உவமை 7: அன்றைய பரிசேயர்களும் இன்றைய முஸ்லிம்களும் – சுயநீதி தம்பட்டத்தினால் இறைவனின் அன்பை பெறமுடியுமா?

(ரமளான் 2022 தொடர் கட்டுரைகள்)

முந்தைய வேதங்களின் உவமைகளும் இஸ்லாமும்

ரமளான் 2022 ஆண்டின் முந்தைய கட்டுரைகளை கீழே படிக்கவும்:

இந்த தற்போதைய கட்டுரையில், இயேசு கூறிய இன்னொரு உவமையைக் காண்போம், இது மிகவும் சிறிய உவமை, ஆனால், இஸ்லாமிய மையப்பகுதியை தொட்டுப்பேசும் உவமையாகும்.

அன்றைய பரிசேயர்களும் இன்றைய முஸ்லிம்களும்

இன்றைய காலக்கட்டத்தில், இந்த உவமை முஸ்லிம்களுக்கும், தாங்கள் தான் நீதிமான்களென்றும், பரிசுத்தவான்களென்றும் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் சில கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது. 

வெறும் ஆறு வசனங்கள் அடங்கிய இந்த உவமையில் இரண்டு பேர் வருகிறார்கள், பரிசேயர்கள் மற்றும் வரி வசூல் செய்பவர்கள். இவர்கள் இருவரும் யூதர்களே! ஆனால், ரோம அரசாங்க வேலை பார்க்கும் வரி வசூல் செய்பவர்களை (ஆயக்காரர்களை) அனைவரும் பாவிகளாக பார்த்தார்கள். முதலாவதாக, இவர்கள் யூதர்களாக இருந்தபோதும், தங்களை ஆட்சி செய்யும் ரோம அரசாங்கத்திற்காக வேலை பார்த்தார்கள், இரண்டாவதாக, இவர்களில் பலர், அதிகமாக வரிகளை வசூல் செய்து, மக்களிடம் கெட்டப்பெயரும் பெற்றுக்கொண்டார்கள்.

இந்த உவமையை படிப்போம், அதன் பிறகு, இந்த உவமைக்கும் முஸ்லிம்களுக்கும் என்ன சம்மந்தம் என்பதை பார்ப்போம்.

லூக்கா 18:9-14

18:9. அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

18:10. இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

18:11. பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

18:12. வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

18:13. ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

18:14. அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

1) தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாக எண்ணிய சிலர்:

இந்த உவமை யாருக்காக இயேசு கூறுகின்றார் என்பதை இங்கு குறிப்பிடுகின்றார். "தங்களை பெரிய நீதிமான்கள்" என்று எண்ணுகின்றவர்களுக்காக இந்த உவமையை இயேசு கூறுகின்றார்.

இந்த பரிசேயனுடைய வேண்டுதலை கவனித்தால், "அங்கு அவன் தன் சுயநீதியை மட்டுமே தேவ சமூகத்தில் எடுத்துப்பேசுகின்றான்".

"நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப் போலவும், இந்த ஆயக்காரனைப் போலவும் இராததனால்" உமக்கு நன்றி சொல்கிறேன் என்று ஜெபம் செய்கின்றான். மேலும் "வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன்" என்றும் சொல்கின்றான்.

2) அல் ஃபாத்தியா துவாவும், பரிசேயனின் துவாவும்

இதே போன்று தான், குர்‍ஆனின் முதல் அத்தியாயத்தில் இருக்கும் ஜெபத்தை காணமுடியும்:

குர்‍ஆன் 1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! 1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

அல்லாஹ்வின் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, வழி தவறியவர்களின் வழியுமல்ல என்று யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் குறிப்பிட்டு இந்த குர்‍ஆன் வசனங்கள் பேசுகின்றன.  ஒவ்வொரு நாளும்  ஃபாத்தியா ஸூராவை ஓதும் ஒவ்வொரு முஸ்லிமின் ஜெபமும், அந்த பரிசேயனின் ஜெபமும் ஒன்று தான்.

நாம் மனிதனுக்கு முன்பாகவே இன்னொரு மனிதனை அற்பமாக எண்ணக்கூடாது, ஆனால், இந்த பரிசேயனும் சரி, முஸ்லிம்களும் சரி, இறைவனுக்கு முன்பாகவே "மற்றவர்களை ஒப்பிட்டுக்கொண்டும், தங்களை நீதிமான்களாக கருதிக்கொண்டு ஜெபம் செய்கிறார்கள்".

இயேசு இந்த உவமையை தொடங்கும் போது பார்த்தால், பரிசேயன் ஒரு ஹீரோ போன்றும், ஆயக்காரன் ஒரு வில்லன் போன்றும் தோன்றுவது போல காணப்பட்டது, ஆனால், இயேசு கொடுத்த முடிவு "தலைகீழாக இருந்தது". யார் நீதிமானாக ஆக்கப்பட்டவனாகச் திரும்பிச் சென்றான்? 

அந்த வரி வசூல் செய்பவன் தான் நீதிமானாக இறைவனுடைய பார்வையில் கருதப்பட்டான், ஏனென்றால், அவன் "யாரோடும் தன்னை ஒப்பிடவில்லை, மற்றும் இறைவனுக்கு முன்பாக தன்னை தாழ்த்தி ஜெபம் செய்தான்".

3) துவா (ஜெபம்) செய்யும் போது, மற்றவர்களை ஒப்பிடுவதை முஸ்லிம்கள் கைவிடவேண்டும்

அல் ஃபாத்தியாவின் கடைசி வசனம் சொல்வது போன்று முஸ்லிம்கள் துவா செய்வதை கைவிடவேண்டும். இறைவனிடம் ஜெபம் செய்யும் போது, "நீங்களும் இறைவனும் தான் அதில் இருக்கவேண்டும், வேறு யாரும் இருக்கக்கூடாது, யாரோடும் ஒப்பிடக்கூடாது". நல்லவர்களையும் ஒப்பிட்டு துவாவில் இறைவனிடம் வேண்டக்கூடாதா என்று கேட்டால்? இல்லை, அதுதேவையில்லை, அப்படி ஒப்பிடவேண்டுமென்றால், இறைவனிடம் "நீ விரும்பும் நற்செயல்கள் உள்ளவனாக என்னை மாற்று என்று ஜெபம் செய்யலாமே தவிர, அதோ அந்த நபரைப்போல என்ன நல்லவனாக மாற்று என்று கேட்கக்கூடாது, ஏனென்றால், உண்மையில் நம் பார்வையில் மற்றவர்கள் நல்லவர்களாக காணப்படலாம், ஆனால், இறைவனின் பார்வையில் அவரது உள்ளம் தீயதாக இருக்கலாம். இதற்காகத் தான், யாரோடும் ஒப்பிடாமல் இறைவனிடம் வேண்டுவது தான் மிகவும் நல்லது".

அந்த பரிசேயன் அந்த ஜெபத்தில் பொய் சொல்லவில்லை. அவன் உண்மையாகவே மனிதனுக்கு முன்பாக நல்லவன் தான். அவன் சொன்னது போல நற்காரியங்களைச் செய்பவன் தான், தன் சம்பாத்தியத்தில் எல்லாம் பழைய ஏற்பாட்டின் கட்டளைக்கு இணங்க தசமபாகம் (பத்தில் ஒரு பங்கு) தேவனுடைய ஆலயத்திற்கென்று கொடுப்பவன் தான்.

ஆனால், அவனிடம் இருக்கின்ற ஒரு தீய பழக்கம் அல்லது பாவம் என்னவென்றால், அவன் தன்னை மற்றவர்களோடு ஒப்பிடுகின்றான், அதுவும் இறைவனின் சமூகத்தில் அதனைச் சொல்லிக்காட்டுகின்றான். இந்த குணம் ஒரு தீய குணம் என்று அவன் அறியவில்லை.

இன்னொரு முறை இந்த பரிசேயர்கள் தேவனுக்கு முன்பாக மட்டுமல்ல, மனிதர்களுக்கு முன்பாகவும் தங்களை "நீதிமான்களாக காட்ட விரும்பி பல காரியங்களைச் செய்கிறார்கள்" என்று இயேசு குற்றம் சாட்டுகின்றார். 

தேவன் வெளிப்புற காரியங்களை பார்ப்பதில்லை, அவர் இருதயங்களில் ஒளிந்துக்கொண்டு இருக்கும் காரியங்களை பார்க்கிறார்.

லூக்கா 16:15

15. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.

நம் சுய நீதியான செயல்களின் அடிப்படையில் இறைவனிடம் துவா செய்ய நாம் முயன்றால், இது தவறான தொழுகையாகும். இதைத் தான் அந்த பரிசேயன் செய்தான், முஸ்லிம்களும் அன்றிலிருந்து இன்று வரை ஃபாத்தியா ஸூராவை ஓதிக்கொண்டு இருக்கும் போது இப்படித்தான் தவறாக‌ துவா செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

4) முஸ்லிம்களின் சுய நீதி தம்பட்டங்கள் தேவனுக்கு அருவருப்பானதாகும்

இஸ்லாமில் காணும் ஒரு வினோதமான அல்லது சுய தம்பட்டம் அடிக்கும் ஒரு பழக்கம் என்னவென்றால், "மற்ற மக்கள் காணும்படியாக, தொழுகை நடத்துவது தான்".  சாலை ஓரங்களில், பேருந்து நிலையங்களில், தொழுகை நேரம் வந்தவுடன் "தொழுகை நடத்துவது தான்", மற்ற மக்கள் பார்க்கிறார்களே, இவர்களுக்கு முன்பாக "நாம் பெரிய பக்தியுள்ளவர்" போல காணப்படுமே என்ற உணர்வு இருந்தாலும், அதனை பெரிய சாதனை போல நினைத்து செய்வது தான். கூட்டுத்தொழுகையின் போது ஒரு பொதுவான இடத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றாக சேர்ந்து தொழுவதை இங்கு நான் குறிப்பிடவில்லை, அதே போன்று வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, அனைவரும் சேர்ந்து செய்யும் கூட்டுத் தொழுகையைச் சொல்லவில்லை. இங்கு சுயதம்பட்டம் எங்கு வருகின்றதென்றால், தனி மனிதனாக இருக்கும் போது, செய்யப்படும் தொழுகையாகிய சுயதம்பட்டம் தான்.

இன்று முஸ்லிம்கள் செய்யும் காரியத்தை (தொழுகை சுய தம்பட்டத்தை), அன்று யூதர்கள் செய்தார்கள், இதனை இயேசு கண்டித்துள்ளார்.

மத்தேயு 6:5 அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மக்கள் தங்களுடைய தொழுகையை பார்க்கவேண்டும் என்று எண்ணி அவர்கள் "ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்". அவர்கள் அதன் பலனை அடைந்துவிட்டார்கள், அதாவது மக்கள் அவர்களைப் பார்த்து, அவர் ஒரு பக்திமான் போல தெரிகிறது என்று எண்ணிக்கொள்வார்கள் அல்லவா அது தான் "அவர்கள் அடைந்த பலன்", அவர்களுக்கு தேவனிடமிருந்து பலன் ஒன்றுமில்லை என்று இயேசு எச்சரித்துள்ளார்.  அதாவது, முஸ்லிம்களின் இப்படிப்பட்ட தொழுகை என்ற அமலினால் எந்த ஒரு "நன்மையும்" கிடைக்கப்போவதில்லை, அதற்கு பதிலாக, இறைவனின் வெறுப்பைத் தான் சம்பாதித்துக்கொள்கிறார்கள்.

இந்த சுய நீதி மற்றும் சுய தம்பட்டம் அடித்ததினால் தான், அந்த பரிசேயன் நீதிமானாக்கப்படவில்லை என்று இயேசு மேற்கண்ட உவமையில் கூறியுள்ளார்.

முஸ்லிம்களிடம் சில தாழ்மையான வேண்டுகோள் கேள்விகள்:

1) எத்தனை முறை நீங்கள், பேருந்து நிலையங்களில், அல்லது மக்கள் கூட்டமுள்ள ஒரு இடத்தில், துணியை விரித்து தொழுகை நடத்தியுள்ளீர்கள்?

2) இப்படிப்பட்ட நேரங்களில், உங்களால் எப்படி முழு மனதோடு "அல்லாஹ்வை தொழமுடிந்தது"? மக்கள் என்னை பார்க்கிறார்கள், எனக்கு ஒரு வகையான மரியாதை கிடைக்கும் என்று எண்ணமில்லாமல் தொழுகை நடத்தமுடிந்ததா?

3) நீங்கள் வீட்டில் தனிமையில் தொழுகை செய்யும் போது, அதாவது மற்ற நபர்கள் யாருமே இல்லாத போது, செய்த தொழுகையின் தரம், இப்படி பேருந்து நிலையங்களில் செய்த தொழுகையின் தரத்தோடு ஒப்பிட்டு பார்த்துள்ளீர்களா? வீட்டில் தனிமையில் செய்த தொழுகை தான் மனநிறைவோடு இருந்திருக்கும்! யாருமே பார்க்காத போது, நீங்கள் அல்லாஹ்வை தொழுதுக்கொள்வது தான் சிறந்தது என்பதை உங்கள் மனது உங்களுக்குச் சொல்லியிருக்குமே!

அந்த பரிசேயனைப்போல அல்லாமல், சுய நீதியின் மீது சார்ந்துக்கொள்ளாமல், மற்றவர்களோடு ஒப்பிட்டுக்கொள்ளாமல் இறைவனின் கிருபை மீது சார்ந்துக்கொண்டு செய்யும் தொழுகையே முழுமையான, உண்மையான தொழுகையாக இறைவன் ஏற்றுக்கொள்ளுவான், இதனை யாராவது மறுக்கமுடியுமா? 

அன்பான முஸ்லிம் சகோதர சகோதரிகளே! சுயதம்பட்டம் என்ற சுயநீதி என்ற கெட்ட பழக்கத்தில் விழுந்துவிடாமல் உங்களை காத்துக்கொள்ளுங்கள், இதன் முலம் கிடைக்கும் இறையாசியை பெற்றுக்கொள்ளுங்கள்.

[எனக்கு பயமாக இருக்கிறது, என் தம்பி இந்த கட்டுரைக்காக‌ மறுபடியும் அழைத்து, என்ன கேள்விகள் கேட்பானோ தெரியவில்லை. பார்க்கலாம், இந்த உவமையில் அவன் எந்த குறையை கண்டுபிடிப்பான் என்று...] 

இன்னொரு உவமையோடு சந்திப்போம்.

தேதி: 16th April 2022


ரமளான் 2022 கட்டுரைகள்

முந்தைய ஆண்டுகளின் ரமளான் கட்டுரைகள்

உமரின் பக்கம்