தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன் - பாகம் 3 - குர்‍ஆன் 2:282

(சகோதரி சபரிமாலா அவர்களுக்கு இஸ்லாமிய பாடங்கள்)

சகோதரி சபரிமாலா அவர்களுக்கு எழுதிய முந்தைய கட்டுரைகளை படிக்க கீழ்கண்ட தொடுப்புக்களைச் சொடுக்கவும்: 

பெண் விடுதலைக்காக உழைக்கும் சபரிமாலா அவர்களுக்கு இஸ்லாமிய பாடங்கள்:

 1. தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன் - குர்‍ஆன் 4:24 - பாகம் 1 
 2. தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன் - குர்‍ஆன் 4:34 - பாகம் 2 

முந்தைய கட்டுரைகளில்  "குர்‍ஆன் வசனம் 4:24 & 4:34 பற்றி சகோதரி அவர்களிடம் கேள்விகள் கேட்டுயிருந்தோம்", இந்த கட்டுரையில் இன்னொரு குர்‍ஆன் வசனத்தை (2:282) சகோதரிக்கு அறிமுகம் செய்யவுள்ளோம். இவ்வசனத்தையும் சகோதரி அவர்கள் தம்முடைய "தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன்" என்ற தலைப்பில் எடுத்து பேசி, விளக்கவேண்டும் என்று விரும்புகிறோம்.

தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன் - குர்‍ஆன் 2:282 - பாகம் 3

குர்‍ஆனும் பெண்களும் 3: சாட்சி சொல்வதில் ஒரு பெண் ஆண்களில் சரிபாதியாக மதிக்கப்படவேண்டும் - குர்-ஆன் 2:282

சகோதரி சபரிமாலா அவர்களே, இன்று இன்னொரு குர்‍ஆன் வசனத்தை நாம் சிந்திக்கவுள்ளோம். உங்களுடைய பெண் விடுதலை என்ற சமூகசேவை வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்.  

பெண்களை இஸ்லாம் கௌரவப்படுத்துகிறது, மற்ற மார்க்கங்கள் கொடுக்காத உரிமைகளை இஸ்லாம் தருகிறது என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள், இதே நிலைப்பாட்டில் நீங்களும் இருக்கிறீர்கள் என்று உங்களின் பேச்சுக்களின் மூலம் வெளிப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

குர்‍ஆனின் 2:282ம் வசனத்தை இந்த கட்டுரையில் சுருக்கமாக காண்போம். இவ்வசனத்தைப் பற்றிய உங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

[குறிப்பு: இந்த தலைப்புப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன், ஆயிஷா என்ற பெண் அல்லாஹ்விடம் கேள்வி கேட்கும் பாணியில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது, அதனை இங்கு படிக்கலாம்: அன்புள்ள அப்பா(அல்லா)விற்கு, ஆயிஷா எழுதும் கடிதம்-1: சாட்சி சொல்வதில் ஒரு பெண் சரிபாதியாக மதிக்கப்படவேண்டும் - குர்-ஆன் 2:282]

இப்போது குர்‍ஆன் 2:282ஐ ஐந்து தமிழாக்கங்களில் படிப்போம்:

குர்-ஆன் 2:282

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

2:282. ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

2:282. . . . மேலும், நீங்கள் சாட்சியாக (அங்கீகரிக்க)க் கூடிய உங்கள் ஆண்களில் (நேர்மையான) இருவரை (அக்கடனுக்குச்) சாட்சியாக்குங்கள். அவ்வாறு (சாட்சியாக்க வேண்டிய) இருவரும் ஆண்பாலராகக் கிடைக்காவிட்டால் ஓர் ஆணுடன் நீங்கள் சாட்சியாக அங்கீகரிக்கக் கூடிய இரு பெண்களை (சாட்சியாக்க வேண்டும். ஏனென்றால், பெண்கள் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கலை அறியாதவராக இருப்பதனால்) அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்துவிட்டாலும் மற்ற பெண் அவளுக்கு (அதனை) ஞாபகமூட்டுவதற்காக (இவ்வாறு செய்யவும்). . . .

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

2:282. . . உங்களில் இரு ஆண்களை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். இரு ஆண்கள் இல்லையென்றால், ஓர் ஆணையும் இரு பெண்களையும் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். (ஏனெனில்) அவ்விருவரில் ஒருத்தி மறந்துவிட்டால், மற்றொருத்தி அவளுக்கு அதை நினைவூட்டுவாள் என்பதற்காக! . . .

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:

2:282 . . .மேலும், நீங்கள் உங்களுடைய ஆண்களிலிருந்து (நீதிவான்களான) இரு சாட்சிகளை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். அவ்வாறு இருவரும் ஆண்களாகயில்லாதிருந்தால், சாட்சியாளர்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களில் ஒரு ஆணும், இரு பெண்களும் சாட்சியாக்கப் படவேண்டும். இருபெண்கள் ஏனெனில், அவ்விருவரில் ஒருவர் மறந்து விடலாம், அப்போது அவ்விருவரில் ஒருத்தி மற்றொருத்திக்கு நினைவுபடுத்துவாள். . . .

பிஜே தமிழாக்கம்:

2:282. . . உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) அவ்விரு பெண்களில் ஒருத்தி தவறாகக் கூறினால் மற்றொருத்தி நினைவுபடுத்துவாள். . . .

Moulana Muhammad Ali:

2:282 . . .but if there are not two men, then one man and two women from among those whom you choose to be witnesses, so that if one of the two errs, the one may remind the other.. . .

Abdullah Yusuf Ali:

2:282 . . .and if there are not two men, then a man and two women, such as ye choose, for witnesses, so that if one of them errs, the other can remind her. . . .

Muhammad Asad:

And call upon two of your men to act as witnesses; and if two men are not available, then a man and two women from among such as are acceptable to you as witnesses, so that if one of them should make a mistake, the other could remind her.

முதல் தமிழாக்கத்தில் முழு வசனத்தையும், மீதமுள்ள தமிழாக்கங்களில், இக்கட்டுரையின் கருப்பொருளுக்கு பயன்படும் வரிகளை மட்டுமே கொடுத்துள்ளேன்.   முழு வசனத்தை படிக்க விரும்புகிறவர்கள் இந்த தொடுப்பை சொடுக்கவும்: tamililquran.com/qurandispcmp.php

குர்‍ஆன் 2:282ன் சுருக்கம்:

 1. கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சாட்சியாக இருப்பதற்கு, இரண்டு ஆண்கள் இருக்கவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை.
 2. இரண்டு ஆண்கள் கிடைக்கவில்லையென்றால், ஒரு ஆண் மட்டுமே கிடைத்தால், இன்னொரு ஆணுக்கு பதிலாக இரண்டு பெண்களை சாட்சிகளாக வைத்துக்கொள்ளலாம் என்பது குர்‍ஆனின் வழிகாட்டல்
 3. ஏன் ஒரு ஆணுக்கு சமமாக இரண்டு பெண்கள்? இக்கேள்விக்கு அல்லாஹ் சொல்லும் பதில், ஒரு பெண் மறந்துவிட்டால், இன்னொருத்து பெண் ஞாபகப்படுத்துவாள் என்பதற்காக, இரண்டு பெண்கள் கட்டாயம் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

ஏன் ஒரு ஆணுக்கு சமமாக இரண்டு பெண்களின் சாட்சி கருதப்படவேண்டும்?

குர்‍ஆனின் படி பெண்கள் ஆண்களை விட அதிகமாக தவறுகிறார்கள்/சரியான வழியை விட்டு தீயவழிக்குச் செல்வார்கள்:

முஸ்லிம் அறிஞர்களுக்கு இவ்விவரம் ஒரு தர்மசங்கடமான விஷயமாகும்.  மொழியாக்கம் செய்பவர்கள் பலர் பல விளக்கங்களை இதற்கு கொடுத்துள்ளார்கள். 

 1. சில அறிஞர்கள் "இரு பெண்களில் ஒரு பெண் தவறினால்/பொய் கூறினால்" என்று மொழியாக்கம் செய்கிறார்கள். (முஹம்மது ஜான் & பீஜே தமிழாக்கங்கள்)
 2. சில அறிஞர்கள் "இரு பெண்களில் ஒரு பெண் மறந்துவிட்டால்" என்று மொழியாக்கம் செய்கிறார்கள். (பாகவி, சௌதி மற்றும் ஐஎஃப்டி தமிழாக்கங்கள்)

இந்த இடத்தில் "தவறுதல்" என்று வருகின்றதா? அல்லது "மறந்துவிடுதல்" என்று வருகிறதா? அரபி மூல வார்த்தையை கவனித்தால், அது "ததில்ல( تَضِلَّ )" என்று வருகின்றது, அதாவது இது "தவறுதல்" என்ற பொருளைத் தான் குறிக்கிறது, "மறந்துவிடுதல்" பற்றி குறிப்பிடுவதில்லை.  இவ்வார்த்தை வரும் இதர குர்‍ஆன் வசனங்களை படிக்க இங்கு சொடுக்கவும்: corpus.quran.com/qurandictionary.jsp)

குர்‍ஆனில் இவ்வார்த்தை வரும் எந்த ஒரு வசனத்திலேயும், "மறந்துவிடுதல்" என்ற பொருளை இவ்வார்த்தை குறிக்கவில்லை, அதற்கு பதிலாக "தவறுதல் (Error/Mistake), சரியான பாதையை விட்டுவிட்டு, தவறான பாதையை தெரிவு செய்தல்(Astray)" போன்ற பொருளே இதற்கு வருகிறது.

முஹம்மதுவின் படி பெண்கள் அறிவில் குறைவுள்ளவர்கள்:

அல்லாஹ் தான் இப்படி சொல்லிவிட்டானே, இறைத்தூதர் முஹம்மது பெண்கள் பற்றி என்ன கூறினார்கள் என்று பார்த்தால், இன்னும் மோசமான விமர்சனத்தையே கூறியுள்ளார், அது மட்டுமல்ல, இதை அல்லாஹ்வே அவருக்கு காட்டினார் என்றும் கூறியுள்ளார்.

பார்க்க புகாரி ஹதீஸ் எண் 304: 

304. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹஜ்ஜுப் பெருநாள்’ அல்லது ‘நோன்புப் பெருநாள்’ அன்று தொழுகைத் திடலுக்கு (‘முஸல்லா’) புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, “பெண்கள் சமுதாயமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிக எண்ணிக்கையில் எனக்குக் காட்டப் பட்டீர்கள்” என்று குறிப்பிட்டார்கள்.

அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?” எனப் பெண்கள் கேட்டதும். “நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்துகொள்கிறீர்கள். அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர்களாகவும், தீர்க்கமான யோசனை உடைய ஆண்களின் கூர்மையான அறிவைக்கூட (கவர்ச்சியால்) மழுங்கவைப்பவர்களாகவும் (பெண்களாகிய) உங்களைப் போன்று வேறு யாரையும் நான் கண்டதில்லை” என்று கூறினார்கள்.

அப்போதும் அப்பெண்கள், “மார்க்கத்திலும் அறிவிலும் எங்களிடமுள்ள குறைபாடு என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். “பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத் தில் பாதியல்லவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அப்பெண்கள், “ஆம் (பாதிதான்)” என்று பதிலளித்தார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது தான் அவளது அறிவின் குறைபாடாகும்” என்று கூறிவிட்டு, “ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா?” என்று கேட்டார்கள். அப்பெண்கள் “ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை)” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறை பாடாகும்” என்று கூறினார்கள். Source: https://www.rahmathpublications.com/bukhari.php?start=304 

மேற்கண்ட நிகழ்ச்சியில் முஹம்மது கூறிய மற்ற விவரங்கள் பற்றி சகோதரி சபரிமாலா அவர்களிடம் வேறு ஒரு கட்டுரையில் நாம் கேள்வி கேட்போம், இப்போது "அறிவில் பெண்கள் குறைவுள்ளவர்கள்" என்ற ஒரு விஷயத்தை மட்டுமே பார்ப்போம்.

பெண் விடுதலைக்காவும் உரிமைகளுக்காகவும் உழைக்கும் சகோதரி சபரிமாலா அவர்களிடம் குர்‍ஆன் 2:282 பற்றி சில கேள்விகள்:

 1. தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன் என்ற தொடர்களில், இந்த குர்‍ஆன் 2:282ம் வசனத்தைப் பற்றி எப்போது பேசப்போகிறீர்கள்? ஒருவேளை ஏற்கனவே பேசியிருந்தால், எனக்கு அதன் வீடியோ தொடுப்பை யாராவது அனுப்பவும், ஈஸா குர்‍ஆன் தளத்தில் பின்னூட்டம் இடவும் (http://isakoran.blogspot.com/). 
 2. சகோதரி சபரிமாலா அவர்களே! பெண்கள் ஆண்களை விட அதிகமாக தவறு செய்பவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?  
 3. நீங்கள் "ஆம், அப்படித் தான்" என்று சொல்வீர்களானால், நீங்களும் அதிகமாக தவறு செய்பவர்கள் என்று பொருள்படுமே! உங்களின் இந்த சமூக பெண்கள் விடுதலைப்போராட்டம் சரியான ஒன்றா அல்லது தவறான ஒன்றா?
 4. உங்களின் இந்த பெண் விடுதலை போராட்டம் என்பது சரியான ஒன்று என்று நான் நினைக்கிறேன், ஆனால், அல்லாஹ்வோ, முஹம்மதுவோ "அது தவறான ஒன்று என்று நினைக்கிறாரே", நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
 5. ஒருவேளை நீங்கள் "இல்லை, பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக தவறு செய்பவர்கள்" என்று நீங்கள் சொன்னால், குர்‍ஆன் 2:282ஐ பற்றிய உங்கள் கருத்து என்ன? இவ்வசனம் சொல்வது பொய் என்று நீங்கள் சொல்கிறீர்களா?
 6. சில அறிஞர்கள் சொல்வது போன்று, இது "பெண்களின் மறதியைப் பற்றித் தான் சொல்கிறது" என்று நீங்கள் சொல்வீர்களானால், குர்‍ஆனுக்கு எதிராக நீங்கள் சொல்வதாக ஆகுமே! இவ்வார்த்தை குர்‍ஆனில் எங்குமே மறதியைப் பற்றி பேசுவதில்லையே! தவறுதல் அல்லது நேரான வழியை விட்டு விலகுதல் பற்றியே பேசுகிறதே! ஒரு வேளை குர்‍ஆனைக் கொடுத்தவனை விட நீங்கள் அறிவாளியோ!  
 7. முஹம்மது தெளிவாக அறிவு குறைவு பற்றி தான் பேசியுள்ளார், முக்கியமாக பாதி சாட்சி பற்றி சொல்லும் போது, அறிவு பற்றி தான் அவர் கூறுகின்றார். ஆக மறதி பற்றி இவ்வசனம் பேசுகின்றது என்றுச் சொல்கிறவர்கள் "முஹம்மதுவிற்கு இதைப் பற்றிய அறிவு இல்லை, எங்களுக்குத் தான் அதிகம்" என்று சொல்வது போன்று உள்ளது.
 8. ஆண்கள் பெண்களை விட அறிவாளிகள் என்றும், அவர்கள் தவறுவதே இல்லை என்பது போலத் தான் குர்‍ஆன் 2:282 பேசுகின்றது, இதைப் பற்றி பதில் சொல்லமுடியுமா? (குர்‍ஆன் சொல்வது போன்று நான் நம்புவதில்லை, இது பழமை வாதம் பேசும், பெண்ணடிமையை ஆதரிக்கும் ஒரு ஆணின் கருத்து என்பது என் கருத்து).
 9. இவ்வசனத்தினால் உண்டாகும் தர்மசங்கடமான நிலைக்கு சரியான பதிலைச் சொல்லாமல், இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் பதிலையே நீங்களும் சொல்லப்போகிறீர்களா? 
 10. இது மறதி பற்றிச் சொல்கிறது, கொடுக்கல் வாங்கலில் பெண்கள் பலவீனமானவர்கள், பொய் சொல்பவர்கள், குடிக்காரன் பேச்சு விடிந்தால் போச்சு என்றுச் சொல்வது போன்று, பெண்களின் பேச்சு, சில நாட்கள் கடந்தால் போச்சு என்று சொல்லப்போகிறீர்களா?
 11. ஒரு முக்கியமான கேள்வி, கொடுக்கல் வாங்கலில் ஒரு பத்திரத்தில் சரியாக எழுதிக்கொள்ளும்படி குர்‍ஆன் 2:282 சொல்லும் போது, அவர்களிடம் கையெழுத்தும் வாங்கும் போது, எப்படி பெண்கள் பொய் சொல்வார்கள், தவறுவார்கள்? ஆண்கள் தவறமாட்டார்களா? அல்லாஹ்வை பொருத்தமட்டில், 100% இந்த கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தவறுவதில்லை என்பது போலவும், பெண்கள் தான் தவறுவார்கள் என்பது போலவும் சொல்லப்பட்டுள்ளதே! இதைப் பற்றிய உங்களின் நிலைப்பாடு/பதில் என்ன?

உங்களின் பெண் உரிமை மற்றும் பெண் விடுதலை போராட்டம் மிகவும் போற்றத்தக்கது, ஆனால், இஸ்லாமை தூக்கிபிடித்துக்கொண்டு அதனை உங்களால் செய்யமுடியாது என்று மிகவும் தாழ்மையாக சொல்லிக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இதை விடுவதா? அதை விடுவதா? என்ற தர்ம சங்கடமான நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். முஹம்மது புகாரி ஹதீஸில் வருவது போல‌ சொல்லியிருக்கமாட்டார் என்று தப்பித்தவறி வெளியே சொல்லிவிடாதீர்கள், முஸ்லிம்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். புகாரி ஹதீஸ் தொகுப்பு என்பது சன்னி முஸ்லிம்களின் மிகவும் அதிகார பூர்வமான ஹதீஸ் தொகுப்பாகும். இஸ்லாமைப் பற்றி ஓரளவிற்கு ஆய்வு செய்தவனாக, ஒரு சகோதரனாக‌ உங்களுக்கு ஒரு தாழ்மையான ஆலோசனையாக இதைச் சொல்கிறேன். 

ஒருவேளை, குர்‍ஆன் சொல்வது தான் உண்மை, முஹம்மது சொன்னது தான் உண்மை, பெண்களாகிய நாங்கள் "அறிவில் குறைவுள்ளவர்கள் தான், நாங்கள் தவறு செய்பவர்கள் தான்" என்று நீங்கள் சொல்வீர்களானால், உங்களை நம்பி நம் நாட்டு பெண்கள் எப்படி வரமுடியும்? அதாவது அறிவில் குறைவுள்ள உங்களைப்போன்ற பெண்களை நம்பி, அறிவுள்ள பெண்கள் எப்படி வருவது? உங்களை எப்படி நம்புவது? பெண்கள் மட்டுமல்ல, உங்களுடைய பெண் விடுதலை என்ற நல்ல சமூக சேவையில் ஒத்துழைக்க முன்வந்துள்ள ஆண்கள் என்ன செய்வது? பெண் விடுதலை கட்சியை தொடங்கிய நீங்களே "ஆம், குர்‍ஆன் சொல்வது போன்று நான் அறிவில் குறைவுள்ளவள் தான்" என்று சொல்லும் போது, அவர்கள் தர்ம சங்கட நிலைக்கு தள்ளப்படுவார்களே. வழி நடத்துகின்ற தலைமை சரியில்லை என்று தலைமையே சொல்லும் போது, அதாவது பேருந்தை ஓட்டுகின்ற ஓட்டுநர், எனக்கு சரியாக ஓட்டத்தெரியாது என்று சொல்லும் போது, அவரை நம்பி எப்படி பயணிகள் பயமில்லாமல் பயணம் செய்யமுடியும்?

சிந்தித்து பதில் சொல்லுங்கள்!

போனஸ் விவரங்கள்: பீஜே தமிழாக்க விளக்கவுரை:

மூன் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட குர்‍ஆனில், விளக்கவுரை 85ல் இந்த வசனம் பற்றிய சில விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, முழு விளக்கத்தை இந்த தொடுப்பில் படிக்கலாம்.

அடிக்குறிப்பில், அந்த விளக்கத்தின் ஒரு பகுதியை கொடுத்துள்ளேன் படிக்கவும். இப்போது அதைப் பற்றிய சில கேள்விகளை சகோதரி சபரிமாலா அவர்களிடமும், இன்னுமுள்ள முஸ்லிம்களிடமும், பீஜே அவர்களிடமும் முன்வைக்க விரும்புகிறேன்.

பீஜே தமிழாக்க விளக்கவுரை பற்றிய கேள்விகள்:

1) சாட்சி சொல்லும் போது, கூட்டல் கழித்தல் இல்லாமல் பதில் சொல்வதில், ஆண்கள் சிறந்து விளங்குவார்கள், பெண்கள் குறைவுள்ளவர்கள் என்று பீஜே தம் விளக்கவுரையில் கூறுகின்றார், இது எதன் அடிப்படையில் சொல்கிறார்? இதற்கு சான்றுகள் உண்டா 

2) பீஜே அவர்கள் தம்முடைய குடும்ப பெண்களை கணக்கில் கொண்டோ, அல்லது ஒட்டுமொத்த முஸ்லிம் பெண்களை கருத்தில் கொண்டே  இப்படிப்பட்ட பொதுவான " தவறான கருத்துக்களைச் சொல்லக்கூடாது" என்பது கருத்தாகும். மேலும், இவரது கூற்றை முஸ்லிம் பெண்களே ஒப்புக்கொள்ளமாட்டார்களே! இதற்கு சபரிமாலா அவர்களின் பதில் என்ன? சகோதரி சபரிமாலா அவர்களே, நீங்கள் கொடுக்கல் வாங்கலில் சாட்சி சொல்ல நேர்ந்தால், கூட்டி கழித்து, மிகைப்படுத்தி பொய்களை தெரிந்தோ தெரியாமலோ சொல்வீர்களா?

3) பெண்களின் மூளை ஆண்களின் மூளையை விட 100 கிராம் அதிகமாக இருக்கிறது, இதனால் 'சிந்தித்து முடிவு செய்வதில் பெண்களை விட ஆண்கள் தான் சிறந்து விளங்குகிறார்கள்' என்று முடிவு செய்தது ஆதாரமற்ற கூற்றாகும். இதுவரை இதைப் பற்றி ஒரு சரியான நிலைப்பாட்டிற்கு விஞ்ஞானமும் வரவில்லை, நடைமுறையிலும் இது நடக்கவில்லையென்று நாமும் பார்க்கிறோம். 

4) நம்மைச் சுற்றியுள்ள ஆண்களின் வர்க்கம்(நாம் , நம் தந்தை, சகோதரர்கள் சொந்தங்கள், நண்பர்கள், பணிபுரிபவர்கள்), சிந்திக்காமல் பல தவறான முடிவுகளை எடுத்து, தங்கள் வாழ்க்கையும், தங்களை நம்பி வாழும் குடும்ப நபர்களின் வாழ்க்கையையும் நாசமாக்கியுள்ளார்கள் என்று பட்டியல் போட்டால், இந்த வரிகளை படிக்கும் ஒவ்வொருவருக்கும் சில பெயர்கள் நிச்சயம் கிடைக்கும்.

5) சிந்தித்து சரியான முடிவு எடுப்பது, ஆண்பால் சிறந்துவிளங்கும், பெண்பால் சிறந்து விளங்காது என்றுச் சொல்வது, ஒரு அடிமுட்டாள்தனமான வாதமாகும். 

6) சரியான முடிவு எடுப்பதில், நம் படிப்பு, அனுபவம், நாம் கற்றுக்கொண்ட நல்ல பாடங்கள், அந்த குறிப்பிட்ட துறையில் நமக்கு இருக்கும் ஞானம் போன்ற பல காரணிகள் மீது சார்ந்து இருக்குமே ஒழிய, ஆண்கள் சிறப்பானவர்கள், பெண்கள் பொதுவாக தவறுவார்கள் என்றுச் சொல்வதை, சகோதரி சபரிமாலா அவர்களே ஏற்றுக்கொள்ளமாட்டர்கள் என்று நினைக்கிறேன்! அப்படித்தானே சகோதரி?

7) "சிந்திக்கும் சக்தி பெண்களுக்கு ஆண்களை விட குறைவாகத் தான் இருக்கும்" என்று பீஜே அவர்கள் எழுதியது, மனதுக்கு வருத்தமளிக்கிறது, சகோதரி சபரிமாலா அவர்களே, பீஜே அவர்களின் 85வது விளக்கவுரை முழுவதையும் படித்து ஒரு வீடியோவில் உங்கள் பதிலைச் சொல்வீர்களா?

8) "பதற்றமின்றிப் பொய் சொல்வதில் ஆண்களை விடப் பெண்களே வல்லவர்களாக இருப்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது." பெண்கள் சாமர்த்தியாக பொய் சொல்வார்களாம், அதுவும் பொய்களை கண்டறியும் இயந்திரங்களும் தோற்றுப்போகும் அளவிற்கு பொய் சொல்வதில், திறமைசாளிகள் என்று பீஜே அவர்கள் பெண்களுக்கு குர்‍ஆனின் முஹம்மதுவின் அடிப்படையில் பட்டம் சூட்டியுள்ளார், எத்தனைப்பேர் இந்த பட்டத்தை வாங்கப்போகிறீர்கள்! சகோதரி சபரிமாலா அவர்களே, இந்த பட்டத்திற்கு நீங்கள் தகுதியானவர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

9) பீஜே விளக்கவுரை 85: “பதற்றமோ, உறுத்தலோ இல்லாமல் பெண்கள் சகஜமாகப் பொய் சொல்வதால் அதைக் கருவிகளால் கண்டுபிடிக்க முடிவதில்லை, . . . இதே போன்று நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணையின் போதும் பெண்கள், பதற்றமோ, தடுமாற்றமோ இன்றிப் பொய் சொல்வதால் அதைப் பொய்யென்று கண்டறிவது சிரமம்”: எவ்வளவு பெரிய சிறப்பை பெண்களுக்கு பீஜே அவர்கள் கொடுத்துள்ளார்கள் பார்த்தீர்களா? சகோதரி சபரிமாலா அவர்களே! உங்கள் பாணியில் இதற்கு பதில் சொல்லமுடியுமா? அல்லது உங்கள் பாணியில் இஸ்லாமை ஆதரிக்கப்போகின்றீர்களா?

10) பீஜே அவர்களின் படி, குர்‍ஆன் 2:282 சொல்வது மறதியைப் பற்றியல்ல, பெண்களின் நடத்தையை அல்லது கெட்ட குணத்தைப் பற்றியது, பொய் சொல்லும் குணத்தைப் பற்றியதாகும். பீஜே அவர்களே: அந்த இரண்டு ஆண்களில், யாருமே பொய் சொல்வதில்லையா? 100% ஆண்கள் சுத்தமா?  சகோதரி சபரிமாலா அவர்களே, உங்கள் கருத்து என்ன? ஆண்கள் பொய்யே பேசுவதில்லையா? சரி ஒரு பேச்சுக்காக எடுத்துக்கொண்டாலும், குர்‍ஆன் 2:282ன் படி, "பொதுவாக உலக அளவில், பொய்கள் பேசும் ஆண்களின் சதவிகிதத்தை விட,  பெண்கள் அதிகமாக பொய்கள் பேசுவார்கள், ஏனென்றால் இயல்பாகவே பெண்கள் அதிகமாக பொய்கள் பேசுவார்கள், கூட்டி கழித்து பொய்களைச் சொல்வார்கள்" என்பதாகும். இதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

அடுத்த கட்டுரையில், இன்னொரு குர்‍ஆன் வசனத்தோடு, அல்லது முஹம்மதுவின் மேற்கண்ட ஹதீஸுடன் சந்திப்போம்...


அடிக்குறிப்பு:

[1] மூன் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட குர்‍ஆனில், விளக்கவுரை 85: 

சாட்சியம் என்பது உண்மையைக் கண்டுபிடிக்க உதவுவதும், இன்னொருவரின் எதிர்காலத்தை முடிவு செய்வதுமாகும்.

சாட்சியம் சொல்லும் போது கூட்டாமல், குறைக்காமல், மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும். கூட்டி, குறைத்து சாட்சியம் சொன்னால் நிரபாராதி குற்றவாளியாக்கப்படுவான். குற்றவாளி நிரபராதியாக்கப்படுவான்.

இந்த விஷயத்தில் ஆண்களும், பெண்களும் சமமாக இல்லை என்று இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சிந்திப்பது, மனனம் செய்வது உள்ளிட்ட அனைத்து இயக்கங்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது. ஆண்களின் மூளைக்கும், பெண்களின் மூளைக்கும் அடிப்படையில் பல வேறுபாடுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பெண்களின் மூளையை விட ஆண்களின் மூளை 100 கிராம் அதிக அளவு கொண்டதாகப் படைக்கப்பட்டுள்ளது. சிந்தித்தல், மனனம் செய்தல், உணர்வுகளை வெளிப்படுத்துதல், கற்பனை செய்தல், ஆசைப்படுதல், கோபப்படுதல் என ஒவ்வொன்றுக்கும் மூளையில் குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிந்தித்து, ஆராய்ந்து, சீர்தூக்கிப் பார்த்தல் ஆண் பெண் இருபாலருக்கும் உள்ளது என்றாலும் ஆண்களின் மூளையில் பெண்களின் மூளையை விட 13 சதவிகிதம் நியூட்ரான்கள் அதிகமாக உள்ளன. இதனால் பெண்களை விட ஆண்கள் சிந்தித்து முடிவு செய்வதில் சிறந்து விளங்குகிறார்கள்.

மூளையின் நினைவாற்றல் பகுதி ஆண்களை விட பெண்களுக்கு 11 சதவிகிதம் அதிகமாக உள்ளது என்றும் கண்டறிந்துள்ளனர்.

இதனால் தான் மனனம் செய்கிற துறையில் பெண்கள் பிரகாசிக்கிறார்கள். பள்ளிக் கூடப் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குவதில் அதிகமானவர்கள் பெண்களாகத் தான் இருக்கிறார்கள். பிள்ளை பிறந்த தேதி, திருமண தேதி, முக்கிய நாட்களின் தேதி போன்றவற்றை மிகச் சரியாகச் சொல்பவர்கள் பெண்களாகத் தான் இருக்கிறார்கள். ஆண்கள் இதில் பின் தங்கியே இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் சிந்திக்கும் சக்தி பெண்களுக்கு ஆண்களை விட குறைவாகத் தான் இருக்கும். உலகில் அதிகமான சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஆய்வாளர்கள் ஆண்களில் தான் அதிகம் இருக்கிறார்கள். ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் ஆண்களாகத் தான் இருக்கிறார்கள்.

மேலும் கற்பனை செய்யும் தன்மை பெண்களின் மூளையில் அதிகமாக உள்ளது என்றும் கண்டறிந்துள்ளனர்.

தனக்கு வேண்டியவர்களிடம் காணப்படும் மிகப்பெரும் குறையையும் மிகச் சிறிய குறையாகக் காண்பதும், தனக்கு வேண்டாதவர்களிடம் காணப்படும் சின்னஞ்சிறிய குறையையும் மிகப் பெரிய குறையாகக் காண்பதும் பெண்களின் இயல்பாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது. நிறை விஷயத்திலும் அப்படியே.

பதற்றமின்றிப் பொய் சொல்வதில் ஆண்களை விடப் பெண்களே வல்லவர்களாக இருப்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளிடம் உண்மை கண்டறிவதற்காகக் கருவிகளின் மூலம் சோதனை நடத்தப்படுகின்றது. பொய் சொல்லும் போது ஏற்படும் பதற்றத்தால் மூளையில் உண்டாகும் அதிர்வுகளைக் கருவிகள் பதிவு செய்கின்றன. சொல்வது உண்மையா, பொய்யா என்பதை இதைக் கொண்டு தீர்மானிக்கின்றனர்.

இந்தச் சோதனைகளின் போது பெண்கள் பொய் சொன்னால் பெரும்பாலும் கருவிகளில் அது துல்லியமாகத் தெரிவதில்லை. ஆண்கள் பொய் சொல்வதைத் தான் இக்கருவிகள் கண்டுபிடிக்கின்றன. பதற்றமோ, உறுத்தலோ இல்லாமல் பெண்கள் சகஜமாகப் பொய் சொல்வதால் அதைக் கருவிகளால் கண்டுபிடிக்க முடிவதில்லை.

இதே போன்று நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணையின் போதும் பெண்கள், பதற்றமோ, தடுமாற்றமோ இன்றிப் பொய் சொல்வதால் அதைப் பொய்யென்று கண்டறிவது சிரமம்.

எனவே இரண்டு பெண்களின் சாட்சியம், ஒரு ஆணின் சாட்சியத்திற்குச் சமம் என்று இஸ்லாம் கூறுகின்றது அறிவுப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் சரியானது தான் என்பதில் சந்தேகம் இல்லை.

தேதி: 26th Jan 2022


சகோதரி சபரிமாலா அவர்களுக்கு இஸ்லாமிய பாடங்கள்

உமர் கட்டுரைகள்/மறுப்புக்கள்