது.

எபேசியர் 2: 17-20

17. அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார். 18. அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம். 19. ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, 20. அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

மேற்கண்ட வசனங்கள் யூதர்கள் பற்றியும், யூதரல்லாத மற்ற கிறிஸ்தவர்கள் பற்றியும் சொல்லப்பட்டாலும், நாம் அனைவரும் அதாவது இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட அனைத்து உலக கிறிஸ்தவர்களும் ஒரே குடும்பத்தாராக மாறுவதற்கு இயேசு வழி செய்துள்ளார். ஆகையால், கிறிஸ்தவ சபைகளின் பெயர்கள் பலவாறாக இருந்தாலும், அனைவரும் இயேசு என்னும் ஒரே சரீரத்தில் அவயங்கள் தான், இந்த நினைவு மனதில் கொண்டு பல சபை கிறிஸ்தவர்கள் சமாதானத்துடன் வாழ பரிசுத்த ஆவியானவர் உதவி செய்கிறார். இது தான் இயேசு கொடுக்கும் இரண்டாவது சமாதானம்.

3) முடிந்த அளவு, எல்லா மனிதர்களுடன் சமாதானம்

மூன்றாவதாக, இயேசு கொடுக்கும் சமாதானம் என்னவென்றால், உலக மக்கள் அனைவரோடும் கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கவேண்டிய சமாதானம் ஆகும்.

இயேசுவின் மூலமாக, தேவனோடு சமாதானம் அடைந்த கிறிஸ்தவன், தன்னைப்போன்று நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களோடு சமாதானம் அடைந்த கிறிஸ்தவன், நிச்சயம் மற்ற மக்களோடும் சமாதானமாக வாழ முயலவேண்டும்.

ரோமர் 12:14-21

14. உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள். 15. சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள். 16. ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள். 17. ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். 18. கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். 19. பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். 20. அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய். 21. நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

மேற்கண்ட வசனங்களை ஒரு முறை படித்துப் பாருங்கள், முக்கியமாக 18வது வசனம் சொல்வதை கவனியுங்கள்.

"கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்" இது தான் ஒரு கிறிஸ்தவன் செய்யவேண்டியது. முடிந்த அளவிற்கு நாம் சமாதானமாக இருக்கவே முயலவேண்டும். நம்மிடம் ஒருவர் தவறான நடந்துக்கொண்டால், முடிந்த அளவிற்கு அவரை மன்னிக்க முயலவேண்டும். 

நமக்கு சொந்தமான வீட்டை ஒருவர் எடுத்துக்கொண்டால் சட்டத்தின் படி, அவரிடம் சமாதானமாக நடந்துக்கொள்ளுங்கள். அவரது தவறை உணர்த்துங்கள், சண்டையில்லாமல் பிரச்சனை தீர்க்கமுடியுமா என்று பாருங்கள். அவர் அடங்காபிடாரியாக இருந்தால், கடைசியாக நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரலாம். ஒரு கிறிஸ்தவன் சமாதானம் செய்ய முயலும் போதும், மற்றவன் ஒப்புக்கொள்ளவில்லை என்றுச் சொன்னால் என்ன தான் செய்யமுடியும்? சட்டத்தின் உதவியை நாடவேண்டி வரும்.

ஆக, இயேசுவின் மூலமாக மற்றவர்களோடும் நாம் சமாதானமாக நடந்துக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம்.

4) சத்தியத்திற்கு எதிராக நடந்துக்கொள்வர்களோடு சமாதானமாக இருக்கமுடியாமல் போகட்டும்

இந்த கேள்வியில் குறிப்பிடப்பட்ட வசனத்திற்கு பதில் இந்த பாயிண்டில் தான் உள்ளது.

தேவனோடு சமாதானம், முடியும். மற்ற சகோதர/சகோதரிகளோடு (கிறிஸ்தவர்களோடு) சமாதானம், முடியும், மற்ற உலக மக்களோடு சமாதானம், முடிந்த அளவிற்கு கடைபிடிக்கவேண்டும்.

ஆனால், நம் நம்பிக்கைக்கு சத்தியத்திற்கு எதிராக ஒருவர் நடந்துக்கொண்டால், நாம் 'எப்படி நம் சத்தியத்தை' விட்டுக்கொடுக்கமுடியும். இந்த இடத்தில் தான் இயேசுவின் வார்த்தைகள் வருகின்றன. 51வது வசனத்தோடு கூட,அடுத்த இரண்டு வசனங்களையும் படித்துப் பாருங்கள்.

லூக்கா 12: 51. நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 52. எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். 53. தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.

ஒரு குடும்பத்தில் ஒருவர் இயேசுவை பின்பற்ற முடிவு செய்தால், மற்றவர்கள் அதாவது அந்த குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்கள், நிச்சயமாக இதனை ஏற்கமாட்டார்கள். 

என் வாழ்க்கையையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு முஸ்லிம் குடும்ப பின்னணியிலிருந்த நான், இயேசுவை என் தெய்வமாக ஏற்றுக்கொண்ட பிறகு என் குடும்பத்தார்கள், என் முடிவை எதிர்த்தார்கள். என் தகப்பனார் வீட்டை விட்டு வெளியே சென்றுவிடு என்றார். இயேசுவை பின்பற்றுவதை விட்டுவிடுகிறாயா? அல்லது வீட்டைவிட்டு வெளியே செல்கிறாயா? என்று கேட்டார்கள். 

எனக்கு இரண்டு அண்ணன்கள் இருந்தாலும் அவர்கள் தனியாக வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள், என் பெற்றோர்களை அவர்கள் கவனித்துக்கொள்ளவில்லை.  என் குடும்பத்தில் நாங்கள் 6 பேர். என் சகோதரிகள் மூவரும் திருமணமாகி செட்டில்  ஆகிவிட்டார்கள். என் இரு அண்ணன்கள், தனிக்குடித்தனம் சென்றுவிட்டார்கள். என் வயதான பெற்றோர்களை நான் தான் பார்த்துக்கொண்டு அவர்களோடு இருந்தேன். இந்த நிலையில் என்னை வீட்டை விட்டு வெளியே சென்று விடு என்று அவர்கள் 'கோபத்தில்' சொன்னாலும், என்னால் எப்படி செல்லமுடியும்?  நான் சென்றுவிட்டால் இவர்களை பார்த்துக்கொள்வது யார்?

நான் மிகப்பெரிய தர்ம சங்கடத்தில் இருந்தேன். 

  • இயேசுவை புறக்கணித்துவிட்டு பெற்றோர்களுடன் இருப்பதா(சமாதானம் அடைந்துவிடுவதா)?

அல்லது 

  • பெற்றோர்களை புறக்கணித்துவிட்டு, வெளியே சென்றுவிட்டு இயேசுவை விட்டுக் கொடுக்காமல் வாழ்வதா?

நான் செய்த காரியம்,  ஒன்றும் பேசாமல், விவாதிக்கலாம், அமைதியாக திட்டுக்களை வாங்கிக்கொண்டு பெற்றோர்களுடனேயே இருந்தேன். அவர்களை கண்கலங்காமல் பார்த்துக்கொண்டேன். அவர்கள் பணத்திற்காக யாரிடமும் மதிப்பிழந்து கெஞ்சாமல், தலை நிமிர்ந்து வாழும்படி செய்தேன்.  இன்றைக்கு இதோ 25 ஆண்டுகள் ஆகிவிட்டது, அவர்கள் சொல்லும் சாட்சி "என் கடைசி மகன் இல்லையென்றால் நாங்கள் நடுத்தெருவில் விழுந்திருப்போம்" என்பது தான்.

என் சொந்தங்களும் சொல்லும் சாட்சி இது தான்: "அவனோடு நமக்கு அல்லாஹ் பற்றிய (நான் அல்லாஹ்வை வணங்காத) குறைபாடு இருந்தாலும், தன் பெற்றோர்களை, குடும்ப நபர்களை நன்கு கவனித்துக்கொண்டான்" என்பதாகும்.

நான் இயேசுவை விட்டுக்கொடுக்கவில்லை, அதே நேரத்தில் குடும்பத்தையும் விட்டுக்கொடுக்கவில்லை.

ஒரு வேளை, என் இரண்டு அண்ணன்கள், என் பெற்றோர்களோடு இருந்திருந்து, என்னை வீட்டைவிட்டு வெளியே பிடிவாதமாக தள்ளியிருந்தால், நான் என்ன செய்திருக்கமுடியும்? இயேசுவை விட்டுக்கொடுக்காமல், வெளியே சென்று இருந்திருக்கவேண்டும். 

இதைத் தான் இயேசு "இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்." என்று கூறுகின்றார். இவர்கள் சத்தியத்திற்காக, இயேசுவிற்காக‌ பிரிந்திருப்பார்களே தவிர, மற்ற காரியங்களுகாக அல்ல. ஒருவேளை இயேசுவை பின்பற்றுவதினால் வீட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்டாலும், அவர்கள் குடும்பத்தோடு சமாதானமாக இருக்க வேண்டுமே தவிர, விரோதிக்கக்கூடாது. ஏனென்றால் நம் இயேசு ஏற்கனவே இப்படி நடக்கும் என்று சொல்லியுள்ளார்.  தன்னை விசுவாசிக்கும் நபர்கள் சத்தியத்தை விட்டுக்கொடுக்காதபடியினால், இந்த ஒரு காரியத்தில் மட்டுமே மற்றவர்களோடு சமாதானமாக அவர்களால் இருக்கமுடியாது, என்கிறார் இயேசு, இது தான் அவரது வார்த்தைகளின் பொருள்.

இயேசு சமாதானப் பிரபு தான். அவர் சமாதானத்தை உண்டாக்க வந்தவர் தான்.

மேற்கண்ட வசனத்தை சரியான வெளிச்சத்தில் விளக்கும் போது நமக்கு தெளிவு உண்டாகும்.

கேள்வி 484:  "மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை" என்று யோவான் 3:13 சொல்கிறது, அப்படியானால் எலியா மற்றும் ஏனோக்கு பற்றி என்ன? மேலும் பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்கள் பரலோகத்திற்குச் செல்லவில்லையா? அவர்கள் பரலோகில் இல்லையா? (இந்த கேள்வியை அஹ்மத் தீதத் அவர்கள் கேட்டார்கள்).

பதில் 484:  முதலாவது யோவான் 3:13வது வசனத்தை படிப்போம்.

பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3:13)

இந்த வசனம் இயேசுக் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்கிறது.  இந்த வசனத்தின் படி இயேசுவிற்கு முன்பாக பரலோகத்திற்கு ஏறினவர்கள் யாருமில்லை என்றுச் சொல்லப்படுகின்றது.  ஆனால், எலியா என்ற தீர்க்கதரிசியும், ஏனோக்கு என்பவரும் அப்படியே பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக பழைய ஏற்பாடு சொல்கிறது, அப்படியானால், இயேசுவிற்கு முன்பாக இருவர் பரலோகத்திற்கு மரணமில்லாமல் சென்று இருப்பதினால், ஏன் இயேசு மட்டும் தான் பரலோகத்திற்குச் சென்றார் என்று கேள்வி எழுப்பப்படுகின்றது.

எலியா:

II இராஜாக்கள் 2:11. அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.

ஏனோக்கு:

ஆதியாகமம் 5:24. ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

மற்றவர்கள் பரலோகத்திற்குச் சென்றதற்கும், இயேசு பரலோகத்திற்கு சென்றார் என்று சொல்வதற்கும் மிகப்பெரிய வித்தையாசம் உள்ளது. அதனை சுருக்கமாக காண்போம்.

எலியா தம்முடைய சொந்த வல்லமையினாலே, தெய்வீகத்தன்மையாலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை, தேவன் அவரை எடுத்துக்கொண்டார். ஆனால் இயேசுவே சுயமாக பூமியிலிருந்து அவர் சென்றார், அதற்காக அதிகாரம் அவருக்கு உள்ளது. இதே போன்று ஏனோக்கு கூட தம் சுய சக்தியால் பரலோகத்திற்கு செல்லவில்லை, தேவன் அவரை எடுத்துக்கொண்டார்.

பரதீசு மற்றும் பரலோகம்:

இயேசு சிலுவையில் தொங்கும் போது கூட தம்மீது நம்பிக்கை வைத்த திருடனிடம், "இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்" என்றார், பரலோகத்தில் அல்ல. பரதீசு என்பது பரலோகத்திற்கு முன்பாக இருக்கின்ற  இன்னொரு இடமாகும்.

லூக்கா 23;43. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

பழைய ஏற்பாட்டு நீதிமான்கள்/நபர்கள் அனைவரும் பரதீசுக்கு கொண்டுச் செல்லப்பட்டார்களே ஒழிய பரலோகத்திற்கு அல்ல.  மேலும் எலியா ஏனோக்கு கூட பரதீசுக்கு கொண்டுச் செல்லப்பட்டார்கள்.  இயேசு மரித்து உயிர்த்தெழுந்தவுடன் பரதீசுக்குச் சென்று, அங்கிருந்த பரிசுத்தவான்களை பரலோகத்திற்குச் அழைத்துச் சென்றார்.

இதைப் பற்றிய வேறு வசனங்கள் 

I பேதுரு 3:18-19

18. ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். 19. அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.

எபேசியர் 4:8

8. ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.

மரித்தவர்கள் ஒரு தற்காலிய இடத்தில் இருப்பார்கள் (அதை சிறை) என்று அவர்கள் அழைத்தார்கள், அது நரகமல்ல.  அந்த இடத்திற்கு புதிய ஏற்பாட்டில் இயேசு பரதீசு என்று அழைக்கிறார், மேற்கண்ட வசனங்கள் பழைய ஏற்பாட்டின் முறையின் படி "சிறை" என்றுச் சொல்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான விவரமும் அடங்கியுள்ளது. இயேசு நிக்கொதேமு  என்ற யூத மத தலைவரிடம் பேசும் போது தான் 13ம் வசனத்தில் இப்படி கூறினார்.

உண்மையில் முதல் வசனத்திலிருந்து 13வது வசனம் வரை நாம் வாசித்தால், இயேசு சொல்வது எப்படி உள்ளதென்றால், "யூத ரபீக்களாகிய நீங்கள் பரலோகத்திற்குச் செல்லவில்லை, அப்படியானால், அங்குள்ளவைகள் பற்றி அவர்களுக்கு எப்படித் தெரியும். ஆனால், நான் அங்கிருந்து தான் வந்தேன், எனவே பரலோகத்தில் உள்ளதைப் பற்றி எனக்கு தான் அதிக அனுபவம் உள்ளது, எனவே நான் பூமிக்கு சம்மந்தப்பட்டவைகளைச் சொன்னாலும் சரி, பரலோகம் பற்றிச் சொன்னாலும் சரி, அதில் உண்மையிருக்கும் எனவே, நீ நம்பவேண்டும்" என்று இயேசு சொல்கிறார்.

யோவான் 3:11-13

11. மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்; நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுகொள்ளுவதில்லை.

12. பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?

13. பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.

ஆக, வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பரிசுத்தவான்கள் அனைவரும் "பரதீசுக்குத் தான்" சென்றார்கள், "பரலோகத்துக்கு அல்ல". மேலும அவர்கள் அனைவரும் தங்கள் சுயசக்தியினால் வானத்துக்குச் செல்லவில்லை, அவர்களை தேவன் எடுத்துக்கொண்டார். ஆனால், இயேசு மட்டுமே பரலோகத்துக்குச் சென்றவர்களில் முதலாமானவர் மேலும் அதனை தம் சுய தெய்வீகசக்தியால் செய்தார். இது போன்று மற்றவர்கள் செய்யமுடியாது.

கடைசியாக இந்த வசனங்களை கவனியுங்கள், தம் உயிரை கொடுக்கவும் அதனை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் தனக்கு அதிகாரம் உண்டென்று இயேசு சொல்கிறார்.  பொதுவாக மனிதர்களுக்கு ஒரு அதிகாரம் தான் இருக்கும் அதாவது "தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளலாம், ஆனால் கொடுத்த உயிரை மறுபடியும் எடுத்துக்கொண்டு உயிரோடு வரமுடியாது".

யூதர்கள் தம் உயிரை எடுக்கவில்லை, தாமே அதனை விருப்பமுற்று கொடுக்கிறேன், அதனை மறுபடியும் பெற்றுக்கொள்ளவும்(உயிர்த்து எழுவும்) என்னால் முடியும் என்று இயேசு கூறுகின்றார்.

யோவான் 10:17-18

17. நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.

18. ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.

கேள்வி 485: இயேசு தெய்வமானால் அவர் ன் மற்றவர்களுக்காக அழுதார்? இறைவன் அழமுடியுமா? அவர் ஏன் தாகமாக இருந்தார்? உணவு உண்டார்? இறைவனுக்கு தாகமுண்டாகுமா? பார்க்க‌ யோவான் 11:35, 19:28. (இந்த கேள்வியை அஹமத் தீதத் அவர்கள் கேட்டார்கள்)

பதில் 485: இயேசு பூமியில் மனிதனாக வந்தார். அதே நேரத்தில் அவர் இறைவனாகவும் இருந்தார்.

மனிதன் என்ற முறையில், நம்மைப்போன்று இயற்கைக்கு உட்பட்டு தாகமடைதல், பசியடைதல் போன்றவற்றை அவரும் அனுபவித்தார். அதே போன்று தெய்வமாக பல இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களையும் செய்தார்.

முதலாவதாக முஸ்லிம்கள் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இயேசு பூமியில் மனிதனாக வந்த பிறகு “அவர் தாகமாக இருக்கமாட்டார், உணவு உண்ணமாட்டார்” என்று பைபிள் சொல்லவில்லை.  மனிதனாக வந்த பிறகும், எந்த ஒரு மனித இயல்புக்கும் உட்படாமல் இயேசு வாழ்வார் என்று பைபிள் சொல்லவில்லை.  அதே போன்று, அவர் தெய்வமாகவும் இருப்பதினால், தம் நற்செய்தியை அறிவிப்பதற்கு சான்றாக அவர் பல அற்புதங்களைச் செய்தார். எனவே, இயேசு தாகமாக இருக்கலாமா? பசியாக இருக்கலாமா என்று கேட்பது அறியாமையாகும்.

அடுத்தபடியாக, "இயேசு கண்ணீர் விட்டார்" என்ற விஷயத்துக்கு வருவோம்.

இயேசு அன்புள்ளவர், அவர் தாம் உண்டாக்கிய மக்களை நேசிக்கிறார்.  

எருசலேம் மேசியாவின் வருகையை புரிந்துக்கொள்ளாததினால், அது அனுபவிக்கப்போகும் கொடுமைகளை நினைத்து, இயேசு கண்ணீர் விட்டார்.

லூக்கா 19: 41. 

41 அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,

தம்முடைய நண்பன் லாசரு மரித்துவிட்டதினால், அவனுக்காக மற்றவர்கள் அழுவதைக் கண்டும் அவரும் அழுதார்.

யோவான் 11:33-36

33. அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து: 34. அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள். 35. இயேசு கண்ணீர் விட்டார். 36. அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்!

இயேசு தெய்வமாகவும் இருந்தார், மனிதராகவும் இருந்தார், தாம் நேசிப்பவர்களுக்காக அவர் அழுதார், இதில் தவறேதுமில்லை.

கண்ணீர் விடுவது தெய்வத்தின் இலக்கணத்திற்கு தகாது என்று முஸ்லிம்கள் சொல்வார்களானால், கோபம் கொள்வதும் தெய்வத்துக்கு தகாது தானே!

ஒரு மனிதன் தம்மை விட்டு தூரமாகச் சென்றால், இயேசு கண்ணீர் விடுகின்றார், ஒரு மனிதன் தம்மைவிட்டு (இஸ்லாமைவிட்டு) தூரமாகச் சென்றால், அல்லாஹ் கோபம் கொள்கின்றான்.

கோபம் என்பது மனித குணமா? இறைவனது குணமா?  தவறு செய்பவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்கின்றான், இதே போன்று மனிதர்களும் கோபம் கொள்கிறார்கள். மனிதனின் ஒரு குணத்தை அல்லாஹ் பிரதிபலிப்பதினால் அதுவும் சொர்க்கத்தில் இருந்துக்கொண்டே கோபத்தை பிரதிபலிப்பதினால், அல்லாஹ் இறைவன் இல்லை என்று முஸ்லிம்கள் சொல்வார்களா?

குர்‍ஆன் 1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

குர்‍ஆன் 4:93. எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.

குர்‍ஆன் 5:80. .. . ஏனெனில் அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீதுள்ளது; மேலும் வேதனையில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

குர்‍ஆன் 16:106. எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.

குர்‍ஆன் 40:10. நிச்சயமாக நிராகரிப்பவர்களிடம்: “இன்று நீங்கள் உங்கள் ஆன்மாக்களைக் கோபித்துக் கொள்வதைவிட அல்லாஹ்வுடைய கோபம் மிகப் பெரியதாகும்; ஏனென்றால் நீங்கள் நம்பிக்கையின் பால் அழைக்கப்பட்ட போது (அதை) நிராகரித்து விட்டீர்களே” என்று அவர்களிடம் கூறப்படும்.

அல்லாஹ் "மனிதர்களை இஸ்லாமுக்கு அழைக்கும் போது" மனிதன் வராதபோது 'அல்லாஹ் கோபம் கொள்வது' ஒரு வகையான மனித குணம், இதே போன்று அந்த மனிதன் இஸ்லாமை ஏற்றால் 'அல்லாஹ் மகிழுவான் அல்லவா'? மகிழுவது கூட ஒரு குணம் தானே! இதுவும் மனித குணம் தானே!

அல்லாவிற்கு கோபம் கொள்வது, மகிழுவது, மெச்சிக்கொள்வது, வாழ்த்துவது  போன்ற குணங்கள் இல்லையென்று சொல்லமுடியுமா? 

இதே போன்று, இயேசு மாய்மாலக்காரர்களிடம் கோபம் கொண்டார், மக்களிடம் அன்பு செலுத்தினார், மகிழ்ந்தார், சிரித்தார் இவைகளெல்லாம்  அவர் செய்யக்கூடாது என்று நாம் எப்படி சொல்லமுடியும்? இறைவனாக இருந்தாலும் இவைகளை செய்ய அவருக்கு உரிமையுண்டு அல்லவா?  இதே போன்று தான் அல்லாஹ்விற்கும் உரிமையுண்டு.

எனவே, அன்பாகவே இருக்கும் இறைவனாகிய இயேசு கண்ணீர் விட்டதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை!

கேள்வி 486: ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு (எபே 4:4) என்று பைபிள் சொல்லும் போது, ஏன் பல பெயர்களில் திருச்சபைகள் உருவாகியுள்ளன?

பதில் 486: இயேசுவின் திருச்சபை ஒரே திருச்சபை தான், ஆனால் சிறிய வித்தியாசங்கள் மற்றும் கருத்து வேற்றுமைகளினால் பல பெயர்களில் திருச்சபைகள் இயங்குகின்றன.

முதலாவதாக, சில திருச்சபை தலைவர்கள் தங்கள் சொந்த விளக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம்  கொடுத்துவிடுகிறார்கள். இவர்களின் இந்த புதிய விளக்கங்களை கேள்வி கேட்பவர்களைவிட்டு தனியே சென்று திருச்சபை தொடங்கிவிடுகிறார்கள். எனவே புதிய திருச்சபைகள் உருவாகிவிடுகின்றன.  

பைபிளின் அடிப்படை கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டாலும், தங்கள் சொந்த மேலதிக விளக்கங்களை அந்த திருச்சபை பல ஆண்டுகளாக பின்பற்றுவதினால், அவைகள் சபை  பாரம்பரியங்களாக காலப்போக்கில் மாறிவிடுகின்றன.

இரண்டாவதாக, தற்காலத்தில் பல  கள்ள உபதேசங்கள் வந்துக்கொண்டு இருக்கின்றன. இவர்கள் பைபிளில் சொல்லப்பட்ட அடிப்படை கோட்பாடுகள் சிலவற்றை மறுப்பார்கள், இவர்களினாலும் திருச்சபைகள் பல பெயர்களில் உருவாகின்றன.

கருத்து வேறுபாடுகள் எல்லா மதங்களிலும் உண்டு, இதே போன்று பல பிரிவுகளாக அவர்கள் பிரிந்துள்ளார்கள். ஆனால், இந்த கருத்து வேறுபாட்டினால் ஒருவரை ஒருவர் சண்டையிட்டுக்கொண்டும், கொலை செய்துக்கொண்டும் இருக்கக்கூடாது. இந்த வகையில் கிறிஸ்தவ திருச்சபைகள் தற்காலத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்கள் எனலாம்.  இந்த இடத்தில் "சபை பிரிவுகள் (Denominations) என்பது வேறு, மற்றும் பல பெயர்களில் திருச்சபைகள் இருப்பது வேறு" என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும். முதலாவதைப் பற்றி தான் நான் இங்கு குறிப்பிட்டேன்.  பல பெயர்களில் சபை இருப்பது பிரச்சனை இல்லை, ஆனால் டினாமினேஷன் என்றுச் சொல்லக்கூடிய சபை பிரிவு பற்றி தான் நான் மேலே விளக்கினேன்.

ஆனால், ஷியா சன்னி முஸ்லிம் பிரிவினர் ஒருவரை ஒருவர் கொலை செய்துக்கொண்டு இருக்கிறார்கள், இன்றும் இது தொடர்கிறது. என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

கேள்வி 487: யாக்கோபு 1:13ன் படி தேவன் யாரையும் சோதிப்பதில்லை, ஆனால் வேறு சில வசனங்களில் தேவன் சோதித்தார் என்று வருகிறதே? ஏன் இந்த முரண்பாடு? இந்த கேள்வியை அஹமத் தீதத் என்பவர் கேட்டார்

பதில் 487: முதலாவதாக, யாக்கோபு 1:13ம் வசனத்தை படிப்போம்.

யாக்கோபு 1:13 சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.

“சோதனை” என்ற வார்த்தை பல சூழ்நிலைகளில் பல பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றது. 

ஆங்கிலத்தில் “Tempting” and “Testing” என்றுச் சொல்கிறோம்,  இவ்விரண்டும் ஒன்றா என்று பார்த்தால், "இல்லை" என்பது தான் பதில்.

  • Tempt -"ஒருவர் ஒரு தீமையில் விழுந்துவிடும்படி இன்னொருவர் சோதித்தல், தடைகளை உண்டாக்குதல் அல்லது தவறு என்று தெரிந்தும் செய்ய விரும்புதல்" (இணையத்தில் கிடைத்த பொருள் - A feeling that you want to do something, even if you know that it is wrong. a thing that attracts you to do something wrong or silly).
  • Test - "ஒருவர் முன்னேறுவதற்கு வைக்கப்படும் பரிட்சை என்று பொருள்" (இணையத்தில் கிடைத்த பொருள் - To examine somebody's knowledge or skill in something).

தேவன் ஒரு போதும் "மனிதன் விழுந்து போகும்படி சோதிக்கிறவர் (Tempting) அல்ல" என்பதைத் தான் மேற்கண்ட வசனம் சொல்கிறது.

ஆனால், அதே தேவன் நாம் விசுவாசத்தில் முன்னேறும்படியாகவும், இதர காரியங்களில் சிறப்பாக விளங்கவேண்டும் என்பதற்காக "அவர் நம்மை Test செய்வார் அதாவது பரிட்சை வைப்பார்".

நாம் படிக்கும் போது, பரிட்சை எழுதுகிறோம், அது டெம்ட் கிடையாது, அது டெஸ்ட். 

பரிட்சைக்கு பிறகு  என்ன நடக்கும், நமக்கு ஒரு சான்றிதழ் கொடுக்கப்படும், நாம் முன்னேறுவதற்கு வேலை பெறுவதற்கு அது உதவும். எனவே தேவன் நமக்கு பரிட்சை வைப்பார் (நம்மை ஆசீர்வதிப்பதற்காக), ஆனால், சாத்தான் தான் நம்மை சோதிப்பான் (நாம் தவறு செய்யவேண்டுமென்பதற்காக).

எனவே, இதில் எந்த ஒரு முரண்பாடும் இல்லை.

கேள்வி 488: இயேசு தம் தாயை "ஸ்திரியே" என்று ஏன் அழைத்தார், மேலும் விபச்சாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணையும் "ஸ்திரியே" என்று தான் இயேசு அழைத்தார், இது சரி தானா? பார்க்க யோவான் 2:4, 8:10. இந்த கேள்வியை அஹமத் தீதத் கேட்டார்

பதில் 488: இயேசு தம் தாயை ஸ்திரியே என்று அழைத்து அவமானப்படுத்திவிட்டார் என்று அஹமத் தீதத் என்ற முஸ்லிம் கருதிவிட்டார்.

இயேசு தம் தாயை அவமதிக்கவில்லை, முதல் நூற்றாண்டு அராமிக் பேசும் யூத கலாச்சாரத்தில், ஸ்திரியே என்று அழைத்தால், ஆங்கிலத்தில் இன்று நாம் "லேடி" என்றுச் சொல்லக்கூடிய வார்த்தை இருக்கிறதே, அதை விட மதிப்பு மிக்க வார்த்தையாகும்.

இயேசு யாரையும் அவமானப்படுத்தவில்லை, பெண்களை மிகவும் கேவலமாக பார்த்த  யூத மத தலைவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்து, அந்த விபச்சார குற்றத்தில் பிடிபட்ட பெண்ணுக்காக பரிந்து பேசினார்.

யோவான் 2:4. அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.

யோவான் 8:10. இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.

இயேசுவோடு எப்பொழுதும் சமுதாயத்தின் அடிமட்ட நிலையில் இருக்கும் மக்கள், பெண்கள் உட்பட சூழ்ந்திருந்தார்கள். பாவிகள் என்று யூதர்கள் குற்றப்படுத்தப்பட்ட மக்களோடு இயேசு உலாவினார். இயேசு பெண்களை அவமதிக்கின்றவராக இருந்திருந்தால், சமாரியா ஊரிலிருந்து வந்த அந்த ஒரு பெண்ணோடு பேசமாட்டார், அப்பெண் தன் கடந்த கால வாழ்க்கையில் ஐந்து திருமணங்கள் புரிந்திருந்தாலும், அப்பெண்ணை அவர் கேவல‌ப்படுத்தவில்லை.  அப்பெண்ணின் கடந்த  கால வாழ்க்கையை தெரிந்திருந்தும், அப்பெண்ணின் மூலம் அவ்வூரில் நற்செய்தியை பரப்பினார்.

தீய‌ காரியங்களில் ஈடுபட்டிருந்த பெண்களும் ஆண்களும் நேர்வழியில் வரவேண்டும் என்று விரும்பிய இயேசு எப்படி தன்னை பெற்றெடுத்த தாயாரை (அவர் தான் மரியாளை தெரிந்துக்கொண்டார்) அவமானப்படுத்துவார்?

கானா ஊர் திருமணத்தில் தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தது தவறு என்று முஸ்லிம்கள் சொல்வார்களானால், தாம் சிலுவையில் அறையப்படும் போது கூட ஏன் அவர் "தம் தாயைப் பார்த்து ஸ்திரியே" என்று அழைத்தார்? அந்த நேரத்தில் இயேசு மரியாளின் மீது கோபமாக இருந்தாரா? இல்லையல்லவா?

பார்க்க: யோவான் 19:25-27

25. இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.

26. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.

27. பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.

ஆக, இயேசு தன் தாயை ஒருபோதும் அவமதிக்கவில்லை என்பது இதன் மூலம் அறியலாம்.

கேள்வி 489:  ஒரு கிறிஸ்தவன் முஸ்லிமாக மாறி சில ஆண்டுகள் கழித்து, மறுபடியும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு வாழுவது சாத்தியமா? இதற்கு பைபிளில் சான்றுகள் உண்டா?

பதில் 489: ஆம், இது  சாத்தியமே. இப்படி அனேகரை நான் கண்டு இருக்கிறேன். என் நண்பர்கள் மூலமாகவும் அனேகரை இப்படி அறிந்திருக்கிறேன்.

உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், தற்காலத்திலும் முஸ்லிம்கள் பல கிறிஸ்தவர்களை சந்தித்து அவர்கள் மனதை குழப்பி, இயேசு தெய்வமில்லை, அவர் ஒரு தீர்க்கதரிசி மட்டும் தான் என்றுச் சொல்லி, வாலிப கிறிஸ்தவர்களை அல்லது அறியாமையில் இருப்பவர்களை முஸ்லிம்களாக மாற்றுகிறார்கள்.

பைபிள் பற்றியும், இயேசுவின் தெய்வீகத்தைப் பற்றியும் அறியாத கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் சொல்வதை நம்பிவிடுகிறார்கள்.  மேலும் முஸ்லிம்கள் சொல்வதை சரி பார்க்கும் அளவிற்கு இவர்களுக்கு பைபிளின் இறையியலும், குர்‍ஆனின் இறையியலும் தெரியாமல் இருப்பதினால், இவர்கள் இஸ்லாமை தழுவுகிறார்கள்.

ஆனால், நாட்கள் செல்லச்செல்ல, முஸ்லிம்கள் இஸ்லாம் பற்றிச் சொன்னவைகளையும், பைபிள் பற்றி சொன்னவைகளையும் ஆழமாக அறிய முற்படும் போது, இவர்களுக்கு உண்மை புரிய  ஆரம்பிக்கிறது. முஹம்மது உலகத்திலேயே மிகவும் நல்லவர் என்று முஸ்லிம்கள் ஆரம்பத்தில் சொல்லியிருப்பார்கள், ஆனால், குர்‍ஆனையும் ஹதீஸ்களையும் இவர்கள் இஸ்லாமுக்குள் இருந்துக்கொண்டு அறியும் போது, இது  பொய் என்பதை இவர்கள் உணர்ந்துக்கொள்கிறார்கள். 

முஹம்மது என்பவர் உண்மையாகவே ஒரு நபியாக இருக்கமுடியாது என்பதை அறிந்துக்கொள்கிறார்கள், இதே போன்று பைபிள் பற்றிய விவரங்களையும் அறியும் போது, எது சத்தியம் என்பதை இவர்கள் உணர்ந்துக்கொண்டு, கடைசியாக இஸ்லாமை விட்டு வெளியேறுகிறார்கள்.

இந்த நிலையை ஒரு ஆண் அடைந்தால், அவருக்கு  சிறிதாவது இஸ்லாமை விட்டு வெளியேற வாய்ப்பு கிடைக்கும். ஆனால், ஒரு பெண் இப்படி இஸ்லாமுக்குச் சென்று மறுபடியும் கிறிஸ்தவளாக வரவேண்டுமென்றால் கடினம் தான்.  அதிலும், ஒரு முஸ்லிமை திருமணம் செய்துக்கொண்டு இருந்தால், அவளால் தன் முஸ்லிம் கணவனையும், பிள்ளைகளையும் விட்டு வருவது கடினமே.

பைபிளில் இதற்கு சான்று உள்ளதா? என்று கேட்டால், உள்ளது என்பது தான் பதில். பைபிளின் அடிப்படை கோட்பாடே "மனந்திரும்புங்கள்" என்பது தான். மனிதன் ஒரு விஷயத்தை நம்புகிறான், அதையே பின்பற்றுகிறான். தனக்கு சத்தியம் தெரிந்தபிறகு திரும்பி வருகிறான், இதைத் தான் இயேசு யோவான் 8:32ல் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

யோவான்  8:32. சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

இதனால் தான் "அறிவை உணர்த்தவும், சத்தியத்தை புரியவைக்கவும்" நான் இந்த கேள்வி பதில்களை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

கேள்வி 490: ஒரு கிறிஸ்தவர் முஸ்லிமாக மாறிவிட்டால், அவரை திருச்சபையில் தேவனை ஆராதிக்க அனுமதிப்பீர்களா?

பதில் 490: இந்த கேள்வியில் பல குழப்பங்கள் உள்ளன.

ஒருவர் இஸ்லாமை தழுவும் போது, அவர் "அல்லாஹ் தான் இறைவன்" என்றும் இயேசு தெய்வம் இல்லை என்றும்  அறிக்கை கொடுத்தபிறகு தான் முஸ்லிமாக மாறுகின்றார்.  இந்த நிலையில் அவர் கிறிஸ்தவ திருச்சபையில் என்ன செய்யப்போகிறார்? இயேசுவே தெய்வம் என்று பாடல் பாடமுடியுமா? இயேசுவை தொழுதுக்கொள்ளமுடியுமா? இல்லையல்லவா?   எனவே இந்த கேள்வி தவறான கேள்வியாகும்.

ஒருவேளை நான் "இயேசுவை ஆராதிக்கமாட்டேன்" வெறும் திருச்சபையில் உட்கார்ந்துக்கொள்கிறேன் என்று ஒரு முஸ்லிம் சொன்னால், இதையும் ஏற்கமுடியாது, ஏனென்றால், அவர் சும்மா இருக்கமாட்டார் அல்லவா?  திருச்சபை விசுவாசிகளை குழப்புவார் அல்லவா? தன் இஸ்லாமிய கோட்பாடுகளை நம்பிக்கைகளை, பைபிளுக்கு  எதிரான கோட்பாடுகளை பரப்ப ஆரம்பிப்பார் அல்லவா? எனவே, இவர்களை தூரமாக வைப்பது தான் சரியானது.

ஒரு திருச்சபையில் முதிர்ச்சி அடைந்த விசுவாசிகள் இருப்பார்கள், பைபிள் பற்றிய ஆழமான அறிவு இல்லாதவர்கள் இருப்பார்கள், இஸ்லாம் பற்றி ஒரு சதவிகித விவரங்களும் தெரியாதவர்கள் இருப்பார்கள், ஒரு முஸ்லிமை திருச்சபையில் அமர அனுமதித்தால், அவர் குழப்பம் தான் உண்டாக்குவார்.

இதே நிலை எனக்கும் தான். என்னை ஒரு மசூதியில் இருக்கும் மக்களோடு உரையாட அனுமதித்தால், நான் நிச்சயம் இயேசு பற்றித் தான் சொல்லுவேன், இஸ்லாமை நிச்சயம் விமர்சிப்பேன்.

எனவே, சாதாரண  விசுவாசிகளை, முஸ்லிம்களை முன்னாள் கிறிஸ்தவர் அல்லது முன்னாள் முஸ்லிமுக்கு தூரமாக வைப்பது நல்லது என்பது என் கருத்து.

தேதி: 13th Dec 2020


சின்னஞ்சிறு 1000 கேள்வி பதில்கள் பொருளடக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்