தலாக் 9 – எனக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர் – உனக்கு ஒருவரை கொடுத்துவிடுகிறேன்

இந்த தலாக் தொடரின் முந்தைய கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும்.

இந்த சிறிய கட்டுரையில் ஒரு முக்கியமான புகாரி ஹதீஸை தொட்டுவிடுவோம்.

1) நண்பனுக்காக/சகோதரனுக்காக மனைவிக்கு தலாக்கொடுக்க விரும்பின முஸ்லிம்

புகாரி ஹதீஸ் 3780ஐ படித்துப் பாருங்கள். கீழே அதன் முக்கியமான பாகத்தை பதித்துள்ளேன்.

புகாரி எண் 3780 ( மேலும் பார்க்க 3781)

3780. இப்ராஹீம் இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அவ்ஃப்(ரஹ்) அறிவித்தார். 

(முஹாஜிர்களான) நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது இறைத்தூதர்(ஸல) அவர்கள் (என் தந்தை) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களுக்கும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) என்னும் அன்சாரித் தோழர்) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். (என் தந்தை) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி), 'நான் அன்சாரிகளில் அதிக செல்வம் உடையவன். என் செல்வத்தை இரண்டு பாதிகளாக்கிப் பங்கிட்டு நான் (ஒரு பாதியை உங்களுக்குக் கொடுத்து) விடுகிறேன். எனக்கு இரண்டு மனைவிமார்கள் உள்ளனர். அவ்விருவரில் உங்களுக்கு அதிகமாகப் பிடித்திருப்பவளைப் பார்த்து என்னிடம் சொல்லுங்கள். நான் அவளைத் தலாக் (மண விலக்கு) செய்து விடுகிறேன். அவளுடைய 'இத்தா' காலம் விடுகிறேன். . . . . 

முஹம்மதுவும் இதர முஸ்லிம்களும் மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம் பெயர்ந்தார்கள். மக்காவிலிருந்து வந்தவர்களுக்கு மதினாவில் உணவு, உடை மற்றும் வீடு போன்றவைகள் தேவைப்பட்டன. மேலும் மதினாவில் இருந்தவர்களோடு மக்காவிலிருந்து வந்தவர்களுக்கு இடையே சகோதர உறவை முஹம்மது உண்டாக்கினார். அதாவது, மக்காவினருக்கு தேவையான உதவிகள்  செய்ய இப்படிப்பட்ட நட்புறவு தேவைப்பட்டது அப்போது. மக்காவின் முஸ்லிம்களுக்கு உதவி செய்த மதினாவின் முஸ்லிம்களை அன்சாரிகள் (உதவியாளர்கள்) என்று அழைப்பார்கள்.

மதினாவின் ஒரு முஸ்லிம், மக்காவின் முஸ்லிமிடம் பேசுவதை மேற்கண்ட ஹதீஸில் படிக்கிறோம். மக்காவிலிருந்து வந்தவர்களுக்கு உணவு, உடை, மற்றும் வீடு மட்டுமல்ல, அவர்கள் பக்கத்தில் படுக்க மனைவியும் தேவை என்று மதினாவின் இந்த முஸ்லிம் நினைத்துவிட்டார் போல் தெரிகின்றது.

மதினா முஸ்லிம், மக்காவிலிருந்து வந்த முஸ்லிமிடம் சொல்கிறார்:

1) எனக்கு செல்வம் அதிகம் உள்ளது, எனவே உனக்கு  அதில் பாதியை கொடுத்துவிடுகிறேன்.

2) எனக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர், அவர்களில் உனக்கு யாரை அதிகமாக பிடிக்கும் என்பதைச் சொல்லுங்கள், நான் அவளை விவாகரத்து செய்துவிடுகிறேன். நீங்கள் அவளை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்.

வாசகர்கள் கவனிக்கவேண்டும்: இந்த மனைவி (பெண்) பார்க்கும் படலம் எப்படி நடக்கும் என்பதை கற்பனை செய்துப்பாருங்கள். இந்த மதினா முஸ்லிம், தன் இரண்டு மனைவிகளை கொண்டு வந்து, மக்கா முஸ்லிமுக்கு முன்பாக நிறுத்துவான். இவர் அப்பெண்களை, அதாவது வேறு ஒரு மனிதனின் மனைவிகளை மேலும் கீழும் உற்றுப் பார்ப்பார் (யார் அழகாக இருக்கிறார்கள் என்று வேறு எப்படி தெரிந்துக்கொள்வது?). முகத்துக்கு முக்காடு போட்டு இருந்தால், அதனை கழற்றவேண்டும். வேறு எவைகளை பார்ப்பார் என்று எனக்குத் தெரியாது. கடைசியாக, அவ்விரு பெண்களில் ஒருத்தியைக் காட்டி, இவள் தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றுச் சொல்வார்.

மேற்கண்ட ஹதீஸை படித்த பிறகு உங்களுக்கு என்ன தோன்றுகிறது? 

மதினாவின் முஸ்லிம்களுக்கு எவ்வளவு பாசம் பார்த்தீர்களா? சொத்தில் பாதியை கொடுத்தார்! மனைவிகளிலும் பாதியை கொடுக்க விரும்புகிறார்! என்று ஆச்சரியமாக உள்ளதா? 

அல்லது 

இவர் கேவலமான சமுதாயத்தில் வளர்ந்தவர் போல் தெரிகிறது. பெண்ணென்றால் ஒரு விளையாட்டுப் பொருள் அல்லது உயிரற்ற பொருள் போல இவர் பாவிக்கிறார். ச்சே… இவனெல்லாம் ஒரு மனிதனா? என்று எண்ணத்தோன்றுகிறதா?

இதே விவரத்தைச் சொல்லும் இன்னொரு புகாரி ஹதீஸில் (எண் 2048), “இது எனக்கு தேவையில்லை” என்று அந்த மக்காவிலிருந்து வந்தவர் சொன்னதாக உள்ளது. ஆனால், அந்த அன்சாரி (மதினா முஸ்லிம்) சொன்னது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. மனைவியை ஒரு பொருளைப் போல பாவித்து ”நான் விவாகரத்துச் செய்கிறேன், அதன் பிறகு நீ திருமணம் செய்துக்கொள்” என்றுச் சொல்வது பெண்களை கேவலப்படுத்தும் செயலாகும்.

 • மனைவிகளுக்கு தங்கள் சொந்த விருப்பங்கள் இல்லையா?
 • யாரை கேட்டு இந்த அன்சாரி தன் மனைவியை விவாகரத்து செய்கிறேன் என்றுச் சொல்கிறார். 
 • ஆண் ஆதிக்க சமுதாயத்தில் இப்படித்தான் பெண்களை மிருகங்களுக்கு சமமாக பார்ப்பார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

2) இந்த அன்சாரி செய்ததற்கும், இஸ்லாமுக்கும் என்ன தொடர்பு?

மேற்கண்ட ஹதீஸில்  படித்த விவரங்கள் மதினாவில் வாழ்ந்த ஒரு முஸ்லிமின் செயலாகும், இதற்கும் இஸ்லாமுக்கும் முஹம்மதுவிற்கும் சம்மந்தமில்லை. இப்படிப்பட்ட கீழ்தரமான காரியங்களை அல்லாஹ்வும் அனுமதிக்கமாட்டார், எங்கள் முஹம்மதுவும் அங்கீகரிக்கமாட்டார்கள் என்று முஸ்லிம்கள்  சொல்லக்கூடும். அதாவது ஒரு பெண் தன் கணவனோடு வாழ்ந்துக்கொண்டு இருக்கும் போது, இன்னொரு ஆணோடு திருமணம் புரியவேண்டும் என்பதற்காக அவளுக்கு விவாகரத்து கொடுப்பது ‘பெண்களை விளையாட்டுப் பொருளாக கருதும் கேவலமான செயலாகும்”. இப்படிப்பட்ட செயலை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை என்று முஸ்லிம்கள் சொல்லக்கூடும். 

முஸ்லிம்களின் இந்த கூற்று நியாயமானதாக இருக்கிறது. உண்மையில் அந்த மதினா முஸ்லிம் சொன்னதற்கும், இஸ்லாமுக்கும் என்ன சம்மந்தமிருக்கிறது? அல்லாஹ்வோ முஹம்மதுவோ இப்படி செய்திருந்தால் ’நாம் கேள்வி கேட்கலாம்’, மதினாவில் வாழ்ந்த ஒரு மனிதன் செய்தவற்றிற்கு இஸ்லாமை குற்றப்படுத்துவது நியாயமா?

3) அன்சாரி செய்த அதே தவறை செய்த அல்லாஹ்

முஸ்லிம்களே! உங்கள் அல்லாஹ் அந்த அன்சாரியைப் போல செயல்பட்டு இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்தால் என்ன செய்வீர்கள்? ”இது தவறான கூற்றாகும், இதனை நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம். ஒரு பொண் ஒருவரின் மனைவியாக இருக்கும் போது, அவளை இன்னொருவருக்கு மனைவியாக பாவிப்பது தவறானதாகும்”. இப்படிப்பட்ட செயலை அல்லாஹ் செய்திருந்தால், அதற்கான ஆதாரங்களைக் காட்டுங்கள் என்று என்னிடம் கேட்கவேண்டும் என்று தோன்றுகிறதல்லவா? 

3.1 ஸஃபியாவின் கனவில் முஹம்மது:

கைபர் போருக்கு பிறகு, ஸஃபியா என்ற பெண்ணை முஹம்மது தனக்கென்று எடுத்துக்கொள்கிறார் (புகாரி எண் 371). இந்த போருக்கு முன்பு, ஒரு நாள் அப்பெண்ணின் கனவில், தனக்கு முஹம்மது கணவராக வருவார் என்பதை விளக்கும் வண்ணமாக ஒரு கனவு காண்கிறாள். இதைப் பற்றி இப்னு இஷாம் பதிவு செய்துள்ளதாக முஸ்லிம்கள் கீழ்கண்ட விவரங்களைத் தருகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவுடைய கன்னத்தில் அடியின் வடுவைப் பார்த்து "இது என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்கள் ஊர் வருவதற்கு முன் முழு நிலா தனது இடத்திலிருந்து விலகி எனது மடியில் விழுவதாகக் கனவு கண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களைப் பற்றிய எவ்விஷயத்தையும் நான் நினைக்கவில்லை.இக்கனவை எனது கணவனிடம் கூறியபோது எனது கன்னத்தில் வேகமாக அறைந்து. மதீனாவில் இருக்கும் அரசரையா நீ ஆசைப்படுகிறாய்? என்றார். அதன் காரணமாக ஏற்பட்ட வடுதான் இது" என்று கூறினார். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

இந்த ஸப்பியா பற்றிய விவரங்களை மேலும் அறிய கீழ்கண்ட தமிழ் கட்டுரைகளை படிக்கவும்:

கேள்விகள்:

அ) ஸஃபியாவின் கனவில் முஹம்மதுவை திருமணம் செய்வது பற்றிய விவரங்களை கொடுத்தவன் யார்? அல்லாஹ்வா? அல்லது சைத்தானா?

ஆ) ஸஃபியா இன்னும் ஒரு ஆணின் மனைவியாக இருக்கும் போதே கனவில் ‘முஹம்மதுவிற்கு அவள் மனைவியாக ஆகப்போகிறதை’ கனவை கொடுத்தது சரியா தவறா? இது அந்த மதினா அன்சாரி  செய்தது போல் இருக்கின்றதல்லவா?  ஸபியாவின் கணவரை முஹம்மதுவினால் கொல்லச்செய்து, அப்பெண்ணை முஹம்மதுவிற்கு கொடுக்கிறார் அல்லாஹ்.

இ) இந்த கனவை அல்லாஹ் கொடுத்திருந்தால், அவர் கேவலமான செயலை செய்தவர் என்று முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வார்களா?

3.2 ஸவ்தாவின் கனவில் முஹம்மது

இன்னொரு உதாரணத்தையும் இங்கு சொல்லவேண்டும். 

முஹம்மதுவின் இரண்டாவது மனைவியாகிய ஸவ்தா அவர்கள் தம் கணவருடன் இருக்கும் போதே, முஹம்மது பற்றிய கனவு கண்டு இருந்திருக்கின்றார். அந்த கனவிற்கு அவரது கணவர் விளக்கமும் அளித்துள்ளார்கள். இதைப் பற்றி தமிழ் முஸ்லிம் தளத்தில் ”முஹம்மது நபியின் திருமணங்கள் (பாகம் 3)” என்ற கட்டுரையில் பதிக்கப்பட்டுள்ளது.

அன்னையவர்கள் அபிசீனியாவில் வாழ்ந்த நாட்களில் இருமுறை ஒரே அர்த்தத்தை பிரதிபலிக்கும் கணவை கான்கிறார்கள், ஒருநாள் அண்ணல் அவர்கள் அன்னையவர்களது இல்லத்தில் நுழைந்து, அன்னையின் கழுத்தைப் பற்றிப் பிடிப்பது போலக் கனவு கண்டார்கள். இன்னுமொரு சமயத்தில், அன்னையவர்களது மடியில் நிலவு வந்து இறங்குவது போன்றும் கனவு கண்டார்கள். தான் கண்ட கனவினைத் தனது கணவரிடம் எடுத்துரைத்த பொழுது, நான் இறந்தவுடன் நீ இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொள்வாய் என்று அந்த கனவுக்கு அவரது கணவர் விளக்கமளித்தார்கள்.

ஸவ்தா அவர்கள் கண்ட கனவையும் கொடுத்தவர் யார் என்று முஸ்லிம்களிடம் கேட்டுப்பார்த்தால், ‘அல்லாஹ்’ என்றுச் சொல்வார்கள். ஒரு பெண் ஒரு ஆணின் மனைவியாக இருக்கும் போதே இப்படிப்பட்ட கனவை அல்லாஹ் கொடுத்தால், அவளது அப்போதைய வாழ்க்கை எப்படி இருக்கும்? இனிக்குமா? ஒரு குடும்பப் பெண்ணின் கனவில் இதர ஆண்களை திருமணம் செய்வதுப் பற்றிய இப்படிப்பட்ட கனவுகளை கொடுப்பது அல்லாஹ்விற்கு சரியானதா? ஸவ்தாவின்  கணவர் மரிப்பது பற்றி அல்லாஹ்விற்கு தெரியும், மேலும் அதன் பிறகு முஹம்மது அவரை மணப்பதும் அல்லாவிற்குத் தெரியும். இதனை ஸவ்தாவின் கணவர் மரிப்பதற்கு முன்பு, ஸவதாவிற்கு காட்டவேண்டிய அவசியம் அல்லாவிற்கு ஏன் வந்தது?

ஸவ்தாவின் வாழ்க்கையப் பார்க்கும் போது, அவரது கணவர் மரிப்பார் என்பதை அல்லாஹ் அறிந்திருந்தபடியினால், ஸவ்தாவிற்கு கனவை கொடுக்கிறார். இப்படி இரண்டு முறை கனவு கொடுக்கப்பட்டு செய்த திருமணமாக இருந்தாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, ஸவ்தாவிற்கு வயது கூடிவிட்டது, அவருக்கு கவர்ச்சியில்லை என்பதால் விவாகரத்து செய்யவும் முடிவு செய்துவிட்டார் முஹம்மது. ஸவ்தாவின் முஹம்மதுவின் திருமணம் ஆயிரம் காலத்து பயிர் அல்ல, மனைவிக்கு அழகு இருக்கும்வரை வளரும் பயிர் ஆகும். (இத்தோடரின் முந்தைய கட்டுரைகளை படிக்கவும்). இப்படி சில ஆண்டுகளே முஹம்மது குடும்பம் நடத்துவார் என்பதை அறிந்திருந்த அல்லாஹ் ஏன் ஸவ்தாவிற்கு இரண்டு முறை கனவுகளைக் கொடுக்கவேண்டும்? இது சிந்திக்கவேண்டிய கேள்வி தான்!

3.3 ஜைனப் ஜைதுவின் மனைவியாக இருக்கும் போதே முஹம்மதுவிற்கு நிச்சயிக்கப்பட்டவர்

இந்த நிகழ்ச்சியை அனைவரும் அறிவோம். முஹம்மதுவின் வளர்ப்பு மகனின் (ஜைதுவின்) மனைவி ஜைனப் “முஹம்மதுவிற்கு என்று” அல்லாஹ் முடிவு செய்ததாக குர்-ஆன் 33:37 சொல்கிறது. ”ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்” என்று குர்-ஆன் சொல்கிறது. இந்த நிகழ்ச்சியின் பின்னணியை கவனித்தால், இந்த விவாகரத்துக்கு காரணமே முஹம்மது தான் என்பது விளங்கும். 

33:37. (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

இங்கு ஏதோ ஒரு வசியம் இருக்கிறது. முஹம்மதுவின் திருமணம் என்று வரும் போது மட்டும், அல்லாஹ் எங்கிருந்தாலும் முன்னாலே வந்துவிடுகின்றார். 

 1. எதிரியின் மனைவிக்கு கனவை கொடுக்கிறார் (ஸபியா).
 2. நல்ல முஸ்லிமின் மனைவிக்கு கனவை கொடுக்கிறார் (ஸஃபியா).
 3. வளர்ப்பு மகனின் மனைவி பற்றி குர்-ஆன் வசனத்தை இறக்குகிறார் (குர்-ஆன் 33:37).
 4. கடைசியாக ஒரு சிறுமியை முஹம்மது திருமணம் செய்யவேண்டும் என்பதற்காக, முஹம்மதுவிற்கே கனவை கொடுத்திருந்திருக்கின்றார்.

புகாரி 5125 

ஆயிஷா(ரலி) அறிவித்தார் 

என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டுள்ளேன். ஒரு வானவர் உன்னைப் பட்டுத் துணியொன்றில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர், 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்'' என்று சொல்லிக்கொண்டேன். 

முடிவுரை:

தாலாக்  பற்றிய இந்த ஆய்வு நம்மை எங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது? மதினாவின் முஸ்லிம் தன் மனைவிகளில் ஒருத்தியை இன்னொரு முஸ்லிமுக்கு கொடுக்கிறேன் என்றுச் சொல்கிறார். இந்த மதினா முஸ்லிமின் இச்செயலை முஹம்மது கண்டித்ததாக நான் எந்த ஒரு ஹதீஸிலும் காணவில்லை. ஒருவேளை முஸ்லிம்களுக்கு தெரிந்திருந்தால் எனக்கு தெரிவிக்கவும். சின்ன சின்ன விஷயங்களுக்கெலாம் ’தலாக்’ கொடுக்கப்படும் என்று அல்லாஹ் முஹம்மதுவின் மனைவிமார்களை மிரட்டியுள்ளான். குடும்ப பெண்களின் கனவுகளில், அல்லாஹ் முஹம்மதுவை திருமணம் செய்வது பற்றிய கனவுகளை காட்டியுள்ளான். 

பெண்கள் என்றால் யார்? குழந்தைகளை பெற்றெடுக்க பயன்படும் இயந்திரங்களா? இஸ்லாமில் பெண்களின் நிலை என்ன? 

இதுவரை தலாக் பற்றி ஒன்பது கட்டுரைகளை குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களின் உதவியோடு ஆய்வு செய்துள்ளோம். இக்கட்டுரைகளை படிக்கும் முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் கருத்துக்களை எனக்கு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். 

 • இஸ்லாமிய மூல நூல்களில் கண்ட அன்றைய விவரங்கள், எப்படி இன்றைய முஸ்லிம் குடும்பங்களை பாதிக்கிறது? 
 • நாங்கள் பெண்களை கவுரவிக்கிறோம், அவர்களை சின்னச் சின்ன காரணங்களுக்காக தலாக் கொடுப்பதில்லை என்று முஸ்லிம்கள் சொல்கிறார்களா?
 • குர்-ஆனையும், முஹம்மதுவையும் பின்பற்றும் இஸ்லாமிய நாடுகளில் தலாக் சதவிகிதம் மிகவும் குறைந்த அளவில் உள்ளதா?
 • முஹம்மதுவை பின்பற்றாத காஃபிர் நாடுகளில், விவாகரத்தின் சதவிகிதம் இஸ்லாமிய் நாடுகளின் சதவிகிதத்தை விட அதிகமாக உள்ளதா?
 • பெண்களை இஸ்லாம் நல்லவிதமாக பார்க்கிறது, இஸ்லாம் நல்ல முஸ்லிம்களை உருவாக்குகிறது என்று முஸ்லிம்கள் சொல்வதினால் இஸ்லாமிய நாடுகளில் நிச்சயம் தலாக்கின் சதவிகிதம் குறைவாகவே இருக்கவேண்டும்.

இவைகள் உண்மையா? வாருங்கள் தற்கால இஸ்லாமிய நாடுகளின் பக்கம் நம் ஆய்வை திருப்புவோம். இஸ்லாமின் பிறப்பிடமான சௌதி அரேபியாவிற்கு பயணிப்போம், அங்குள்ள பெண்களில் நிலையையும், தலாக் பற்றிய புள்ளிவிவரங்களையும் ஆய்வு செய்வோம். 

முஸ்லிம்களுக்கு ஆச்சரியம் காத்திருக்குமா? அல்லது உமருக்கு (எனக்கு) ஏமாற்றமா?

அடுத்த தொடரில் சந்திப்போம்…


தலாக் பற்றிய இதர கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்