4. அத்தியாயம்: 1 அல் ஃபாத்திஹா (தோற்றுவாய்)

இவ்வத்தியாத்தில் பார்க்கவிருக்கும் தலைப்புக்கள்: 

 • 4.1 பாத்திஹா (ஃபாத்திஹா) அறிமுகம்
 • 4.2 பாத்திஹா விளக்கவுரை
 • 4.3 அரபி குர்‍ஆனை பார்த்தவுடன், அது ஹஃப்ஸ் குர்‍ஆனா, வர்ஷ் குர்‍ஆனா என்று எப்படி கண்டுபிடிப்பது?
 • 4.4 அல்ஃபாத்திஹாவின் முதல் வசனம் எது?
 • 4.5 ஹதீஸ்களில் அல்ஃபாத்திஹா

ஸூராவின் சுருக்கம்:

 • வசனம்:1 - துவக்கம்
 • வசனங்கள்: 2 – 5 - அல்லாஹ்வை புகழுதல்
 • வசனங்கள்: 6 – 7 - நேர் வழியில் நடத்தும்படி வேண்டுதல்
அல் ஃபாத்திஹா (தோற்றுவாய்)
மொத்த வசனங்கள்: 7

 

1:1 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

 

 

 

1:1 بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 

1:2 அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

 

 

 

1:2 اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

 

1:3 (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

 

 

1:3 الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏

அர்ரஹ்மானிர்ரஹீம்

 

 

1:4 (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

 

 

1:4 مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ‏

மாலிகி யவ்மித்தீன்

 

 

1:5 (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

 

 

 

1:5 اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ‏

இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தயீன்

 

1:6 நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

 

 

1:6 اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ

இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்

 

 

1:7 (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல

 

 

1:7 صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ

ஸிராதல்லஸீன அன் அம்த அலைஹிம் ஙைரில்மங்ளூபி அலைஹிம் வலள்ளால்லீன்

 

4.1 பாத்திஹா (ஃபாத்திஹா) அறிமுகம்

குர்ஆனின் முதல் அத்தியாயத்தின் பெயர் ஃபாத்திஹா என்பதாகும். இந்த அத்தியாயத்திற்கு அனேக பெயர்கள் உள்ளன, அதாவது:

 • 1. "தோற்றுவாய்" (அ) "ஃபதிஹதுல் கிதாப்" 
 • 2. வேதத்தின் ஆரம்பம், (அ) உம்மு அல் குர்ஆன் (குர்-ஆனின் தாய்). 

கிறிஸ்தவர்களுக்கு கர்த்தரின் ஜெபம் எப்படி உள்ளதோ அது போல, முஸ்லிம்களின் ஜெபம் என்று இதனைக் கூறலாம்.

முஸ்லிம்களின் தொழுகைகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது, தனிப்பட்ட அல்லது பொதுவான நிகழ்ச்சிகளிலும் இதனை ஓதுவார்கள். இதனை ஓதாமல் முக்கியமான காரியங்கள் முழுமையடையாது. இந்த அத்தியாயம் வெளிப்பட்ட தேதி சரியாக தெரியவில்லை. ஆனால், இஸ்லாமின் ஆரம்ப கால முதலே இது அவர்களின் தொழுகையின் ஒரு அங்கமாக‌ அமைந்துள்ளது.  முஹம்மது தன்னை நபியாக சொல்லிக்கொண்ட காலத்திலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இது இறக்கப்பட்டு இருக்கலாம். இதனுடைய அறிமுகம் முதன் முதலாக எப்போது உண்டானது என்று தெரியவரவில்லை. மேலும் மக்காவில் முஸ்லிம்களாக மாறியவர்களின் எண்ணிக்கை சொற்பமாக இருந்தபடியினால், இதன் துவக்கம் தெரியவில்லை.

இந்த அத்தியாயத்திற்கு ‘சபா அன் மின் அல் மதானி’ (திரும்ப திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்) என்றும் பெயர் உள்ளது. குர்ஆன் 15:87ம் வசனத்தில் குறிப்பிடப்படும் அத்தியாயம் இதுவாக இருக்கக்கூடும். இந்த வசனத்தில் "அல் ஃபாத்திஹா" என்ற பெயர் வராது, மொழிப்பெயர்ப்பாளர்கள் அடைப்பிற்குள் அதனை எழுதுகிறார்கள், கீழுள்ள வசனத்தை பார்க்கவும்:

முஹம்மது ஜான் தமிழாக்கம்: 

ஸூரா 15:87 (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய (ஸுரத்துல் ஃபாத்திஹாவின்) ஏழு வசனங்களையும், மகத்தான (இந்த) குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம். 

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்: 

ஸூரா 15:87 (நபியே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு திரும்பத் திரும்ப ஓதக்கூடிய ஏழு வசனங்களை (உடைய "அல்ஹம்து" என்னும் அத்தியாயத்தை)யும், இந்த மகத்தான குர்ஆனையும் அளித்திருக்கிறோம்.

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்: 

ஸூரா 15:87 (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய ஏழு வசனங்களை(யுடைய அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை)யும் இந்த மகத்தான குர் ஆனையும் தந்திருக்கிறோம்.

4.2 பாத்திஹா விளக்கவுரை

மனிதன் அல்லாஹ்விடம் வேண்டுதல்:

ஒரு மனிதன் இறைவனிடம் வேண்டும் வேண்டுதல் இந்த அத்தியாயத்தில், கொடுக்கப்பட்டுள்ளது. குர்‍ஆனின் தெய்வீக மூலத்திற்கு ஒரு சான்று "ஒவ்வொரு அத்தியாயத்திலும், அல்லாஹ்வே பேசுவதாக இருக்கும்" என்று முஸ்லிம்கள் சொல்வார்கள். ஆனால், இந்த அத்தியாயத்தில் ஒரு பிரச்சனை உள்ளது. முழுக்க முழுக்க ஒரு பாவியான மனிதன் இறைவனிடம் வேண்டுவதாக இந்த அத்தியாயம் அமைந்துள்ளது. "நபியே கூறுவீராக (குல்)" என்ற வார்த்தை முழு குர்‍ஆனிலும் ஆங்காங்கே காணப்படும், அல்லாஹ் தான் குர்‍ஆனின் வார்த்தைகள் என்பதற்கு இது தான் சான்று என்று சொல்வார்கள். ஆனால், இந்த அத்தியாயத்தில் அப்படி வராதது, ஒருவேளை இந்த அத்தியாயம் மனிதனிடமிருந்து வந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுவதற்கு வாய்ப்பளித்துவிட்டது.

முஸ்லிம் அறிஞர்களின் கருத்துப்படி, "கூறுவீராக (குல்)" என்ற வார்த்தை இவ்வத்தியாயத்தில் வரவில்லையென்றாலும், "தன்னிடம் இப்படி வேண்டுங்கள்" என்று அல்லாஹ் மனிதனுக்கு கற்றுக்கொடுத்தது தான் இங்கு வருகிறது, எனவே இதுவும் அல்லாஹ்வின் வார்த்தைகளே என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். 

இப்போது வசனங்களின் விளக்கங்களைக் காண்போம்.

அல்லாஹ்வை நோக்குதல்: வசனம் 1

1:1 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

1:1 بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இந்த "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்ற வார்த்தைகள் 9வது அத்தியாயம் தவிர, குர்‍ஆனின் மற்ற எல்லா அத்தியாயங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டுள்ளது.

ஹஃப்ஸ் குர்‍ஆனில் "பிஸ்மில்லா ஹிர்ரஹ் மானிர் ரஹீம்" என்று முதல் வசனம் தொடங்கும், வர்ஷ் குர்‍ஆனில் "அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்" என்பது முதல் வசனமாக இருக்கும். இதைப் பற்றி மேலும் அறிய "அல்ஃபாத்திஹாவின் முதல் வசனம் எது?" என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட விவரங்களை படிக்கவும். ஹதீஸ்களின் படி, இந்த வசனம் முதல் வசனமாக இல்லாமல் இருந்தாலும், அல் ஃபாத்திஹா என்பது ஒரு முக்கியமான அத்தியாயமாக இருப்பதினால், இந்த வசனத்தை ஓதவேண்டும் என்றும் அபூ தாவூத் ஹதீஸ் தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது [1].

இவ்வசனத்தில் இஸ்லாமிய இறைவனின் பெயராகிய "அல்லாஹ்வும்", அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பட்டப்பெயர்களுமாகிய "அர்ரஹ்மான் - பேரருளாளன்" மற்றும் "அர்ரஹீம் - பேரன்பாளன்" வருகின்றன.  அல்லாஹ்விற்கு அழகான 99 பெயர்களை முஸ்லிம்கள் அடையாளப்படுத்துகிறார்கள், அவைகளில் இவ்விரு பட்டப் பெயர்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு பட்டப்பெயர்களும், அல்லாஹ் அதிகமான அன்பு செலுத்துபவன், பெரிய கிருபையாளன் என்றும், ஒரு தாயைக் காட்டிலும் அதிக அன்பு செலுத்துபவன் அல்லாஹ் என்றும் முஹம்மது கூறியுள்ளார்.

ஸூரா 67:29. (நபியே!) நீர் கூறும்: (எங்களைக் காப்பவன்) அவனே - அர்ரஹ்மான்; அவன் மீதே நாங்கள் ஈமான் கொண்டோம்; மேலும் அவனையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம் - எனவே, வெகு சீக்கிரத்தில் பகிரங்கமான வழி கேட்டிலிருப்பவர் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்!”

வசனங்கள்: 2 – 5 - அல்லாஹ்வை புகழுதல்

கீழ்கண்ட நான்கு வசனங்கள் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை புகழுவது போன்று அமைக்கப்பட்டுள்ளன.

1:2 அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

1:2 اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

1:3 (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

1:3 الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏

அர்ரஹ்மானிர்ரஹீம்

1:4 (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

1:4 مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ‏

மாலிகி யவ்மித்தீன்

1:5 (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

1:5 اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ‏

இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தயீன்

இரண்டாவது வசனத்தில் வரும் "ரப்" என்ற வார்த்தையின் பொருள் "இறைவன், எஜமானன், அதிபதி" என்பதாகும். "ஆலமீன்" என்ற வார்த்தைக்கு "உலகம், அகிலம்" என்பதாகும். ரப்பில் ஆலமீன் என்று சொல்லும் போது, "உலகத்தின் இறைவன் அல்லது உலகத்தை படைத்தவன்" என்று பொருளாகும்.

குர்‍ஆனில் 900க்கும் அதிகமாக இடங்களில் இவ்வார்த்தை பல வடிவங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது (அரபி மூல எழுத்துக்கள்: ர ப ப ஆகும் - The triliteral root rā bā bā (ر ب ب)).

சில உதாரணங்களை இங்கு காணலாம்:

அவர்களுடைய இறைவன்

Their Lord

குர்‍ஆன் 2:5

رَبِّهِمْ

Rabbihim

ரப்பிஹிம்

எங்களுடைய இறைவன்

Our Lord

குர்‍ஆன் 2:128

رَبَّنَا

Rabbanā

ரப்பனா

உன்னுடைய/ உங்களுடைய‌ இறைவன்

Your Lord

குர்‍ஆன் 2:30

رَبُّكَ

Rabbuka

ரப்புகா

அவனுடைய இறைவன்

His Lord

குர்‍ஆன் 2:37

 

رَبِّهِ

Rabbihi

ரப்பிஹி

அவளுடைய இறைவன்

Her Lord

குர்‍ஆன் 3:37

رَبُّهَا

Rabbuhā

ரப்புஹா

என் இறைவன்

My Lord

குர்‍ஆன் 2:126

رَبِّ

Rabbi

ரப்பி

எபிரேய மொழியிலும் முதல் நூற்றாண்டு காலத்தில், யூத மத போதகர்களை, ஆசிரியர்களை "ரபி" என்று அழைத்தனர், இதன் பொருள் “என் எஜமான் (My Master), என் ஆசிரியர்” என்று பொருளாகும். 

பார்க்க: மத்தேயு 23:7, 23:8, 26:25, 26:49, மாற்கு 9:5

மத்தேயு 23:7 சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்:

மத்தேயு 23:8 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.

மத்தேயு 26:25 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.

மத்தேயு 26:49 உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.

மாற்கு 9:5 அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.

இன்றும் "ரபி" என்ற வார்த்தைகளை பல யூதர்களை பட்டப்பெயர்களாக வைத்திருப்பதை காணமுடியும்.

மூன்றாம் வசனத்தில் "ரஹ்மான்" மற்றும் "ரஹீம்" என்ற வார்த்தைகள் வருகின்றன.  இதே வார்த்தைகள் தான் முதல் வசனத்திலும் வந்துள்ளன, "அர்ரஹ்மான் என்றால் பேரருளாளன் என்றும்" மற்றும் "அர்ரஹீம் என்றால் பேரன்பாளன் என்றும்" பொருளாகும்.

“மாலிகி யவ்மித்தீன்" தீர்ப்பு நாளின் அதிபதி:

நான்காம் வசனத்தில் ஒரு முக்கியமான் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது: "மாலிகி யவ்மித்தீன்" தீர்ப்பு நாளின் அதிபதி என்று அல்லாஹ்வை புகழுகிறது இந்த வசனம். “மாலிக்” என்றால் எஜமானன், அதிபதி என்று பொருள், “யௌம்” என்றால் நாள் என்று பொருள்.  தீன் என்றால் இந்த இடத்தில் "தீர்ப்பு" என்று பொருள், ஆக, "மாலிகி யௌமித்தீன்" யார் என்று கேட்டால், முஸ்லிம்கள் 'அது அல்லாஹ்' என்று கூறுவார்கள்.

எபிரேய மொழியில் "யோம் ஹ தின்  - Yom ha-din" என்று நியாயத்தீர்ப்பு நாளை அழைப்பார்கள்.  அரபியும் எபிரேய மொழியும் செமெடிட் மொழியின் வழியில் வந்தபடியினால், இவ்விரு வார்த்தைகளும் ஒரே மாதிரி இருப்பதை காணமுடியும்.

கிறிஸ்தவத்தின் “மாலிகி யௌமித்தீன் - தீர்ப்பு நாளின் அதிபதி” இயேசுக் கிறிஸ்து ஆவார்:

இயேசுக் கிறிஸ்து தம்மை தீர்ப்பு நாளின் அதிபதி என்றும், தமக்கு முன்பாகவே இவ்வுலகம் தீர்ப்புக்காக நிற்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். 

மத்தேயு 16:27. மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

யோவான் 5:22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

யோவான் 5:27 அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.

மத்தேயு  25:31:46

31. அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.  32. அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து,  33. செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.

மேலும் வெளிப்பத்தின விசேஷம் புத்தகத்தில் இயேசுவின் தீர்ப்புநாள் செயல்கள் பற்றி மேலதிக விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தீர்ப்பு நாளின் அதிபதி யார்? 

குர்‍ஆனின் இவ்வசனத்தின் படி தீர்ப்பு நாளின் அதிபதி அல்லாஹ் ஆவான், ஆனால், பைபிளின் படி, இயேசு தான் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும், உலக மக்கள அனைவரையும் தீர்ப்பு செய்கிறவராகவும் இருக்கிறார்.

உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்: வசனம் 5

1:5 (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

1:5 اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ‏

இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தயீன்

இந்த வசனத்தில் அல்லாஹ்விடம் ஒவ்வொரு முஸ்லிமும் உதவியை தேடவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

வசனங்கள்: 6 – 7 - நேர் வழியில் நடத்தும்படி வேண்டுதல்

ஆறாம் வசனத்தில் தங்களை நேரான வழியில் நடத்தும்படி வேண்டிக்கொள்ளும் படி வசனம் கூறுகின்றது.

1:6 நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

1:6 اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ

இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்

1:7 (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல

1:7 صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ

ஸிராதல்லஸீன அன் அம்த அலைஹிம் ஙைரில்மங்ளூபி அலைஹிம் வலள்ளால்லீன்

ஏழாம் வசனத்தில் குறிப்பிடப்படுபவர்கள் யூதர்களா? கிறிஸ்தவர்களா?

'அல் ஃபாத்திஹா' ஸூராவில், "எங்களை யூதர்கள் கிறிஸ்தவர்களை போல ஆக்காதே" என்றுச் சொல்லி முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளும் பல முறை அல்லாஹ்விடம் வேண்டிக்கொண்டு இருப்பதை எத்தனை முஸ்லிம்களுக்குத் தெரியும்? இப்படி முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிறார்கள் என்று கிறிஸ்தவர்களுக்காகவாவது தெரியுமா? 

கீழ்கண்ட ஆங்கில மொழியாக்கத்தில், இதனை அடைப்பிற்குள் எழுதி அடையாளப்படுத்தியுள்ளார்கள்.

ஹிலாலி மற்றும் கான் ஆங்கில மொழியாக்கம்:

The Way of those on whom You have bestowed Your Grace, not (the way) of those who earned Your Anger (such as the Jews), nor of those who went astray (such as the Christians). S. 1:7 Hilali-Khan

4.3 அரபி குர்‍ஆனை பார்த்தவுடன், அது ஹஃப்ஸ் குர்‍ஆனா, வர்ஷ் குர்‍ஆனா என்று எப்படி கண்டுபிடிப்பது?

இது மிகவும் சுலபம். இதனை கண்டுபிடிப்பது எப்படி என்பதைப் பற்றிய ஒரு தகவலை இங்கு தருகிறோம்.

குர்‍ஆனின் முதல் அத்தியாயம் முதல் வசனத்தை கவனியுங்கள். 

 • 1:1 பிஸ்மில்லா ஹிர்ரஹ் மானிர் ரஹீம் (அரபி)
 • 1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) (தமிழ்)

என்பது முதல் வசனமாக இருந்தால், அது "ஹஃப்ஸ்" குர்‍ஆன் என்று தெரிந்துக்கொள்ளலாம். 

இப்படியில்லாமல், மேலே சொன்ன சொற்றொடர் ஒரு தலைப்பாக கொடுத்துவிட்டு, முதலாவது வசமனாக 

 • 1:1 அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அரபி)
 • 1:1 அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (தமிழ்)

என்று இருந்தால், அது "வர்ஷ்" குர்‍ஆன் என்று தெரிந்துக்கொள்ளலாம். 

ஹ‌ஃப்ஸ் மற்றும் வர்ஷ் குர்‍ஆனின் முதல் அத்தியாயம் முதல் வசனம்:

மூன் பப்ளிகேஷன்ஸ் குர்‍ஆன் தமிழாக்கம்: முதல் வசனம் வித்தியாசம்

 மூன் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட குர்‍ஆன் தமிழாக்கத்தில் வர்ஷ் குர்‍ஆனில் உள்ளது போன்று 'முதல் வசனமாக' அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்ற வசனம் இருக்கும். இவர்களின் குர்‍ஆன் தமிழாக்கம், ஹஃப்ஸ் குர்‍ஆனிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது தான், ஆனால், இந்த வசனத்தை அவர்கள் 'வர்ஷ்' குர்‍ஆன் போன்று பதித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

4.4 அல்ஃபாத்திஹாவின் முதல் வசனம் எது?

நாம் மேலே பார்த்தது போன்று, ஹஃப்ஸ் குர்‍ஆனில் "பிஸ்மில்லா ஹிர்ரஹ் மானிர் ரஹீம்" என்று முதல் வசனம் தொடங்கும், வர்ஷ் குர்‍ஆனில் "அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்" என்பது முதல் வசனமாக இருக்கும். இதில் எது சரியானது என்று பார்க்கும் போது, நமக்கு ஹதீஸ்களிலிருந்து ஒரு விவரம் கிடைக்கும்.

கீழ்கண்ட ஹதீஸில் இந்த அத்தியாயத்தின் முதல் வசனம், "அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" என்று தொடங்கும் என்று முஹம்மது கூறியுள்ளார். இதன்படி தான் வர்ஷ் குர்‍ஆனில் அமைக்கப்பட்டுள்ளது, ஆனால் இன்று நாம் பயன்படுத்தும் ஹஃப்ஸ் குர்‍ஆனில், இந்த ஹதீஸுக்கு முரணாக உள்ளது, அதாவது "பிஸ்மில்லாஹ்" என்று முதல் வசனம் தொடங்குகிறது.

ஸஹீஹ் புகாரி எண்: 4474  (மேலும் பார்க்க: 4647, 4703, 5006)

அபூசயீத் பின் அல்முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழுது முடித்தபின்), “அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுதுகொண்டிருந்தேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “உங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் வழிக்கு இறைத் தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள்” என்று (8:24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா? என்று கேட்டார்கள்.7

பிறகு என்னிடம், “குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீர் பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உமக்குக் கற்றுத்தருகிறேன்” என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் வெளியே செல்ல முற்பட்டபோது நான் அவர்களிடம், “நீங்கள் “குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நான் உமக்குக் கற்றுத் தருகிறேன்' என்று சொல்லவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அது “அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' (என்று தொடங்கும் “அல்ஃபாத்திஹா' அத்தியாயம்)தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும்.8 எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆனும் ஆகும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :65

நூல்: முஸ்லிம், எண்: 655

முஸ்லிம் ஹதீஸ் எண் 655ல், பதிவு செய்யப்பட்டதின் படியும், "முதல் வசனம்" அல்ஹம்துலில்லாஹ் என்று தொடங்கும் வசனம் தான் என்பது விளங்கும். இந்த ஹதீஸை "ஹதிஸ்களில் அல் ஃபாத்திஹா" என்ற தலைப்பில் படித்துக் கொள்ளலாம்.

இதன்படி பார்த்தால், "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்பது குர்‍ஆனின் ஒரு வசனம் அல்ல, அது அத்தியாயங்களை அடையாளம் காட்ட எழுதப்பட்ட தலைப்பு என்பதை அறியமுடிகின்றது.

4.5 ஹதீஸ்களில் அல்ஃபாத்திஹா:

ஹதீஸ்களில் பல சுவாரசியமான விவரங்கள் இந்த அத்தியாயம் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.  அவைகளை தலைப்புவாரியாக காண்போம். இந்த ஸூரா அருளப்பட்டதற்கான பின்னணி காரணங்கள் சொல்லப்படவில்லையென்றாலும், இதன் சிறப்புக்கள் பற்றி அதிக விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன.

(1) முஹம்மது சில வசனங்களை சப்தமாக ஓதுவார்

அபூ கதாதா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் லுஹர்த் தொழுகையிலும் அஸர்த் தொழுகையிலும் ஸுரத்துல் ஃபாத்திஹாவுடன் மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தனர். சில நேரங்களில் (சில வசனங்களை) எங்களுக்குக் கேட்கும் படி ஓதுவார்கள். (இரண்டாவது ரக்அத்தை விட) முதலாவது ரக்அத்தை நீளமாக்குவார்கள். (நூல்: புஹாரி, எண்: 778)

(2) இப்னு அப்பாஸ் ஜனாஸாத் தொழுகையில் சப்தமாக ஓதினார்

தல்ஹா அறிவித்தார். 

நான் இப்னு அப்பாஸ்(ரலி) பின்னால் நின்று ஜனாஸாத் தொழுதேன். அப்போது அவர் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார். பிறகு 'நீங்கள் இதை நபிவழி என அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்)' என்றார். (நூல்: புஹாரி, எண்: 1335)

(3) குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் ('அல்ஃபாத்திஹா' அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும் மகத்தான குர்ஆனும் ஆகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (நூல்: புஹாரி, எண்: 4704)

அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது

நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள. நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழு.து முடித்த பின்), அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுது கொண்டிருந்தேன் என்று சொன்னேன், அதற்கு அவர்கள், உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம், இறைத்ததூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள் என்று (8-24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா என்று கேட்டார்கள்-(7). பிறகு என்னிடம், குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன் என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் வெளியே செல்ல முனைந்தபோது நான் அவர்களிடம், நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்கு கற்றுத் தருகிறேன் என்று சொல்லவில்லையா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் அலஃபாத்திஹா அத்தியாயம்)தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும்-(8). எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும் என்று சொன்னார்கள். (நூல்: புஹாரி, எண்: 4474)

அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார். 

நான் ('மஸ்ஜிதுந் நபவீ' பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழு(து முடிக்கு)ம்வரை அவர்களிடம் செல்லவில்லை. பிறகு நான்அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம், 'நீங்கள் ஏன் என்னிடம் உடனே வரவில்லை? அல்லாஹ், 'இறைநம்பிக்கையாளர்களே! இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள்' என்று கூறவில்லையா?' எனக் கேட்டார்கள். பிறகு, 'நான் (பள்ளிவாசலிலிருந்து) புறப்படுவதற்கு முன்பாக குர்ஆனில் மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன்' என்று கூறினார்கள். பின்னர் நபி அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப் போனார்கள். அப்போது நான் அவர்களுக்கு (அவர்கள் வாக்களித்ததை) நினைவூட்டினேன். நபி(ஸல்) அவர்கள், 'அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' எனும் (அல்ஃபாத்திஹா அத்தியாயத்தின்) திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் தாம்' என்று கூறினார்கள். இதே ஹதீஸை நபித்தோழர் அபூ ஸயீத் 'பின் முஅல்லா(ரலி) அவர்களிடமிருந்தே செவியுற்று வேறு அறிவிப்பாளர்களும் அறிவித்தார்கள். (நூல்: புஹாரி, எண்: 4647)

அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் நான் தொழுது கொண்டிருக்கும் நிலையில் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது என்னை அவர்கள் அழைத்தார்கள். நான் தொழுது முடிக்கும் வரை அவர்களிடம் செல்லவில்லை. (தொழுது முடித்த) பிறகு சென்றேன். அவர்கள், '(நான் அழைத்தவுடன்) நீ ஏன் என்னிடம் வரவில்லை?' என்று கேட்டார்கள். அதற்கு, 'நான் தொழுது கொண்டிருந்தேன்' என்று சொன்னேன். அப்போது அவர்கள், 'இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும் இறைத்தூதருக்கும் நீங்கள் பதிலளியுங்கள்' என்று (திருக்குர்ஆன் 08:24 வது வசனத்தில்) அல்லாஹ் சொல்லவில்லையா?' என்று கேட்டார்கள். பிறகு, 'நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்லும் முன்பாக குர்ஆனிலேயே மகத்தான அத்தியாயமொன்றை உனக்கு நான் கற்றுத் தர வேண்டாமா?' என்று கேட்டார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப் போனார்கள். நான் அவர்களுக்கு (அன்னார் சொன்னதை) நினைவுபடுத்தினேன். அவர்கள், 'அகிலத்தாரின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்' (என்று தொடங்கும் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயம் தான்) அது திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த மகத்தான குர்ஆனுமாகும்' என்று கூறினார்கள். (நூல்: புஹாரி, எண்: 4703)

அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார் 

நான் (பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். (தொழுகையில் இருந்தமையால்) நான் அவர்களுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. (தொழுது முடித்த பிறகு) 'இறைத்தூதர் அவர்களே! நான் தொழுது கொண்டிருந்தேன். (எனவேதான் உடனடியாக தங்களுக்கு நான் பதிலளிக்கவில்லை)' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ், '(இறைநம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வும் (அவனுடைய) தூதரும் உங்களை அழைக்கும்போது அவர்களுக்கு பதிலளியுங்கள்' என்று (திருக்குர்ஆன் 08:24 வது வசனத்தில்) சொல்லவில்லையா?' என்று கேட்டார்கள். பிறகு, 'நீங்கள் பள்ளி வாசலிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக குர்ஆனிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை உங்களுக்கு நான் கற்றுத் தரவேண்டாமா?' என்று வினவியபடி என்னுடைய கையைப் பிடித்தார்கள். நாங்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேற முனைந்தபோது நான், (அவர்கள் வாக்களித்ததை நினைவூட்டி) 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் குர்ஆனிலேயே மகத்துவம் பொருந்தியதோர் அத்தியாயத்தை நான் உங்களுக்குக் கற்றுத்தர வேண்டாமா என்று கேட்டீர்களே!' என்று வினவினேன். நபி(ஸல்) அவர்கள் '(அது) அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயமே) ஆகும். அது திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப் பெற்றுள்ள மேன்மை மிகு குர்ஆனுமாகும்' என்று கூறினார்கள்.(நூல்: புஹாரி, எண்: 5006)

(4) தேள் கடிக்கு இவ்வதிகாரத்தை ஓதி ஊதினால், விஷம் முறியும்

அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) கூறினார் 

நாங்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்தபோது, (ஓய்வெடுப்பதற்காக) ஓரிடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது ஓர் இளம் பெண் வந்து 'எங்கள் கூட்டத் தலைவரை தேள் கொட்டிவிட்டது. எங்கள் ஆட்கள் வெளியே சென்றுள்ளார்கள். அவருக்கு ஓதிப்பார்ப்பவர் உங்களில் எவரேனும் உண்டா?' என்று கேட்டாள். அவளுடன் எங்களில் ஒருவர் சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்தது கூட இல்லை. அவர் சென்று ஓதிப்பார்த்தார். உடனே, அந்தத் தலைவர் குணமடைந்துவிட்டார். எனவே, எங்களுக்கு முப்பது ஆடுகள் (அன்பளிப்பாக) வழங்குமாறு அவர்களின் தலைவர் உத்தரவிட்டதுடன் எங்களுக்குப் பாலும் கொடுத்தனுப்பினார். (ஓதிப்பார்க்கச் சென்ற) அந்த மனிதர் திரும்பி வந்தபோது, அவரிடம் 'உமக்கு நன்றாக ஓதிப்பார்க்கத் தெரியுமா?' அல்லது 'ஏற்கனவே, நீர் ஓதிப்பார்பவராக இருந்தீரா?' என்று கேட்டோம். அவர், 'இல்லை; குர்ஆனின் அன்னை' என்றழைக்கப்படும் ('அல்ஃபாத்திஹா') அத்தியாயத்தைத் தான் ஒதிப்பார்த்தேன்' என்று கூறினார். (இந்த முப்பது ஆடுகளையும்) நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'செல்லும் வரையில்' அல்லது 'சென்று (விளக்கம்) கேட்கும் வரையில்' ஒன்றும் செய்துவிடாதீர்கள்' என்று (எங்களுக்கிடையே) பேசிக்கொண்டோம். நாங்கள் மதீனா வந்து சேர்ந்தபோது, இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கூறினோம். 'இது ('அல் ஃபாத்திஹா' ) ஓதிப்பார்த்து நிவாரணம் பெறத்தக்கது என்று அவருக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளைப் பங்கிட்டு அதில் ஒரு பங்கை எனக்கும் தாருங்கள்! என்று கூறினார்கள். 32 இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. Volume :5 Book :66(நூல்: புஹாரி, எண்: 5007)

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார் 

நபி(ஸல்) அவர்களின் தேழர்களில் சிலர் (ஒரு பயணத்தின் போது) ஓர் அரபுக் குலத்தாரிடம் சென்றார்கள். அவர்களுக்கு அக்குலத்தார் விருந்தளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் அக்குலத்தாரின் தலைவனுக்குத் தேள் கொட்டிவிட்டது. அப்போது அக்குலத்தார் (நபித் தோழர்களிடம் வந்து) 'உங்களிடம் (இதற்கு) மருந்து ஏதும் உள்ளதா? அல்லது ஓதிப்பார்ப்பவர் எவரும் இருக்கிறாரா?' என்று கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள், 'நீங்கள் எங்களுக்கு விருந்தளிக்க முன் வரவில்லை. எனவே, நீங்கள் எங்களுக்கு (ஒரு) குறிப்பிட்ட கூலியைத் தந்தாலே தவிர (வெறுமனே) உங்களுக்கு நாங்கள் ஓதிப் பார்க்கமாட்டோம்' என்று கூறினர். உடனே, நபித்தோழர்களுக்காக அக்குலத்தார் (முப்பது ஆடுகள் கொண்ட) ஓர் ஆட்டு மந்தையைக் கூலியாக நிர்ணயித்தார்கள். நபித்தோழர்களில் ஒருவர் (எழுந்து சென்று) 'குர்ஆனின் அன்னை' எனப்படும் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயத்தை ஓதித் தம் எச்சிலைக் கூட்டி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். உடனே அவர் வலி நீங்கி குணமடைந்தார். (பேசியபடி) அவர்கள் ஆடுகளைக் கொண்டுவந்(து கொடுத்)தனர். நபித்தோழர்கள், 'நபி(ஸல்) அவர்களிடம் (அனுமதி) கேட்காதவரை இதை நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது' என்று (தமக்குள்) பேசிக்கொண்டு அவ்வாறே நபி(ஸல்) அவர்களிடம் (வந்து அனுமதி) கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு 'அல்ஃபாத்திஹா' ஓதிப்பார்க்கத் தகுந்தது என்று உமக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளை எடுத்துக் கொள்ளுங்கள்; எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுங்கள்' என்று கூறினார்கள். (நூல்: புஹாரி, எண்: 5736)

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் 

(ஒரு பயணத்தின்போது) நபித்தோழர்களில் சிலர் ஒரு நீர் நிலையைக் கடந்து சென்றார்கள். அங்கு தங்கியிருந்த மக்களிடையே (தேளின்) விஷக்கடிக்கு ஆளான ஒருவர் இருந்தார். அப்போது அந்த நீர் நிலையில் தங்கியிருந்தவர்களில் ஒருவர் நபித்தோழர்களிடம் வந்து, 'உங்களிடையே ஓதிப் பார்ப்பவர் எவரேனும் இருக்கிறாரா? இந்த நீர் நிலையில் தங்கியிருப்பவர்க(ளான எங்க)ளிடையே (தேளின்) விஷக்கடிக்கு ஆளான ஒருவர் இருக்கிறார்' என்று கூறினார். உடனே நபித்தோழர்களில் ஒருவர் சென்று குர்ஆனின் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயத்தைச் சில ஆடுகளை கூலியாகத் தரவேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் ஓதினார். உடனே விஷக்கடிக்கு ஆளானவர் குணமடைந்தார். ஓதிப்பார்த்தவர் அந்த ஆடுகளைத் தம் நண்பர்களிடம் கொண்டு வந்தார். அவர்கள் அதை (ஓதிப் பார்த்ததற்காகக் கூலி பெற்றதை) வெறுத்தார்கள். மேலும், 'அல்லாஹ்வின் வேதத்திற்காக நீர் கூலி வாங்கினீர்?' என்று கேட்டார்கள். இறுதியில் மதீனா சென்று, 'இறைத்தூதர் அவர்களே! இவர் அல்லாஹ்வின் வேதத்தை ஓதியதற்குக் கூலி வாங்கிக்கொண்டார்' என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நீங்கள் ஊதியம் பெற்றிட மிகவும் தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் வேதமேயாகும்' என்று கூறினார்கள். (நூல்: புஹாரி, எண்: 5737)

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் ஒரு பயணத்தின் போது ஓர் அரபுக் குலத்தாரைக் கடந்துசென்றார்கள். அவர்கள் அக்குலத்தாரிடம் விருந்தளிக்குமாறு கோரியும் அவர்கள் விருந்தளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் (அக்குலத்தாரின் தலைவனுக்குத் தேள் கொட்டிவிட்டது). அப்போது அவர்கள் (நபித்தோழர்களிடம்) "உங்களிடையே ஓதிப்பார்ப்பவர் எவரும் இருக்கிறாரா? ஏனெனில், (எங்கள்) குலத்தின் தலைவர் தேள்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்" என்று கூறினர். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், "ஆம்" என்று கூறிவிட்டு, அவரிடம் சென்று அவருக்கு "அல்ஃபாத்திஹா" அத்தியாயத்தின் மூலம் ஓதிப்பார்த்தார். உடனே அவர் குணமடையவும் செய்தார். (ஓதிப்பார்த்த நபித்தோழருக்கு) ஓர் ஆட்டு மந்தை (சன்மானமாகக்) கொடுக்கப்பட்டது. அத்தோழர் அதை ஏற்க மறுத்துவிட்டார். நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கூ(றி அனுமதிபெ)றாத வரை (நான் ஏற்கமாட்டேன்)" என்று கூறிவிட்டார். அவ்வாறே அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தெரிவித்தார். "அல்லாஹவின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! "அல்ஃபாத்திஹா" மூலமாகத்தான் நான் ஓதிப்பார்த்தேன்" என்று கூறினார். அதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். மேலும், "அது (அந்த அத்தியாயம்) ஓதிப்பார்க்கத் தகுந்தது என்பது உமக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டுவிட்டு, "அவர்களிடமிருந்து அ(ந்தச் சன்மானத்)தைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுடன் எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுங்கள்" என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் அந்த நபித்தோழர் "குர்ஆனின் அன்னை" எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஊதித் தமது எச்சிலைக் கூட்டி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். உடனே அந்த மனிதர் வலி நீங்கி குணமடைந்தார்" என்று அபூபிஷ்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.(நூல்: முஸ்லிம், எண்: 4428)

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நாங்கள் (ஒரு பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது ஒரு பெண் எங்களிடம் வந்து, "எங்கள் கூட்டத் தலைவரை தேள் கொட்டிவிட்டது. அவர் உடல் நலிவுற்றுள்ளார். ஓதிப் பார்ப்பவர் எவரேனும் உங்களிடையே இருக்கிறாரா?" என்று கேட்டாள். அவளுடன் எங்களில் ஒரு மனிதர் சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்துக்கூட ("நழுன்னுஹு") பார்த்ததில்லை. அவர் "அல்ஃபாத்திஹா" அத்தியாயத்தைக் கொண்டு ஓதிப்பார்க்க, அந்தத் தலைவர் குணமடைந்து விட்டார். ஆகவே, அவருக்குச் சில ஆடுகளை வழங்கியதோடு எங்களுக்குப் பருகுவதற்குப் பாலும் கொடுத்தனர். (அந்த நண்பர் திரும்பி வந்தபோது) அவரிடம், "உமக்கு நன்றாக ஓதிப்பார்க்கத் தெரியுமா?" என்று கேட்டோம். அவர், "அவருக்கு நான் "அல்ஃபாத்திஹா" அத்தியாயத்தைத்தான் ஓதிப் பார்த்தேன்" என்று சொன்னார். அவரிடம் நான், "நபி (ஸல்) அவர்களிடம் செல்லும்வரை இதை அசைத்துவிடாதீர்கள்" என்று சொன்னேன். நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, அதைப் பற்றி அவர்களிடம் சொன்னோம். அப்போது அவர்கள் "அது (அல்ஃபாத்திஹா அத்தியாயம்) ஓதிப்பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்; அதில் ஒரு பங்கை எனக்கும் ஒதுக்குங்கள்" என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. 

ஆயினும் அதில், "அவளுடன் எங்களில் ஒரு மனிதர் எழுந்து சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்ததுகூட ("நஃபின்ஹு") இல்லை" என இடம் பெற்றுள்ளது.(நூல்: முஸ்லிம், எண்: 4429)

(5) அல்ஃபாத்திஹா (குர்ஆனின் அன்னை) அத்தியாயத்தை ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

குர்ஆனின் தோற்றுவாய் (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை. இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. Book :4 (நூல்: முஸ்லிம், எண்: 651)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை. இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. Book :4(நூல்: முஸ்லிம், எண்: 652)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை. இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள். (மஹ்மூத் சிறுவராக இருந்தபோது) அவர்களது கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளி (வாயில் செலுத்திய பின்) அவரது முகத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (செல்லமாக) உமிழ்ந்தார்கள்.(நூல்: முஸ்லிம், எண்: 653)

மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. 

அவற்றில் (குர்ஆனின் அன்னை எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தையும்) அதற்கு மேலாகவும் ஓதாதவருக்குத் தொழுகையே கிடையாது என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.(நூல்: முஸ்லிம், எண்: 654)

(6) குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ள தொழுகையாகும்

அப்துர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ள தொழுகையாகும்; நிறைவு பெறாததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவித்தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் நாங்கள் இமாமக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கிறோம் (அப்போதுமா ஓத வேண்டும்)? என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: அதை உங்களுடைய மனதில் ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில், அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயம்)தனை எனக்கும் என் அடியானுக்குமிடையே (துதித்தல்,பிரார்த்தித்தல் ஆகிய) இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான் என்று கூறுவான். அடியான் அர்ரஹ்மானிர் ரஹீம் (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான் என்னைத் துதித்துவிட்டான் என்று கூறுவான். அடியான் மாலிக்கி யவ்மித்தீன் (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்று கூறுவான். (நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டான் என்றும் கூறியுள்ளார்கள்.) 

மேலும், அடியான் இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன் (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால், அல்லாஹ், இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான். அடியான் இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல; வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

இந்த ஹதீஸை அலாஉ பின் அப்திர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அன்னார் தமது இல்லத்தில் நோயுற்றிருந்தபோது அவர்களைச் சந்திக்க நான் சென்றிருந்தேன். அப்போது நானே இந்த ஹதீஸ் குறித்து அன்னாரிடம் கேட்டேன். (நூல்: முஸ்லிம், எண்: 655)

மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

இவ்விரு அறிவிப்புகளிலும் தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயம்)தனை எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்திருக்கிறேன். அதில் ஒரு பகுதி எனக்கும் மற்றொரு பகுதி என் அடியானுக்கும் உரியதாகும் என்று அல்லாஹ் கூறினான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. Book :4(நூல்: முஸ்லிம், எண்: 657)

அலாஉ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (அப்துர் ரஹ்மான் பின் யஅகூப்-ரஹ்) அவர்களும் அபுஸ்ஸாயிப் (ரஹ்) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களுடைய நண்பர்களாக இருந்தனர். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக அவ்விருவரும் கூறினர்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனின் தோற்றுவாய் (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ளதாகும். இதை மூன்று முறை கூறினார்கள். (நூல்: முஸ்லிம், எண்: 658)

(7) அல்ஃபாத்திஹா ஓதி இமாம் ஆமீன் என்றுச் சொல்லும் போது, முஸ்லிம்களும் ஆமீன் என்றுச் சொல்லவேண்டும், அதே நேரத்தில் வானவர்கள் கூட ஆமீன் என்றுச் சொல்வார்கள். இவை இரண்டும் ஒன்று சேர்ந்தால், அந்த முஸ்லிமின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இமாம், (அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதி முடித்து) ஆமீன் கூறும்போது நீங்களும் ஆமீன் கூறுங்கள். ஏனெனில்,எவருடைய ஆமீன், வானவர்கள் கூறும் ஆமீனுடன் (நேரத்தால்) ஒத்து அமைந்துவிடுகிறதோ அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்படுகின்றன. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் கூறுபவர்களாக இருந்தார்கள்.(நூல்: முஸ்லிம், எண்: 689)

(8) அல்ஃபத்திஹா மற்றும் அல் பகரா அத்தியாயத்தின் கடைசி வசனங்களை ஓதி முஹம்மது எதைக் கேட்டாலும், நிச்சயமாக அல்லாஹ் தருவார். இது வேறு எந்த தீர்க்கதரிசிக்கும் தரப்படாத பாக்கியம் முஹம்மதுக்கு மட்டுமே தரப்பட்டது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)" என்று கூறினார்கள். அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் "இதோ இந்த வானவர் இப்போதுதான் பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார். இதற்கு முன் எப்போதும் அவர் பூமிக்கு இறங்கியதேயில்லை" என்று கூறினார்கள். அவ்வானவர் சலாம் கூறிவிட்டு, "உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். "அல்ஃபாத்திஹா" அத்தியாயமும் "அல்பகரா" அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை"என்று கூறினார். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (நூல்: முஸ்லிம், எண்: 1472)


திருக்குர்‍ஆன் களஞ்சியம் பொருளடக்கம்