உவமை 5: முஸ்லிம்களே, உங்கள் கண்ணத்தில் ஒரு தகப்பனாக‌ அல்லாஹ் முத்தம் கொடுப்பானா? சொந்த வீட்டிலேயே அடிமைகளாக வாழும் பிள்ளைகளா நீங்கள்?

(ரமளான் 2022 தொடர் கட்டுரைகள்)

முந்தைய வேதங்களின் உவமைகளும் இஸ்லாமும்

ரமளான் 2022 ஆண்டின் முந்தைய கட்டுரைகளை கீழே படிக்கவும்:

இந்த தற்போதைய கட்டுரையில் இயேசு கூறிய இன்னொரு முக்கியமான உவமையை காண்போம். இயேசுவின் உவமைகளில் இது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த உவமையில் ஒரு அன்பான தகப்பன், இரண்டு மகன்கள் வருகிறார்கள். இதனை கெட்ட குமாரன் அல்லது தொலைந்துப்போன குமாரன் உவமை என்றும்   கூறுவார்கள்.

இந்த உவமையை படிப்போம் வாருங்கள்.

லூக்கா 15:11-33

11. பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். 12. அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். 13. சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

14. எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி, 15. அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். 16. அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை. 

17. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.18. நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். 19. இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி; 20. எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

21. குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். 22. அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். 23. கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். 24. என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.

25. அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு; 26. ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். 27. அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான். 28. அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.

29. அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. 30. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான். 31. அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.

32. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே என்று சொன்னான் என்றார்.

1) தொலைந்த ஆடு, காசு மற்றும் குமாரன்:

லூக்கா 15ம் அத்தியாயத்தின் தொடக்கத்தில், இயேசு பலவகையான மக்களோடு உரையாடுகின்றார் மற்றும் சேர்ந்து சாப்பிடுகின்றார். இதனைக் கண்ட யூத மத தலைவர்கள், "இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார்" என்று குற்றஞ்சாட்டினார்கள்.

அப்பொழுது இயேசு மூன்று உவமைகளைச் சொன்னார்: 

  • காணாமல் போன ஆடு
  • காணாமல் போன காசு மற்றும் 
  • காணாமல் போன குமாரன்

இம்மூன்று உவமைகளிலும் ஒரு ஒற்றுமையை காணமுடியும், அதாவது இவைகளில் தொடக்கத்தில் ஆடு, காசு மற்றும் குமாரன்  தொலைந்துப்போகிறார்கள், மறுபடியும் கண்டுபிடிக்கப்படுகிறார்கள், கடைசியாக "கொண்டாட்டத்தோடு முடிவடைகிறது இவ்வுவமைகள்".

இந்த காணாமல் போன உவமையில், தன் சொத்துக்களை எடுத்துக்கொண்டு தூரமான இடத்திற்குச் சென்று, தீய வழிகளில் அவைகளை செலவழித்து, ஏழ்மையில் உழன்று கடைசியாக, தன் தகப்பன் வீட்டுக்கு அவன் திரும்பி வரும் போது, அவன் தகப்பன் அவனை மன்னித்து, பிறகு தொலைந்துப்போன தன் மகன் திரும்பி வந்துவிட்டதால், அனைவருக்கும் விருந்து கொடுக்கிறான்.

2) மனந்திரும்பி வந்த மகனை முத்தம் செய்த தகப்பன்

இந்த உவமையில், 20ம் வசனத்தில் "தகப்பன் தானே முன்வந்து தன் மகனை ஏற்றுக்கொண்டு, முத்தஞ்செய்தான்" என்று வாசிக்கிறோம்.

15:20. எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்

இது தான் ஒரு தகப்பனின் நிபந்தனையில்லாத அன்பு. மகன் செய்தது தவறு தான், ஆனால் அவன் மனந்திரும்பி  வந்த பிறகு, அவனை ஏற்றுக்கொண்டு, அவன் மீது அன்பை பொழியும் ஒரு தெய்வமாக இயேசு இந்த உவமையில் காணப்படுகின்றார். 

இந்த தகப்பனைப்போல அல்லாஹ் உங்களை முத்தஞ்ச்செய்வானா? உங்களை கட்டி அரவனைத்து அன்பு செலுத்தி ஏற்றுக்கொள்வானா? அல்லது இதோ! நீ திருந்தி வந்துவிட்டாய், இனி நீ என் வீட்டு வேலைக்காரனாக ஏற்றுக்கொள்கிறேன்,  உனக்கு சாப்பாடு கிடைக்கும், சம்பளம் கிடைக்கும் என்றுச் சொல்வானா?

அந்த மகன் நினைத்தது இது தான், குறைந்தபட்சம் தன் சொந்த வீட்டில் வேலைக்காரனாகவாவது தனக்கு இடம் கிடைத்தால் போதும், வாழ்ந்துவிடலாம் என்று நினைத்தான். ஆனால், அவன் தகப்பனோ "அவன் எதிர்ப்பார்த்ததற்கு மேலாக அன்பு செலுத்தினார், இதைத் தான் கிருபை என்று அழைக்கிறோம் ". தகுதி இல்லாதவன் மீது காட்டப்படும் அளவற்ற நிபந்தனையற்ற அன்பு தான் கிருபை என்று பொருள் கூறுவார்கள். ஆம், இந்த உவமையில் தகப்பன், தன் மகன் மீது "கிருபையை பொழிந்தார்".  தகப்பனோடு சொத்துக்களுக்காக‌ சண்டைபோட்டு, தகப்பனின் வீட்டைவிட்டு வெளியே சென்று, தீயவழிகளில் செலவழித்த போதே, அவன் "மகன் என்ற தகுதியை இழந்துவிட்டான்", இருந்த போதிலும், மறுபடியும் "மகன்" என்ற அதே "தகுதியை" திரும்ப கொடுத்தார் அந்த தகப்பன்.

"வேலைக்காரன்" என்ற உரிமை கிடைத்தால் போதும் என்று எண்ணி வந்தவனுக்கு, "மகன்" என்ற உரிமையை திரும்பகொடுத்தது, அன்பின் உச்சக்கட்டம். "உயிர் வாழ உணவு கிடைத்தால் போதும் என்று எண்ணி வந்தவனுக்கு", விருந்து செய்து, தன் சொத்துக்களுக்கு மறுபடியும் எஜமானாக்கியதே, கிருபையின் ஆழம் எனலாம்.

3) அல்லாஹ் மிகப் பெரும் கிருபையாளன்

"அல்லாஹ் மிகப் பெரும் கிருபையாளன் (2:105)" என்று குர்‍ஆனில் வாசிக்கிறோம், இது உண்மையானால், ஏன் அல்லாஹ் நம்மை மகன்களாகவும், மகள்களாகவும் ஏற்றுக்கொள்வதில்லை? நாம் மன்னிப்பைக் கோரி அவனிடம் வந்தால், நம்மை கட்டி அரவனைத்து முத்தமிடுவதில்லை? "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்" என்றுச் சொல்வது பொய் தானே! இவ்விரண்டையும் பிள்ளைகள் மீது காட்டுவார்கள், அடிமைகள் மீதல்ல‌.

ஒருவரை அடிமை என்று அழைத்தாலே, அங்கு "அளவற்ற அருள்" அழிந்துவிட்டதென்று பொருள், "நிகரற்ற அன்பு அங்கு தூக்கு போட்டுக்கொண்டதென்று பொருள்". "நீ என் அடிமை" என்று அல்லாஹ் சொல்லும் போதே, அன்புக்கும், கிருபைக்கும் அல்லாஹ்விற்கும் சம்மந்தமில்லை என்று பொருள்படவில்லையா?

நாம் சிறு வயதாக இருக்கும் போது, நம் தகப்பன் நம்மை தூக்கி எடுத்து கொடுத்த முத்தங்கள் நமக்கு ஞாபகம் இருக்கின்றதல்லவா? அந்த அன்பையும், அந்த தகப்பனின் தொடுதலையும் இன்றும் நினைக்கும் போது, ஒரு வகையான மகிழ்ச்சி நம் மனதில் தோன்றுகிறதல்லவா? இதனை யார் மறுக்கமுடியும்!

ஒருவேளை நம் தந்தை நம்மைவிட்டு சென்றுவிட்டிருந்தாலும், அந்த தெய்வமே நமக்கு தந்தையாக ஆறுதலையும், நிம்மதியையும் தந்தை கொடுக்கும் பாதுகாப்பையும் கொடுத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? இவ்வுலகத்தில் சந்திக்கும் அனைத்து சவால்களையும் தீர்க்கத் தேவையான சக்தி கிடைப்பது போன்ற தைரியம் வந்துவிடுமல்லவா?

அல்லாஹ் ஒரு தகப்பானாக உங்களை முத்தமிடுவானா? இது ஷிர்க் என்று நீங்கள் சொல்வீர்களானால், உங்கள் நம்பிக்கையை மறுபரிசீலனைச் செய்யுங்கள். நமக்காகவே உவ்வுலகை இவ்வளவு அழகாக படைத்தவன், நம்மை சிறப்பாக படைத்தவன் நம்மை 'அடிமைகள் என்றும், வேலையாட்கள் என்றும் கூறுவான்’ என்றுச் சொன்னால், அதனை அங்கீகரிக்க‌ எவ்வளவு பெரிய மடமை நமக்கு வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு அடிமைக்காக இவ்வளவு பெரிய விஷயங்களை ஒருவன் செய்வானா? சிந்தித்துப்பாருங்கள்.

இந்த உவமையில் வரும் அந்த தகப்பன் நிச்சயமாக அல்லாஹ்வாக இருக்கமுடியாது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. முஸ்லிம்கள் "அல்லாஹ்வே, என் தகப்பனே" என்றுச் சொல்லி அழைத்தால், அல்லாஹ்விற்கு என்ன இழுக்கு வந்துவிடும்? “என் எஜமானனே” என்று அழைத்தால், அல்லாஹ்விற்கு என்ன மேன்மை வந்துவிடுகின்றது?

சொந்த வீட்டிலேயே வேலைக்காரர்களாக, அடிமைகளாக வாழ விரும்புகிறீர்களா? அல்லது சொந்த வீட்டில் பிள்ளைகளாக, அதிகாரத்தோடும், உரிமையோடும் சுதந்திரமாக வாழவிரும்புகிறீர்களா? இந்த ஒரு கேள்விக்கான பதிலில் உங்களின் நித்திய வாழ்க்கை மறைந்திருக்கிறது.

இன்னொரு உவமையோடு சந்திப்போம்...

தேதி: 12th April 2022


ரமளான் 2022 கட்டுரைகள்

முந்தைய ஆண்டுகளின் ரமளான் கட்டுரைகள்

உமரின் பக்கம்