2024 ரமளான் நாள் 2 - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : 'தவ்ராத்'ஐ முஸ்லிம்கள் படித்து பாக்கியமுள்ளவர்களாக மாற அல்லாஹ் அழைக்கிறான்

முந்தைய கட்டுரையில், ஜபூர் என்ற சங்கீத புத்தகத்தின் அறிமுகத்தைப் பார்த்தோம்.

  1. 2024 ரமளான் தியான கட்டுரைகள் - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : நாள் 1 (சங்கீதம் காட்டும் சத்திய வழி)

இந்த இரண்டாம் பாகத்தில், ஜபூரின் முதல் அத்தியாயத்தில் உள்ள சில வசனங்களை ஆய்வு செய்வோம். 

முதலாவதாக, ஜபூர் அத்தியாயம் ஒன்றில் உள்ள 6 வசனங்களையும் படிப்போம். இவைகளை படிக்கும் போது, குர்‍ஆனின் எந்த ஸூரா உங்களுக்கு ஞாபகம் வருகிறது என்பதை சிந்தியுங்கள்!

ஜபூர் - சங்கீதம் 1:1-6

1. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

2. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

3. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

4. துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.

5. ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.

6. கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.

1) குர்‍ஆன் முதல் அத்தியாயமும், ஜபூரின் முதல் அத்தியாயமும்

மேற்கண்ட வசனங்களை படிக்கும் போது, குர்‍ஆனின் முதல் அத்தியாயத்தின் கடைசி வசனங்களை படிப்பது போன்று உங்களுக்கு தெரிகின்றதா?

அல்ஃபாத்திஹா:  குர்‍ஆன் 1:6-7

1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

மேற்கண்ட குர்‍ஆன் வசனங்களில், தங்களை நேர்வழியில் நடத்தவேண்டும் என்றும், துன்மார்க்கரின் வழியில் நடத்தவேண்டாம் என்றும் வேண்டுதல் செய்யப்படுகிறது.

இதே போன்று ஜபூரின் முதல் அத்தியாயத்தை படிக்கும் போது, நீதிமான் துன்மார்க்கன் இவ்விருவரைப் பற்றியே பேசப்பட்டுள்ளது.  

நேரான வழியில் நடக்கும் நீதிமான்கள் எவைகளை செய்யமாட்டார்கள் என்று முதல் வசனத்திலும், அவர்கள் எவைகளை செய்வார்கள் என்று இரண்டாம் வசனத்தில் எழுதப்பட்டுள்ளது. மூன்றாம் வசனத்தில் நீதிமான்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள் என்னவென்று சொல்லப்பட்டுள்ளது, மேலும் அடுத்த வசனங்களில் துன்மார்க்கருக்கு கிடைக்கும் பலன்கள் சொல்லப்பட்டுள்ளது. கடைசியாக ஆறாவது வசனத்தில், கர்த்தர் இவ்விருவரின் வழிகளை அறிவார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

2) தௌராத்தை அனுதினமும் படிக்கும் நேர்வழியில் செல்பவர்கள்

ஜபூர் 1:2ம் வசனத்தில், நேரான வழியில் இருப்பவர்கள் என்னசெய்வார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

சங்கீதம் 1:2

2. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

Links:

  1. Psalm 1:2 Hebrew Text Analysis (biblehub.com)
  2. Hebrew Concordance: bə·ṯō·w·raṯ -- 15 Occurrences (biblehub.com)

இதனை படிக்கும் நீங்கள் ஒருவேளை முஸ்லிமாக இருந்தால், "தௌராத்தை" இதுவரை நீங்கள் படித்ததுண்டா? என்ற கேள்வியை கேட்டால், உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

தவ்ராத்தை (தௌராத்தை) நாங்கள் ஏன் படிக்கவேண்டும்? என்று நீங்கள் சொல்வீர்களானால், உங்கள் குர்‍ஆனில் தவ்ராத் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை நீங்கள் கவனிக்கவில்லை என்று பொருள்படும்.

முந்தைய வேதமாகிய தவ்ராத் பற்றி, அதாவது தவ்ராத் என்ற வார்த்தை குர்‍ஆனில் நேரடியாக 18 முறைவருகிறது.  இன்னும் மறைமுகமாக உள்ளவைகளைச் சேர்த்துப் பார்த்தால், மொத்தம் 22க்கும் அதிகமாக இடங்களில்  தவ்ராத் என்ற வார்த்தை குர்‍ஆனில் வருகிறது.

எண்குர்‍ஆனில் தவ்ராத் பற்றிய வசனங்கள்
1

ஸூரா 2:93.

தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; . . . 

2

ஸூரா 3:3

. . . இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான். 

3

ஸூரா 3:48.

இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.

4

ஸூரா 3:50.

“எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும்

5

ஸூரா 3:65

. . . அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே; . . .

6

ஸூரா 3:93.

இஸ்ராயீல் (என்ற யஃகூப்) தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் தன் மீது ஹராமாக்கிக் கொண்டதைத் தவிர, இஸ்ரவேலர்களுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது; (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தையும் கொண்டு வந்து அதை ஓதிக்காண்பியுங்கள்” என்று.

7

ஸூரா 5:43.

எனினும், இவர்கள் உம்மை தீர்ப்பு அளிப்பவராக எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இவர்களிடத்திலோ தவ்ராத் (வேத) முள்ளது; . . .

8

ஸூரா 5:44.

நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; . . .; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.

9

ஸூரா 5:46.

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.

10

ஸூரா 5:66.

இன்னும்: அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் தம் இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும், நிலைநாட்டியிருந்தால் அவர்கள் மேலே - (வானத்தில்) இருந்தும்,

11

ஸூரா 5:68.

“வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை” என்று கூறும்;. . .

12

ஸூரா 5:110.

அப்பொழுது அல்லாஹ் கூறுவான்: “. . ., இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்);

13

ஸூரா 7:157.

எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; . . .

14

ஸூரா 9:111.

. . .. தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். . . .

15

ஸூரா 17:4.

நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்: .  . .

16

ஸூரா 20:80.

“இஸ்ராயீலின் சந்ததியினரே! நாம் திட்டமாக உங்களை உங்கள் பகைவனிடமிருந்து இரட்சித்தோம்; மேலும், தூர்(ஸினாய் மலையின்) வலப்பக்கத்தில் நாம் (தவ்ராத் வேதத்தை அருள்வதாக) உங்களுக்கு வாக்குறுதியளித்தோம்; இன்னும் “மன்னு ஸல்வாவை” (உணவாக) உங்கள் மீது நாம் இறக்கி வைத்தோம்.

17

ஸூரா 25:35.

மேலும் நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - இன்னும் அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவியாளராகவும் ஏற்படுத்தினோம்.

18

ஸூரா 28:43.

இன்னும், முந்தைய தலைமுறையார்களை நாம் அழித்தபின் திடனாக மூஸாவுக்கு(த் தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - மனிதர் (சிந்தித்து) உபதேசம் பெறும் பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும், நேர்வழி காட்டியாகவும் அருட் கொடையாகவும் (அது இருந்தது).

19

ஸூரா 48:29.

. . .: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலிலுள்ள அவர்கள் உதாரணமாவது: . . .

20

ஸூரா 61:6.

மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்;  . . .

21

ஸூரா 62:5.

எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.

குர்‍ஆனும் அல்லாஹ்வும் மிகவும் உயர்வாகப் பேசும் இந்த தவ்ராத்தைத் தான், ஜபூர் 2ம் வசனத்தில், “இரவும் பகலும் தியானம் செய்பவன் பாக்கியவான் என்று சொல்லப்பட்டுள்ளது”.

ஜபூர் சொல்வது போன்று நீங்களும் பாக்கியமுள்ளவர்களாக இருக்கவேண்டுமென்றால், நீங்கள் தவ்ராத்தை வாசிக்கவேண்டும், அதில் சொல்லப்பட்டுள்ள இறைகட்டளைகளை அறிந்து ஞானமடைந்து அவைகளை பின்பற்றவேண்டும்.

3) முஸ்லிம்கள் படிப்பதற்கு அப்படி தவ்ராத்தில் என்ன இருக்கிறது?

இந்த கேள்விக்கான பதிலை முதலாவது குர்‍ஆனிடமே கேட்டுப்பாருங்கள்! மேற்கண்ட குர்‍ஆன் வசனங்கள் தவ்ராத்தில் என்ன உள்ளது என்று சொல்கின்றன?

தவ்ராத் நேர்வழியும் பேரொளியும் உள்ளது:

  • குர்‍ஆன் 5:44. நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தையும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன.

தவ்ராத் "ஞானப்பிரகாசங்களாகவும், நேர்வழி காட்டியாகவும் அருட் கொடையாகவும்" உள்ளது:

  • குர்‍ஆன் 28:43. இன்னும், முந்தைய தலைமுறையார்களை நாம் அழித்தபின் திடனாக மூஸாவுக்கு(த் தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - மனிதர் (சிந்தித்து) உபதேசம் பெறும் பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும், நேர்வழி காட்டியாகவும் அருட் கொடையாகவும் (அது இருந்தது).

 "தவ்ராத்" உலக மக்களுக்கு இறைவனால் இறக்கப்பட்ட அருட்கொடையாகும், அது நேர்வழிகாட்டியாகும், அதில் ஞான ஒளி (பிரகாசம்) உள்ளது என்று குர்‍ஆன் அடித்துச் சொல்கிறது? முஸ்லிம்களே! இதனை நீங்கள் நம்புகிறீர்களா?

பரிசுத்த வேதாகமத்தில் பார்க்கும் போது, கீழ்கண்ட ஐந்து புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு தவ்ராத்தில் அடங்கியுள்ளது.

இறைவன் உலக படைப்பு, ஆதாம் ஏவாள் படைப்பு முதற்கொண்டு, யூத மக்கள் எகிப்து தேசத்திலிருந்து இஸ்ரேல் நாட்டிற்கு வரும் வரையுள்ள விவரங்கள் அனைத்தும், தவ்ராத்தில் உள்ளது. முக்கியமாக, மோசேக்கு கொடுத்த சட்டங்கள் அனைத்தும் தவ்ராத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.

எனவே, முஸ்லிம்கள் தவ்ராத்தை படிக்க விரும்பினால், கீழ்கண்ட தொடுப்புக்களை சொடுக்கி தமிழிலும், ஆங்கிலத்திலும் படித்துக்கொள்ளலாம்.

  1. ஆதியாகமம் (தமிழ், English)
  2. யாத்திராகமம் (தமிழ்English)
  3. லேவியராகமம் (தமிழ்English)
  4. எண்ணாகமம் (தமிழ்English)
  5. உபாகமம் (தமிழ்English)

முக்கியமாக, முதல் புத்தகமாகிய "ஆதியாகமம்" புத்தகத்தில் உலக படைப்பு, ஆதாம் ஏவாள் படைப்பு, நோவாவின் பேழை, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மற்றும் யோசேப்பு போன்றவர்களின் நிகழ்ச்சிகள் அனைத்தும் அடங்கியுள்ளது. இந்த புத்தகத்தை முஸ்லிம்கள் படித்துப் பார்க்கலாம்.

அடுத்த தொடரில் ஜபூரிலிருந்து வெளிப்படும் நேரான வழியை காண்போம்.

தேதி: 9th March 2024


ரமளான் 2024 கட்டுரைகள்

உமரின் பக்கம்