ரமளான் 2022 - உவமை 4: தீய குத்தகைக்கார உவமையில் முரண்பாடும், பிழையும் உள்ளதா?

(ரமளான் 2022 தொடர் கட்டுரைகள்)

முந்தைய வேதங்களின் உவமைகளும் இஸ்லாமும்

ரமளான் 2022 ஆண்டின் முந்தைய கட்டுரைகளை கீழே படிக்கவும்:

"தீய குத்தகைக்காரர்களின் உவமையில் ஒரு முரண்பாடு உண்டென்றும் மற்றும் ஒரு பிழை உண்டென்றும்" உமரின் தம்பி கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலை இந்த நான்காம் தொடரில் காண்போம். இந்த தொடரை படிப்பதற்கு முன்பு குத்தகைக்காரர்கள் பற்றி மூன்றாம் தொடரில் உமருக்கும் அவரது தம்பிக்கும் இடையே நடந்த உரையாடலை படித்துவிடவும்.

தீய குத்தகைக்கார உவமையில் முரண்பாடும், பிழையும் உள்ளதா?

முன்னுரை மற்றும் பின்னணி: இஸ்லாமை தழுவியிருக்கின்ற உமரின் தம்பி, சௌதியில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார். நேற்று அவர் உமருக்கு போன் செய்து, மத்தேயு 21:33-44ல் இயேசு கூறிய "தீய குத்தகைக்காரர்களின் உவமையில்" இஸ்லாம் பற்றிய முன்னறிவிப்பு உண்டு என்று கூறினார், இதனை உமர் மறுத்து பதில் கூறினார். இந்த உரையாடலை மூன்றாம் கட்டுரையில் படிக்கலாம். அதன் பிறகு உமரின் தம்பி, சில மணி நேரம் சிந்தித்து, கீழ்கண்ட ஒரு மெயிலை உமருக்கு அனுப்பி, அதில் இரண்டு குற்றாச்சாட்டுக்களை முன்வைத்தார். இந்த தொடரில், அவர் முன்வைத்த அந்த 2 குற்றச்சாட்டுக்களுக்கு உமர் கொடுக்கும் பதிலைக் காண்போம். 

தம்பி அனுப்பிய‌ மெயில்:

அன்புள்ள அண்ணன் உமருக்கு,

நாம் இருவரும் பேசிய உவமையில் ஒரு முரண்பாட்டையும், ஒரு பிழையையும் நான் கண்டுபிடித்தேன்.

முரண்பாடு: மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தி நூல்களில் வரும் உவமையில் 'அந்த குமாரனை திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே கொலை செய்தார்கள்' என்று உள்ளது, ஆனால், மாற்குவில் "அந்த குமாரனை திராட்சை தோட்டத்தில் கொலை செய்து, அதன் பிறகு வெளியே போட்டார்கள்" என்று உள்ளது. ஏன் இந்த முரண்பாடு? இயேசு உவமையைச் சொல்லும் போது, "அந்த குமாரனை எங்கே கொலை செய்தார்கள்?" என்றுச் சொல்லியிருப்பார்? தோட்டத்திற்குள்ளா? அல்லது வெளியேவா?

மத்தேயு 21:33-45: 

39. அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள்.

லூக்கா 20: 9-19:

15. அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள்.

மாற்கு 12: 1-12:

8. அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள்.

உவமையில் பிழை: யாராவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆபத்து இருக்கிறது என்று அறிந்திருக்கும் போது, தங்கள் மகனை அனுப்புவார்களா?  இந்த உவமையில், தன் குத்தகைக்காரர்கள் தொடர்ச்சியாக தன் ஊழியக்காரர்களை அவமானப்படுத்தியும், கொன்றுக்கொண்டும் இருக்கும் போது, அந்த தோட்டத்தின் எஜமான், ஏன் தன் குமாரனை அனுப்பவேண்டும்? அவர்கள் தீயவர்கள் என்று அவனுக்குத் தெரியாதா? புத்தியுள்ளவன் இப்படிச் செய்வானா?

உமர் அண்ணே! என்னுடைய மேற்கண்ட இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லுங்கள்.

இப்படிக்கு,

தம்பி

சௌதி அரேபியா

உமரின் பதில்:

அன்புள்ள தம்பிக்கு,

உன்னுடைய மெயிலைப் படித்தேன், நீ முன்வைத்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு பதிலை பார்ப்பதற்கு முன்பாக சில கேள்விகளை உன்னிடம் கேட்டுவிட்டு, என் பதில்களை தொடருவேன்.

 • முதலில் என்னை தொடர்பு கொண்டு, அந்த தீய குத்தகைக்காரர்களைப் பற்றிய உவமையை ஆய்வு செய்யச்சொல்லியது நீ தான்.
 • அதில் வரும் 'தோட்டத்தின் சொந்தக்காரன்' அல்லாஹ் தான் என்று நீ சொன்னாய்.
 • இஸ்லாம் பற்றிய முன்னறிவிப்பு அதில் உண்டு என்றுச் சொன்னதும் நீ தான். 
 • இப்போது வந்து, அந்த தோட்டக்காரனுக்கு புத்தியுள்ளதா? என்று கேட்கிறாய்.
 • ஒருவேளை, உன் கருத்துப்படி, இஸ்லாம் பற்றிய முன்னறிவிப்பு இந்த உவமையில் உள்ளது என்று நான் ஒரு பேச்சுக்காக‌ ஒப்புக்கொண்டால், நீ "அல்லாஹ்விற்கு புத்தியில்லை" என்று சொல்வாயா? ஏனென்றால், உன் கருத்துப்படி அந்த தோட்டக்காரன் அல்லாஹ் தானே!

நீ சரியாக சிந்திக்கவேண்டும் என்பதற்காகத் தான் இக்கேள்விகளை கேட்டேன். முதலில் அரைகுறையாக ஆய்வு செய்து, இஸ்லாமை பைபிளில் திணிக்க முயலுவது, அது முடியாமல் போக, உடனே வண்டியை திருப்பிக்கொண்டு வந்து, முன் சொன்ன கருத்துக்கு நேர் எதிர் கருத்தைச் சொல்வது, இதுவே உனக்கு வாடிக்கையாக ஆகிவிட்டது, தம்பி.

இப்போது நீ முன்வைத்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு பதில்களைக் காண்போம்.

குற்றச்சாட்டு 1: மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்திகளில் வரும் இந்த உவமையில் முரண்பாடு உள்ளதா?

தம்பி எழுதியது:

முரண்பாடு: மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தி நூல்களில் வரும் உவமையில் 'அந்த குமாரனை திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே கொலை செய்தார்கள்' என்று உள்ளது, ஆனால், மாற்குவில் "அந்த குமாரனை திராட்சை தோட்டத்தில் கொலை செய்து, அதன் பிறகு வெளியே போட்டார்கள்" என்று உள்ளது. ஏன் இந்த முரண்பாடு? இயேசு உவமையைச் சொல்லும் போது, "அந்த குமாரனை எங்கே கொலை செய்தார்கள்?" என்றுச் சொல்லியிருப்பார்? தோட்டத்திற்குள்ளா? அல்லது வெளியேவா?

பதில்:

இயேசு கூறிய உவமைகளில் ஒரு முக்கியமான கருப்பொருள் இருக்கும். ஒரு உவமை எந்த நோக்கத்திற்காக சொல்லப்பட்டதோ அந்த 'கருப்பொருளை' அங்கே பார்க்கவேண்டுமே ஒழிய, பைபிளில் சொல்லப்பட்ட அனைத்து இறையியல் விவரங்களும் ஒவ்வொரு உவமையிலும் இருக்கவேண்டுமென்று எதிர்ப்பார்ப்பது தவறானதாகும்.

உதாரணத்திற்கு, இந்த 'தீய குத்தகைக்காரர்கள்' உவமையில் இயேசு எவைகளை முக்கியமாக காட்ட விரும்பினார்?

 • யூதர்களிடம் ஒரு நாட்டை கர்த்தர் கொடுத்தார் (குத்தைக்காரர்களிடம் தோட்டாத்தை எஜமான் கொடுத்தார்).
 • யூதர்களிடம் கீழ்படிதலையும், நீதியான செயல்களையும் கர்த்தர் எதிர்ப்பார்த்தார், அதற்காக தீர்க்கதரிசிகளை அனுப்பினார்.  குத்தகைக்காரர்களிடம் கனிகளை (தன் பங்கை) வாங்கிக்கொண்டு வரும்படி ஊழியக்காரர்களை எஜமான் அனுப்பினார்.
 • யூதர்கள் தீர்க்கதரிசிகளை அவமானப்படுத்தினார்கள், சிலரை கொன்றார்கள். இதே போன்று குத்தகைக்காரர்கள் ஊழியர்களுக்குச் செய்தார்கள்.

இதுவரை சொன்னது, நடந்துமுடிந்த யூத சரித்திரம். அடுத்ததாக‌, இனி என்ன நடக்கும் என்று இயேசு தம் உவமையில் கீழ்கண்டவாறு கூறுகின்றார்.

 • கடைசியாக, தேவன் தம் குமாரனையே அனுப்பினார். கடைசியாக எஜமான் தம் குமாரனை அனுப்பினார்.  இந்த குமாரன் தான் இயேசுக் கிறிஸ்து.
 • யூதர்கள் அந்த குமாரனை கொலை செய்வார்கள். குத்தகைக்காரர்கள் அந்த குமாரனையும் கொன்றார்கள் (இது இயேசுவிற்கு யூதர்கள் செய்யப்போகும் தீயச் செயலாகும்).
 • இதனால், கர்த்தர் யூதர்களிடமிருந்து அந்த தோட்டத்தை பிடுங்குவார், அவர்களை தண்டிப்பார் (சில வேத அறிஞர்கள், இது கி.பி. 70ல் ரோமர்களால் யூதர்களுக்கு நடந்தது என்று கருதுகிறார்கள்) மற்றும் இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு திருச்சபை உருவானது.
 • திருச்சபை தான், அந்த கனிகள் கொடுக்கும் இன்னொரு குத்தகைக்காரர்கள் என்பது இந்த உவமையின் கருப்பொருள்

இந்த உவமையில், இயேசுவின் மரணமும், அதன் பிறகு யூதர்களுக்கு நடக்கும் காரியங்களும் தான் முக்கியமே தவிர, அவர்கள் அந்த குமாரனை தோட்டத்தில் கொலை செய்தார்களா? அதற்கு வெளியே கொலை செய்தார்களா என்பதல்ல.  இன்னும் சொல்லவேண்டுமென்றால், இந்த உவமையில் 'இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிச் சொல்லப்படவில்லை' என்பதை கவனிக்கவேண்டும்.  இயேசுவின் உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்தவத்தின் முக்கியமான தூண் என்று நாம் அனைவரும் அறிவோம், ஆனால் அதுவும் இங்கு குறிப்பிடவில்லை. இந்த உவமையின் கருப்பொருள் 'உயிர்த்தெழுதல் அல்ல, இயேசுவின் மரணமும், அதன் பிறகு இஸ்ரவேல் நாட்டுக்கு நடக்கும் காரியங்கள் தான்'. எனவே, மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்தி நூல்களில், உவமையின் கருப்பொருள் மாற்றமில்லாமல் சொல்லப்பட்டுள்ளது, இது முரண்பாடு அல்ல. 

ஒருவேளை மத்தேயுவில் "குமாரன் கொல்லப்பட்டார் என்றும்", மாற்கு அல்லது லூக்காவில் "குமாரனை அவர்கள் கொலை செய்யவில்லை" என்று வெளிப்படையாகச் சொல்லியிருந்தால், அது முரண்பாடு என்று நாம் கருதலாம். 

இங்கு இன்னொரு முக்கியமான விவரத்தை பதிவு செய்யவேண்டும். ஒரு குற்றம் நடந்து, அதனை பார்த்தவர்கள் நீதிமன்றத்தில், வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து, கிளிப்பிள்ளைப்போல‌ முக்கியமான பெரிய விஷயத்திலிருந்து, அற்பமான விஷயம் வரைக்கும் ஒரே மாதிரியாகச் சொன்னால், 'நீதிமன்றம்' இவர்களின் 'சாட்சிகளை' நேர்மையான சாட்சிகளாக‌ ஏற்காது.  ஏனென்றால், நடந்த நிகழ்ச்சியின்/குற்றத்தின் கருபொருள் ஒரே மாதிரியாக இருக்கவேண்டுமே ஒழிய, மற்ற முக்கியமில்லாத விஷயங்கள், அந்த குற்றத்தை கண்களால் கண்டவர்களின் சொந்த வார்த்தைகளாக, விவரங்களாக இருக்கவேண்டும். எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தை ஒரே மாதிரி அனைவரும் காபி அடித்தது போல சொல்லக்கூடாது. இப்படி யாராவது சாட்சி சொன்னால், நீதி மன்றம் "இவர்கள் ஒன்றாக சேர்ந்து பொய்ச்சாட்சி" சொல்கிறார்கள் என்று தீர்ப்பு வழங்கிவிடுவார்கள்.

இது போலவே, இயேசு சொன்ன உவமையை கேட்ட அவரது சீடர் மத்தேயுவும், ஆய்வு செய்து, சீடர்களிடம் கேட்டறிந்த லூக்கா என்பவரும் ஒரு மாதிரியாகவும், இயேசுவின் இன்னொரு சீடராகிய பேதுருவிடம் கேட்டறிந்த மாற்கு, வேறு மாதிரியாகவும் சின்னா விஷயங்களில் மாற்றிச் சொன்னது, "நீதிமன்றத்தில் கூட" சரியான சாட்சிகளாகவே ஏற்றுக்கொள்ளப்படும். இது முரண்பாடு அல்ல, இது தான் உண்மையான மாற்றமில்லாத பதிவு.

நற்செய்தி நூல்களில் உள்ள இப்படிப்பட்ட சின்ன சின்ன வித்தியாசங்களே, இந்த நூல்களை அவர்கள் தனித்தனியாக எழுதினார்கள், யாருடைய வற்புறுத்தல் இல்லாமல் எழுதினார்கள் என்பதற்கு சரியான சான்றாக உள்ளது.

குற்றச்சாட்டு 2:

புத்தியுள்ள எவனாவது இப்படிச் செய்வானா?

இப்போது தம்பி, உன்னுடைய இரண்டாவது குற்றச்சாட்டுக்கு பதிலைக் காண்போம்.

தம்பி எழுதியது:

உவமையில் பிழை: யாராவது தன் வேலையாட்களை கொன்றுக்கொண்டு இருக்கும் போது, தன் மகனை அனுப்புவார்களா?  இந்த உவமையில், தன் குத்தகைக்காரர்கள் தொடர்ச்சியாக தன் ஊழியக்காரர்களை அவமானப்படுத்தியும், கொன்றுக்கொண்டும் இருக்கும் போது, அந்த தோட்டத்தின் எஜமான், ஏன் தன் குமாரனை அனுப்பவேண்டும்? அவர்கள் தீயவர்கள் என்று அவனுக்குத் தெரியாதா? புத்தியுள்ளவன் இப்படிச் செய்வானா?

பதில்:

இயேசு கூறிய ஒவ்வொரு உவமையிலும், ஒரு நேரடி விளக்கம் மற்றும் ஒரு மறைமுக "ஆன்மீக விளக்கம்" என்று இரண்டு விளக்கங்களை பெரும்பான்மையாக காணலாம். இந்த உவமையில் இவ்விரண்டும் உண்டு.

நேரடி விளக்கம் அல்லது பார்வை:

நேரடி விளக்கத்தின்படி பார்த்தால், எந்த ஒரு தோட்டக்கார எஜமானும், தன் வேலையாட்களை அந்த குத்தகைக்காரர்கள், அவமானப்படுத்தியும், காயப்படுத்தியும் சிலரை கொன்றுக்கொண்டும் இருந்தால், உண்மையில் தன் மகனை அனுப்பமாட்டான். அரசாங்க உதவியோடும், அல்லது காவலாளிகளின் உதவியோடும் சென்று, கடைசியாக அவர்களை தண்டித்தது போல தண்டிப்பான், நிச்சயமாக தன் மகனை ஆபத்தான இடத்திற்கு அனுப்பமாட்டான். இதனை சராசரியாக அனைவரும் விளங்கிக்கொள்வார்கள்.

மறைமுக ஆன்மீக விளக்கம்:

இந்த உவமையில் இயேசு சொன்ன மறைமுக அல்லது ஆன்மீக விளக்கம், மோசேயின் காலத்திலிருந்து தொடங்குகிறது.

யூதர்களுக்கு ஒரு தனி நாட்டை தேவன் கொடுத்தார், அவர்களிடம் நற்செயல்களை எதிர்ப்பார்த்தார், அவர்களிட‌ம் மோசே தொடங்கி, யோவான் ஸ்நானகன் வரை கிட்டத்தட்ட 1500 ஆண்டுகள், பல தீர்க்கதரிசிகளை அனுப்பினார். 

இதனை பழைய ஏற்பாட்டிலும், இஸ்ரேல் தேசத்தையும் யூதர்களையும் "திராட்சை தோட்டத்திற்கு சமமாக" தேவன் ஒப்பிட்டார்.

கீழ்கண்ட வசனங்களை ஒரு முறை படிக்கவும்:

ஏசாயா 5:1-7

1. இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு. 2. அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.

 3. எருசலேமின் குடிகளே, யூதாவின் மனுஷரே, எனக்கும் என் திராட்சத்தோட்டத்துக்கும் நியாயந்தீருங்கள். 4. நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன? 5. இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம்.

6. அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களை கொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார். 7. சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு.

மனிதனின் இரட்சிப்புக்காக தேவன் பொறுமையாக 1500 ஆண்டுகள், தம் ஊழியக்காரர்களை அனுப்பினார். அவர்களை யூதர்கள் துன்புறுத்தினார்கள், சிலரை கொன்றார்கள். இது இயேசுவின் காலம் வரை தொடர்ந்தது.

மனிதனை இரட்சிக்க, தேவன் தீட்டிய திட்டம், ஆதாம் கால முதல் செயல்பாட்டில் இருந்தது.  ஆதாமின் கீழ்படியாமையினால் உண்டான தண்டனையிலிருந்து மனிதனை இரட்சிக்க, தேவன் தம் அன்பின் மிகுதியினால், தாமே வழியையும் உண்டாக்கினார்.  

ஆதியாகமம் 3:15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

தேவன் எப்படி சாத்தானின் தலையை நசுக்குவார்? தம்முடைய வார்த்தையை உலகத்தில் அனுப்பி, நம் தண்டனையை சிலுவையில் சுமந்துக்கொண்டு சாத்தானை ஜெயித்தார், மனிதர்களை மீட்டார்.  தேவனின் திட்டத்தின்படியே எல்லாமே நடந்தது. வார்த்தையாகிய இறைவன் மனிதனாக இயேசுவாக வந்தார், அவரே சுயமாக தம்மை ஒப்புக்கொடுத்து மரித்தார் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.

மேற்கண்ட உவமையின் நேரடியான விளக்கத்தின்படி பார்த்தால், எந்த ஒரு தகப்பனும் தன் மகனை ஆபத்தான இடத்திற்கு அனுப்பமாட்டான், ஆனால் ஆன்மீக விளக்கத்தின்படி, அந்த உவமையை பார்க்கும் போது, அது தேவனின் அன்பை வெளிப்படுத்துகிறது, அந்த குமாரனின் தியாகத்தை வெளிப்படுத்துகிறது.

அந்த உவமை, ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரையுள்ள தேவனுடைய அனைத்து திட்டத்தையும், செயல்பாடுகளையும் பிரதிபலிக்கவில்லை,  அதற்கு பதிலாக, ஒரு பகுதியை மட்டுமே வெளிப்படுத்துகிறது. குமாரனை உலகில் அனுப்பி, மீட்பை கொடுத்தார் என்ற ஒரு பகுதியை அது வெளிப்படுத்துகிறது.

எனவே, தம்பி, அந்த உவமையில் பிழையுள்ளது என்று நீ சொன்னாயே, அது தவறு. நேரடியான விளக்கமான உலக நடைமுறையின்படி பார்த்தால், அந்த தோட்டக்காரன் செய்தது தவறு, ஆனால், ஆன்மீக பொருளில் பார்க்கும் போது, மனிதர்களை மீட்க "தேவனின் அன்பு" என்ன செய்தது? என்பதை அது காட்டுகிறது.  யோவான் 3:16ன் படி, தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

இதுவரை பார்த்த விவரங்களின் படி, அந்த உவமையில் முரண்பாடும் இல்லை, பிழையும் இல்லை என்பதை நீ புரிந்துக்கொள்ளவேண்டும் தம்பி. இன்னும் உனக்கு சந்தேகம் இருந்தால், எனக்கு எழுதவும்.

இன்னொரு உவமையோடு சந்திப்போம்...

தேதி: 6th April 2022


ரமளான் 2022 கட்டுரைகள்

முந்தைய ரமளான் கட்டுரைகள்

உமரின் பக்கம்