நாள் 7: ஜபூர் 23 - முந்தைய வேதகாலத்தில் மேய்ப்பனாக இருந்த அல்லாஹ், குர்‍ஆன் காலத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தானா?

(2024 ரமளான் - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் )

ரமளான் தியான முந்தைய கட்டுரைகளை படிக்க கீழே சொடுக்கவும்.

நாம் ஜபூர் புத்தகத்தின் 23வது அத்தியாயத்தை தியானித்துக்கொண்டு இருக்கிறோம்.

தாவூது நபி ஜபூர் வேதத்தில், இறைவன் என் மேய்ப்பனாக இருக்கிறான், இதனால் எனக்கு எந்த குறைவும் வராது என்று பாடுகின்றார். ஆனால், இஸ்லாமிய இறையியலை பார்க்கும்போது, சில இஸ்லாமியர்கள் 'அல்லாஹ் என் மேய்ப்பனாக இருக்கிறான்' என்றுச் சொல்லக்கூடாது, இது ஷிர்க் ஆகும் என்று சொல்கிறார்கள்.

இதைப் பற்றி அறிய மேற்கண்ட தொடர்களில் 5 மற்றும் 6வது தொடர்களை படிக்கவும். இப்போது இந்த கட்டுரையில், முந்தைய வேதங்களில், அதாவது பைபிளின் பழைய ஏற்பாட்டில் எப்படி, பைபிளை கொடுத்த இறைவன் தன்னை ஒரு மேய்ப்பனாகவும், மக்களை ஆடுகளாகவும் ஒப்பிட்டு பேசுகின்றார் என்பதை ஆய்வு செய்வோம்.

1) முந்தைய வேதங்களில் யெகோவா தேவன் மேய்ப்பனாக இருக்கிறார்

பழைய ஏற்பாட்டில் ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தில், கர்த்தர் தன் மக்களை ஒரு மேய்ப்பனைப்  போல மேய்ப்பதாக கூறுகின்றார். உலக மக்களுக்கு தாம் ஒரு மேய்ப்பனாக இருப்பதை அவர் ஒரு போதும் ஒரு வெட்கமான செயலாகவோ, அல்லது தம் இறை இலக்கணத்துக்கு இழுக்காகவோ எண்ணவில்லை.

ஏசாயா 40:10-11

10. இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.

11. மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.

மேலூம், ஜபூரை தாவூத் நபிக்கு கீழ்கண்ட வரிகளை வேதமாக இறைவன் இறக்கினான். மக்கள் தம்மை ஒரு மேய்ப்பனாக கருதவேண்டும், மேலும் அவர் தரும் நம்பிக்கையை  பிடித்துக்கொண்டு சமாதானத்தோடு வாழவேண்டும் என்று தாவூத் நபிக்கு இறக்கி, அதனை வேதமாக எழுதவைத்துவிட்டார். இன்றிலிருந்து தாவூத் நபியின் காலக்கட்டமாகிய கடந்த 3000 ஆண்டுகளாக யூதர்களும், கிறிஸ்தவர்களும் இந்த ஜபூர் 23ஐ படித்து, தியானித்து மன அமைதியையும் பாதுகாப்பையும், நம்பிக்கையும் பெற்றுக் கொண்டு வருகிறார்கள்.

ஜபூர் (சங்கீதம்) 23:1-6

1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். 2. அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.  3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். 5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. 6. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

இதே போன்று, ஜபூர் 80வது அத்தியாயத்தில் கூட, யெகோவா தேவனை 'இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே' என்று அழைத்து, தங்கள் விண்ணங்களை வைப்பதை பார்க்கமுடியும்.

ஜபூர் (சங்கீதம்) 80:1-3

1. இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.

2. எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களை இரட்சிக்க வந்தருளும்.

3. தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

கடைசியாக, இஸ்ரேல் ஜனங்களில் மேய்ப்பர்களாக (அரசு தலைவர்களாகவும், மத தலைவர்களாகவும்) இருப்பவர்கள் தங்கள் கடமையை சரியாக செய்யாததினால், தம் ஆடுகள் படும் துன்பங்களைப் பார்த்து, தேவன் துக்கப்பட்டு, தாமே ஆடுகளை மேய்ப்பதாக கூறுகிறார்.

எசேக்கியேல் 34:1-24 (சில வசன‌ங்களை இங்கு தருகிறேன்):

5. மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறுண்டுபோனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின.

6. என் ஆடுகள் சகல மலைகளிலும் உயரமான சகல மேடுகளிலும் அலைப்புண்டு, பூமியின்மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை. 7. ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

8. கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள். 9. ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

11. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்.

12. ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத் தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணி,

13. அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின்மேலும் ஆறுகள் அண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன்.

14. அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும்; இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்.

15. என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

முடிவுரை:

மேற்கண்ட வசனங்களை பார்க்கும் போது, பல இடங்களில் யெகோவா தேவன் தம்மை 'ஒரு மேய்ப்பராக' காட்டிக்கொள்வதை பார்க்கலாம். மேய்ப்பன் என்பது தம் மக்களை பாதுகாக்கும் ஒரு சிறந்த‌ வேலையாகவும் தேவன் பார்க்கிறார். இப்படி செய்வது தம் கடமையென்று பார்க்கிறார், இதனால் தம் அன்பை காட்டுகிறார். மக்களை படைத்தால் மட்டும் போதுமா, அவர்களை பராமரிக்கவேண்டாமா? பாதுகாக்க வேண்டாமா?

முஸ்லிம்களே, உங்கள் அல்லாஹ்வை நீங்கள் 'என் மேய்ப்பான்' என்று சொல்லமுடியுமா? முந்தைய வேதங்களை கொடுத்தது அல்லாஹ் என்று நீங்கள் நம்பினால், அந்த வேதங்களில் அல்லாஹ் தன்னை 'ஒரு மேய்ப்பனாக வெளிப்படுத்தியிருக்கும் போது' அதனை எப்படி நீங்கள் மறுக்கவோ, மறைக்கவோ முடியும்?

குர்‍ஆன் இறக்கிய போது (கி.பி. 610-632 வரை), அல்லாஹ் தன் மனதை மாற்றிக்கொண்டான் என்று சாக்குபோக்கு சொல்லப்‍போகிறீர்களா? இது அல்லாஹ்விற்கு ஒரு கெட்டப்பெயரை கொண்டுவரும் என்பதை மறக்காதீர்கள்.

அடுத்த கட்டுரையில், இயேசு கூட ஒரு மேய்ப்பராக தம்மை வெளிக்காட்டிய வசனங்களை சுருக்கமாக ஆய்வு செய்வோம்.

தேதி: 26th March 2024


ரமளான் 2024 கட்டுரைகள்

உமரின் பக்கம்