முஹம்மது அல்லாஹ்விடமிருந்து பெற்ற 7 வட்டார மொழி குர்‍ஆன்களை ஏன் கலிஃபா உஸ்மான் எரித்தார்கள்?

உலகம் முழுவதும் ஒரே குர்‍ஆனைத் தான் நாங்கள் பயன்படுத்துகிறோம் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். ஆனால், முஹம்மது 7 குர்‍ஆன்களை, அல்லாஹ்விடமிருந்து பெற்றதாக இஸ்லாம் கூறுகிறது.

புகாரி எண் 3129:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரேயொரு (வட்டார) மொழி வழக்குப்படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழி வழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது. என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இதே விவரத்தை இன்னொரு ஹதீஸில் மேலதிக  விவரங்களோடு காணலாம், அதன் சுருக்கத்தை இங்கு தருகிறேன்.

முஸ்லிம் எண்: 1491

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

. . . அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "உபை, "குர்ஆனை ஓர் ஓதல் முறைப்படி ஓதுவீராக" என எனக்கு (இறைவனிடமிருந்து) செய்தியறிவிக்கப்பட்டது. உடனே நான் என் சமுதாயத்தாருக்கு இன்னும் சுலபமாக்கும்படி (இறைவனிடம்) கோரினேன். அப்போது "குர்ஆனை இரண்டு ஓதல் முறைப்படி ஓதுவீராக!" என எனக்கு இரண்டாவது முறையாக இறைவன் அறிவித்தான். உடனே நான் இன்னும் என் சமுதாயத்தாருக்கு சுலபமாக்கும்படி கோரினேன். மூன்றாவது முறையில் குர்ஆனை ஏழு ஓதல் முறைகளின் படி ஓதும்படி எனக்கு இறைவன் அறிவித்தான். . . .

மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்ட நிகழ்ச்சி 'முஹம்மதுவிற்கும் அல்லாஹ்விற்கும்' இடையே நடைப்பெற்ற ஒன்றாகும். இங்கு முஹம்மது அல்லாஹ்வோடு நேரடியாக பேசவில்லை, ஆனால், ஜிப்ரீல்  மூலமாக  பேசினார் என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும். 

அல்லாஹ்: முஹம்மதுவே, "உபை பின் கஅப்" எப்படி குர்‍ஆனை ஓதுகின்றாரோ, அதன் படி குர்‍ஆனை ஓதுவீராக, மற்றவர்களுக்கும் கற்றுத்தருவீராக.

முஹம்மது: யா.. அல்லாஹ்! உபையின் குர்‍ஆன் ஓதுதல், முஸ்லிம்களுக்கு கடினமாக உள்ளது, இன்னொரு உச்சரிப்பில் அதாவது வட்டார மொழியில் குர்‍ஆனை இறக்கும்படி வேண்டுகிறேன்.

அல்லாஹ்: சரி ஆகட்டும், இதோ ஜிப்ரீலிடம் இரண்டாவது வட்டார மொழி வழக்கில் குர்‍ஆனை கொடுத்து அனுப்புகிறேன், அவரிடம் அதன் ஓதுதலை கற்றுக்கொள்ளுங்கள்.

முஹம்மது: யா.. அல்லாஹ்! இன்னொரு வேண்டுகோள், இரண்டு வட்டார வழக்கிலும் ஓதுவது உன் அடியார்களுக்கு கடினமாக இருக்கும். எனவே, இன்னொரு வட்டார மொழி வழக்கிலும், குர்‍ஆனை இறக்கவேண்டுமென்று மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

அல்லாஹ்: ம்ம்ம்... சரி, நான் மொத்தம் 7 வட்டார மொழி வழக்கில்  அரபியில் ஓதுவதற்கு பயன்படும்படி குர்‍ஆனை இறக்குகிறேன். இப்போது மகிழ்ச்சி தானே!

முஹம்மது: யா.. அல்லாஹ்! மிக்க மகிழ்ச்சி, உன்னை போல வாரிவழங்குபவர்கள் யார் இருக்கிறார்கள். அளவில்லாமல் வழங்குபவர்களில் நீயே சிறந்தவன்.

ஆக, அல்லாஹ்வும் இஸ்லாமின் இறைத்தூதரும் சேர்ந்து மக்களுக்கு  சுலபமாக புரியவேண்டுமென்பதற்காக ஏழு வகையில் குர்‍ஆனை ஓதும் படி (வட்டார வழக்கில்) ஏற்பாடு செய்திருந்தார்கள்.

முஹம்மது அல்லாஹ்விடமிருந்து பெற்ற 7 வட்டார மொழி குர்‍ஆன்களை ஏன் கலிஃபா உஸ்மான் எரித்தார்கள்?

முஹம்மது கி.பி. 632ல் மரித்தார், அதன் பிறகு அபூ பக்கர் அவர்கள் இரண்டாண்டுகள் இஸ்லாமிய ஆட்சி தலைவராக (கலிஃபாவாக‌) ஆட்சி செய்தார், அதன் பிறகு, உமர் அவர்கள் அடுத்த 10 ஆண்டுகள் கலிஃபாவாக ஆட்சி செய்தார்கள். 

மூன்றாவதாக, உஸ்மான் அவர்கள் கலிஃபாவாக ஆட்சிக்கு வந்தார். இவரது  ஆட்சி காலத்தில், அனைத்து குர்‍ஆன்களையும் எரித்துவிட்டு, ஒரே வகையான குர்‍ஆனை இவர் உருவாக்கினார். அதாவது குறைஷி மக்கள் அரபி வட்டார மொழி வழக்கில் உள்ள குர்‍ஆனை இவர் 'இஸ்லாமிய அதிகார பூர்வமான குர்‍ஆனாக" அறிவித்தார்.  மற்ற ஆறு வட்டார மொழி வழக்கில் உள்ள குர்‍ஆன்களை எரித்துவிடும்படி கட்டளையிட்டார். பல சஹாபாக்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இவர் ஆட்சிப்  பொறுப்பில் இருந்தபடியால், தம் அதிகாரத்தை பயன்படுத்தி, மற்ற குர்‍ஆன் பிரதிகளை எரித்துவிட்டார். 

உஸ்மான் அவர்கள் தொகுத்த இந்த குர்‍ஆன் மற்ற இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளுக்கு அனுப்பி, இதைத் தான் மக்கள் இனி பயன்படுத்தவேண்டும், மற்ற குர்‍ஆன்களை எரித்துவிடுங்கள் என்று கட்டளையிட்டார்.

கேள்விகள்:

1) முஹம்மது அவர்கள் அல்லாஹ்விடமிருந்து பெற்ற ஏழு வட்டார மொழி குர்‍ஆன்கள் பற்றி உஸ்மான் அவர்களுக்கும் மற்ற சஹாபாக்களுக்கும் தெரியாதா?

2) ஏன் உஸ்மான் அவர்கள் மற்ற 6 வட்டார வழக்க குர்‍ஆன்களை எரித்தார்? இதற்கு இஸ்லாம் பதில் சொல்லுமா?

3) முஹம்மது உயிரோடு இருந்த போது, இந்த காரியத்தை முஹம்மது செய்திருந்தால், அவர் அல்லாஹ்விடமிருந்து வஹியைப் பெற்று செய்திருப்பார்! ஆனால், உஸ்மான் அவர்களுக்கு வஹி கொடுக்கப்படுவதில்லை என்பது தானே உண்மை? இதனை இவர் எப்படி செய்தார்?

4) ஏழு வட்டார மொழி வழக்க குர்‍ஆன், முஹம்மது மரித்த பிறகு இன்னும் பல வட்டார மொழி வழக்கில் ஓத முஸ்லிம்கள் ஆரம்பித்தார்கள், எனவே தான் உஸ்மான் இதனைச் செய்தார் என்று பதில் சொல்வோமானால், முஹம்மதுவிற்கு முதலில் இறக்கப்பட்ட ஏழு வட்டார மொழி வழக்க குர்‍ஆன்களை எழுத்துவடியில் மாற்றியிருந்தால், இந்த பிரச்சனை வந்திருக்குமா?

5) அல்லாஹ்வின் வார்த்தைகளை ஓசையில் பாதுகாத்தால், ஆது ஓசையில்லாமலேயே காற்றில் கலந்து கறைபட்டுவிடும் என்பதை ஏன் அல்லாஹ்வோ முஹம்மதுவோ அறியவில்லை?

6) முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு 15 ஆண்டுகள் கழித்துத் தான், இந்த ஞானம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு கிடைத்துள்ளது, என்பதை அறியும் போது, 'அல்லாஹ்வின் சர்வஞானம் மீது சந்தேகம் வருகிறதல்லவா'?

7) முதலில் அல்லாஹ் கொடுத்த ஒரு குர்‍ஆன் சரியானதா? அல்லது முஹம்மது வருந்தி பெற்றுக்கொண்ட ஏழு குர்‍ஆன்கள் சரியானவையா? அல்லது உஸ்மான் அவர்கள் தொகுத்த ஒரு குர்‍ஆன் சரியானதா?

8) பக்தியுள்ள முஸ்லில்கள் கண்டுபிடிக்கவேண்டிய ஒரு விஷயம் இன்னும் உள்ளது, அதாவது உஸ்மான்  தொகுத்த குர்‍ஆன், அல்லாஹ் முதலில் கொடுத்த குர்‍ஆனுக்கு சமமாக‌, ஒரே மாதிரியாக இருந்திருக்குமா? என்று கண்டுபிடிப்பது எப்படி? உஸ்மான் மற்ற குர்‍ஆன்கள் அனைத்தையும் எரிக்காமல் இருந்திருந்தால், இதனை இன்று நாம் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், அதற்கும் வாய்ப்பு இல்லை.

கட்டெறும்பு வளர்ந்து கழுதையானது எப்படி?

"கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல" என்ற பழமொழி தமிழில் உண்டு. ஆனால், இஸ்லாமில் பார்த்தால், "கட்டெறும்பு வளர்ந்து கழுதையானது" என்ற ஒரு புது பழமொழியைச் சொல்லலாம் போல் தோன்றுகிறது.

குர்‍ஆனின் பரிணாம வளர்ச்சியைத் தான் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

  • ஒரு வட்டார குர்‍ஆன் ஏழு வட்டார குர்‍ஆன்களாக மாறியது
  • ஏழு வட்டார குர்‍ஆன்கள் மறுபடியும் ஒரு வட்டார குர்‍ஆனாக மாறியது
  • ஆனால், இந்த ஒரு வட்டார குர்‍ஆன் 20க்கும் அதிகமான குர்‍ஆன்களாக மாறியுள்ளது.

இன்று நாம் அரபி மூல மொழியில் உள்ள 20க்கும் அதிகமான குர்‍ஆன்களை வாங்கி படிக்கலாம். இதைப் பற்றி கீழ்கண்ட கட்டுரைகளில் படிக்கலாம்.

  1. 20+ குர்‍ஆன்கள் உண்டா? குர்‍ஆன் கிராத்துக்களை எங்கே வாங்கலாம்?
  2. 7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? இருக்கின்றது, இருக்கிறது, இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு & கீது
  3. குர்‍ஆனைப் போன்று ஏன் அல்லாஹ் முந்தைய வேதங்களை ஏழு வட்டாரமொழிகளில் (கிராத்துக்களில்) இறக்கவில்லை?

இதுவரை பார்த்த விவரங்களை படமாக கீழே கொடுத்துள்ளேன். 

இங்கு யார் சரி? யார் தவறு? 

  • அல்லாஹ்வா (ஒரு குர்‍ஆன்)? 
  • முஹம்மதுவா (ஏழு குர்‍ஆன்கள்)? 
  • உஸ்மான் அவர்களா (ஒரு குர்‍ஆன்)?
  • இஸ்லாமா? (20+ குர்‍ஆன்கள்)?

 தேதி: 19 Oct 2020


இதர குர்-ஆன் ஆய்வுக்கட்டுரைகள்

குர்-ஆன் பக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்