2020 ரமளான் - சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000 - இஸ்லாமிய கலைச்சொற்கள் - பாகம் 7

“சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000” தொடரின் முந்தைய பதிவுகளை இங்கு சொடுக்கி படிக்கலாம். குர்‍ஆன், முஹம்மது, பைபிள், அல்லாஹ் யெகொவா, கிறிஸ்தவம் போன்ற‌ தலைப்புகளில் இதுவரை 180 கேள்வி பதில்களை பார்த்துள்ளோம்.

இந்த கட்டுரையில் "இஸ்லாமிய கலைசொற்கள் அல்லது இஸ்லாமிய அகராதி" என்ற தலைப்பில் 30 கேள்வி  பதில்களக் காண்போம்.

முஸ்லிம்களிடம் பேசும் போது, 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று வாழ்த்திவிட்டு, அதன் பிறகு பேச்சை தொடருவார்கள். ஒரு எதிர்கால செயல்பற்றி பேசும் போது "இன்ஷா அல்லாஹ்" என்றுச் சொல்வார்கள்.  இந்த அரபி வார்த்தைகளின் அர்த்தமென்ன?  இவைகளின் முக்கியத்துவம் என்ன? போன்ற‌ போன்ற கேள்விகளுக்கு இந்த தொடரில் பதில்கள் கொடுக்கப்படுகின்றன.

இந்த தொடரில் இஸ்லாமிய கலைச்சொற்களை மட்டுமல்ல, இஸ்லாமில் முக்கியத்துவம் வாய்ந்த சில நபர்களின் விவரங்களையும், இடங்களையும் கற்றுக்கொள்வோம். இஸ்லாமை ஆழமாக அறிவதற்கு இவைகள் உதவும். 

அரபி மற்றும் எபிரேய மொழிகள் செமிடிக் மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளாக இருப்பதினால், தேவையான இடங்களில் அரபி வார்த்தைகளுக்கு இணையான எபிரேய வார்த்தைகளையும் சம்மந்தப்படுத்தி பார்க்கப்போகிறோம். இதன் மூலமாக, பழைய ஏற்பாட்டின் முக்கியமான சில வார்த்தைகளையும் கற்றுக்கொள்ளலாம்.

 

இஸ்லாமிய கலைச்சொற்கள்/அகராதி (181-210 வரை) - பாகம் 7

கேள்வி 181: அப்த் (ABD) என்றால் என்ன?

பதில் 181: அரபியில் இதன் பொருள் “அடிமை” என்பதாகும். இது அரேபிய பெயர்களில்  பரவலாக பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். உதாரணத்திற்கு, முஹம்மதுவின் தந்தையின் பெயர் “அப்துல்லாஹ்” என்பதாகும். இதன் பொருள் “அல்லாஹ்வின் அடிமை” ஆகும். “இறைவனுக்கு முழுவதுமாக கீழ்படிந்த அடிமையாக வாழ்வது தான்” முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி ஒரு சிறந்த வாழ்க்கையாகும்.  

இதற்கு நேர் எதிராக, பைபிளில் நாம் காண்கின்ற படி, இயேசு தம்முடைய சீடர்களை “தன் அடிமைகள்” என்று அழைக்காமல், அவர்களை “தன் நண்பர்கள்” என்று அழைத்தார். 

யோவான் 15:15 இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.

இஸ்லாமிய பெயர்கள்: 

  • அப்துல்:  அடிமை அல்லது வேலைக்காரன் (யாருக்கு? அல்லாஹ்விற்கு)
  • அப்துல் நபி: நபியின் அடிமை (அ) வேலைக்காரன்
  • அப்துல் ஜஹ்ரா: முஹம்மதுவின் மகள் ஃபாத்திமா ஜஹ்ரா அவர்களின் அடிமை
  • அப்துல் ஹுசைன்: ஹுசைனின் அடிமை (இவர் முஹம்மதுவின் பேரன்)

அரபி கிறிஸ்தவர்களிடமிருந்து சில உதாரணங்கள்:

  • அப்துல் மஸீஹ்: மேசியாவின் அடிமை (மேசியா என்றால் இயேசு)
  • அப்துல் ஸாலிப்: சிலுவையின் அடிமை (அ) ஊழியக்காரன்
  • அப்துல் ஷஹித்: உயிர்தியாகம் செய்தவருக்கு (இயேசுவிற்கு) அடிமை/ஊழியக்காரன்
  • அப்த் யஷூ: இயேசுவின் அடிமை (இயேசு தாஸ் என்று தமிழில் சொல்வோமே அதே பெயர் அரபியில்)

Source: https://en.wikipedia.org/wiki/Abd_(Arabic)

கேள்வி 182: அபூ (ABU) என்றால் என்ன?

பதில் 182: இதன் பொருள் ”தந்தை” என்பதாகும். அதாவது "இன்னாருடைய தந்தை" என்ற பொருளில் இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. உதாரணத்திற்கு: அபூ ஹமீத், அபூ பக்கர் போன்ற பெயர்களை குறிப்பிடலாம். இதன் பொருள் ”ஹமீதுடைய தந்தை, பக்கருடைய தந்தை” என்பதாகும்.

இஸ்லாமிய உதாரணங்கள்:

  • அபூ ஹுரைரா
  • அபூ மூஸா
  • அபூ சுஃப்யான்
  • அபூ மஸ்வூத்

யூதர்களின் பயன்பாடு:

எபிரேய மொழியில் அப் (Ab) என்றும் அராமிக் மொழியில்  அப்பா (Abba) என்றும் பயன்படுத்தப்படுகின்றது.

  • அப்ராம் : உயர்ந்த தகப்பன்
  • அப்ரஹாம்: பல ஜனங்களுக்கு தகப்பன்
  • அப்சலோம்: அமைதியின் தகப்பன்

புதிய ஏற்பாட்டில் அப்பா (Abba): 

புதிய ஏற்பாட்டில் முன்று முறை அப்பா (Abba) என்ற அராமிக் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இயேசு ஜெபிக்கும் போது, அப்பா, பிதாவே (Abba, Father) என்று ஜெபித்தார். இதனை கிரேக்க மொழியாக்கம் செய்யும் போது கூட, அப்பா (Abba) என்ற வார்த்தையை அப்படியே எழுதியுள்ளார்கள்.

மாற்கு 14:36

36. அப்பா பிதாவே (Abba, Father), எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்.

மீதமுள்ள இரண்டு இடங்கள் ரோமர் 8:15 மற்றும் கலாத்தியர் 4:6 ஆகும். 

ரோமர் 8: 15. அந்தப்படி, திரும்பவும்பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே (Abba, Father), என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.

கலாத்தியர் 4:6. மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! (Abba, Father) என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.

சிலர் அறிஞர்கள் இப்படியாக கூறுவார்கள், அதாவது ஆங்கிலத்தில் டாட்டி(Daddy) என்று அழைக்கும் போது, அழைப்பவர் குழந்தையாக மாறி இன்னும் அதிக அன்போடு அழைப்பது போன்று அப்பா (Abba) என்ற வார்த்தை உள்ளது என்று கூறுகிறார்கள்.

கேள்வி 183: அல் (Al)

பதில் 183: இந்த "அல்" வார்த்தையானது ஆங்கிலத்தில் உள்ள "the" என்ற வார்த்தைக்கு சமமானதாகும் (definite article - 'the'). அரபி எழுத்தாளர்கள் அரபி பெயர்களை வித்தியாசமாக எழுதுவதினால் அனேக முறை மக்கள் இந்த வார்த்தையினால் குழப்பமடைவது உண்டு, அதாவது நாம் ஏற்கனவே படித்த பெயர் இது தானா அல்லது வேறு பெயரா என்ற குழப்பம் வருவதுண்டு. 

இவ்வார்த்தைப் பற்றிய சில விவரங்களை சரியாக புரிந்துக்கொண்டால் இதில் குழப்படைவதற்கு ஒன்றுமில்லை. 

இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் மற்றும் குர்-ஆன் விரிவுரையாளர் "தபரி" என்பவரை சில அரபி எழுத்தாளர்கள் "அல்-தபரி (Al-Tabari)" என்று எழுதுவார்கள், வேறு சிலர் "அத்-தபரி (at-Tabari)" என்று எழுதுவார்கள். இதே போல அல்லாஹ்விற்கு உள்ள பெயர்களை எழுதும் போது கூட:

  • சிலர் ---> அல்-ரஹ்மான், அல்-ஸமி, அல்-ஷகூர், அல்-நூர் ... என்று எழுதுவார்கள். 
  • வேறு சிலர் ---> அர்-ரஹ்மான், அஸ்-ஸமி, அஷ்-ஷகூர், அந்-நூர் ... என்று எழுதுவார்கள்.

அரபி மொழியில் உள்ள எழுத்துக்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன: 1) சந்திர எழுத்துக்கள் 2) சூரிய எழுத்துக்கள்.

  • க, ம, ப. . . போன்ற எழுத்துக்கள் சந்திர எழுத்துக்கள் ஆகும்.
  • த, ந, ச. . . போன்ற எழுத்துக்கள் சூரிய எழுத்துக்கள் ஆகும்.

(சந்திர/சூரிய எழுத்துக்கள் அனைத்தையும் பற்றி அறிய இந்த விகிபிடியா தொடுப்பை சொடுக்கவும்.)

சந்திர எழுத்துக்களுக்கு முன்பாக "அல்" வந்தால், அந்த எழுத்துக்களை தெளிவாக உச்சரிக்க முடியும், அப்படிப்பட்ட எழுத்துக்களை சந்திர எழுத்துக்கள் என்றுச் சொல்வார்கள். 

உதாரணத்திற்கு:

கமர் (நிலா) என்ற சொல்லை எடுத்துக்கொள்ளலாம். இவ்வார்த்தைக்கு முன்பு அல் என்று சேர்த்து வாசிக்க முடியும் - அல்-கமர் (அந்த நிலா). 

இதே போல, பலத் (balad - நாடு) என்ற வார்த்தையும் அல்-பலத் (அந்த நாடு) என்று வாசிக்கமுடியும். ஆனால், ஒரு வார்த்தை சூரிய எழுத்துடன் ஆரம்பித்தால், அதனை "அல்" என்ற வார்த்தையைச் சேர்த்து "அல்" என்றே உச்சரிக்க முடியாது. அதற்கு பதிலாக, "அல்" என்பதில் உள்ள "ல்" என்பதை நீக்கிவிட்டு, அவ்வார்த்தையின் முதல் எழுத்தை போட்டு வாசிக்க முடியும். 

உதாரணத்திற்கு:

ஷம்ஸ் (சூரியன் என்பது இதன் பொருள்) என்ற சொல்லுடன் "அல்-ஷம்ஸ்" என்று எழுதினால், அதனை அப்படியே வாசிக்கமுடியாது. எனவே, அதனை "அஷ்-ஷம்ஸ்" (அந்த சூரியன்) என்று வாசிக்க வேண்டும் (கவனிக்கவும்: ல் என்பதை நீக்கிவிட்டு ஷ் என்பதை சேர்த்துள்ளோம்) எழுதும் போது அல்-ஷம்ஸ் என்று (அ) அஷ்-ஷம்ஸ் என்று எழுதினாலும், அதனை அஷ்-ஷம்ஸ் என்றே வாசிக்கவேண்டும்.

எனவே அரபி எழுத்தாளர்கள் தங்கள் விருப்பப்படி "அல்-தபரி" என்றோ (எழுத்தின் படி எழுதுவது) அல்லது "அத்-தபரி" என்றோ (உச்சரிப்பின் படி எழுதுவது) எழுதுவார்கள், எப்படி எழுதினாலும் தவறில்லை. ஆனால், வாசகர்கள் படிக்கும் போது, சந்திர சூரிய எழுத்துக்களை கவனத்தில் கொண்டு படிக்கவேண்டும். 

கேள்வி 184: அல்ஹம்து லில்லாஹ்

பதில் 184: இந்த அரபி சொற்றொடருக்கு  "எல்லா புகழும் அல்லாஹ்விற்கே (Praise be to Allah)" என்பதாகும்.

  • அல் = The
  • ஹம்து = புகழுதல் (Praise)
  • அல்லாஹ் = அல்லாஹ் (Allah)

யூதர்களும் கிறிஸ்தவர்களும் "ஹல்லேலூயா" என்று சொல்வது போன்று, அரபியில் அல்ஹம்துலில்லாஹ்.

  • ஹல்லேல் + யா = யெகோவா தேவனை புகழு

கேள்வி 185:  அல்பா (Alpha)

பதில் 185: கிரேக்க மொழியின் முதல் எழுத்து "அல்பா" ஆகும், கடைசி எழுத்து "ஓமெகா" ஆகும். இந்த இரண்டு எழுத்துக்கள் இறைவனின் பட்டப்பெயர்களாக பைபிளில் காணலாம். அதாவது உலகத்தின்  "முதலாமானவராகவும்  கடைசியானவராகவும் இறைவன் இருக்கிறார்" என்பதை சுட்டிக்காட்ட இறைவன் தனக்கு இவைகளை பயன்படுத்துகிறார்.

1. தேவன் "அல்பா மற்றும் ஓமெகாவாக" இருக்கிறார்: 

வெளிப்படுத்தின விசேஷம் 1:8 

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.

2. இயேசுக் கிறிஸ்து "அல்பா மற்றும் ஓமெகாவாக" இருக்கிறார்:

வெளிப்படுத்தின விசேஷம் 21:6 மற்றும் பார்க்க 22:1-13

வெளி 21:6

அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.

கேள்வி 186: அல்லாஹு அக்பர்

பதில் 186: இவ்வார்த்தையின் பொருள் "அல்லாஹ் பெரியவன்" (Allah is most Great) என்பதாகும். முஸ்லிம்கள் இவ்வார்த்தைகள் அனேக சமயங்களில்  பயன்படுத்துவர், அதாவது தொழுகைக்கு அழைப்பு கொடுக்கும் போதும், மிருகங்களை அறுக்கும் போதும் இதனை பயன்படுத்துவர். 

கடந்த காலத்திலும், தற்காலத்திலும் இஸ்லாமியர்கள் பேரணியாகச் செல்லும் போது, “அல்லாஹு அக்பர்” என்று கோஷமிட்டுக்கொண்டுச் செல்வார்கள். மேலும், போருக்குச் செல்லும் போது முஸ்லிம்கள் இந்த வார்த்தைகளை உரத்த சத்தத்தோடு உச்சரித்துக்கொண்டுச் செல்வார்கள். இப்படி கோஷமிட்டுச் செல்வது “அல்லாஹ்வும் இஸ்லாமும் முஸ்லிம்களும் உலகத்தில் உள்ள மற்ற எல்லாவற்றைக் கட்டிலும் சிறந்தவர்கள்” என்பதை அவர்கள் வெளிப்படுத்துவதாக அமைகிறது.

முஸ்லிம்கள் காஃபிர்களுக்கு (இஸ்லாமியரல்லாத மக்களுக்கு) எதிராக போர் செய்யும் போது, எப்படி இவ்வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை ”இஸ்லாமிய காலிஃபத்துவ ஆட்சி நடக்கும் நாடுகளில்” காணலாம், இதைப் பற்றி அறிந்துக்கொள்ள இந்த தொடுப்பை (புத்தகத்தை) சொடுக்கவும்: THE CALIPHATE - ITS RISE, DECLINE, AND FALL FROM ORIGINAL SOURCES BY WILLIAM MUIR

கேள்வி 187: அன்சார் (அன்ஸார் - ANSAR)

பதில் 187: அரபியில் இதன் பொருள் “உதவியாளர்” என்பதாகும்.

மதினாவிலிருந்து முதன் முதலில் முஸ்லிமாக மாறியவர்களை “அன்ஸார்கள்” என்று குர்-ஆன் அழைக்கிறது.  முஹம்மது மதினாவிற்கு இடம் பெயர்ந்த பிறகு, அவருக்கு உதவி செய்த அனைவரும் “அன்ஸார்கள்” என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் முஹம்மது புரிந்த போர்களிலும் பங்கு பெற்றார்கள்.

குர்-ஆன் 9:100, 117

9:100. இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.

9:117. நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்தான் அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான் - நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான். (முஹம்மது ஜான் டிரஸ்ட் குர்-ஆன் தமிழாக்கம்)

 

கேள்வி 188: அஸர் (ASR)

பதில் 188: இஸ்லாமியர் செய்யும் மதிய நேர தொழுகையை “அஸர் தொழுகை” என்பார்கள்.

சரியாக காலை கழுவாமல் தொழுதால் நரகம் தான்:

ஸஹீஹ் புகாரி 96:

96. 'நாங்கள் சென்ற பயணம் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். அஸர் தொழுகையின் நேரம் நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூச் செய்து கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் எங்களை வந்தடைந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) 'குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்திக் கூறினார்கள்' அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

522. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

சூரிய(னி)ன் (ஒளி) என் அறையில் (மறையாமல்) விழுந்து கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுவார்கள்.

அஸர் தொழுகையை தவரவிட்டால், குடும்பத்துக்கு ஆபத்து:

552. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'யாருக்கு அஸர் தொழுகை தவறிவிட்டதோ அவன் குடும்பமும் சொத்துக்களும் அழிக்கப் பட்டவனைப்போன்று இருக்கிறான்.' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

கேள்வி 189: அஸ்தக்பீர் அல்லாஹ் (Astaghfir Allah)

பதில் 189: இந்த அரபி சொற்றொடரின் பொருள் "நான் அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பை கோருகிறேன்" என்பதாகும்.

கேள்வி 190: அஸ்ஸலாமு அலைக்கும் (ASSALAMU ALAIKUM)

பதில் 190: இது ஒரு இஸ்லாமிய வாழ்த்து ஆகும். இதன் பொருள் ”உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்” என்பதாகும். ஒரு முஸ்லிம் முதன் முதலில் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று மற்றவரை பார்த்து வாழ்த்து கூறும் போது,  இதற்கு பதிலாக “வா அலைக்கும் ஸலாம்” என்று அவர் பதில் வாழ்த்து கூறுவார், இதன் பொருள், “உங்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்” என்பதாகும். 

இதே வாழ்த்துதலை,  இன்னும் நீட்டி, “அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மது அல்லாஹி வ பரகாதஹூ” என்று கூறுவர், இதன் பொருள் “சாந்தியும் அல்லாஹ்வின் அருளும், ஆசீர்வாதமும் உங்கள் மீது உண்டாவதாக” என்பதாகும். (Full version is "Assalamu alaikum wa Rahmatu Allahi wa Barakatuhu", meaning "Peace and the Mercy and Blessings of God be upon you").

இயேசு கூட 'உங்களுக்கு சமாதானம் (ஷாலோம் அலேகும்)' என்று கூறினார் என்று முஸ்லிம்கள் கூறுவார்கள். ஆகையால், இயேசு கூட இஸ்லாமிய பாணியில் தான் வாழ்த்துக்கள் கூறினார் என்று முஸ்லிம்கள் சொல்வார்கள்.

இயேசு எப்போது ஷாலோம் அலேகும் என்றுச் சொன்னார்?

யோவான் 20:19. வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

இயேசுக் கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு, சீடர்கள் பயத்தில் இருந்த சமயத்தில் இவ்வார்த்தைகளைச் சொல்லி அவர்களுடைய பயத்தை போக்கினார். அந்த வார்த்தைகள் அவர்களுடைய பயத்தை நீக்கவில்லை, சிலுவையில் அவரை மரித்தவராகக் கண்டு, கல்லறையில் அவர் வைக்கப்பட்ட பிறகு உயிர்த்தெழுந்து வந்து சொன்னதால் அவர்களின் பயம் நீங்கியது.

இயேசு உயிர்த்தெழுந்த பிறகு இவ்வார்த்தைகளைச் சொன்னார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

முஹம்மதுவின் பெயரை உச்சரிக்கும் போது, 1400 நூற்றாண்டுகளாக கோடிக்கணக்கான முஸ்லிம்கள் "அவர் மீது சாந்து உண்டாகட்டும்" என்றுச் சொல்கிறார்கள். முஹம்மதுவிற்கே சமாதானம் வேண்டுமென்று நீங்கள் அல்லாஹ்வை வேண்டிக்கொண்டால், உங்கள் நிலை என்னவென்று சிந்தித்துப் பாருங்கள். உயிர்த்தெழுந்த இயேசுக் கிறிஸ்து "உங்களுக்கு சமாதானம்" என்று சொல்வது உங்களால் கேட்கமுடிகின்றதா?

கேள்வி 191: ஆலிம் (ALIM)

பதில் 191: பண்டிதர், அதிகம் கற்றறிந்தவர் (அ) அறிஞர் என்பது இதன் பொருளாகும்.

கேள்வி 192: இப்லிஷ் (சாத்தான், சைத்தான், ஷைத்தான்)

பதில் 192: சாத்தானின் இஸ்லாமிய பெயர் "இப்லிஷ்" என்பதாகும். குர்ஆனும் இதர ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் சாத்தான் பற்றிய சுவாரசியமான விவரங்களைத் தருகின்றது, அவையாவன: 

  • சாத்தான் முடிச்சு போடுகிறான், 
  • இரவு நேரங்களில் மூக்கில் தங்கியிருக்கிறான், 
  • பிறக்கும் குழந்தைகளை தொடுகிறான், 
  • குழந்தைகளை அழ வைக்கிறான், 
  • தீர்க்கதரிசங்களில் தில்லுமுல்லு செய்துவிடுகிறான், 
  • மற்றவர்கள் பேசுவதை திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கிறான், 
  • மனிதர்களின் காதுகளில் சிறுநீர் கழிக்கிறான், 
  • கொட்டாவி விடுபவரைப் பார்த்து சிரிக்கிறான்
  • அதே போல கொட்டாவி விடுபவர்களின் வாயில் புகுந்துவிடுகிறான்.

சாத்தான் யார் என்பதில் முரண்பட்ட கருத்துக்கள் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது; சாத்தான் என்பவன் தேவதூதனா? அல்லது தேவ தூதனாக இருந்தவன் பாவம் செய்து தள்ளிவிடப்பட்ட பிறகு ஜின்னாக மாறிவிட்டானா? மனிதன் உண்டாக்கப்பட்ட நிகழ்ச்சியிலும், அதன் பிறகு அவன் பாவம் செய்த நிகழ்ச்சியிலும் சாத்தானின் பங்கு என்ன? இந்நிகழ்ச்சிகளில் அல்லாஹ்வின் முரண்பட்ட விவரங்கள் என்ன? போன்றவைகளை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை படிக்கவும்: "அல்லாஹ், ஆதாம் மற்றும் தேவதூதர்கள்".

முஹம்மதுவின் வாழ்வில் சாத்தானின் தாக்கம் இருந்திருக்கின்றது என்பதை விளக்கும் கட்டுரைகளை இங்கு படிக்கவும்: முஹம்மதுவும் சாத்தானும்

சாத்தான் பற்றிய இதர இஸ்லாமிய விவரங்கள்:

• இப்லீஸ் “ஜின்” இனத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான், குர்ஆன் 18:50

அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.(குர்ஆன் 18:50)

• ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான்

1142. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

"உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது, உறங்கு என்று கூறுகிறான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :19 (சஹி புஹாரி நூல்)

• தூங்கும் போது மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் புகுந்து மேல் பாகத்தில் தங்கியிருக்கிறான்

3295. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளூச் செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப்படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும் போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :3 Book :59 (சஹி புஹாரி நூல்)

• பிறக்கும் குழந்தைகளை தொடுகிறான், அழவைக்கிறான்

3431. ஸயீத் இப்னு முஸய்யப்(ரலி) அறிவித்தார் 

" 'ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவரின் மகனையும் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டு பிறகு, 'நான் இக் குழந்தைக்காகவும் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தானைவிட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்னும் (மர்யமுடைய தாய் செய்த பிரார்த்தனையை கூறும் - என்ற 3:36-வது) இறைவசனத்தை ஓதுவார்கள். Volume :4 Book :60 (சஹி புஹாரி நூல்)

மேற்கண்ட ஹதீஸில் காணப்படும் ஒரு சுவாரசியமான விவரம் என்னவென்றால், உலக மக்கள் பிறக்கும் போது அனைவரையும் சாத்தான் தொட்டானாம், ஆனால் இயேசுவின் தாய் மரியாளையும், இயேசுவையும் தொடவில்லையாம். ஒருவரை சாத்தான் தொட்டால் என்னவாகும்?

• சாத்தான் வெளிப்பாடுகளில் குழப்பத்தை உருவாக்கி, தன் சொந்த வார்த்தைகளை நுழைத்துவிடுகின்றான்: குர்ஆன் 22:52

(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை; எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.(குர்ஆன் 22:52)

சாத்தானின் வசனங்கள் பற்றிய விவரங்களை படிக்க இந்த கட்டுரையை சொடுக்கவும்: Satanic Verses? 

• திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கும் ஷைத்தான், குர்ஆன் 15:17-18, 37:8

விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நாம் அவற்றைப் பாதுகாத்தோம். திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கும் ஷைத்தானைத்தவிர; (அப்போது) பிரகாசமான தீப்பந்தம் அந்த ஷைத்தானை (விரட்டிப்) பின் பற்றும்.(குர்ஆன் 15:17-18)

(அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்). (அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது; இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள். (அவர்கள்) துரத்தப்படுகிறார்கள்; அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு. (குர்ஆன் 37:7-9)

• தொழாமல் தூங்கிக்கொண்டு இருப்பவர்களின் காதில் சாத்தான் சிறுநீர் கழிக்கிறான்:

1144. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். 

ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்' என்று விடையளித்தார்கள். Volume :1 Book :19 (சஹி புஹாரி நூல்)

கொட்டாவி விடுதல்:

o அல்லாஹ் கொட்டாவியை வெறுக்கிறார்: 

6223. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு ('யர்ஹமுக்கல்லாஹ் - அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்' என்று) மறுமொழி கூறுவது அவசியமாகும். ஆனால், கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், யாரேனும் (கட்டுப்படுத்தாமல்) 'ஹா' என்று (கொட்டாவியால்) சப்தமிட்டால் ஷைத்தான் சிரிக்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :6 Book :78 (சஹி புஹாரி நூல்)

o மனிதர்கள் கொட்டாவி விடும் போது சாத்தான் அவர்களுக்குள் செல்கிறான்

5719. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். Book :53 (சஹி முஸ்லிம்)

o ஒருவர் (கட்டுப்படுத்தாமல் 'ஹா' என்று சப்தமிட்டுக்) கொட்டாவிவிட்டால் அதைப் பார்த்து ஷைத்தான் சிரிக்கிறான் 

6226. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு ('அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக' என) மறுமொழி கூறுவது அவசியமாகும். ஆனால், கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் கட்டப்படுத்தட்டும். ஏனெனில், உங்களில் ஒருவர் (கட்டுப்படுத்தாமல் 'ஹா' என்று சப்தமிட்டுக்) கொட்டாவிவிட்டால் அதைப் பார்த்து ஷைத்தான் சிரிக்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :6 Book :78 (மேலும் பார்க்க சஹி புஹாரி எண் : 6223)

சாத்தான் பற்றிய இதர குர்ஆன் வசனங்கள்:

குர்ஆன் 2:34,36,168; 3:36,155,175; 4:38,60,76,116-117,119-120,140,145; 5:90-91; 6:38,43,68; 7:11-12,20-21,27,175,200-201; 8:11,48; 12:5,42,100; 14:22; 15:30-40; 16:63,98; 17:27,53,61,64; 18:50-51; 18:63; 19:44-45; 20:53,116,120; 22:52; 24:21; 25:29; 26:95; 27:24; 28:15; 29:38; 31:21; 34:20-21; 35:6; 36:60; 37:65; 38:41,74-85; 41:36; 43:62; 47:25; 58:10,19; 59:16

கேள்வி 193: இமாம்

பதில் 193: முஸ்லிம் தலைவர்; முஸ்லிம்களின் ஆன்மீக தலைவர்; மசூதியில் தொழுகையை நடத்தும் தலைவர்.

ஒரு இஸ்லாமிய ஆன்மீக தலைவர் அரபி மொழியில் புலமை பெற்று இருக்கவேண்டும், முக்கியமாக குறைஷி அரபி மொழி வழக்கத்தை (உச்சரிப்பை) நன்கு கற்றறிந்தவராக இருக்கவேண்டும் (சஹிஹ் புகாரி 6.507)

ஷியா பிரிவில் உள்ள முஸ்லிம்கள் “இன்றும் இமாம்கள் மறைந்து வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று நம்புகிறார்கள். முஹம்மதுவின் மகள் ஃபாத்திமா மற்றும் அலி  மூலமாக வந்த 12 இமாம்களை ஷியா முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இமாம்கள் பாவமில்லாதவர்கள் என்றும் ஷியாக்கள் நம்புகிறார்கள்.

மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருக்கிறது:

46:12. இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது; (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. 

கேள்வி 194: கலீஃபா (கலிஃபா)

பதில் 194: கலிஃப்: இஸ்லாமிய நாட்டை தலைமை தாங்கி நடத்துபவரை கலிஃபா என்று அழைப்பார்கள். சஹீஹ் புகாரி ஹதீஸின் படி, இவர் அரபிய குறைஷி வம்சத்தில் பிறந்தவராக இருக்கவேண்டும். (Sahih Bukhari 8.817)

முஹம்மதுவிற்கு பிறகு இஸ்லாமிய நாட்டின் தலைவர்களை கலிஃபா என்று அழைப்பார்கள். முதல் நான்கு கலிஃபாக்களின் பெயர்களாவன: அபூ பக்கர், உமர், உஸ்மான் (உதமான்) மற்றும் அலி. அதன் பிறகு உம்மாயத் வம்சமும், அதன் பிறகு அப்பாஸித் வம்சமும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களாக ஆட்சி செய்தார்கள்.

கேள்வி 195: குறைஷ் (குரைஷ் - ஒரு வம்சத்தின் பெயர்)

பதில் 195: முஹம்மது பிறந்த வம்சம் "குறைஷி" வம்சமாகும். இஸ்லாமுக்கு முந்தைய காலத்தில் காபா என்ற மக்காவின் ஆலயத்தின் பாதுகாவலர்களாக (பராமரிப்பவர்களாக) இருந்தவர்கள், இந்த பிரிவினர் தான். குர்ஆனின் 106ம் அத்தியாயத்திற்கு "குறைஷின் (குறைஷிகள் )" என்று பெயர்.

கேள்வி 196: தபரி (Tabari)

பதில் 196: அபூ ஜபர் முஹம்மத் இப்னு ஜரீர் அத்தபரி  என்பது இவரது முழு பெயராகும்.  இவர் கி.பி. 839ம் ஆண்டு ஈரானிலுள்ள அமோல், தபரிஸ்தானில் பிறந்தார்.  இவர் ஈராக்கில் உள்ள பாக்தாத்தில் கி.பி. 923ம் ஆண்டு காலமானார். இவர் ஒரு முக்கியமான இஸ்லாமிய அறிஞராவார். இவர் இஸ்லாமின் ஆரம்ப கால விவரங்களை பல அறிஞர்களிடமிருந்து சேகரித்து தொகுத்தார்.

இவருக்கு பிறகு வந்த இஸ்லாமிய அறிஞர்கள்  தபரியின் இந்த தொகுப்பை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.  இவரது தொகுப்பிலிருந்து தான், அல்பிரட் குல்லேம் (Alfred Guillaume)  இப்னு இஷாக்கின் "முகம்மதுவின் சரிதையிலிருந்து" தொலைந்து விட்ட பகுதிகளை மீட்டு எடுத்தார். இப்னு ஹிஷாம் தம்முடைய சரிதையில் அவ்விவரங்களை வேண்டுமென்றே நீக்கி இருந்தார்.

இஸ்லாமின் சுன்னி பிரிவு முஸ்லிம்களின் கோட்பாடுகளுக்கு  தபரியின் தொகுப்பு ஒரு முக்கியமான மூலமாக இருந்துள்ளது. இவரைப் பற்றி சில விவரங்களை இந்த தொடுப்பில் காணலாம் (wikipedia)

கேள்வி 197: நிம்ரோத்

பதில் 197: இஸ்லாமின் படி, ஆபிரகாமும் (இப்ராஹிம்) நிம்ரோத்தும் சமகாலத்தவர்கள். உண்மையில் இவ்விருவரும் வெவ்வேறு காலத்தவர்கள்.  

பைபிளின் படி நிம்ரோத் ”கூஷ்” என்பவரின் மகன், கூஷ் ”ஹாம்”மின் மகன், இந்த “ஹாம்” நோவாவின் மகன் (பார்க்க ஆதியாகமம் 10:6,8), அதாவது நிம்ரோத் நோவாவின் கொள்ளுப்பேரனாவார்.

ஆபிரகாமின் வம்ச வரலாறு இவ்விதமாக உள்ளது, அதாவது ஆபிரகாம் தேராவின் மகன், தேராவின் தந்தை நாகோர், அவரின் தந்தை செரூகு, அவரின் தந்தை ரெகூ, அவரின் தந்தை பேலேகு, அவரின் தந்தை ஏபேர், அவரின் தந்தை சாலா, அவரின் தந்தை அர்பக்சாத், அவரின் தந்தை சேம், அவரின் தந்தை நோவா (ஆதியாகமம் 11:10-27).  ஆபிரகாமுக்கும் நோவாவிற்கு இடையே 9 வம்சங்கள் இருக்கின்றன.

கேள்வி 198: நிய்யத் (நிய்யா)

பதில் 198: ஒரு செயலை செய்வதற்கு முன்பாக அதை செய்வேன் என்று மனதில் எண்ணி, அதாவது முடிவு செய்து அறிக்கையிடுவதாகும். 

உதாரணத்திற்கு, முஸ்லிம்கள் நோன்பு தொடங்குவதற்கு முன்பு நிய்யத் செய்வதாகும் (இன்று ஒரு நாள் நோன்பு இருப்பேன் என்றுச் சொல்லி அறிக்கையிடுவதாகும்).

கேள்வி 199: மஹ்றம்

பதில் 199: மஹ்றம் என்பது முஸ்லிம்களில் ஒருவருக்கு அவரது பிறப்பின் காரணமாகத் திருமண உறவு வைத்துக்கொள்ளத் தடுக்கப்பட்டோராவர். பொதுவாக ஏற்கப்பட்டுள்ள கருத்தின்படி, பெண்கள் (ஹஜ்) பயணம் செய்யும்போது பயணத்தில் அவர்களுக்குத் துணையிருக்கத் தகுதியுள்ள ஒரு ஆடவர் உடன் செல்ல வேண்டும். பெண் புனிதப் பயணியைப் பொருத்தவரை, ஹஜ் நிறைவேற்றுவதற்கான ஒரு நிபந்தனையாகவும் இது கருதப்படுகிறது.

பெண் புனிதப் பயணிக்கு அவரின் கணவர் உடன் செல்லலாம். ஆனால் அவர் மஹ்றமல்லர். ஒரு பெண்ணுக்கு மஹ்றமானோர் அவரது தந்தை, தந்தையின் தந்தை, தாயின் தந்தை, தந்தையின் அல்லது தாயின் உடன் பிறந்தான், தன் உடன் பிறந்தான், மகன், மகனின் அல்லது மகளின் மகன் முதலியோர் ஆவர்.

ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும் போதும் அவரது மஹ்றமான ஆண் ஒருவரே அப்பெண்ணின் பாதுகாவலராக இருக்க வேண்டும். அப்படி மஹ்றமான ஆண் இல்லாத வேளையில், சரீஅத் சட்ட நீதிபதி அல்லது மேற்படி நீதிபதியின் அனுமதியுடன் அவரது பிரதிநிதி அத்திருமணத்தை நடத்தி வைக்கலாம்.

கேள்வி 200: மஸீஹி

பதில் 200: இதன் அர்த்தம் “கிறிஸ்தவர்கள்” என்பதாகும்.  இந்த வார்த்தை “அல்-மஸீஹ்” என்ற வார்த்தையிலிருந்து வந்தது. அல்-மஸீஹ் என்றால், “கிறிஸ்து”என்று பொருள்.  கிறிஸ்தவர்கள் மேசியா என்றுச் சொல்வார்கள், குர்-ஆன் மேசியாவை “அல்-மஸீஹ்” என்று அரபியில் சொல்கிறது.

கிறிஸ்தவர்கள் என்று அரபியில் சொல்லவேண்டுமென்றால் அவர்களை "மஸீஹி" என்பார்கள்.

கேள்வி 201: மாஷா அல்லாஹ்

பதில் 201: இதன் அர்த்தம் ”அல்லாஹ் நாடினால்” அல்லது “அல்லாஹ் எப்படி இந்த ஆச்சரியமானவைகளை உண்டாக்கியிருக்கிறார்!” என்றுச் சொல்லி ஆச்சரியப்படுவது ஆகும்.  பொதுவாக, முஸ்லிம்கள் ஆச்சரியமானவைகளை பார்த்துவிட்டால் “மாஷா அல்லாஹ்” என்றுச் சொல்லி, “இப்படிப்பட்டவைகளை படைத்த‌ அல்லாஹ்வை புகழுவார்கள்”.

கேள்வி 202: முஹர்ரம் (முஹரம் – முஃகர்ரம்)

பதில் 202: இஸ்லாமிய நாட்காட்டியில் (காலண்டரில்) "முஹர்ரம்" என்பது முதல் மாதமாகும். ஷியா முஸ்லிம்கள் முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்களை துக்க நாட்களாக அனுசரிக்கிறார்கள். கர்பலா என்ற இடத்தில் முஹம்மதுவின் பேரன் "ஹுசைன்" கொல்லப்பட்ட மாதமாக முஹர்ரம் இருப்பதால், அவரின் மரணத்தை நினைவு கூறும் வண்ணமாக இப்படி துக்க நாட்களை அனுசரிக்கிறார்கள். இந்த நாட்களில் அவர்கள் எந்த ஒரு கேளிக்கை காரியங்களிலும் ஈடுபடமாட்டார்கள்.

எகிப்தின் பார்வோன் கையிலிருந்து இஸ்ரவேல் மக்களை இறைவன் விடுவித்ததற்காக, சுன்னி (பிரிவினர்) முஸ்லிம்கள், முஹர்ரம் மாதத்தின் 9, 10 மற்றும் 11ம் நாட்களை நினைவு கூறுகிறார்கள்.

யூதர்கள் செய்கிறார்களே என்பதற்காக தானும் செய்வேன் என்று முஹம்மது முடிவு செய்தார்:

3397. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள் அதாவது ஆஷூராவுடைய (முஹர்ரம் 10வது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்று வந்ததை இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடுகிறார்கள் - யூதர்கள், 'இது மாபெரும் நாள். மூஸா(அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நான் அவர்களை விட மூஸா அவர்களுக்கு, மிக நெருக்கமானவன்' என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் (உபரியான) நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள்.

கேள்வி 203: யாஜித் 1 (முதலாம் யாஜித், ஆட்சி காலம் 680-683)

பதில் 203: முதலாம் யாஜித் “முஅவியாவின்” மகன் ஆவார். இவர் உம்மயத் வம்சத்தின் வழியில் வந்த இரண்டாவது காலிஃபா ஆவார்.  இவரது தந்தை மரித்த ஏப்ரில் 7ம் நாள் 680ம் ஆண்டு இவர் கலிஃபாவாக பதவி ஏற்றார். இவரது தந்தை ”முஅவியா” தனக்குப் பிறகு ஆட்சித் தலைவராக தன் மகனாகிய யாஜித் வரவேண்டும் என்று முடிவு செய்தார். இவரைத் தொடர்ந்து, சொந்த குடும்பத்தார்களே, ஆட்சித் தலைவர் பதவி வகிக்கவேண்டும் என்ற ஒரு பழக்கமாக வந்துவிட்டது. 

இந்த முதலாம் யாஜித் என்பவரினால் தான் ஹுசைன் மற்றும் அவரது குடும்பம் கர்பலா என்ற இடத்தில் முழுவதுமாக அழிந்துவிட்டது. இவர் நான்கு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவர் ஆட்சி புரிந்த காலத்தில் முஸ்லிம்கள் “கோராசன்” மற்றும் “கவிர்ஜம்” என்ற இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். இவர் ஒரு கவிஞரும் கூட. அரபி கஜல் என்ற பாடல்களை பாடும் ஹஃபிஜ் என்பவர், தன்னுடைய ”திவான்” என்ற கவிதையில், முதலாவது மற்றும் கடைசி வரிகளை இந்த யாஜித் என்பவரின் கவிதைகளிலிருந்து எடுத்துள்ளார். 

இவரைப் பற்றி மேலும் படிக்க:

  • இஸ்லாமின் அரச குடும்பம்: பாகம் 6: யாஜித்தும் ஹுசைனும் 
  • இஸ்லாமிய மூல நூல்களிலிருந்து கலிஃபத்துவத்தின் துவக்கம், சரிவு மற்றும் முழுவதுமான வீழ்ச்சி (ஆங்கில புத்தகம்)

கேள்வி 204: ரஜப்

பதில் 204: இஸ்லாமிய காலண்டரில் (நாட்காட்டியில்) 7 வது மாதமாக “ரஜப்” மாதம் இருக்கிறது.

கேள்வி 205: ரஜம் (Rajm) - கல்லெரிந்து கொல்லுதல்

பதில் 205: இஸ்லாமில் காணப்படும் “விபச்சாரத்திற்கு கல்லெரிந்து கொல்லும் தண்டனைப் பற்றிய” விவரங்களை படிக்க இந்த கட்டுரையை சொடுக்கவும்: Stoning and Flogging in Islam. 

இஸ்லாமிய ஹதீஸ்களின் படி, ”கல்லெரிந்து கொல்லுதல் பற்றிய வசனம்”  முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டதாம், ஆனால், அந்த வசனம் தற்காலத்தில் நம்மிடம் இருக்கும் குர்-ஆனில் காணப்படவில்லை. இதைப் பற்றி மேலும் அறிய படிக்கவும்: Verses of Stoning.

மூலம்

கேள்வி 206: ரஸூல் அல்லாஹ்

பதில் 206: இதன் அர்த்தம் “அல்லாஹ்வின் தூதர்” என்பதாகும்.  இந்த பட்டப்பெயர் முஹம்மதுவை பொதுவாக‌ குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

கேள்வி 207: லைலத்துல் கத்ர்

பதில் 207: இதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். இந்த இரவு ஆயிரம் மாதங்களை விட சிறப்புத் தகுதி பெற்றுள்ளதாக குர்ஆன் கூறுகிறது. இந்த இரவில் குர்-ஆன் இறக்கப்பட்டதாக குர்-ஆன் வசனம் கூறுகின்றது.

குர்-ஆன் 97:1-5 

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.

இதைப் பற்றி மேலும் அறிய கீழ்கண்ட கட்டுரையை படிக்கவும்: குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?

கேள்வி 208: லைலா - முஹம்மதுவிற்கும் லைலாவிற்கும் என்ன ச‌ம்மந்தம்?

பதில் 208: லைலா என்ற ஒரு பெண் முஹம்மதுவை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்கள்? ஏன்?

இஸ்லாமிய சரித்திர அறிஞர் தபரி "The History of Al-Tabari: The Last Years of the Prophet" என்ற முஹம்மதுவின் சரித்திரத்தில் கீழ்கண்ட நிகழ்ச்சியை குறிப்பிடுகிறார்.

முஹம்மது தெருவில் நடந்துச் சென்றுக்கொண்டு இருக்கும்போது, லைலா என்ற ஒரு பெண் அவருக்கு பின்னால் சென்று பின்பக்கத்திலிருந்து அவரது தோல்பட்டையில் தட்டுகிறாள். அவர் திரும்பி பார்த்ததும். என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா? என்று கேட்கிறாள். அதற்கு "நான் உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன்", என்றுச் சொல்லி தன் சம்மதத்தை முஹம்மது அளிக்கிறார். இந்தப் பெண் தன் ஜனங்களிடம் சென்று "முஹம்மதுவை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன், அவர் இதற்கு சம்மதம் என்று கூறினார்" என்று கூறுகிறாள். இதற்கு அம்மக்கள் "நீ ஒரு நல்ல குடும்பத்துப் பெண், ஆனால் முஹம்மது ஒரு பெண் பித்து பிடித்தவர்", இப்படிப்பட்டவரை நீ திருமணம் செய்துக்கொள்வது சரியானது அல்ல. எனவே, அவரிடம் சென்று, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்றுச் சொல்லி, அவரிடமிருந்து விலகி வந்துவிடு" என்று கூறினார்கள். இந்தப் பெண்ணும் அப்படியே முஹம்மதுவிடம் சென்று, தனக்கு விருப்பமில்லை, இந்த ஒப்பந்தத்தை முறித்துவிடுங்கள் என்று கூறுகிறாள், முஹம்மதுவும் இதற்கு ஒப்புதல் அளித்துவிடுகிறார். 

... Layla bt. al-Khatim b. 'Adi b. 'Amr b. Sawad b. Zafar b. al-Harith b. al-Khazraj approached the Prophet while his back was to the sun, and clapped him on his shoulder. He asked who it was, and she replied, "I am the daughter of one who competes with the wind. I am Layla bt. al-Khatim. I have come to offer myself [in marriage] to you, so marry me." He replied, "I accept." She went back to her people and said that the Messenger of God had married her. They said, "What a bad thing you have done! You are a self-respecting woman, but the Prophet is a womanizer. Seek an annulment from him." She went back to the Prophet and asked him to revoke the marriage and he complied with [her request]. 

(The History of Al-Tabari: The Last Years of the Prophet, translated and annotated by Ismail K. Poonawala [State University of New York Press, Albany, 1990], Volume IX, p. 139; bold emphasis ours) மூலம் 

இறைவனின் தீர்க்கதரிசி என்றுச் சொல்லக்கூடிய ஒரு நபர் செய்யக்கூடிய செயலா இது? முஹம்மதுவை அம்மக்கள் ஒரு பெண் பித்துபிடித்தவர் என்று ஏன் கூறினார்கள்? இதைப் பற்றி மேலும் அறிய இந்த கட்டுரையை படிக்கவும்: முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?

கேள்வி 209: ஜம் ஜம் கிணறு (தண்ணீர்) 

பதில் 209: மக்காவில் உள்ள இந்த கிணற்றிலிருந்து தான் ஆகார் தண்ணீர் குடித்து தன்னுடைய மற்றும் தன் மகன் இஸ்மாயிலுடைய தாகத்தை தணித்துக்கொண்டார் என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். அதாவது ஆபிரகாம் ஆகாரையும் இஸ்மவேலையும் வீட்டை விட்டு அனுப்பிவிட்ட போது இந்த நிகழ்ச்சி நடந்ததாக இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். முஸ்லிம்கள் ஒவ்வொரு ஆண்டும் "மக்காவிற்கு புனிதப்பயணம் (ஹஜ்)" செய்யும் போது இந்த நிகழ்ச்சியை நினைவு கூறுகிறார்கள்.

மேலும் ஹஜ் செய்து திரும்பும் முஸ்லிம்கள், இந்த ஜம் ஜம் தண்ணீரை தங்கள் நாட்டிற்கு (வீட்டிற்கு) கொண்டு வருகிறார்கள். அதனை தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுக்கிறார்கள். இந்த தண்ணிரை குடித்தால் நோய்கள் தீரும் என்றும் முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

கேள்வி 210: ஷியா

பதில் 210: ஷியா என்றால் "பின்பற்றுபவர்கள்" அல்லது "ஒரு கட்சியின் உறுப்பினர்கள்" என்று பொருளாகும். முஹம்மதுவின் மருமகனாகிய "அலி" அவர்களை பின்பற்றுபவர்கள் "ஷியா" பிரிவினர் என்று அழைக்கப்படுகிறார்கள். முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு இஸ்லாமிய சமுதாயத்திற்கு தலைமை (கலிஃபா) பொறுப்பேற்ற தலைவர்களில் "அலி" நான்காவதாக இருக்கிறார்கள். இந்த பிரிவினர், முதல் மூன்று தலைவர்களை அதிகாரபூர்வமான தலைவர்களாக அங்கீகரிப்பதில்லை. இவர்களின் கருத்துப்படி, முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக, இஸ்லாமிய சமுதாயத்தின் தலைவராக பதவி வகிப்பதற்கு முஹம்மதுவின் மருமகன் "அலி" அவர்களுக்குத் தான் உரிமை உள்ளது. அலி முஹம்மதுவின் மகள் பாத்திமாவின் கணவராவார். அலிக்கு பிறகு அந்த கலிஃபா பதவி அலியின் மகன்கள் ஹசேன், ஹுசேன் என்பவர்களுக்கு கிடைக்கவேண்டும் என்று ஷியா மக்கள் விரும்பினார்கள். ஆனால், ஹசேன் தன் உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டார். தனக்கு தலைமைப் பதவி கிடைக்கவேண்டும் என்று ஹுசேன் போராடியதால், கி.பி. 680ம் ஆண்டு, கர்பலா என்ற இடத்தில் நடந்த போரில் கொல்லப்பட்டார். ஹுசேனின் இந்த மரணம் (உயிர்த்தியாகம்) ஷியா முஸ்லிம்களுக்கு அதி முக்கியமான நிகழ்வாகும். இதனை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறுகிறார்கள். ஒரு வகையில் சொல்லவேண்டுமென்றால், ஷியா முஸ்லிம்கள், தங்கள் தலைவர் அடைந்த துக்கத்தை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூர்ந்து இவர்களும் துக்கமடைகிறார்கள்.

ஷியா இமாம்கள் "ஷியா சமுதாயத்தை" 12வது இமாம் வரை தலைமை தாங்கி நடத்திக்கொண்டு வந்தார்கள். அதன் பிறகு கி.பி. 874ஆண்டு அவர்கள் மறைந்து விட்டார்கள். இந்த 12வது இமாமும், அவருக்கு அடுத்தபடியாக பதவியேற்ற இமாம்களும் மறைந்திருக்கிறார்கள் என்றும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை மறைந்திருந்து அதன் பிறகு இவர்கள் தங்களை உலகிற்கு வெளிப்படுத்துவார்கள் என்று நம்பப்படுகின்றது. அவர்களுக்கு தனிப்பட்ட புத்தகங்கள் இருப்பதாகவும், அவைகள் குர்ஆனின் விளக்கவுரைகளாக இருக்கின்றன என்றும் நம்பப்படுகின்றது. ஷியாக்கள் பெரும்பான்மையாக ஈரான், ஈராக் மற்றும் லெபனானில் வாழ்கிறார்கள். சுன்னி முஸ்லிம்கள் பயன்படுத்தும் உஸ்மான் தயாரித்த பிரதியில் இருப்பதைக் காட்டிலும் வேறுவிதமான குர்ஆன் ஓதுதலை இவர்கள் கொண்டு இருக்கிறார்கள். 

இமாம்கள் பற்றி ஷியா பிரிவினரின் கீழ்கண்டவாறு நம்புகிறார்கள்:

  • மலக்குகளுக்கும் (தேவதூதர்களுக்கும்), தீர்க்கதரிசிகளுக்கும், இறைத்தூதர்களுக்கும் கொடுக்கப்பட்டு இருக்கும் ஞானம், இமாம்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது (பக்கம் 255).
  • கடந்த காலத்தில் நடந்துமுடிந்த அனைத்து விஷயங்களையும், எதிர் காலத்தில் நடக்கவிருக்கும் அனைத்து விஷயங்களையும் இமாம்கள் அறிவார்கள், இவர்களுக்கு மறைவாக எதுவும் இருக்காது (பக்கம் 260)
  • இமாம்கள் தவிர வேறு யாராலும் 100 சதவிகிதம் சரியாக குர்ஆனை தொகுக்க முடியாது, குர்ஆனில் உள்ள எல்லா ஞானமும் இமாம்களுக்கு உள்ளது (பக்கம் 228) (அல் காஃபியின் கருத்து)
  • இமாம்கள் உலகமனைத்திலும் ஆட்சி புரிய அதிகாரம் பெற்று இருக்கிறார்கள் "Certainly, the Imam commands a noble station and lofty position; a creative vicegerency to whose rule and power submit the very atoms of all creation!" (Khumaini, in his book, The Islamic Government page 52-53)

சில இஸ்லாமிய நாடுகள் ஷியா என்ற பிரிவு இல்லாமல் போகவேண்டும் என்று அதனை தங்கள் நாட்டில் தடை செய்கிறார்கள், உதாரணத்திற்கு மலேசியாவைச் சொல்லலாம். இந்த நாட்டில் ஷியா பிரிவை ஒழித்துக் கட்ட முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

தேதி: 5th May 2020


2020 ரமளான் தொடர் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்